மிளகாய் சித்தர் வரலாறு!

By சரவணன்

அவருக்கு மிளகாய் சித்தர் என பெயர், மோர் மிளகாயோ இல்லை பச்சை மிளகாயோ கொடுத்து நல்ல குளிர்ந்த மோரையும் கொடுத்தால் ஆசையாய் ஏற்றுகொள்வார், அதை தவிர வேறு எந்த ஆகாரமும் இல்லை, மோர் கலந்த கஞ்சி மட்டும் எப்போதாவது உண்டு.

அந்த மிளகாய் சித்தர் திருவாங்கூர் மகாராஜாவினை 1920களில் சந்திக்க சென்றிருந்தார், கோவில் திருப்பணிக்கு உதவி கோரி சென்றிருந்தார்

அக்காலத்தில் மதுரையில் இந்து அரசர்கள் இல்லை, ராமநாதபுரம் பக்கம் இருந்த அரசர்களும் வலுவாக இல்லை இன்னும் பிரிட்டிஷ் அரச சதியும் மிஷனரி சதிகளும் இந்துகோவில்களை எலலாம் ஒழித்து கொண்டிருந்தன‌
அதே அச்சுறுத்தல் அவர் வழிபட்ட முருகன் ஆலயத்துக்கும் வந்தது, அந்த சிறிய பொத்தையின் அப்பக்கம் கிறிஸ்தவ சபைகளும் மதமாற்றமும் பெருகின, அது பொத்தையினை கைபற்றி கிழக்கே வந்தால் மொத்தமும் கபளீகரம்

இங்கோ இந்த பாண்டிய மன்னன் கால முருகன் ஆலயம் பாழ்பட்டு கிடந்தது தெப்பக்களும் அலங்கோலமாய் அடையாளமற்று கிடந்தது, பாண்டிய மன்னர்களின் வீழ்ச்சியால் அந்த முருகபெருமான் ஆலயம் அவ்வளவுக்கு பாதிக்கபட்டிருந்தது

அந்த முருகபக்தர் ஒருவர்தான் இதனை எல்லாம் அறிந்து முருகனுக்காய் அவன் ஆலயத்துக்காய் ஓடிவந்தார் , அவர் அப்படி வரும்போது வயது 13

அவர் அந்நிய மதமாற்றம் எல்லா குழப்பத்தையும் செய்வதை அறிந்து அன்றே துடித்துபோனார், பாண்டிய மன்னனின் மாளிகை மண்மேடாக கிடக்க , அவன் யானை நீராடிய இடம் சாக்கடையாக கிடக்க இன்னும் இந்து ஒழிப்பும் அந்நிய மயமாக்கும் கொடுமையில் முருகபெருமான் ஆலயம் அடுத்த இலக்காய் இருந்தது

இந்துக்களுக்கு அன்று எதுவுமில்லை , கல்வி முதல் எல்லாமும் அந்நிய கரங்களில் இருந்தது அதிகாரமும் ஆட்சியும் அவர்களிடமே இருந்தது, இந்துக்கள் செறிந்து வாழ்ந்த இடங்களில் இந்து கல்லூரிகளும் இந்து கல்வி நிலையங்களும் வந்தன ஆனால் இந்த பின் தங்கிய பகுதியில் வறண்ட பகுதியில் எதுவுமில்லை அதனால் மதமாற்றம் தீவிரமானது

13 வயதில் பால சாமியாக அவர் கிளம்பினார், அவரால் அந்த தனிமனிதனால் எதுவும் செய்யமுடியாது ஆனால் இந்த முருகபெருமான் ஆலயத்தை துலக்கினால் இந்த ஆலயத்தை சீர்படுத்தினால் இந்துக்கள் உணர்வு பெறுவார்கள் இந்துக்கள் உணர்வும் பலமும் அதிகரிக்கும் அதுதான் முழுக்க சரியானது, இந்து உணர்வை எழுப்ப இந்த கோவில் அவசியம் அதனை அழியாமல் காத்தல் அவசியம் என தன் வாழ்வை அப்போதே அர்பணித்தார்
அவர் அந்த முருகபெருமான் அடியாராக வாழ்ந்து முருகனோடு கலந்த பரதேசி சித்தர் வழியில் தவக்கோலம் பூண்டார், பரதேசி சித்தர் வாழ்வும் தவமும் அவர் சமாதியும் அங்கு பிரசித்தி

முருகபெருமான் இருக்குமிடமெல்லாம் சித்தர்கள் இருப்பார்கள், அப்படி இந்த சித்தர் உருவான காலம் 16ம் நூற்றாண்டை அன்மித்த பகுதிகள்

அவர் எங்கிருந்து வந்தார் எப்படி வந்தார் என்பது பற்றி தகவலில்லை ஆனால் பரதேசியாக அக்கோவில் வாசலிலே தவக்கோலமாய் அமர்ந்திருக்கின்றார், அங்கே வாழ்ந்திருக்கின்றார்

சிலர் அவர் தாழ்த்தபட்டவர் என்பதால் அக்காலத்தில் கோவிலுக்குள் அனுமதிக்கபடவில்லை எனும் செய்தியும் உண்டு அதே நேரம் எங்கிருந்தோ வந்தவரை சில பாதுகாப்புக்காக உள்ளே அனுமதிக்கவில்லை எனும் செய்தியும் உண்டு , எப்படி நோக்கினும் அவர் ஆலயத்துக்குள் வரவில்லை என்பது உறுதி
ஒரு நாள் அவர் கோவில் வாசலில் இருந்து எழுந்து சத்தமிட்டார் "நெருப்பு நெருப்பு" என அவர் அலற எல்லோரும் பரிகசித்தார்கள், "எங்கே நெருப்பு?" என சிரித்தாரள்

"உள்ளே.." என கைகாட்டிவிட்டு மறுபடி அதே வார்த்தையினை சொல்லி கண்களை மூடி கொண்டார்
அதே நேரம் உள்ளே விளக்கில் இருந்து பரவிய நெருப்பு முருகபெருமான் ஆடைமேல் பற்றி எரிய தொடங்கியிருந்தது, இவரின் வார்த்தையினை நம்பி உள்ளே சென்றவர்கள் உரிய நேரத்தில் நெருப்பை அணைத்தார்கள், சாமியின் சக்தி அப்போதுதான் தெரிந்தது

அதன்பின் அவரை வணங்க தொடங்கினார்கள்
அந்த முருகனுக்கு அப்போது ஆடை தைக்க வேண்டியிருந்தது ஆனால் அதை தொட்டு அளக்கும் தகுதி கொண்ட அர்ச்சகர், தாந்த்ரீகஎ என்பவர் வெளியூர் சென்றவர் வர நாளாயிற்று

இதனால் எப்படி அளப்பது என எல்லோரும் தவித்தபோது தன் ஞானக்கண்ணால் முருகனுக்கான ஆடை அளவினை சுவாமி துல்லியமாக சொன்னார், அப்படியே உருவான ஆடை முருகனுக்கு மிக சரியாக இருந்தது
இன்னும் எண்ணற்ற அற்புதங்களை முருகபெருமானால் செய்த அந்த சித்தர் "பரதேசி சித்தர்" என மக்களால் கொண்டாடபட்டார்,  அவரால் தீராத நோய்கள் இல்லை, செழிக்காத பயிர்களில்லை, வாழாத குடும்பமில்லை
அப்பக்கம் விவசாய அறுவடை காலங்களில் நெல்லும், வாழையும், இன்னும் பலவுமாக அவருக்கு குவியும் அவற்றையெல்லாம் முருகபெருமான் ஆலயம் நோக்கி கைகாட்டிவிட்டு அவர் தன் கந்தல் துணியுடன் யாசகம் பெற்று உண்டுவிட்டு மூலையில் ஒடுங்கி கொள்வார்

அப்பக்கம் அவர் மகா பெரிய சித்தராக விளங்கினார், எல்லா வகை ஞானமும் பெரும் சக்தியும் அவரில் குடிகொண்டிருந்தன‌

ஒரு வைகாசி மாதம் 20ம் நாள் அவர் முருகபெருமானுடன் கலந்துவிட்டார் இன்றும் அவர் அருபியாய் அவர் சமாதியில் உண்டு, அந்த சித்தரின் வழியில் 13 வயதில் முருகபெருமான் ஆலயத்துக்காய் வந்தவர் மிளகாய் சித்தர்

முருகபெருமான் மேல் கொண்ட பக்தியால் முழுக்க தவம் தியானம் என செய்து முரூகபெருமானின் சக்தியின் வடிவமாக அவர் மாறி போனார்

கோவில் வாசல் மரமே அவர் வசிப்பிடமாயிற்று, அரையாடை ஒன்றே அவர் ஆடையாயிற்று, மிளகாயும் மோருமே அவர் ஆகாரமமுமாயிற்று

முழுக்க தவசியான அவர் அப்பக்கம் பாண்டிய நாட்டு மன்னன் கால மும்முகம் கொண்ட அன்னை கோவில் என அழிந்து கிடந்த இடத்தை எல்லாம் மீட்டார், இன்னும் பல வகையில் அழிந்து கொண்டிருந்த சமயத்துக்கு புத்துயிர் கொடுத்தார்

அவர் எவ்வளவோ நோய்களை தன் கை விபூதியால் சுகமாக்கினார், வாழ வழியற்ற எத்தனையோ குடும்பங்களை தன் அருள்பார்வை ஒன்றாலே சரியாக்கினார்

வறுமையும் வறட்சியும் நிரம்பிய அந்த இடத்தில் ஏற்பட இருந்த பெரிய மதமாற்றம் அவரால் தடுக்கபட்டது, மிக பெரிய எதிர்ப்பை மதமாற்ற சக்திகளுக்கு கொடுத்தார்

அவரின் எண்ணமும் சிந்தையும் அந்த முருகபெருமான் ஆலயத்தை சீர்தூக்கி நிறுத்திவிட்டால் அந்த ஆலயமே மக்களை இந்துவாக நிறுத்தி இந்த சமயத்தை காத்து கொள்ளும் , முருகபெருமானே இங்கு காவலாய் இருப்பார் என தவமிருந்தார்

 அக்கோவிலில் பெரும் திருப்பணிகளை செய்து கொண்டிருந்த நேரமிது, அப்படி தேர் செய்ய நிதி வேண்டிதான் திருவிதாங்கூர் மன்னனை சந்திக்க வந்திருந்தார்

அப்போது ஆரல்வாய்மொழி வரை திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உட்பட்டது , மன்னர் அடிக்கடி இரணியல், தக்கலை  , கோட்டாறு, ஆரல்வாய்மொழி என வந்து ஆய்வு செய்வார், நாகர்கோவில் என்பது அப்போது நாகராஜா கோவிலை ஒட்டிய வெகு சிறு பகுதி 

மன்னர் இரணியல் அருகே தங்கியிருந்தபோது அவரை காண சென்றார் மிளகாய் சித்தர், மன்னனை சந்திக்க வருவோரை சோதிக்க வேண்டும் என்பது ராஜநீதி

அதன்படி "மிளகாய் சித்தரோ? நிறைய மிளகாய் உண்பீரோ?" என அரண்மனை அலுவலர்கள் பகடி செய்தார்கள் சுவாமியும் "ஆம், உண்போம்" என பவ்யமாக சொன்னார்

உடனே காரமிகுந்த ஆந்திராவின் குண்டூர் மிளகாய் வத்தல் கொண்டுவரபட்து "எங்கே உண்ணுங்கள்" என்றார்கள், சித்தரோ பனங்கிழங்கினை உண்பது போல் அதனை கொஞ்சமும் தயக்கமின்றி இயல்பாய் உண்டார்

அதே நேரம் உள்ளே இருந்த மன்னன் மிளமாயினை கடித்தது போல் அலறினான், அவன் வயிறு தொண்டை என எல்லாமும் எரிய ஆரம்பித்தது, அவன் இருமலும் கதறலுமாக அலற தொடங்கினான்

சாமியிடம் விளையாடியவர்களுக்கு உண்மை புரிந்தது அவரிடம் மன்னிப்பு கேட்டு உள்ளே அவசரமாய் அழைத்தார்கள், சுவாமி தன் சுருக்கு பையில் இருந்து விபூதி எடுத்து "முருகா" என சொல்லி மன்னன் நெற்றியில் இட்டு கொஞ்சம் விபூதியினை விழுங்க சொன்னார்

மன்னனின் நோவு உடனே நின்றது
பாண்டி, என்றும் பாண்டி நாட்டுக்காரன் என்றும் அவர்களால் கிண்டலாக பார்க்கபட்ட சுவாமியின் சக்தி அறிந்து முழுக்க பணிந்த மன்னன் அவருக்கு வேண்டியன செய்தான்

அதை கொண்டும் இன்னும் பல நிதிகளை கொண்டும் கோவில் திருப்பணி, கொடிமரம், தேர் என செய்து இன்னும் பழுதடைந்து கிடந்த தெப்பகுளம் என எல்லாமும் மீட்டெடுத்து , அடையாளமற்று அழிய இருந்த அத்தனையும் மீட்டெடுத்தார்

அவரின் பெயர் எல்லா இடமும் பரவிற்று எங்கிருந்தெல்லாமோ இருந்து பக்த கூட்டம் அவரை காண ஓடி வந்தார்கள், வந்தவரெல்லாம் நலம் பெற்றார்கள்

அப்படி வந்தவர் சிங்கம்பட்டி ஜமீன், அவருக்கு நெடுங்காலமாய் வாரிசு இல்லை மிளகாய் சித்தரை தேடி வந்தவர் சித்தரிடமிருந்து ஒரு பிடி விபூதியினை பெற்றார், அது அவருக்கு பெரும் அதிசயத்தை செய்தது
மிக அழகான வாரிசொன்று கிடக்க ஓடி வந்த ஜமீன் சித்தர் தங்கியிருக்க ஒரு மடம் கட்டி கொடுத்தார், 

அதுவரை மரத்தடி ,  ஓலைகுடிகை, , பழைய கால கல் சத்திரம் என தங்கியிருந்த சித்தர் கோவிலை ஒட்டி ஜமீன் கட்டி கொடுத்த மடத்திற்கு வந்து தவமிருந்தார்
இன்றும் அந்த மடம் அக்கோவில் அருகே உண்டு

இந்த மிளகாய் சித்தரிடம்தான் மதுரை பக்கம் இருந்து இருளப்ப கோனார் என்றொருவர் ஓடிவந்து அழுதார், காரணம் இருளப்பரின் ஜாதகம் 26 வயதில் முடியும் என கணிக்கபட்டிருந்தது, மிக பிரபலமான ஜோசியர்கள் அதை கணித்து கொடுத்தார்கள் 

மிக்க துயரத்தோடு மிலகாய் சித்தரை சந்தித்தார் இருளப்ப கோனார், அவரை உற்றுபார்த்த சுவாமி சொன்னார் "திருபரங்குன்றம் அருகே சூட்டுகோலுடன் ஒரு சித்தர் இருப்பார் அவரை சென்று பார் உன் விதி மாறும்"
அப்படியே இருளப்ப கோனார் மதுரை திருப்பரங்குன்றம் சென்று சூட்டுக்கோல் சித்தர் எனும் மாயாண்டி சித்தரை சந்தித்து தன் வாழ்வின் விதியினை மாற்றிகொண்டு அந்த மாயாண்டி சித்தருக்கே சீடராகி அவருடனே ஐக்கியமாகி அங்கே கலந்தும் விட்டார்

இப்படி எண்ணற்ற அற்புதங்களை செய்தவர் அந்த மிளகாய் சித்தர், எண்ணற்ற மக்களுக்கு தலைவிதியினை மாற்றியவர், அவர் மட்டும் அந்நேரம் முருகபெருமானால் ஆட்கொள்ளபட்டு பெரும் சித்தராய் எழும்பியிராவிட்டால் அப்பக்கம் மதமாற்றம் எல்லை தாண்டி முழுக்க விழுங்கியிருக்கும் முருகபெருமான் ஆலயமும் மிஞ்சியிராது

காலத்தால் வந்த மகானே , அந்த சித்தரே அந்த பகுதியினையே காத்தார்
அவர் மிளகாய் சித்தர் என எல்லா இடமும் அறியபட்டாலும் அங்கு அவர் பெயர் வேலாண்டி தம்பிரான், அவர் காத்த ஆலயம் வள்ளியூர்
முருகபெருமான் ஆலயம்
ஒரு சஷ்டி காலத்தில் ஐப்பசி பூரட்டாதியில் அவர் முருகபெருமானோடு கலந்துவிட்டார் அவரின் ஜீவசமாதி வள்ளியூர் முருகபெருமான் கோவிலின் தென்மேற்கு மூலையில் அவரின் மூத்த சித்தர் பரதேசி சித்தர் சமாதிக்கு மேற்கே அமைந்துள்ளது

இன்றும் அவர் அரூபியாய் அங்கு உண்டு, தன்னை நம்பிவரும் மக்களுக்கு ஏதோ ஒருவடிவில் அவர் தன்னை வெளிபடுத்தி எல்லா அதிசயமும் செய்து அந்த முருகனுக்கும் அவன் ஆலயத்துக்கும் பெரும் சாட்சியாக நிற்கின்றார்

அந்த முருகன்கோவில் வாசலில் எப்போதும் சித்தர்கள் குழுமியிருப்பார்கள், ஏகபட்ட அடியார்கள் ஒன்றுமறியாதவர் போல் அமர்ந்து தியானத்திலும் இதர வழிபாட்டிலும் இருப்பார்கள்

அவர்களில் ஒருவராக இன்றும் அங்கு அற்புதங்களை செய்து கொண்டிருக்கின்றார் வேலாண்டி தம்பிரான்,  வள்ளியூர் முருகபெருமானை வணங்கி அந்த பரதேசி சித்தரையும் இவரையும் வணங்கிவிட்டு இந்த சித்தர்கள் கூட்டம் அருகே வந்தால் அவர்களில் ஒருவராக வந்து அந்த சித்தரே உங்களை தேடிவந்து உங்கள் எல்லா சிக்கலையும் நீக்கி முழு ஆசியும் தருவார் இது சத்தியம்

இன்றும் அவர் அங்குதான் உண்டு, அக்கோவிலின் காவலாக அடியார்களின் அருளாளராக அவர் முழு வல்லமையுடன் உண்டு, நம்பி தேடுபவர்கள் அவரை கண்டடைவார்கள்

சஷ்டி காலத்தில் திருசெந்தூர் ஆலயமும் அதனை சுற்றி சமாதி கொண்டு ஆசிவழங்கும் ஐந்து சித்தர் பீடங்களும் முக்கியமானவை, அப்படியே அதன் அருகே அமைந்திருக்கும் இந்த வள்ளியூர் முருகன் கோவிலும் இந்த இரு சித்தர்களின் சமாதிகளும் மிக மிக முக்கியமானவை

அப்பக்கம் சஷ்டி விரதம் இருப்பவர்களும் திருசெந்தூர் கோவிலுக்கு செல்பவர்களும் வள்ளியூரில் இந்த முருகபெருமானையும் அவரின் இரு அடியார்களையும் தரிசித்து செல்வீர்களாயின் இந்த சஷ்டியில் எல்லா அருளும் நிறைவும் பெறுவீர்கள், முருகபெருமானின் பெரும் அருளும் ஒளியும் உங்கள் வம்சத்துக்கே காலம் காலமாய் தொடர்ந்து வரும் இது சத்தியம்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE