பட்டுக்கோட்டை – சேதுபாவாசத்திரம் சாலையில் 14 கிமி தூரத்தில் உள்ளது இந்த பள்ளத்தூர், பல இடங்களில் பள்ளத்தூர் என பெயர் கொண்ட ஊர்கள் உள்ளன. ஊர் பெயர் காரணம் தெரியவில்லை, நிலப்பரப்பில் பள்ளமாக அமைந்திருக்கலாம், அதனாலேயே இப்பெயர் வந்திருக்கலாம்,
பிரதான சாலையின் வலதுபுறம் திரும்பும் சாலையின் இருமருங்கிலும் தென்னஞ்சோலைகள் வளர்ந்து சூரியனை மறைத்து நிற்பதால் இதமான குளிர் முகத்தில் மோதுகிறது. தென்னம் பிள்ளைகளிடம் பேசிக்கொண்டே வந்ததால் தூரம் போனதே தெரியவில்லை.
நீங்கள் என்னைப் போல தனித்து, உயர்ந்து நிற்க வேண்டுமென்றால் ஒரே திசையில் வளர வேண்டும் என்ற நோக்கம் உடையவர்களாக இருங்கள் என்று தென்னை மனித குலத்திற்குக் கூறுகிறது.
தென்னை மரத்தின் பழுத்துபோன மட்டைகள் எளிதில் விழுந்து விடுகின்றன. கடந்த காலத்தில் நிகழ்ந்தவற்றை விட்டுவிடுங்கள். அவற்றையே சிந்தித்துக் கொண்டிருந்தால் நிகழ்காலத்தையும், வருங்காலத்தையும் பாதிக்கும், பழுதை மறந்ததால் தென்னை மட்டை விழுந்து போன சுவடில்லாமல் மரம் வழவழப்பாக இருக்கிறது.
ஊரின் மையத்துக்கு வந்துவிட்டோம் பெரிய அளவிலான சதுரவடிவ குளத்தின் கரையில் கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக அமைந்துள்ளது சிவாலயம். உயர்ந்த மதில் சுவர் முகப்பில் சிறிய ராஜகோபுரம். அதனை கடந்து உள்ளே சென்றால் அகன்ற முகப்பு மண்டபம், அதில் கிழக்கு நோக்கிய கருவறையில் இறைவன் கதலிவனேஸ்வரர் உள்ளார். சற்று பெரிய அளவிலான லிங்கமூர்த்தி. கருவறை வாயிலில் இரு பெரிய துவார பாலகர்கள் உள்ளனர்.
'கதலி' என்றால் 'வாழை' என்று பொருள். வாழை மரங்கள் நிறைந்த வனம் என்பதால் 'கதலி வனம்' எனப்படுகிறது.
இந்த வனத்தில் குடிகொண்ட இறைவனுக்கு ஸ்ரீகதலிவனேஸ்வரர் என்று பெயர். இவர் தீராத நோய்களைத் தீர்க்கும் திறன் கொண்டவர். இதே மண்டபத்தில் தெற்கு நோக்கிய கருவறையில் அம்பிகை பெரியநாயகி உள்ளார். முகப்பு மண்டபத்தின் வெளியில் சிறிய மண்டபத்தில் நந்தி உள்ளார்.
மராட்டிய மன்னர்கள் தஞ்சையை ஆண்டபோது இன்று நாம் காணும் கோயிலை எழுப்பி இருக்கவேண்டும். அதற்கு முன்னர் இருந்த தகவல்கள் தெரியவில்லை. தற்போது திருப்பணிகள் நடந்து வருகின்றன.
கருவறை கோஷ்டத்தில் தென்முகன், லிங்கோத்பவர் பிரம்மன் துர்க்கை உள்ளனர். சண்டேசர் பழமையானவராக உள்ளார். சிற்றாலயங்களில் முதலில் விநாயகர் பார்க்க பெரியதாக அழகாக உள்ளார்.
அடுத்து வடமேற்கில் சுப்பிரமணியர் சன்னதி நீண்ட மண்டபத்துடன் உள்ளது.
முருகனின் இடது கரத்தின் கீழே, மயிலின் திருமுகம் அமைந்திருப்பது அரிதாக காணக் கிடைப்பது இது, அசுர மயில் என்கின்றன ஞானநூல்கள். இந்த முருகனை வணங்கினால் நிலம் தொடர்பான வழக்கில் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். இடமோ வீடோ வாங்குகிற யோகமும் விரைவிலேயே வாய்க்கும்.
அசுரமயில் கொண்டு காட்சி தரும் முருகனை மறவாது வணங்குங்கள்.
வடகிழக்கில் நவகிரகம், மற்றும் பைரவர் சன்னதி உள்ளது.
பல சிறப்புக்கள் கொண்டதிருக்கோயில்.
விரைவில் குடமுழுக்கு காணவும் இருக்கிறது. அப்புறம் என்ன குருக்கள் எண் வேணும்னாலும் தரேன்!!