அருள்மிகு சிந்தாமணீசுவரர் திருக்கோயில், கருங்காலி

By நந்தா

இறைவன்: சிந்தாமணீசுவரர்
இறைவி : சிவகாமவல்லி
தீர்த்தம் : சிந்தாமணி தீர்த்தம்
ஆகமம் : காரணாகமம்

சிவகாமவல்லி உடனுறை சிந்தாமணீசுவரர் திருக்கோயில் பழவேற்காட்டிற்கு அருகில் கருங்காலி என்னுமிடத்தில் அமைந்துள்ளது. ஆற்றுக்கும் கடலுக்கும் இடையே உள்ள மணற்பகுதியில் இந்த ஆறு கலக்கும் முகத்துவாரத்திற்கு அருகில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் சோழ மன்னர்களால் அமைக்கப்பட்ட திருக்கோயிலாகும். ஆனால் சமீப காலத்தில் நடைபெற்ற திருப்பணிகளால் முழுவதும் செங்கல் மற்றும் சிமெண்ட் மூலம் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது. சுவாமியின் கருவறையின் மேல் உள்ள விமானம் கஜபிருஷ்ட வடிவிலானது ஆகும். இத்திருக்கோயில் கிழக்கு நோக்கியவாறு உள்ளது.

மணற்பரப்பில் புதைந்திருந்த இத்திருத்தலத்தின் கலசம் மணலில் வெளியே நீட்டிக்கொண்டு தெரிந்த போது இப்பகுதி மக்களால் இத்தலம் கண்டறியப்பட்டுள்ளது.

பதினெண் சித்தர்களில் ஒருவரான "சட்டை முனி" என்பவரால் அமைக்கப்பட்டு வணங்கப்பட்டது இத்தலம் என்று தலவரலாறு தெரிவிக்கின்றது. சோழ மன்னர்களால் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நிர்மாணிக்கப்பட்ட இத்தலம் கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பதால் இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்டு சமீப காலங்களில் திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.

காசி, ராமேசுவரம் ஆகிய திருத்தலங்களுக்கு இணையாகக் கருதப்படும் இத்தலத்தில் அமாவாசை மற்றும் பௌர்ணமி நாட்களில் முன்னோர்களுக்கு பித்ரு பூஜைகள் செய்து அன்பர்கள் வழிபடுகின்றனர்.

மீனவ மக்களின் குலதெய்வமாக வணங்கப்படும் சிந்தாமணீசுவரர் திருக்கோயிலில் சித்ரா பௌர்ணமி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப் படுகின்றது.

இத்தலத்தில் ஒரு கால பூஜை மட்டுமே நடத்தப்படுகின்றது. எனவே திருக்கோயிலுக்குச் செல்லும் அன்பர்கள் இக்கோயில் சிவாச்சாரியார் திரு சண்முக குருக்கள் அவர்களை 98402 14130 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பின்னர் கோயிலுக்குச் செல்லலாம்.

இத்திருக்கோயிலுக்கு எண்ணூர் துறைமுகம் மற்றும் எல் அண்ட் ட்டி கப்பல் கட்டும் தளம், காட்டுப்பள்ளி வழியாகச் செல்லலாம். திருக்கோயிலுக்குச் செல்ல சாலை வசதிகள் சரியான முறையில் இல்லை. தற்போது சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும் இன்னும் ஓரிரு மாதங்களில் சாலை முழுவதும் சரி செய்யப்பட்டு விடும் என்றும் அறிய முடிகின்றது.

இத்திருக்கோயில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியிலிருந்து 28 கிலோ மீட்டர் தூரத்திலும் பழவேற்காட்டிலிருந்து 8 கிலோ மீட்டர் தூரத்திலும் சென்னையிலி ருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE