அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயில், அல்லிக்குழி.

By நந்தா

இறைவன் : நீலகண்டேசுவரர்
இறைவி : அல்லியம்பிகை
ஆகமம் : சிவாகமம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அல்லிக்குழி என்ற கிராமத்தில் அமைந்துள்ள மிகவும் புராதனமான ஒரு திருக்கோயில் அருள்மிகு நீலகண்டேசுவரர் திருக்கோயிலாகும். இத்தலத்தின் அம்பிகை அல்லியம்பிகை மற்றும் அல்லியம்மன் என்ற திருநாமங்களில் வழங்கப்படு கின்றார்.

சுமார் 1300 ஆண்டுகளுக்கு மேல் பழைமையான இத்திருக்கோயில் சோழ மன்னர்களாலும் விஜய நகர மன்னர்களாலும் புனரமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. அதற்கு ஆதாரமாக இங்குள்ள முன் மண்டபத் தூண்களில் சோழர்கால மற்றும் விஜயநகர மன்னர்கள் கால கலைப்பாணியைக் காணமுடிகின்றது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை அமுதம் வேண்டிக் கடைந்த போது தோன்றிய ஆலகால விடத்தை சிவபெருமான் விழுங்க, அன்னை பார்வதியின் உதவியால் அந்த விடமானது அவரது தொண்டையில் நீல நிறமாக நின்றது. இதனால் ஈசனுக்கு "நீலகண்டன்" என்ற திருநாமம் ஏற்பட்டது. நீலகண்டன் என்றால் "நீல நிற கழுத்தை உடையவர்" என்பது பொருளாகும். நஞ்சுண்ட கண்டன், கறைக் கண்டன் என்றும் இதனால் ஈசனுக்குப் பல திருநாமங்கள் ஏற்பட்டன.

அல்லிக்குழி கிராமத்தில் அருள் பாலிக்கும் ஈசன் ஆலகால விடமுண்டு இந்த அகிலத்தைக் காத்தருளிய நீலகண்டேசுவரர் என்ற திருநாமத்தில் அருள் பாலிப்பது சிறப்பானதாகும்.

பங்குனி, சித்திரை, ஐப்பசி மற்றும் புரட்டாசி மாதங்களில் மாலை நேர சூரியக் கதிர்கள் சுவாமியின் மீது பட்டு ஒளிரும் திருக்காட்சி மிகவும் சிறப்பு வாய்ந்த தரிசனம் ஆகும். மேற்கண்ட மாதங்களில் சூரிய பகவான் தன் ஒளிக் கதிர்களை நீட்டி நீலகண்டேசுவரப் பெருமானை வணங்குவதாக இத்தலபுராணம் தெரிவிக்கின்றது.

அல்லிக்குழி நீலகண்டேசுவரர் திருக்கோயிலில் ஈசன், அம்பிகை சன்னதிகளும் விநாயகர், முருகப்பெருமான், தேவியருடன் பெருமாள், அனுமன் போன்ற உபசன்னதிகளும் உள்ளன. முன் மண்டபத்தில் பிரதான நந்தியோடு இரண்டு சிறிய நந்திகளும் தூண்களுக்கு அருகில் வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இத்திருக்கோயிலுக்கு ஒரு கால பூசை திட்டத்தின் கீழ் சிவாகம முறைப்படி கால பூசைகள் நடைபெற்று வருகின்றன.

சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் இத்திருக்கோயிலில் முக்கிய திருவிழாக்கள் நடைபெறுகின்றன. பிரதோஷ வரலாற்றுடன் தொடர்புடைய இத்திருக்கோயிலில் நடைபெறும் பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொண்டு நந்தி எம்பெருமானையும் ஈசனையும் வழிபாடு செய்வது சிறப்பான நற்பலன்களை அளிக்கும்.

இத்தலத்தில் பல கல்வெட்டுகள் உள்ளன. திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பூண்டி நீர்த் தேக்கத்திலிருந்து சுமார் பத்து கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது அல்லிக்குழி திருக்கோயில்.

அல்லிக்குழி கிராமத்திற்கு அருகில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த குடியம் குகையும் (Gudiyam Caves) உள்ளது.

மலைகள் மற்றும் வனப்பகுதியான அல்லிக்குழி மலைத்தொடரில் மொத்தம் 16 குகைகள் உள்ளன. இவற்றில் சில குகைகளில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

இந்த இடத்தில் அமைந்திருக்கும் குடியம் குகைகள் ஒரு தொன்மையான வரலாற்றுப் பகுதியாகும். இது கற்கால மனிதர்கள் வாழ்ந்த குகை வாழிடங்கள் கொண்ட முக்கிய தொல்பொருள் தளமாகும். இக்குகையில் பழங்கற்காலக் கருவிகள், பண்பாட்டுப் பொருட்கள் மற்றும் பாறை ஓவியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குடியம் குகையைக் காண வனத்துறையினரால் ஒரு குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகின்றார்கள்.

அல்லிக்குழி நீலகண்டேசுவரர் திருக்கோயிலும் அருகில் உள்ள குடியம் குகையும் வரலாற்று ஆய்வாளர்களும் தொல்லியல் ஆர்வலர்களும் காண வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE