மோகனா -ஓர் இரும்புப் பெண்மணியின் கதை

By News Room

மோகனா -ஓர் இரும்புப் பெண்மணியின் கதை
ஆசிரியர்: பேரா.சோ.மோகனா
பாரதி புத்தகாலயம்/2021/144 பக்கங்கள்

வாசிப்பு மராத்தான்
22RM 185.   15/30

 தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான பேராசிரியை. சோ.மோகனா அவர்களின் சுயசரிதை இந்நூல்.கரோனா காலம் அளித்த கட்டாய ஓய்வுக் காலத்தில் நூலை எழுதியுள்ளார்.மோகனா அவர்களின் சக சிறைவாசியும்,மேனாள் துணை வேந்தருமான வெ. வசந்தி தேவி, ச.தமிழ்ச்செல்வன்,மேனாள் சட்டமன்ற உறுப்பினர் பாலபாரதி,ஆசான் எஸ்ஏபி ஆகியோரின் அணிந்துரைகள் நூலையும் ஆசிரியரையும் அறிமுகம் செய்கின்றன.பல்வேறு கட்டங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களும் நிறைந்துள்ளன.ஆசிரியரே நேரடியாக 23 தலைப்புகளில் தன் வரலாற்றைப் பேசுகிறார்.ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் ஓர் அழகான, அர்த்தமுள்ள மேற்கோள் எடுத்தாளப்பட்டுள்ளது.

               "சுடும் வரை சூரியன்; சுற்றும் வரை பூமி" என்பது போல இயங்கிக் கொண்டே இருக்கும் வரை வாழ்க்கை என்பதைச் சித்தரிக்கும் நூல் இது.அதிலும் 'பெண்ணாகப் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்கும்' அல்லவா?

                 காவிரிக் கரையின் சோழம்பேட்டை கிராமத்தில் 1949 ல் பிறந்தவர் மோகனா.சாதாரணக் குடும்பம்.பொருளாதார நெருக்கடி. வீட்டில் ஓயாத வேலைகள். படிப்பு நன்றாக வந்தது.சிலரது உதவியால் காவிரி தாண்டிப் படிக்க முடிந்தது.கள்ளோ காவியமோ -படித்த முதல் புத்தகம். நூல் ஆர்வம் வளர்ந்தது.

                  கூறைநாடு நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் படிப்பு. மண்ணெண்ணெய் விளக்கில் தான் இரவுப் படிப்பு.11 ம் வகுப்பில் முதல் பத்து இடங்களுக்குள் தேர்வு.வீட்டில் துக்கம் கொண்டாடினார்களாம், மேலே படிக்க ஆசைப்பட்டதால்.மீறி கும்பகோணம் பெண்கள் அரசுப் பள்ளியில் சேர்கிறார்.மருத்துவராகும் கனவு பணம் இல்லாததால் கலைந்தது.இளங்கலை விலங்கியல் படிக்கிறார்.நண்பர் எழுதிய ஆங்கிலக் கடிதத்தால் வீட்டில் குழப்பம்.அல்வாவில் விஷம் வைத்துக் கொல்ல அப்பா அம்மா முயற்சி.உண்மையை விளக்கிய பின்னும் பேச்சு வார்த்தை இல்லை.யாரையும் காதலிக்க மாட்டேன் எனத் தந்தையிடம் சத்தியம் செய்து கொடுத்து படிப்பைத் தொடர்ந்து முதுகலைப் பட்டமும் பெறுகிறார்.

             காரைக்குடி அழகப்பா கல்லாரியில் 1971 ல் முதல் வேலை. ரூ.430/ முதல் சம்பளம்.பிறகு பழனி ஆண்டவர் கலைக் கல்லூரியில் வேலை.120 ஆசிரியர்களிர் இவர் மட்டுமே ஒரே பெண்.

            படிக்கும் போதே இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கு. கல்லூரியில் மூட்டா இயக்கத்தில் சேர்கிறார்.பேராசிரியர் அருணந்தி வழிகாட்டி ஆகிறார்.பாலினம் கடந்த உன்னத நட்பாக இது இறுதிவரை தொடர்கிறது.

           1975 ல் பன்னீர் செல்வத்துடன் திருமணம்.சதா சந்தேகப்படும் கணவர்.( தன்னுடைய இயலாமையை மறைக்க ஆண்கள் எடுக்கும் உத்திதான் சந்தேகம் என எழுதுகிறார்).மகன் வினாபா பிறப்பு. போர்க்களமாகும் வாழ்க்கை. தொடரும்அடி, உதை.விவாகரத்து முடிவு.5 வருட வழக்குக்குப்  பின் பிரிவு.17 வருட இல்லறம் முடிவுக்கு வருகிறது.

         மகன் வினோபாவை நன்கு படிக்க வைக்கிறார்.பத்மாவதி என்பவருடன் காதல் திருமணத்தையும் நடத்தி வைக்கிறார்.அமெரிக்காவில் வேலை கிடைத்து மகன் போய் விடுகிறார்.மகன்,மருமகள்,பேரன்களின் போன் அழைப்புக்காகக் காத்திருப்பு...

          சமூகச் செயல்பாடுகளில் ஈடுபட ஆரம்பிக்கிறார். அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கங்களில் பங்காற்றுகிறார். முக்கியப் பொறுப்புகளை ஏற்கிறார்.அறிவியல் இயக்கம் பெண்களை வீட்டுச் சிறையில் இருந்து விடுவித்தது என்கிறார்.தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தில் 34 ஆண்டுகளாகப் பணியாற்றி வருகிறார்.' அதன் தலைவராய் வர நீண்ட காலம் தேவைப்பட்டது' என்கிறார்.

          மூட்டா போராட்டத்தில் 1977 ல் கைதாகிறார்.ஜாக்டீ, ஜாக்டோஜியோ போராட்டங்களில் பங்குகொள்கிறார்.1988 ல் கைதாகி 25 நாட்கள் சிறைவாசம். சிறையில் உடனிருந்தவர்களில் முக்கியமானவர் மேனாள் துணைவேந்தர் வசந்திதேவி.

         2007 ல் பணிஓய்வுக்குப் பின் CITU தொழிற்சங்கத்தில் சேர்கிறார். துப்புரவுப் பணியாளர்களின் நலனுக்காகப் போராடினார்.கையால் மலம் அள்ளும் கொடுமைக் கெதிராகச்  செயல்பட்டார்.
         
            2010 ல் புற்றுநோயால் பாதிக்கப்படுகிறார். தைரியமாய் எதிர்கொண்டார். அறுவைச் சிகிச்சை,கீமோ சிகிச்சைகள்... அனைத்தையும் பதிவு செய்யச் சொன்னார்.புற்றுநோய் விழிப்புணர்வுப் பிரச்சாரத்திற்குப் பயன்படுத்தினார்.ஓய்ந்து கிடக்காமல் ,கணிணியைப் பயன்படுத்தி 400 கட்டுரைகளுக்கும் மேல் இக்கால கட்டத்தில் எழுதினார்.

   உடம்பு வலுப்பெற ' தாய் சி' பயிற்சி மேற்கொண்டார்.அதில் முதுநிலைப் பட்டயமும் பெற்றார். 5 ஆண்டுகளுக்குப் பின் நோயிலிருந்து மீண்டார்.

     வள்ளிதாசன் தூண்டுதலால் வாசகராய் இருந்தவர் எழுதத் தொடங்கினார்.அறிவியல் கட்டுரைகள் புனைகதைகள் என்று துளிர்,கோகுலம்,மருத்துவமலர் ,பிரபல நாளிதழ்கள் இவற்றில் வெளிவந்தன.பல நூல்களும் எழுதி வெளியிட்டுள்ளார்.

       சமூகத்துக்கான இயக்கங்கள் தாம் தன்னை அடுத்த நிலைக்கு எடுத்துச் சென்றதாகக் கூறுகிறார்.ஆனாலும்," வீட்டிலும் சமூகத்திலும் அங்கீகாரத்துக்காகப் போராடிக் கொண்டிருக்கும் பெண்கள், பெண்களைச் சமமாக நடத்த வேண்டும் என்கின்ற இயக்கங்களிலும் கூடப் போராடத் தான் வேண்டுமா?' என்கிற கூர்மையான விமர்சனத்தையும் முன்வைக்கிறார்.குணப் படுகொலை( Character assassination) பெண்களுக்கு எதிரான ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது என்கிறார்.துணிச்சல், தைரியம் மட்டுமே வெல்லும் வழி எனச் சுட்டிக் காட்டுகிறார்.

               தான் பயணங்களின் காதலி என்கிறார்.இந்தியாவில் பல இடங்கள், அண்டை நாடுகள், அமெரிக்கா என்று பறந்திருக்கிறார்.2017-19 ம் ஆண்டுகளில் அறிவியல் இயக்கப் பணிகளுக்காக 1,42,000 கிமீ தூரம் பயணம் செய்துள்ளார்.ஒரு மாதத்திற்கு 10000 முதல் 14000 கிமீ வரை பயணம் செய்துள்ளார்.

              65 வயதுக்கு மேல் புற்றுநோய் ஆராய்ச்சிப் படிப்பில் ஈடுபட்டு களப்பணி ஆற்றி வருகிறார்.2022 க்குள் ஆராய்ச்சியை முடிக்க முயன்று வருகிறார்.

                வசந்திதேவி எழுதுகிறார்:" மோகனாவின் அசாதாரணமான துணிவு,தன்னம்பிக்கை,அர்ப்பணம் ஆகியவற்றின் ஊற்றுக்கண் எது? வாழ்க்கையிடம் அவர் கொண்ட மட்டற்ற காதல் '. உண்மை தானே?

             "நம்பிக்கை இருக்கும் இடத்தில் வாழ்க்கை இருக்கிறது.இது நமக்குத் தைரியத்தையும் வலிமையையும் கொடுக்கிறது"- நூலின் ஆரம்பத்தில் மோகனா அவர்கள் கொடுத்துள்ள ஆனி பிராங்கின் மேற்கோள் இது.மோகனாவுக்கும் கச்சிதமாகப் பொருந்துகிறது.

.
மேலும்