நானும் சித்தப்பாவும் மால்ல படம் பாக்கப்போனோம்
சித்தப்பாகேட்டாரு டிக்கட்டு எம்புட்டுன்னு
முன்பதிவோட 210 ரூபாசித்தப்பான்னேன்
அய்யோ அம்புட்டுக்காசான்னாரு
உள்ளபோகையில எதுக்கு எல்லாத்தையும்
புடுங்குறாய்ங்க
திரும்பக்குடுத்துருவாங்கன்னேன்
அழகாத்தான் வைச்சிருக்கான் கொட்டாய
இடைவேளை வந்தது கக்கூஸ் அளகாத்தானிருக்கு
பாப்கார்ன் வாங்கட்டுமா என்றேன்
நான் குடுக்குறேன்பா என்று 20யை ரூ நீட்டினார்
வேணாம் வைச்சிக்கங்கஎன்று கார்டுபோட்டேன்
எம்புட்டு என்றார் 270 ரூ என்றேன் மயக்கம்போடாதகுறை
அம்புட்டா தண்ணி ...பாட்டில் 50 ரூ
என்னடா இது கொள்ளையா இருக்கே சமோசா 100ஆ
ஏண்டா சொத்தவித்துத்தான் படம் பாக்கனும்போல
270 ரூவாய்க்கி 5கிலோ அரிசி வாங்குனா
மூணுநாளைக்கி குடும்பமே சாப்பிடலாமே
25 லிட்டர் வாட்டர் கேனே 30 ரூவா தானடா
இம்புட்டுச்செலவு பண்ணியா படம் பாக்குற
சோளப்பொறிக்கு அம்புட்டுவெலையாடா
நாடுதாங்காதுடா எங்க ஊரு டூரிங்டாக்கீஸ் ல
அப்போ படம் 1ரூ முருக்கு 10 பைசாதான்
மணல் போட்ட தரைல உக்காந்து படம் பாப்போம்
உயரம் பத்தலைன்னா மண்ணைகுமிச்சி உக்காந்துக்குவோம்
வீட்டுல இருந்து பலாகாரம் எடுத்துப்போய் சாப்புடுவோம்
தண்ணியெல்லாம் மண்பானையில வைச்சிருப்பாக
கீத்துக்கொட்டாயில காத்து அப்புடியே அள்ளும்
இப்புடி ஆம்பளையும் பொம்பளையும் சேர்ந்து
ஒக்காரமாட்டாக தனித்தனியாத்தான் ஒக்காரனும்
மொத்தம் 3 இன்ட்டர்வல்விடுவாய்ங்க
போலீஸ்காரன் வந்த சிவப்பு பல்பு எரியும்
பீடிகுடிக்கிறவைய்ங்க எல்லாம் அமத்திருவாய்ங்க
டிக்கெட் எடுக்குறதே ஒரு சவால்தான்
ரேடியாவில சரவணப்பொய்கையில் நீராடின்னு
பாட்டுப்போட்டா படம் போடப்போறாங்கன்னு அர்த்தம்
அடிச்சிவிழுந்து ஆத்தைக்கடந்து ஓடுவோம்
அதெல்லாம் ஒருகாலம் ந்னு பொலம்ப ஆரம்பிச்சிட்டார்
சித்தப்பா..இது வேறகாலம் போனகாலம் திரும்பாது
அவர்மூஞ்சைத்தொடைக்கிறமாதிரி கண்ணைத்தொடச்சதை
பாத்தும் பாக்காதமாதிரி ரசிச்சேன்.......
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்