அருள்மிகு திருநீற்றீசுவரர் திருக்கோயில், பாடியநல்லூர்.

By நந்தா

இறைவன்: திருநீற்றீசுவரர்
இறைவி : திருலோகநாயகி
விருட்சம் : வில்வம்
தீர்த்தம் : தாமரைக் குளம்
ஆகமம் : சிவாகமம்

"திருநீறு" என்பது சைவ சமயத்தின் அடையாளங்களில் ஒன்றாகும். "திரு" என்பது தெய்வீகத் தன்மையையும் "நீறு" என்பது நம் வினைகளை நீக்குவதையும் குறிக்கும். நமது ஆன்மாவின் பாவங்களைப் போக்கி தெய்வீகத் தன்மையுடன் நம்மை இணைப்பது திருநீறாகும். இவ்வளவு புனிதம் வாய்ந்த திருநீறை நமது நெற்றியில் அணிவது என்றும் அழிவில்லாத இறைவனது திருவடியை அடைவதற்கான வழியாகும்.

திருநீறு அணிவது நமது நேர்மறை ஆற்றலை (Positive Energy) அதிகரிக்கும் தன்மை கொண்டதாகும். நம் நெற்றியில் நீறு அணிவது சூரியக்கதிர்களின் சக்தியை நமது உடலுக்குள் ஈர்த்து நமக்கு ஆற்றலைத் தரும் சக்தியாக உள்ளது.

"நீறு இல்லா நெற்றி பாழ்" என்ற முதுமொழியும் வழங்கப் படுவதால் திருநீற்றின் மேன்மையை நம்மால் உணர முடிகின்றது. இந்த திருநீற்றின் திருநாமத்தையே கொண்டு அருள்பாலிக்கும் ஒரு புராதனமான ஈசனின் திருக்கோயில் சென்னைக்கு அருகில் இருப்பது சென்னை வாழ் மக்கள் செய்த பெறும் பேறாகும்.

ஆம்! சென்னை செங்குன்றம் புழல் அருகில் பாடியநல்லூர் என்னும் தலத்தில் அருள் பாலிக்கும் ஈசனின் திருநாமம் "திருநீற்றீசுவரர்" என்று வழங்கப்படுகின்றது. திருநீற்றின் அனைத்து விதமான நன்மைகளும் ஒருங்கே சேர்ந்து இத்தலத்தில் லிங்க ரூபமாக அருள்பாலிப்பது சிறப்பான தரிசனமாகும்.

அழகான மூன்று நிலை ராஜகோபுரம் நம்மை வரவேற்கின்றது. கொடிமண்டபம், பலிபீடம், நந்தி மண்டபம் ஆகியவற்றோடு ஈசனும் அம்பிகையும் சுதைச் சிற்பமாக அலங்கரிக்கும் அழகான முன் மண்டபம் உள்ளது.
சுமார் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த இத்திருக்கோயிலில் அகத்தியர் வழிபட்டு மகிழ்ந்துள்ளார். அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவர் இத்தலத்தில் வழிபட்டு ஈசனைக் குறித்துப் பதிகம் பாடியதாக இத்திருக்கோயில் பற்றிய செவிவழிச் செய்தி உள்ளது. இதனால் இந்த ஊருக்கு "பாடிய நல்லூர்" என்ற திருநாமம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது.

ஈசனின் கருவறை மேல் அழகான விமானம் எழுப்பப்பட்டுள்ளது. கருவறையின் தேவகோட்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் அருள்பாலிக்கின் றனர். தேவகோட்டத்தில் அருள் பாலிக்கும் துர்க்கையின் திருமேனியழகு வார்த்தைக ளுக்கு எட்டாத வனப்பாகும்.

இத்தலத்தின் அம்பிகை "திருலோகநாயகி" என்று வழங்கப்படுகின்றார். இவரது கருவறையின் வெளியே உள்ள மண்டபத்தில் லட்சுமியும் சரசுவதியும் அருள்பாலிப்பது வேறு எந்த திருத்தலத்திலும் காண முடியாத அம்சமாகும். இந்த இரு தேவியரின் அம்சமாக திருலோகநாயகி அருள்பாலிப்பதாக இத்தலத்தில் கூறப்படுகின்றது.

பாடியநல்லூர் தலத்தில் ஐப்பசி மாத நிறைநிலா நாளின் போது அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது. கார்த்திகை மாதத்தில் இத்திருக்கோயிலின் அருகில் உள்ள திருக்குளத்தில் தெப்போற்சவம் நடைபெறுகின்றது. பௌர்ணமிதோறும் அன்னதானம் நடைபெறுவதுடன் பஞ்சமூர்த்தி கள் அலங்காரத்துடன் திருவீதி உலா வருவதும் சிறப்பான திருக்காட்சியாகும்.

பிரதோஷ நாட்களில் நந்தி எம்பெருமானுக்கும் ஈசனுக்கும் நடைபெறும் அபிஷேக ஆராதனைகளில் இப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான மக்கள் கலந்து கொண்டு ஈசனுக்குத் தேவையான திரவியங்களை அளித்து பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்கின்றனர்.

இத்திருக்கோயிலுக்கு அருகில் உள்ள இடத்தில் சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தலத்தில் வாழ்ந்த சித்த மகா புருஷர் ஒருவரின் அதிட்டானம் அமைந்துள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தினங்களில் இந்த சித்த மகா புருஷரின் அதிட்டானத்தில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றது.

பிராகார வலத்தில் அருள் பாலிக்கும் வள்ளி தேவசேனா சமேத முருகப்பெருமான் "கல்யாண சுப்ரமணியர்" என்று வழங்கப்படுகின்றார். திருமணமாகாத அன்பர்கள் இவரை வணங்கிட விரைவில் திருமணம் நடக்கும் என்று கூறப்படுகின்றது.

கந்தசஷ்டி விழாவின்போது ஆறு நாட்கள் விழாவும் சூரசம்ஹாரமும் நடைபெற்று ஏழாம் திருநாள் அன்று திருக்கல்யாண உற்சவம் மிகவும் சிறப்பாக நடைபெறுகின்றது.

புரட்டாசி மாதம் 1 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலும் பங்குனி மாதம்1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையிலும் சூரியனின் ஒளிக்கதிர்கள் பாடியநல்லூர் ஈசனின் திருவடிகளில் படர்ந்து சூரிய வழிபாடு நடைபெறுவது சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். இந்த நாட்களில் சென்னையின் பல்வேறு பகுதிகளில் உள்ள அன்பர்கள் இத்தலத்திற்கு வந்து வழிபாடு செய்து ஈசனது திருவருளைப் பெறுகின்றனர்.

பாடியநல்லூர் அமைந்துள்ள ஊரின் ஈசான்ய பாகத்தில் இந்த திருக்கோயில் அமைந்துள்ளதால் இத் திருக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த ஒரு திருத்தலமாக வணங்கப்படுகின்றது.

சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயில் பாடியநல்லூர் பேருந்து நிறுத்தத்திலிருந்து 500 மீட்டர் தூரத்திலும் செங்குன்றத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்திலும் சோழவரத்தில் இருந்து 5 km தூரத்திலும் புழலில் இருந்து ஏழு கிலோமீட்டர் தூரத்திலும் சென்னையிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்திலும் திருவள்ளூரிலிருந்து 37 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.

காலை 6:00 மணி முதல் பகல் 12.00 மணி வரையிலும் மாலை 4.00 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் பக்தர்களின் தரிசனத்திற்காகத் திருக்கோயில் திறந்திருக்கும்.

மேலும் விபரங்களுக்கு இத்திருக்கோயிலின் அர்ச்சகர் திரு சங்கர் குருக்கள் அவர்களை
98400 58107 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE