12 ராசிகள் அமைந்த சித்தர் சிவபீடம் !

By நந்தா

12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் ஆலயம், சித்தர் சிவபீடம் என்று அழைக்கப்படும் ராசி கோவிலாக திகழ்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில்.

மனிதர்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளை 12 ராசிகள், 27 நட்சத்திரங்கள், 9 கிரகங்கள் மற்றும் திதி, வார, நட்சத்திர, யோக, கரணம் என்று சொல்லக் கூடிய பஞ்சகங்கள் போன்றவை தான் நிர்ணயம் செய்கின்றன. இவைகளால் ஏற்படக்கூடிய தோஷங்களில் ராசி ரீதியாகவும், நட்சத்திர ரீதியாகவும் மனிதர்களாகிய நாம் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகிறோம். அந்த பாதிப்பில் இருந்து விடுபட பலரும் பரிகாரத் தலங்களைத் தேடிச் செல்கிறார்கள்.

அந்த வகையில் நமக்கெல்லாம் சிறந்த பரிகார தலமாக இருக்கிறது திருச்சி அருகே உள்ள ஏகாம்பரேஸ்வரர் திருக்கோவில். சுமார் 1300 வருடங்களுக்கு முற்பட்ட மிகப் பழமை வாய்ந்த சிவாலயம் இதுவாகும். 12 ராசிகளும், ஒரே சக்கர வடிவில் அமையப்பெற்றிருக்கும் இந்த ஆலயம், சித்தர் சிவபீடம் என்று அழைக்கப்படும் ராசி கோவிலாக திகழ்கிறது.

#இத்தல இறைவனின் பெயர் ஏகாம்பரேஸ்வரர். அம்பாளின் திருநாமம் காமாட்சியம்மன். இந்த சிவாலயத்தில் வட்ட வடிவிலான பீடம் அமைந்துள்ளது. இந்த பீடத்தில் மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் ஆகிய பன்னிரண்டு ராசிகளுக்குரிய குறிகள் பொறிக்கப்பட்டுள்ளன. மேலும் ஐராவதம், புண்ட்ரீகன், புஷ்பதந்தன், குமுதன், சார்வபவுமன், அஞ்சனன், சுப்ரதீபன், வாமனன் என திசைகளை காக்கும் அஷ்டதிக் கஜங்கள்(யானைகள்), நாகங்கள், 64 கலைகளை விளக்கக்கூடிய சிற்பங்கள், ஒவ்வொரு ராசிக்கும் உரிய அதி தேவதை, பிரத்தியதி தேவதைகள் ஆகியன 4, 8, 16, 32 ஆகிய எண்ணிக்கையில் வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப் படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த பீடத்தின் மீதுதான் அனுக்கிரக மூர்த்தியாக ஏகாம்பரேஸ்வரரும், சாரங்கநாத சித்தர் வழிபட்ட சிவ லிங்கமும் பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இந்தியாவிலேயே ஒரே இடத்தில் இது போன்ற சிறப்பம்சங்களுடன் கூடிய சிவாலயம் இதுதான் என்பது கூடுதல் சிறப்பாகும்.

இந்த கோவிலில் கடந்த 2011-ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இத்தலத்தில் காமாட்சியம்மன், சிந்தாமணி மாணிக்க விநாயகர், ஐஸ்வர்ய மகாலட்சுமி, ஸ்ரீதேவி பூதேவி சமேத பிரசன்ன வெங்கடாஜலபதி, அரசு-வேம்பு இணைந்த மரத்தடியில் ராகு, கேதுவுடன் கூடிய வலம்புரி விநாயகர், நவக்கிரகங்கள், காலபைரவர் ஆகிய சன்னிதிகளும் தனித் தனியாக அமையப்பெற்றுள்ளன.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE