அருள்மிகு திருமணங்கீசுவரர் திருக்கோயில், மேலூர்.

By நந்தா

இறைவன் : திருமணங்கீசுவரர்
இறைவி : திருவுடைநாயகி
விருட்சம் : கொன்றை
தீர்த்தம் : தீர்த்தக் குளம்

சென்னையை அடுத்துள்ள மீஞ்சூருக்கு அருகில் மேலூர் கிராமத்தில் உள்ள ஒரு புகழ்பெற்ற ஆலயம் அருள்மிகு திருவுடை நாயகி உடனுறை திருமணங்கீசுவரர் திருக்கோயில் ஆகும். இத்திருக்கோயிலின் அம்பிகை திருவுடைநாயகி என்று வழங்கப்படுகின்றார். இந்த அம்பிகை "இச்சாசக்தி" வடிவமாக அதாவது அன்பர்களின் விருப்பங்களை நிறைவேற்றும் சக்தியின் வடிவமாகப் போற்றப் படுகின்றார்.

கிரியா சக்தியான வட திருமுல்லைவாயில் கொடியிடை நாயகி, ஞானசக்தியான திருவொற்றியூர் வடிவுடை நாயகி, இச்சா சக்தியான மேலூர் திருவுடை நாயகி என்ற மூன்று அம்பிகைகளையும் பௌர்ணமி தினங்களில் வணங்க அன்பர்களுக்கு எல்லா நலன்களும் பெருகும் என்று அன்பர்களிடையே நம்பிக்கை உள்ளது. சித்ரா பௌர்ணமி நாளில் ஏராளமான அன்பர்கள் இந்த மூன்று திருக்கோயில்களில் வழிபாடுகள் செய்வது பல காலமாக வழக்கத்தில் உள்ளது.

இத்திருக்கோயிலில் ராசகோபுரம் இல்லை. பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தி எம்பெருமான் ஆகியவை முக மண்டபத்தின் முன் உள்ளன. அர்த்தமண்டபத்தின் நுழைவு வாயிலில் கருவறைக்கு முன்னதாக துவார பாலகர்கள்
ஒரு காலத்தில் சேகுண்ட (மணம் வீசும் மலர்கள் நிறைந்த வனம்)வனமாக இந்தப் பகுதி அழைக்கப்பட்டதாகவும் இந்த வனத்தில் சுயம்பு வடிவமாக இருந்த லிங்கத் திருமேனியை ஒரு பசு பூஜித்து வழிபட்டதாகவும் தலபுராணம் கூறுகின்றது.
இத்தல ஈசனுக்கு "சுகுண்டவனேசுவரர்" என்றும் தமிழில் "திருமணங்கீசுவரர்" என்றும் திருநாமங்கள் வழங்கப்படுகின்றன. காசி மற்றும் ராமேசுவரத்தில் வழிபடுவதற்கு இணையான திருத்தலமாக இத்தலம் போற்றப்படுகின்றது.

மூலவர் திருமணங்கீசுவரர் சுயம்புலிங்கத் திருமேனியாவார். சதுர வடிவிலான ஆவுடையார் மீது லிங்கத் திருமேனி சிறியதாக உள்ளது. விநாயகர், தட்சணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா மற்றும் துர்க்கை ஆகியோர் தேவகோட்டத்தில் உள்ளனர். தேவகோட்டத்தில் உள்ள பிரம்ம தேவர் தாடியுடன் அருள்பாலிப்பது வேறு எங்கும் காண முடியாத அரிய திருக்கோலமாகும்.

உள் பிராகாரத்தில் விநாயகர், நாகர்கள், அம்பாள்களுடன் கூடிய சிவலிங்கங்கள், அருள்மிகு வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர், பைரவர், சந்திரன், சூரியன், வீரபத்திரர், அறுபத்து மூவர், நால்வர், சண்டிகேசுவரர் ஆகிய சன்னதிகளும் உள்ளன.

திருவுடை நாயகி அம்பிகை தனிச் சன்னதியாக பலிபீடம், கொடிமரம் , சிம்மவாகனம் துவாரபாலகிகள் ஆகியோருடன் திருக்காட்சி தருகின்றார். அம்பிகை அபய, வரதத் திருக்கரங்களுடன் நின்ற கோலநாயகியாக அருள் பாலிக்கின்றார்.

இத்திருக்கோயில் 12 மற்றும் 13 ஆம் நூற்றாண்டுகளில் சோழ மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட திருத்தலமாகும். முகமண்டபம் விஜயநகர மற்றும் நாயக்க மன்னர்களால் பிற்காலத்தில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது.

விஜய கண்ட கோபாலனின் கி.பி 1253 ஆம் ஆண்டு கல்வெட்டு இக்கோயிலுக்கு விளக்கு தானமாக அளிக்கப்பட்டதைக் குறிப்பிடுகின்றது. இந்த மன்னனின் மற்றொரு கல்வெட்டு கி.பி 1280 ல் திருப்பாலைவனம் உடைய நாயனாருக்கு தானம் வழங்கிய செய்தியைக் குறிப்பிடுகின்றது. பாண்டிய மன்னர்களின் கல்வெட்டுகளும் சிதைந்த நிலையில் இத்திருக் கோயிலில் உள்ளன.

இத்திருக்கோயில் காலை 7:00 மணி முதல் 11.00 மணி வரையிலும் மாலை 5.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்.

இத்தலம் மீஞ்சூர் ரயில் நிலையத்திலிருந்து மீஞ்சூர்- மணலி செல்லும் வழியில் சுமார் 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. மணலி புது நகரில் இருந்து 8.5 கி.மீ. தூரத்திலும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து 28 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது மேலூர் திருத்தலம்.

மேலும் விபரங்களுக்கு மனித வளம் மற்றும் பொதுப்பணி அதிகாரிகளான திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களை 99768 49791 என்ற எண்ணிலும் திரு ஏழுமலை அவர்களை 82487 39713 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE