அருள்மிகு காசி விசுவநாதர் திருக்கோயில், நசரத்பேட்டை

By நந்தா

இறைவன் : காசி விசுவநாதர்
இறைவி : காசி விசாலாட்சி
ஆகமம் : சிவாகமம்

திருவள்ளூர் மாவட்டம் பூவிருந்தவல்லியிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள நசரத்பேட்டை காந்தி தெருவில் அமைந்துள்ளது அருள்மிகு காசி விசாலாட்சி சமேத காசி விசுவநாதர் திருக்கோயில்.

புராண காலத்தில் இருந்து புகழ்பெற்று விளங்கும் இந்த ஊர் புருஷ மங்கலம் மற்றும் தர்மபுரி சேத்திரம் என்றும் வழங்கப்பட்ட பெருமைகளைக் கொண்டது. வைணவ மகா புருடரான ராமானுஜரின் மருமகன் தாசரதி என்பவரின் பெயரால் தாசரதிப் பேட்டை என்று வழங்கப்பட்ட இந்த ஊர் தற்போது நசரப்பேட்டை என்று வழங்கப்படுகிறது.

திருக்கோயிலின் அமைப்பு மற்றும் தூண்களைப் பார்க்கும்போது இத்தலம் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு விஜயநகர மன்னர்களின் காலத்தில் புதுப்பிக்கப்பட்டதாக அறிந்து கொள்ள முடிகின்றது எனினும் இத்தலம் பல்லவ மன்னன் இரண்டாம் மகேந்திரவர்மனால் நிர்மாணிக்கப்பட்டதாக வரலாற்றுத் தகவலின் மூலம் அறிய முடிகின்றது. இத் திருக்கோயில் புனிதமான காசி (வாரணாசி ) தலத்திற்கு நிகரானத் தலமாகப் போற்றப்படுகின்றது. இதனால் இத்தலம் "தட்சிணகாசி" என்றும் "தென்காசி" என்றும் போற்றப்படுகின்றது.

இத்திருக்கோயிலில் கார்க்கோடக முனிவர் நீண்ட காலம் தவமிருந்து ஈசன் மற்றும் அம்பிகையின் தரிசனத்தைக் கண்டு மகிழ்ந்துள்ளார். திருக்கோயிலின் பிரதான நுழைவு வாயில் தென்திசை நோக்கியும் மூலவர் காசி விசுவநாதரின் கருவறை கிழக்கு நோக்கியும் அமைந்துள்ளது.

கருவறையின் நுழைவாயிலுக்கு முன்பு இருபுறங்களிலும் துவார பாலகர்கள் காட்சி தருகின்றனர். துவார பாலகர்களின் அருகில் அதிகார நந்தி திருக்காட்சி தருகின்றார். காசி விசாலாட்சி அம்பிகை தனிச்சந்நிதியாக தெற்கு திருமுக தரிசனத்துடன் எழுந்தருளியுள்ளார். கருவறை தேவகோட்டங்களில் விநாயகர், தட்சணாமூர்த்தி, பெருமாள், நான்முகன் மற்றும் துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின் றனர். அருகில் கயிலாயத்தின் கணக்காளரான சண்டிகேசுவரர் அருள் தருகின்றார்.

திருக்கோயிலின் உள்பிராகாரத்தில் விநாயகர், வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியர், நாகர்கள், வீரபத்திரர், நால்வர் சன்னதி பைரவர், சூரியபகவான், சந்திரன், நடராஜர், நவக்கிரகங்கள் ஆகியோர் அருள்பாளிக்கின் றனர். சோமாசுகந்தருக்கு தனிச் சன்னதி உள்ளது.

துவாரபாலகர்களுக்கு முன்பாக உள்ள அர்த்தமண்டபத் தில் நந்தி எம்பெருமானின் சன்னதி உள்ளது. நந்தியின் இடதுபுறத்தில் கீழ்ப்பகுதியில் ஒரு பாம்பு சிற்பம் உள்ளது. கார்க்கோடக முனிவர் வழிபட்டதால் இந்த பாம்பு சிற்பம் இருக்கலாம் என்று கருதப்படுகின்றது. இந்த அமைப்பு வேறு எங்கும் காண முடியாத அரிய தரிசனமாகும்.

வெளிப்புறப் பிராகாரத்தில் விநாயகர் சன்னதி, சனீஸ்வரர் சன்னதி மற்றும் ஐயப்பனுக்குத் தனிச் சன்னதி உள்ளது. நாகரும் விநாயகரும் வில்வ மரத்தின் கீழ் அமைந்துள்ளனர். வாத்திய மண்டபத்தின் வெளிப்புறத் தூண்களில் தசாவதாரச் சிற்பங்களும் கலைத்துவம் கொண்ட பல சிற்பங்களும் அமைந்திருப்பது தனிச் சிறப்பாகும்.

மங்குனி மாதத்தில் 5, 6, 7 ஆகிய தேதிகளில் காலை 6:00 மணி முதல் 7.00 மணி வரை சூரிய பகவான் தன் ஒளிக்கதிர்களை ஈசன் மீது படர வைத்து சூரிய பூஜை செய்வது சிறப்பான தரிசனமாகும்.

இத்தலம் காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் நிர்வாகம் செய்யப்பட்டு வரும் இத்திருக்கோயில் சென்னையில் இருந்து 25 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பூந்தமல்லியில் இருந்து மூன்று கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE