அருள்மிகு லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், நரசிங்கபுரம்.

By சரவணன்

இறைவன்: லட்சுமி நரசிம்மர்
இறைவி : மரகதவல்லி

"நாளை என்பது இல்லை நரசிம்மனிடம்" என்பது வைணவம் தழைக்க அரும்பாடுபட்ட நிகமாந்த மகா தேசிகர் அவர்களது திருவாக்காகும். எல்லாமே உடனுக்குடன் செய்தாக வேண்டும் என்ற அவசரமான இந்த உலகத்தில், நமக்கும் அந்த நொடியிலேயே அவசரமாக வரமளிக்கக் காத்திருக்கும் கலியுகத்தின் கண்கண்ட தெய்வம் அழகிய சிங்கமான அந்த நரசிம்ம மூர்த்தியே ஆவார்.

தன் பக்தன் பிரகலாதனைக் காப்பாற்ற வேண்டும் என்ற அந்த நொடிப் பொழுதில் தூணிலிருந்து பிளந்து தோன்றிய அவதாரம் நரசிம்ம அவதாரம். இதனால் நாம், நமது வேண்டுதலை நரசிம்ம மூர்த்தியிடம் சமர்ப்பித்தால் நாளை என்றில்லாமல் அப்போதே, அந்த நொடிப் பொழுதே நமக்கு ஓடோடி வந்து அருள்புரிவார் அப்பெருமான்.

இவ்வாறு தன் பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றுவ தற்காக அனுக்கிரக மூர்த்தியாக திருவள்ளூர் மாவட்டம் நரசிங்கபுரம் என்ற திருத்தலத்தில் அருள்மிகு லட்சுமி நரசிம்மராக திருக்கோயில் கொண்டு எழுந்தருளி இருக்கின்றார் லட்சுமி நரசிங்கப் பெருமான்.

கல்யாண லட்சுமி நரசிம்மர்

கல்யாண லட்சுமி நரசிம்மர் என்ற திருநாமத்துடன் நரசிங்கபுரம் திருத்தலத்தில் அருள்பாலிக்கும் இப்பெருமான் கருவறையில் ஏழரை அடி உயரம் கொண்ட பிரம்மாண்டத் திருமேனியாகக் காட்சி தருகின்றார். இடது திருவடியை மடித்து, வலது திருப்பாதத்தைக் கீழே தொங்கவிட்டபடி, இடது தொடை மீது தன் தாயாரை ஆலிங்கனம் செய்த திருக்கோலத்தில் காட்சி தரும் பெருமாளைத் தரிசிக்கத் தரிசிக்க நமக்குப் பேரானந்தம் ஏற்படுகின்றது.

பெருமாள் மேல் இரு திருக்கரங்களில் சங்கும் சக்கரமும் ஏந்தி இருக்கின்றார். கீழ் வலது கரத்தை அபயத் திருக்கரமாகவும் இடது திருக்கரம் தாயாரை ஆலிங்கனம் செய்த வாறும் உள்ளது. பொதுவாக அனைத்துத் திருத்தலங்களிலும் நரசிம்ம மூர்த்தியின் மடியில் அமர்ந்திருக்கும் மகாலட்சுமித் தாயார் பெருமானை பார்த்தவாறு திருக்காட்சி தருவார். ஆனால் இத்தலத்தில் தாயார் பெருமானை தரிசிக்கும் பக்தர்களை நோக்கியவாறு இவரது திருமுக தரிசனம் அமைந்திருப்பது சிறப்பான திருக்காட்சியாகும்.

இவ்வாறு இத்தலத்தில் தாயார் நரசிம்மரை அணைத்தபடி திருக்காட்சி தருவதால் இவருக்கு "கல்யாண லட்சுமி நரசிம்மர்" என்ற திருநாமம் ஏற்பட்டுள்ளது. இவரை நெய் தீபம் ஏற்றி வழிபட எதிரிகளால் ஏற்படும் தொல்லைகள் நீங்குவதோடு குடும்பத்தில் செல்வ வளமும் கணவன் மனைவியரிடையே ஒற்றுமையும் அதிகரிக்கும்.

நரசிம்மர் சுவாதி நட்சத்திரத் திருநாளில் பகலும் இரவும் இல்லாத அந்திப் பொழுதில் அவதரித்தவர் என்பதனால் இத்தலத்தில் இப்பெருமானை 9 சுவாதி நட்சத்திர நாட்களில் நெய் தீபம் ஏற்றி வழிபட தீராத கடன் பிரச்சனைகள், உடல் நோய்கள் தீரும். திருமணத் தடை குழந்தையின்மை உள்ளிட்ட தோஷங்கள் நிவர்த்தியாகும். இத்தலத்தில் நரசிம்மர் திரு அவதாரம் செய்த சுவாதித் திருநாளில் மூலவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகின்றது. இந்த நாளில் அன்பர்கள் திருக்கோயிலை 32 முறை வலம் வந்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். இவ்வாறு செய்தால் நினைத்த காரியங்கள் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

இத்தலத்தின் தாயார் மரகதவல்லி தனிச் சந்நிதியில் ஐந்து அடி உயரத்துடன் கம்பீரத் திருமேனியாக காட்சி தருகின்றார். தாயாரின் திருமுகத்தில் தவழும் வசீகரமான புன்சிரிப்பு பக்தர்களின் மனதைக் கவர்கின்றது.
இத்தலத்தில் பெருமானுக்கு எதிரில் வணங்கிய திருக்கோலத்தில் காட்சி தரும் கருடாழ்வாரை வணங்கினால் நாக தோஷம் நீங்கும் என்று கூறப்படுகின்றது. இதனால் இத்தலம் நாகதோஷ நிவர்த்திக்கான பரிகாரத் தலமாகவும் விளங்குகின்றது

காலப் பொக்கிஷம்

நரசிங்கபுரம் திருக்கோயில் விஜய நகர மன்னர்களால் கலையம்சத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இத்தலத்தில் உள்ள வசந்த மண்டபத்தில் ஏழு ஸ்வரங்களை எழுப்பும் அற்புதமான இசைத்தூண்கள் உள்ளன. போர் வீரர்கள், குதிரைப்படை, யானைப்படை ஆகிய அற்புத சிற்பங்கள், தசாவதாரச் சிற்பங்கள், நுண்ணிய வேலைப்பாடுகள் அமைந்த கருங்கல் ஜன்னல்கள் என்று இத்தலத்தின் ஒவ்வொரு சிற்பமும் காலப் பொக்கிஷமாகும்.

இத்தலத்தில் 12 கல்வெட்டுகள் உள்ளன. இக்கல்வெட்டுகளில் பெரும்பாலானவை விஜயநகர மன்னரான அச்சுத தேவ மகாராயரின் கல்வெட்டாகும்.

2003 ஆம் ஆண்டு காலகட்டத்தில் மிகவும் சிதிலமடைந்திருந்த இந்த திருக்கோயில் நல்ல மனம் படைத்த அன்பர்களால் புதுப்பிக்கப்பட்டு தற்போது அதன் புராதனப் பெருமையுடன் சிறப்புற்று விளங்குகின்றது.

இத்தலம் சென்னையிலிருந்து 55 கிலோமீட்டர் தூரத்திலும் பூவிருந்தவல்லியிலிருந்து சுமார் 20 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ள பேரம்பாக்கம் என்ற ஊருக்கு அருகில் அமைந்துள்ளது.

இத்திருக்கோயில் காலை 7:30 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4:30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திறந்திருக்கும்

மேலும் விபரங்களுக்கு 94425 85638 மற்றும் 94443 51026 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE