சந்திர தோஷம் போக்கும் பரிமள ரங்கநாதர் கோயில்

By நந்தா

திருஇந்தளூர் (மயிலாடுதுறை) பரிமள ரங்கநாதர் திருக்கோயில்.

ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவத்திருக்கோயில்களில் 26வது திருத்தலம்.

மயிலாடுதுறையிலிருந்து 2 கி.மீ. தூரத்தில் திருஇந்தளூர் அமைந்துள்ளது. மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து பத்து நிமிட அண்மையில் உள்ளது.இத்தலம் மயிலாடுதுறை (மாயவரம்) நகரத்திலேயே அமைந்துள்ளது. இந்தளூர் என்றால் பலருக்குத்தெரியாது. மாயவரம் பரிமள ரெங்கன் கோயில் என்றால் எல்லோருக்கும்தெரியும் .

சந்திரன் (இந்து) செய்த குற்றங்களை நீக்கி, அவனுடைய பிராயச்சித்தம் என்னும் கழுவாயை ஏற்று, சாபம் தீர்த்ததால், இந்து+ஊர் = இந்தளூர்!

இத்திருத்தலம் பஞ்சரங்க தலங்களில் ஒன்று. ஏகாதசி விரதம் சிறப்பு பெறக்காரணமாக அமைந்த திருத்தலம்.

எமனும், அம்பரீசனும் பெருமாளின் திருவடி வழிபாடு செய்கின்றனர்.

பஞ்சரங்க தலங்கள் அல்லது பஞ்சரங்க ஷேத்திரங்கள் என்பன காவிரி பாயும் பரப்பின் கரையில் அரங்கநாதரின் (திருமால்) கோவில்கள் அமைந்துள்ள ஐந்து மேடான நதித்தீவுகள் அல்லது நதித்திட்டுக்கள் ஆகும். ரங்கம் என்றால் ஆறு பிரியுமிடத்தில் உள்ள மேடான பகுதி என்று பொருள்படும்[1]. ரங்கம் என்றால் அரங்கம், அதாவது மண்டபம், சபை என்றும் பொருள் படும்

பஞ்சரங்க தலங்கள்

1. ஆதிரங்கம் - ரங்கநாத சுவாமி ஸ்ரீரங்கப்பட்டணம் (கர்நாடக மாநிலம்)

2. மத்தியரங்கம் - கஸ்தூரி ரங்கன் ஸ்ரீரங்கம் (தமிழ்நாடு)

3. அப்பாலரங்கம் - அப்பால ரங்கன் = அப்பக் குடத்தான் திருப்பேர்நகர் என்ற கோவிலடி (தமிழ்நாடு)

4. சதுர்த்தரங்கம் - ஹேம ரங்கன் = ஆராவமுதன் சாரங்கபாணி கோவில், கும்பகோணம் (தமிழ்நாடு)

5. பஞ்சரங்கம் - பரிமள ரங்கன் = மருவினிய மைந்தன் பரிமள ரங்கநாதர் கோவில் திருஇந்தளூர் (தமிழ்நாடு)

நவக்கிரகங்களில் ஒருவனான சந்திரன் தனக்கு ஏற்பட்ட ஒரு தோஷத்தைப் போக்குதற்காக இந்த தலத்தில் எம்பெருமானைக் குறித்து தவமியற்றி தோஷம் நீங்கப் பெற்றதாகத் தல வரலாறு.

(தோஷம் இன்னதென அறியுமாறில்லை) சந்திரனுக்கு இந்து என்ற ஒரு பெயர் உண்டு. தனக்கு தோஷம் நீங்கப்பட்ட இத்தலம் தனது பெயராலேயே வழங்கப்பட வேண்டும் என சந்திரன் வேண்டிக்கொள்ள இந்தளூர்ஆயிற்றென்பர்.

மூலவர் :

பரிமள ரெங்கநாதன், சுகந்தவன நாதன் மருவினிய மைந்தன், 4 புஜங்களுடன் ஆதிசேடன் மீது வீரசயனம். கிழக்கு நோக்கிய திருக்கோலம்.

கேட்டதெல்லாம் கொடுக்கும் பெருமாள்!

தாயார் :

பரிமள ரெங்கநாயகி, சந்திர சாப விமோசன வல்லி, புண்டரிக வல்லி

தீர்த்தம் : சந்திர (இந்து) புஷ்கரிணி

விமானம் : வேத சக்ர விமானம்

காட்சி கண்டவர்கள் : சந்திரன்.

சந்திரனுக்கு பலமுறை நேரிடையாகத் தரிசனம் கொடுத்த கோயில்.

ஆலய விசேஷம் - நூறு ஏகாதசி விரதம் இருந்த அம்பரீஷன் மூலமாக ஏகாதசி விரதம் சிறப்பு பெற காரணமாக இருந்த சக்தி மிக்க தலம்! தலம்.

சிறப்புக்கள்

1. இப்பகுதிக்கும் சுகந்தவனம் என்று பெயர் எனவே பெருமாளுக்கும்சுகந்தவன நாதன் என்ற திருநாமமும் உண்டானது. வடமொழி நூல்கள்சுகந்தவனநாதன் என்றே இப்பெருமானைக் குறிக்கின்றன. இப்பெயர்தான்தூயதமிழில் பரிமள ரெங்கன் என்றாயிற்று.

2. 4 புஜங்களுடன் கூடின இப்பெருமாளின் திருவடியருகில் கங்கைத்தாயாரும், சிரசருகில் காவிரித் தாயாரும் அமைந்துள்ளனர். ஐப்பசி மாதம்முழுதும் இங்கே விழாக் கோலமாக இருக்கும். சமுத்திரத்தில் காவிரி சங்கமமாகும் இடத்தில் நீராட இந்தியா முழுவதிலுமிருந்து இங்கு பக்தர்கள்வருவர்.

3. இத்தலம் பலவித வேலைப்பாடுகளுடன் கூடின, அழகு பொருந்திய பெரிய சன்னதியாகும். கட்டிடக் கலை வல்லுனர்கட்கு இந்தக் கோவிலில்உள்ள பல அமைப்புக்கள் ஆராய்ச்சி மனப்பாண்மையைத் தூண்டத்தக்க வகையிலும் அமைந்துள்ளது. இயற்கை எழில் சூழ மிகவும் ரம்மியமான பகுதியில் அமைந்துள்ள ஸ்தலமாகும் இது.

4. திருமங்கை ஆழ்வாரால் மட்டும் 10 பாக்களால் மங்களாசாசனம்செய்யப்பட்டது.

ஆசை வழுவாது ஏத்தும் எமக்கு, இங்கு இழுக்காய்த்து, அடியோர்க்குத்

தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின் றோமுக்கு,

காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர், எம்பெருமான்

வாசி வல்லீர்! இந்த ளூரீர்! வாழ்ந்தே போம் நீரே!

--பெரியதிருமொழி 4-9-4 (1331)

திரிதந்தாகிலும் தேவபிரானுடைக்

கரிய கோலத் திருவுருக் காண்பன் நான்”

என்னும்மாப்போலே திருமங்கை.

திவ்ய தேசங்களினூடே திரிந்து கொண்டிருக்கிறான் என்பது உலகமறிந்த விஷயமாகும். அப்பேர்ப்பட்ட இந்த அடியவனுக்கு பொன்னின் ஒளியைக்காட்டிலும் விஞ்சி நிற்பதான உமது வடிவழகைக் காட்டாமல் உள்ளீரே

“தேசம் அறிய உமக்கே ஆளாய்த் திரிகின்றோமுக்கு

காசின் ஒளியில் திகழும் வண்ணம் காட்டீர்” - என்றார்

நும்மடியோம், நுமக்கே என்பன போன்ற அழகு தமிழ்ச் சொற்களை திருமங்கையாழ்வாரும் நம்மாழ்வாரும் எடுத்தாண்டுள்ளனர். நம்மாழ்வார்,

“நுமக்கடிமை யென்றென்றே நொந்துரைத்தேன்”- என்று

சொல்லியிருப்பதும் இங்கு பொருளமைதியில் மிகவும் வியந்து போற்றத்தக்கதாகும்.

எம்பெருமான் திருவடிவம் கொள்ளை அழகு! திருவரங்கத்தைக் காட்டிலும் பெரிது! 12 அடி X 6 அடியாய், முழுதும் பச்சைக் கல்லில் ஆனது!

பட்டுப் பீதாம்பரத்தின் மடிப்புகளும், கை விரல் நகங்களும் தெரியும் அளவுக்கு நுணுக்கமாகச் செய்யப்பட்டிருப்பதை, ஆரத்தியின் போது காணலாம்!

திருமங்கையும் பரிமள ரெங்கனும் :

திருமங்கையாழ்வார் இத்தலத்திற்கு வந்தபோது பூஜைகள் முடிந்து கோவில் பூட்டப்பட்டுவிட்டது. தான் வருவதற்குள் இவன் கதவடைத்துக்கொண்டானே என்று கோபப்பட்ட திருமங்கை யாழ்வார் பெருமானை“வாழ்ந்தே போம் நீரே-என்று வசை வாழ்த்துக் கூறினார்.

அதாவது நமக்கு வேண்டிய ஒருவன் நமக்குத் தேவையான ஒரு பொருளை வைத்துக் கொண்டு நாம் அதைக் கேட்கும் போது வேண்டு மென்றே தரமுடியாது என்று கூறுவதாக வைத்துக் கொள்வோம். அவன் நமக்கு மிகவும் வேண்டியவனாதலால். பரவாயில்லை அதை வைத்துக்கொண்டு “நீரே வாழ்ந்துபோம்” என்று கூறுவதில்லையா

அதேபோல் பெருமாள் திருமங்கைக்கு வேண்டியவர். அர்ச்சாவதாரம்வேண்டிய பொருள். அதை தரிசிக்க வரும்போது கதவடைத்துக் கொண்டால்உம்மழகை நீரே ரசித்து வாழ்ந்துபோம் என்று ஆழ்வார் சொல்ல மாட்டாரா என்ன?

இத்தலத்திற்கு அமைந்த 10 பாடல்களும் திருமங்கை ஆழ்வாருக்கும்பெருமாளுக்கும் நடந்த விவாதமாகவே கூறுவர். மிகவும் இனிமையான உள்ளுறை பொருந்திய பாடல்களாகும் அவை,கங்கைக்கும் காவிரிக்கும் முக்கியத்துவம் கொடுத்ததாக இங்குதான் சொல்லப்படுகின்றது. பகவான் தலை மாட்டில் காவிரித் தாயாரும் கால் பக்கத்தில் கங்கையும் அமர்ந்திருக்கின்ற காட்சி மிகவும் அற்புதமானது. வேறெங்கும் காணமுடியாதது.

ஐப்பசி மாதம் முழுவதும் இந்த கோயிலில் விழாக் கோலம்தான். காவிரி நதி கடலில் சங்கமம் ஆகும் இடத்தில் கடைமுக ஸ்நானம் நடைபெறும். இது மிகவும் புனிதமான ஸ்நானம் என்பதால் இந்த ஸ்தலம் வரலாற்றுச் சிறப்பு உடையது.

பகவான் சயனத் திருக்கோலத்தில் சதுர்புஜத்தில் தரிசனம் கொடுக்கிறார்.

சந்திரனுக்கு மற்ற தலங்களில் பாவ விமோசனம் கிடைத்தாலும் சந்திரன் திருப்தி அடையவில்லை. இம்மியளவு கூட தன் மீது எந்த சாபமும் ஒட்டியிருக்கக் கூடாது என்பதில் உறுதியாகக் கொண்டு பெருமாளிடம் தன் குறையைச் சொல்வதைவிட தாயாரிடம் சொன்னால் நல்ல பலன் கிடைக்கும் என்றெண்ணி தாயாரான புண்டரீக வல்லியிடம் தன் வேண்டுகோளைச் சொல்ல பெருமாளும் தாயாரும் சேர்ந்து சந்திரன் மனக்குறையை அவர் மீதிலிருந்த பாவத்தை அப்படியே போக்கியதாகச் சொல்கிறார்கள்.

இதனால் தான் இங்குள்ள தாயாருக்கு சந்திரபாப விமோசந வல்லி என்று பெயர் உண்டு.

திருஇந்தளூர் பரிமளரங்கநாதன் திருக்கோயில் மாட வீதியில் மிகப் புராதனமான ஹயக்ரீவர் சந்நிதி அமைந்துள்ளது. இங்கு ஸ்வாமி தேசிகனும் லட்சுமி ஹயக்ரீவரும் காட்சி தருகிறார்கள்.

பரிகாரம் : மற்ற தலத்திற்குச் சென்றும் - பாவம் தீரவில்லையென்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து தங்களது பாவம், தங்கள் குடும்பத்தின் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் விலக்கிக் கொள்ள முடியும்.

தெரிந்தோ தெரியாமலோ பஞ்சமா பாதகங்கள் செய்திருந்தால் அதையும் இங்கு வந்து போக்கிக் கொள்ளலாம்.

பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்களின் சாபத்திற்கு ஆளானவர்கள், பெண் வாரிசு பிறக்கவில்லையே என்று கவலைப்படுகிறவர்கள் இங்கு வந்து சாந்தி செய்தால் அவர்களது அனைத்துத் குறைகளும் விலகிவிடும்.

சந்திரன் - சந்திர தோஷம் போக்கும் தலம். தோல் நோய்கள் நீங்கும் தலம்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE