கச்சபேஸ்வரர் திருக்கோவில்.

By நந்தா

காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு வட்டத்தில் உள்ள திருக்கச்சூர் அஞ்சனாட்சியம்பாள் உடனுறை ‌கச்சபேஸ்வரர் திருக்கோவில். இக்கோயில் சுந்தரரால் பாடப்பட்ட தலங்களில் ஒன்று, மேலும் இங்குள்ள மூலவர் 'விருந்திட்ட ஈஸ்வரர்' என்றும் அழைக்கப்படுகிறார்,

ஏனெனில் சிவபெருமான் சுந்தரரின் பசியைப் போக்க திருவோடு ஏந்தி பிச்சை எடுத்ததாக நம்பப்படுகிறது.

இங்குள்ள தியாகேசர் 'அமுதத் தியாகர் ' எனும் பெயருடையவர். பாற்கடலைக் கடையும் சமயத்தில் மந்தார மலை கனம் தாங்காமல் மூழ்கத் தொடங்கியது.
அது கடலில் மூழ்காமல் இருக்க திருமால் ஆமை (கச்சபம்) வடிவெடுத்து மந்தார மலையின் அடியில் சென்று மலையை தாங்கி நின்றார்.

திருமால் இவ்வாறு ஆமை உருவில் மலையின் கனத்தைத் தாங்கக்கூடிய ஆற்றலைப் பெற இத்தலத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டதாக வரலாறு கூறுகிறது.

ஆமை (கச்சபம்) வடிவத்தில் மஹாவிஷ்னு சிவபெருமானை வழிபட்டதால் இத்தலம் திருக்கச்சூர் என்று பெயர் பெற்றது..

இத்தலம் ஆதிகச்சபேஸம் என்று அழைக்கப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள கூர்ம தீர்த்தத்தில் நீராடி பிரதோஷ நாட்களில் கச்சபேஸ்வரரை வணங்கினால் எல்லா தோஷங்களும் நீங்கும்.

செல்வம், கல்வி, இன்பம் கிடைக்கும் என்று தல புராணம் கூறுகிறது.
இக்கோயில் ஆலக்கோயிலாகும்; ஆதலின் 'கச்சபவூர் ' என்னும் பெயர் நாளடைவில் மருவி மக்கள் வழக்கில் 'கச்சூர் ' என்றாயிற்று என்பர்.

சுந்தரர் திருக்கழுக்குன்றம் வழிபட்டுத் திருக்கச்சூரை அடைந்து பெருமானை - ஆலக்கோயில் அமுதனைத் தொழுது, மதிற்புறத்தே பசியுடன் அமர்ந்திருக்க; இறைவன் அந்தணர் வடிவில் வந்து, சுந்தரை அங்கேயே இருக்கச் செய்து; இவ்வூரிலுள்ள அடியார்கள் வீடுதோறும் சென்று, உணவு பெற்று வந்து, சுந்தரருக்கு இட்டு, அவர் பசியை போக்கினாராம்.

பசி நீங்கப் பெற்ற சுந்தரர், இறையருள் கருணையை வியந்து, 'முதுவாயோரி ' என்னும் பதிகம் பாடிப் போற்றினார்.

இந்திரன் ஒரு சாபத்தினால் நோய் உண்டாகி அவதிப்பட்டான். தேவலோக மருத்துவர்கள் ஆன அஸ்வினி தேவர்கள் அவனுக்கு எவ்வளவோ மருத்துவம் செய்து நோயை குணப்படுத்த முடியவில்லை.

எனவே நோயை குணப்படுத்தும் மூலிகை தேடி தேவர்கள் பூலோகம் வந்தனர். பல இடங்களில் தேடியும் மருந்து கிடைக்கவில்லை.

அவர்கள் நாரதரிடம் ஆலோசனை கேட்க அவர் மருந்துமலை எனும் மலையில் குடி கொண்டிருக்கும் சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டு வந்தால் அவர்கள் அருளால் மருந்து கிடைக்கும் என்று கூறினார்.

அதன்படி இங்கு வந்த அஸ்வினி தேவர்கள் மலைக்கோவிலில் அமைந்திருக்கும் ஔஷதகிரி ஈஸ்வரர் எனும் மருந்தீஸ்வரரை. சுவாமியை வழிபட்டனர்.

அவர்களுக்கு சிவபெருமான் மருந்து இருக்கும் இடத்தைக் காட்டி அருள் புரிந்தார். தேவர்கள் பலா, அதிபலா என்ற இரண்டு மூலிகைகளை எடுத்துக் கொண்டு இந்திரனின் நோய் தீர்த்தனர்.

நோய் தீர்க்க மருந்து கொடுத்ததால் இத்தல இறைவன் மருந்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

மருந்தை எடுத்துச் செல்ல அம்பாள் ஒளியைப் பரப்பியதால் இருள்நீக்கியம்பாள் என்று பெயர்.

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் அடியவர்கள் இந்த மருத்துவ மலையை கிரிவலம் வந்து வழிப்படிகின்றனர் இந்த மலையை வலம் வந்தால் அனைத்து நோய்களும் நீங்கும் என நம்பப்படுகிறது.

ஆண்டுதோறும் மருத்துவ கிரியில் திருவண்ணாமலையை போன்று தீபம் ஏற்றும் வழிபாடு நடைபெற்று வருகிறது.

இந்த கார்த்திகை தீபத்தில் நானும் கலந்து கொண்டு கிரிவலமும், மலை மேல் ஏற்றப்பட்ட தீபத்தை வழிபடும் பாக்கியமும் பெற்றேன்.

ஆன்மீக அன்பர்கள் அனைவரும் தவறாமல் இந்த இருள் நீக்கி அம்பாள் உடனுறை மருந்தீஸ்வரரை தரிசித்து எல்லா வளமும் நலமும் பெற வேண்டுகிறேன்...

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE