அருள்மிகு முருகப்பெருமான் திருக்கோயில், திருத்தணி

By சரவணன்

இறைவன்: சுப்ரமணிய சுவாமி
இறைவி : வள்ளி, தெய்வானை
விருட்சம் : மகுட மரம், வில்வம்
தீர்த்தம் : இந்திர தீர்த்தம்
சரவணப் பொய்கை
சரசுவதி தீர்த்தம்
மடசெட்டிக்குளம்
நல்லாங்குளம்
ஆகமம் :குமார தந்திரம்

முருகப் பெருமானை வணங்கி னால் மூன்று தெய்வங்களையும் வணங்கிய பேறு கிடைக்கும்.

"மு" என்பது முகுந்தனைக் குறிக்கும். அதாவது பெருமாளைக் குறிக்கும்.
"ரு" என்பது ருத்ரனைக் (ஈசன்) குறிக்கும்.
"க" என்பது கமல மலரில் வீற்றிருக்கும் நான்முகனைக் குறிக்கும்.

இதனால் முருகப்பெருமானை வணங்கினால் முப்பெரும் தெய்வங்களையும் வணங்கிய பேறு கிடைக்கும். "முருக" என்பது ஒரு நாமம் அல்ல. பல கோடி நாமங்களுக்குச் சமமானது. முத்து முத்தாகத் தமிழ் பாடும் வல்லமை படைத்த அருணகிரி நாதப் பெருமானும் தாம் அருளிச் செய்த கந்தரலங்காரத்தில் முருகனைப் பாடும்போது "மெய்ம்மை குன்றா மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள்," என்று கூறுகின்றார்.

தமிழ்க் கடவுளாக வணங்கப்படும் முருகப்பெருமான் தமிழகத்தில் உள்ள ஆறு படை வீடுகளில் அரசாட்சி செய்து தன் பக்தர்களுக்குப் பேரருளை வாரி வழங்குகின்றார்.

மூலாதாரம், சுவாதிட்டானம், மணிபூரகம், அனாதகம், விசுக்தி, ஆக்ஞை என்ற ஆறு ஆதாரங்களே முருகனின் ஆறுபடை வீடுகளாக திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், திருவாவினன்குடி, சுவாமிமலை, திருத்தணிகை, பழமுதிர்சோலை என்ற திருத்தலங்களாகத் திகழ்கின்றன.

"ஆறு திருப்பதி கண்டாறெழுத்தும் அன்புடனே கூறுமவர் சிந்தை குடி கொண்டோனே"
-என்று கந்தர் கலி வெண்பாவில் பாடப்பட்டுள்ளது.

இந்த ஆறுபடை வீடுகளில் ஐந்தாவது படை வீடாகப் போற்றப்படும் மிகப் பழைமையான ஒரு திருத்தலம் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள திருத்தணிகை மலை மீது அருள் பாலிக்கும் சுப்ரமண்ய சுவாமி திருத்தலமாகும்.

புராதன காலங்களில் இத்தலம் திருத்தணி, தணிகை மலை, சாந்தி மலை, சுப்ரமணிய மலை என்று வழங்கப்பட்டுள்ளது. செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பின்னர் முருகப்பெருமான் தமது கோபம் தணிந்து இந்த மலையின் மீது திருக்கோயில் கொண்டு அமர்ந்ததால் "தணிகை" என்று இத்தலத்திற்குப் பெயர் ஏற்பட்டதாகப் புராணங்கள் கூறுகின்றன.

திருச்செந்தூரில் சூரபத்மனை வதம் செய்த பிறகு முருகப்பெருமானின் கோபம் தணியவில்லை. அப்போது தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, முருகப்பெருமானிடம் சென்று சினம் தணிய அவரிடம் வேண்டுகோள் வைத்தனர்.

தேவர்களின் வேண்டுகோளை ஏற்ற முருகப்பெருமான் திருத்தணியில் உள்ள இந்த மலையில் வந்து தங்கினார். முருகப்பெருமான் சினம் தணிந்து ஞானமும் சாந்தியும் பெற்றார். கோபம் தணிந்த இடம் இத்தலம் என்பதால் இத்தலத்திற்குத் "தணிகை" என்ற திருநாமம் ஏற்பட்டது. இதனால் இந்த திருத்தலம் "சாந்தி தரும் தலம்" என்றும் போற்றப்பட்டது.

புயலுக்குப் பின்னே அமைதி என்பது போல திருச்சீரலைவாய் போர்க்களத்தில் சூரபத்மனை வதம் செய்து பெற்ற மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு சாந்தமாக மாறத் தெரிந்தவன் தான் உண்மையான ஞானி என்னும் ஆன்மிக தத்துவத்தை முருகப்பெருமான் மூலமாக இவ்வுலக மாந்தர்களுக்கு உணர்த்தும் திருத்தலமாக திருத்தணி உள்ளது.

வெற்றிக்குப் பின் அகம்பாவம் கூடாது என்பதும் கோபம் தணிந்தால் தானாக ஞானம் பிறக்கும் என்பதும் திருத்தணி முருகப்பெருமான் மனிதர்களுக்கு சொல்லும் வாழ்க்கை சூத்திரமாக உள்ளது. நம் மனப்போராட்டங்கள் ஆன கோபம், அகங்காரம், அளவற்ற ஆசை இவை அனைத்தும் நீங்கி மன அமைதி கிடைக்கும் தலமாகத் திருத்தணி திகழ்கின்றது. மூலவரான சுப்ரமணியர் திருத்தணி திருத்தலத்தில் கிழக்கு நோக்கிய திருமுக தரிசனமாக அருள் பாலிக்கின்றார்.

முருகப்பெருமான் அருள் பாலிக்கும் திருத்தணி மலையின் உயரம் சுமார் 700 அடியாகும். இந்த மலையினை ஏறிச் செல்ல 365 படிக்கட்டுகள் அமைந்துள்ளது. ஒரு ஆண்டின் 365 நாட்களைக் குறிக்கும் விதமாக இந்த படிக்கட்டுகள் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். அந்தக் காலத்தில் இந்தப் படிகளை நிர்மாணிக்கும் போது தங்களது நுண்ணறிவைப் பயன்படுத்திப் படிகளை அமைத்துள்ளனர். ஒவ்வொரு படி ஏறும் போதும் ஒரு தீய குணம் விலகும் என்பது அன்பர்களின் நம்பிக்கையாக உள்ளது. வாழ்க்கையில் படிப்படியாக உயரலாம் என்பதன் அடிப்படையிலேயே இந்தப் படிகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆங்கிலப் புத்தாண்டின் போது 365 படிகளுக்கும் திருத்தணி தலத்தில் படி பூஜை நடைபெறுவது மிகவும் சிறப்பான விழா ஆகும்.புத்தாண்டு நாளில் இந்த திருத்தலத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள் சென்று படிகளுக்குப் பூஜை செய்வது நீண்ட நாட்களாகப் பின்பற்றப்படுகிறது.

தணிகை மலை மூன்று சக்தி வளையங்களாக உள்ளது என சித்தர் மரபு வழியில் கூறப்படுகின்றது. மலை அடிவாரம் உடல் சக்தியாகவும் பாதி மலை மனசக்தியாகவும் உச்சியில் உள்ள மலை ஞான சக்தியாகவும் இந்த மலை மூன்று சக்தி வளையங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த 365 படிக்கட்டுகளை ஏறும் போது அன்பர்களுக்கு முதலில் உடல் களைப்பும், மலை உச்சியில் சென்றதும் மன அமைதியும், முருகப்பெருமானை வழிபட்ட பிறகு மனவெறுமையும் அதாவது (நிர்விகல்ப நிலை) மன அமைதி நிலையுய் ஏற்படுவது அளவிட முடியாத சாந்தத்தை அளிக்கின்றது.

புராணத் தகவல்களின் படி திருத்தணிகை திருத்தலத்தில் வள்ளித் திருமணம் நிகழ்ந்ததாகக் கூறப்படுகின்றது. தேவேந்திரன் மகளான தெய்வானையுடன் திருமணம் செய்த பிறகு வள்ளியையும் ஏற்றுக்கொண்டு தமது தேவியர் சகிதமாக முருகன் இத்தலத்தில் அருள்பாலிப்பதாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. திருத்தணி யில் உள்ள முருகன் வீரமூர்த்தி யாக இல்லாமல் இல்லற வாழ்வில் ஈடுபட்ட சாந்த மூர்த்தியாகத் திகழ்கின்றார். இதனால் அன்பர்கள் தங்கள் இல்லற வாழ்வு சிறப்பாக இருக்க இந்த தலத்தில் வழிபடுகின்றனர்.

திருத்தணி மலைப்பகுதியில் வசித்த மலைவாழ் மக்களின் தலைவனாக விளங்கினான் நம்பிராஜன். இவன் திருமாலின் மகளை ஒரு வள்ளிக்கொடியின் கீழிருந்து கண்டெடுத்தான். அவளுக்கு "வள்ளி" எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். நம்பிராஜனின் "வள்ளி மலையில்" உள்ள திணைப்புனத்தை காவல் செய்யும் பணியை வள்ளி மேற்கொண்டிருந்தாள்.

அச்சமயம் வள்ளியை ஆட்கொள்ள வயதான வேடன் வடிவத்தில் வந்தார் முருகப்பெருமான். வள்ளிப் பிராட்டி அவரை யார் என்று அறியாமல் பயந்தோடினாள். முருகனோ அவளை ஆட்கொள்ள, தன் தமையன் விநாயகர் மூலம் யானை உருவம் கொண்டு பயமுறுத்தினார். யானையைக் கண்டு பயந்தோடிய வள்ளி முதியவராக வேடம் கொண்ட முருகப்பெருமானைப் பற்றினாள். தன் திருமேனி வள்ளியின் மீது பட்டவுடன் தனது உண்மையான வடிவினை வள்ளிக்கு காட்டி அருளினார் முருகப்பெருமான். முருகனுடன் வள்ளி ஐக்கியமாகி திருமணம் நடைபெற்ற திருத்தலம் திருத்தணி என்று போற்றப்படுகின்றது.

தேவேந்திரன் ஐராவதம் என்ற யானையை தெய்வானைக்குத் திருமணப் பரிசாகக் கொடுத்த யானை இத்தலத்தில் உள்ளது. இத்தலத்தின் கருவறைக்கு முன்பாக மயிலுக்குப் பதில் யானை வாகனம் உள்ளது. முருகப் பெருமான் தமது வலது திருக்கரத்தில் சூலம் போன்ற வேலுடன் (வஜ்ரவேல்) இடது திருக்கரத்தைத் தொடையில் வைத்துக்கொண்டு ஞானசக்தி தரனாகக் காட்சி தருகின்றார். முருகப்பெருமான் கோபம் தணிந்து சாந்தமான திருக்கோலத்தில் அருள் பாலிப்பதால் இத்தலத்தில் சூரசம்காரம் நடைபெறுவது இல்லை. தேவேந்திரனால் உருவாக்கப்பட்ட கல்கார தீர்த்தம் திருத்தணி மலையில் உள்ளது.

அசுரனோடு மோதிய பின் அமைதி கொண்டு "குன்றுதோர் ஆடல்" என்னும் இந்த மலையில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானுக்குத் திரு மார்பில் பள்ளம் (துவாரம்) உள்ளது என்று தெரிவிக்கப் படுகின்றது. மூலவரின் கருவறை மேல் உள்ள விமானம் ஆறு தளங்களைக் கொண்டுள்ளது.
வள்ளி மலையில் இருந்து வள்ளியை சிறைப் பிடித்து வந்த முருகப்பெருமான் வள்ளியை மணம் புரிந்த திருத்தலம் திருத்தணியாகும். வேடனாக வடிவம் கொண்டதால் பிரம்மோற்சவ விழாவின் போது ஆறாம் நாள் புலி வாகனத்திலும் பின்பு யானை வாகனத்திலும் முருகப்பெருமான் எழுந்தருள் கின்றார்.

சித்திரை மாத பிரம்மோற்சவத்தின் போது தெய்வானைத் திருமணமும், மாசி மாதத்தில் வள்ளித் திருமணமும் நடைபெறுகின்றது. பள்ளியறை பூஜையின் போது ஒருநாள் தெய்வானையும் ஒருநாள் வள்ளியுமாக முருகனுடன் அருள் பாலிக்கின்றனர்.

திருத்தணி மலையின் மேல் மூலவருக்கு அருகில் உள்ள வேல் பூமியிலிருந்து நேரடியாக பிரதிஷ்டை செய்யப்பட்டதாக பக்தர்களிடையே நம்பிக்கை உள்ளது. இந்த வேல் மனிதர்களால் பிரதிஷ்டை செய்யப்பட்டது இல்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் இந்த வேலுக்குத் தனியாக அபிடேகமும் அலங்காரமும் செய்யப்படு கின்றது. இந்த வேலுக்கு அபிடேகம் செய்தால் எதிரிகள் தொல்லை, எதிரிகளால் ஏற்படும் பயம், மனக்குழப்பம் ஆகியவை நீங்கிவிடும். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இந்த வேலுக்கு அபிடேகம் செய்து வழிபடுவது மிக சக்தி வாய்ந்த வழிபாடாக அன்பர்களிடையே நம்பிக்கை உள்ளது.

திருத்தணியில் முருகப்பெருமானின் கையில் உள்ள வேல் போர் ஆயுதம் அல்ல. மக்களின் அறியாமையை அகற்றும் ஞானத்தின் வடிவம். இந்த வேல் "ஞானவேல்" என்று அன்பர்களால் பக்தியுடன் வணங்கப்படுகின்றது. இத்தல
இறைவன் சுப்ரமணியர் என்று ஞான சக்திதரனாக பக்தர்க ளுக்கு காட்சியளிக்கின்றார். இரு திருக்கரங்களுடன் வலது திருக்கரத்தில் மூவிதழ் சக்தியாகிய ஞானவேல் அமைந்துள்ளது. அவர்தம் தொடையின் மீது இடது திருக்கரம் வைத்திருக்கும் திருக்கோலம் மயிலின்றி நின்ற திருக்கோலமாகும்.

வள்ளி அம்பிகையின் சன்னதி முருகப்பெருமானின் வலது புறம் உள்ளது. நின்ற திருக்கோலத்தில் வலது திருக்கரம் தொங்கிய நிலையிலும் இடது திருக்கரம் தாமரை மலர் ஏந்தியும் தலையில் கரண்ட மகுடமும் பாதம் வரை ஆடைகளும் வள்ளியை அலங்கரிக்கின்றன.

தெய்வானை சன்னதி முருகப்பெருமானின் சன்னதிக்கு இடது புறம் உள்ள தனிச் சன்னதியாகும். நின்ற திருக்கோலத்தில் இடது திருக்கரம் தொங்கிய நிலையில் வலது திருக்கரம் நீலோற்பல மலர் ஏந்தியும் அருள்பாலிக்கின்றார் தெய்வானை. கரண்ட மகுடமும் கால் வரை செல்லும் ஆடையும் தெய்வானையை அழகுறச் சித்தரிக்கின்றன.

திருத்தணி திருக்கோயிலில் உள்ள கோயில் மணியானது அபூர்வ சக்தி வாய்ந்ததாகக் கருதப்படுகின்றது இந்த மணி அடிக்கும் போது மனிதர்களின் மூளையில் உள்ள பதட்டம் குறையும் என்று பக்தர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது இந்த மணி ஏற்படுத்தும் ஒலி அதிர்வலைகளினால் (Sound Vibration &Therapy) மனப்பதட்ட நோய்க்கு (Anxiety) நிவாரணம் கிடைப்பதாகவும் தெரிவிக்கப்படு கின்றது.

திருத்தணி மலையில் பல சித்தர்கள் தவம் செய்து முருகப்பெருமானை வணங்கியுள்ளனர். இன்றும் இந்த மலைப்பகுதியில் சித்தர்கள் வழிபாடு செய்த பல குகைகள் உள்ளன. இத்துடன் சித்தர்கள் வழிபாடு நடத்திய பல ரகசியக் குகைகளும் தற்போதும் காணப்படுகின்றன.

சித்தர்கள் வழிபட்டு ஆன்ம பலம் பெற்ற, சாந்தி தரும் முருகத் தலமான இத்தலத்தில் வழிபாடு செய்யும் அன்பர்களுக்குக் கோபம் குறையும். மன அழுத்தம் நீங்கும். குடும்பப் பிரச்சனைகள் சரியாகும். திருமணத் தடைகள் நீங்கும், நல்ல வேலை கிடைக்கும் என்பது அன்பர்களின் நம்பிக்கையாக உள்ளது. மன அழுத்தம், மனப்பதட்டம், நரம்புத் தளர்ச்சி நோய்கள் ஆகிய பிரச்சனைகளுக்கு சிறந்த பரிகாரத்தலமாக திருத்தணி முருகன் தலம் விளங்குவதால் இந்த முருகன் "மனநோய் தீர்க்கும் முருகன்" என்றும் வணங்கப்படுகின்றார்.

திருத்தணி மலையில் சூரிய உதயத்திற்கு முன் தியானம் செய்தால் மனக்குழப்பம் உடனே தணியும் என்றும் பௌர்ணமி மற்றும் அமாவாசை நாட்களில் தியானம் செய்தால் ஆன்ம பலம் கூடும் என்றும் நம்பிக்கை உள்ளது. இன்றும் ஆன்ம பலம் தேடும் பல அன்பர்கள் இந்த மலையைத் தேர்ந்தெடுத்து வந்து தியானம் செய்து பலன் பெறுகின்றனர்.

திருத்தணி முருகப்பெருமானுக்கு மயில்வாகனம் இல்லாத அலங்காரம் சில நாட்களில் செய்யப்படுகின்றது. பெரும்பாலான நாட்களில் முருகப்பெருமானின் திருமுகம் சாந்த சொரூபமாகவும் அதாவது கோபமற்ற முக பாவமாகவும் வள்ளி தெய்வானை சமேத முருகப் பெருமானாகவும் குடும்ப சகிதமாகக் காட்சி தரும் அலங்காரமும் சிறப்பான தரிசனங்கள் ஆகும்.

திருத்தணியில் அருள்பாலிக்கும் முருகனின் முகபாவ மாற்றங்கள் குறித்து பக்தர்கள் தங்கள் அனுபவங்களாகக் கீழ்க்கண்ட தகவலைத் தெரிவிக்கின்றனர். முருகப்பெருமான் காலையில் தீவிரம் கலந்த சாந்த முகத்துடனும், நண்பகல் வேளையில் முழு சாந்த சொரூபனாகவும், மாலை வேளையில் கருணை நிறைந்த பார்வையுடனும் திருக்காட்சி தருகின்றார் என்று கூறப்படுகின்றது. இதனை "ஜீவசக்தி மாறுதல்" என்று அக்காலத்தில் சித்தர்கள் கூறி வழிபட்டிருக்கின்றார்கள்.

சங்க காலத்திலேயே திருத்தணி முருகன் கோயில் சிறப்பு பெற்றிருந்ததை சங்க இலக்கியங்களின் மூலம் அறிந்து கொள்ள முடிகின்றது. நக்கீரர் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படை மற்றும் புறநானூறு, சிலப்பதிகாரம் போன்ற இலக்கியங்களில் திருத்தணி திருத்தலம் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன. அருணகிரிநாதப் பெருமான் திருத்தணியில் அருள்பாலிக்கும் முருகன் மீது பல திருப்புகழ் பாடல்களைப் பாடி வழிபட்டுள்ளார். இதனால் இத்தலம் "திருப்புகழ் தலம்" என்றும் அழைக்கப்படுகின்றது.

நக்கீரர் தாம் அருளிச்செய்த திருமுருகாற்றுப்படையில் "தணிகை மலைமிசை தங்கும் குமரன்" என்று திருத்தணி முருகனைப் போற்றிப் பாடியுள்ளார்.

உலக மாயைகளைத் தாண்டி முருகப்பெருமானை உணர்ந்து ஞானத்தையும் செல்வத்தையும் அருளும் அருணகிரிநாதர் அருளிச்செய்த கந்தர் அனுபூதியிலும் திருத்தணி தலம் குறித்துப் பாடப்பட்டுள்ளது.

தமிழ் இலக்கியங்கள் இத்தலத்தை நீலவெற்பு, குவளைச்சிகரி, தணிகை மாமலை என்றும் முருகப்பெருமானை "திருத்தணி மேவும் பெருமாள்" என்றும் போற்றுகின்றன.

அருணகிரிநாதப் பெருமான் அருளிச்செய்த "வேல்வகுப்பு" என்னும் திருப்புகழை வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள் "வேல்மாறல்" என்னும் பதிகமாக மாற்றி அதனை மகா மந்திரமாக அருளிச் செய்துள்ளார். இந்த வேல்மாறல் பதிகம் உடல்நலிவுற்றோருக்கு ஒரு மாமருந்து. வாழ்க்கைப் பாதையில் வழிமாறியவர்களுக்கு கலங்கரை விளக்கம். எல்லா காலங்களிலும் கவசமாக இருந்து நம்மைக் காக்கக்கூடியது. அதியற்புத சக்தி வாய்ந்த இந்த வேல் மாறல் பதிகத்தில்,

"திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன் மலை விருத்தனென துள்ளத்தில் உறை கருத்தன் மயில் நடத்து குகன் வேலே"

- என்று திருத்தணியில் அருளும் முருகனைப் பற்றிப் பாடியுள்ளார் வள்ளிமலை சச்சிதானந்த சுவாமிகள். இந்த வேல் மாறல் பதிகத்தை தொடர்ந்து ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் படித்தால் நாம் வேண்டிய வரங்களை வேண்டியவாறு அளித்து அருள்வார் முருகப்பெருமான்.

வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடிய வள்ளல் பெருமானும் திருத்தணி முருகனைப் பற்றிப் பதிகம் பாடியுள்ளார்.

இத்தல முருகனின் அருள் பெற்ற இசுலாமியர் ஒருவர் விழா க்காலங்களில் முருகன் புறப்பாடாகும் போது முரசு வாத்தியம் இசைப்பது இன்றுவரை வழக்கத்தில் உள்ளது. இந்த வழக்கம் அனைத்து மத மக்களிடையே நல்லிணக்கத்தை உருவாக்கும் ஒரு சிறப்பான செயலாகும்.

திருத்தணி கோயில் அமைக்கப்பட்ட காலம் பல்லவர் காலம் என்று கூறப்படுகின்றது ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழன் காலத்தில் திருத்தணி திருத்தலம் விரிவாக்கம் செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றுள்ளன. விஜயநகர மன்னர்களின் காலத்தில் கோபுரங்கள் மற்றும் மண்டபங்கள் அமைக்கப் பட்டுள்ளன. ஆங்கிலேயர் அரசாண்ட காலத்தில் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு மலைப்பாதை மேம்படுத்தப்பட்டது என்று வரலாற்றுத் தகவல்கள் கூறுகின்றன.

சோழ மன்னர்களின் காலத்தில் "திருத்தணியர்" என்றும் அதன் மேல் உள்ள மலை "திருமலை" எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊர் "ஜெயங்கொண்ட சோழமண்டலத்து மேலூர் கோட்டத்தில் ஒகவல் நாட்டு பெருங்காஞ்சி கீழ்ப்பிடாகையான அகுவூர் திருத்தணியல்" என்று கல்வெட்டுகளில் இத்தலம் கூறப்பட்டுள்ளது.

கல்வெட்டுகளில் "திருமலை மேல் எழுந்தருளிய சுப்ரமணிய பிள்ளை" என குறிப்பிடப்பட்டுள்ளதால் முருகப்பெருமான் இத்தலத்தில் "சுப்ரமணிய பிள்ளையார்" என்று வழங்கப்பட்டுள்ளதை அறிய முடிகின்றது.

காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஆனூரில் உள்ள வேதநாராயணப் பெருமாள் கோயிலில் உள்ள ஒரு கல்வெட்டில் பிராமணர் ஒருவருக்கு நிலம் தானம் வழங்கப்பட்டுள்ள செய்தியும் இந்த நிலம் முன்பு திருத்தணியில் உள்ள சுப்ரமணிய சுவாமிக்கு கொடையாக வழங்கப்பட்டுள்ளது என்றும் தெரிகின்றது. இக்கல்வெட்டு முதலாம் இராஜராஜனின் 14-ம் ஆட்சி ஆண்டினைச் சார்ந்ததாகும். இதன் மூலம் திருத்தணி கோயிலுக்குச் செங்கல்பட்டு அருகில் உள்ள ஆனூர் தலத்தில் நிலம் ஒதுக்கப்பட்டுள்ள செய்தியை அறிய முடிகின்றது.

திருத்தணி திருக்கோயிலில் 100க்கும் மேற்பட்ட கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளின் காலம் கி.பி 9-ஆம் நூற்றாண்டு முதல் 16-ஆம் நூற்றாண்டு வரையிலானது ஆகும். இக்கல்வெட்டுகள் அனைத்தும் நில தானங்கள் குறித்தும், தீபம் ஏற்ற எண்ணெய் வழங்கியது குறித்தும், நில வருவாய்கள் குறித்தும், பூஜைக்கான செலவுகள் குறித்தும் கூறப்பட்டுள்ளது.

இத்தலத்தின் கல்வெட்டுகளில் திருக்கோயில் வளாகத்தில் வேதம், ஆகமம், தமிழ் இலக்கியம் ஆகியவை பயிற்றுவிக்கப் படுவதற்கு "குருகுலம்" இருந்த செய்தியையும் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

"தணிகாசலம்" என்ற தணிகை மலையில் உள்ள முருகன் கோயிலின் ராஜகோபுரத்தில் விஜயநகர காலச் சிற்பங்களும் முருக புராணக் காட்சிகளும் சிற்பங்களாக அமைக்கப்பட்டுள்ளன.

திருத்தணியில் பங்குனி உத்திரத் திருவிழாவும் ஆடிக் கிருத்திகை திருவிழாவும் மிகவும் சிறப்பாக நடத்தப்படுகின்றது. ஆடிக் கிருத்திகை அன்று அன்பர்களால் புட்பக் காவடி என்னும் பூங்காவடி எடுக்கப்படுவது மிகவும் விசேஷம் எனக் கருதப்படுகிறது. மாசிமாதம் வள்ளித் திருமண விழா, மகா சிவராத்திரியில் முருகனுக்கு 1008 சங்காபிஷேகம் ஆடிக் கிருத்திகையில் தெப்பத் திருவிழா ஐப்பசியில் கந்த சஷ்டி விழா வைகாசி விழா போன்ற விழாக்களும் இத்தலத்தில் கொண்டாடப்படுகின்றன. மேலும் மாதாந்திர கிருத்திகை அன்று வழிபாடும் நாள்தோறும் ஐந்து கால பூஜைகளும் நடத்தப்படுகின்றன. கந்தசஷ்டி விழாவின்போது முருகன் சினம் தணிந்து அமர்ந்த தலம் என்பதால் சூரசம்காரம் நடத்தப்படுவ தில்லை.

தைப்பூச நன்னாளில் லட்சக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் திருத்தணி முருகப்பெருமானுக்குத் தங்களது நேர்த்திக் கடனை சமர்ப்பிக்கின்றனர்.

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறையின் கீழ் சிறப்பாக நிர்வாகம் செய்யப்படும் இத்திருக்கோயிலுக்குத் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான பக்தர்கள் மட்டுமன்றி, வெளிநாட்டில் உள்ள இந்திய மக்களும் வருகை தந்து தணிகைப் பெருமானை வழிபாடு செய்வது குறிப்பிடத்தக்கதாகும்.

காலை 6.00 மணியிலிருந்து இரவு 9.00 மணி வரை பக்தர்களின் தரிசனத்திற்காக இத்திருக்கோயில் தொடர்ந்து திறந்திருக்கும்.

சென்னையில் இருந்து சாலை வழியாக, சென்னை- திருப்பதி செல்லும் சாலையில் 96 கி.மீ. தூரத்திலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 83 கி.மீ தூரத்திலும் திருத்தணி திருத்தலம் அமைந்துள்ளது.

மேலும் விபரங்களுக்கு திருக்கோயிலின் தொலைபேசி எண் 044- 2788 5247 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE