தெனம் அந்தப்பாட்டிவரும் காலையில. அம்மா தேங்கா முருங்கைக்கா எலுமிச்சம்பழம் இருக்கு வாங்குறயான்னு கேக்கும். மார்கெட்ட விட கொஞ்சம் அதிகமாத்தான் வெல சொல்லும். ஏன்னு கேட்டா அங்கருந்து வீட்டுக்குக்குக் கொண்டாந்து குடுக்குறமுல்ல அதான். ஆனா நீ குடுக்குறதக்குடு வாங்கிக்க ஒன்னும் சொல்லமாட்டேன்னு தாராளப்பிரபு மாதிரி சொல்லும்
அதுக்கு அப்புடி ஒன்னும் இலவசமாக்குடுக்க வேணாம். கேட்டு சரியானகாச வாங்கிக்கன்னு சொல்லி நாலு தேங்கா 100ரூஒருமுருங்கைக்கா கட்டு 20ரூவான்னு குடுக்கும்.எப்புடிப் பாத்தா லும் அந்தப்பாட்டிவயசு 70 இருக்கும் இந்த வயசுலயும் தினம் மூட்டையத்தூக்கிட்டு நடந்து வந்து யாவாரம் பண்ணும்
ஏன் பாட்டி இந்த வயசுலயும் ஒழைக்கனுமா ஒன்னப்பாத்துக்க ஆருமில்லயான்னு கேட்டா அப்புடி ஆராவது இருந்தா நா ஏன் சீரழிஞ்சி சீப்பட்டுக்கெடக்கேன். அன்னன்னக்கி சூரியன் வந்தாத்தாத்தேன் வெளிச்சம் அன்னன்னக்கி சம்பாரிச்சாத்தேன் கஞ்சின்னு தத்துவம் சொல்லும்
ஒருநா அது நடக்கமுடியாம வந்து கதவத் தட்டுச்சு. ரொம்ப சோர்வாவும் இருந்துச்சு.
தேங்கா வாங்குறீயா முருங்கக்கீர இருக்கு ஒடம்புக்கு ரொம்ப நல்லதுன்னு சொல்லிட்டு ஒக்காந்துருச்சு. பாத்தா பாவமா இருந்துச்சு
ஏன் பாட்டி டீ சாப்புட்டுறீயான்னு கேட்டு ஒரு டம்ளர் டீ குடுத்தா அந்தம்மா. அப்புடியே பாட்டி ரெண்டு இட்லி சாப்புடுறீயான்னு கேட்டதும் அதுக்கு கண்கலங்கிருச்சு. பாவம் சாப்புடல போல , வாங்கி சாப்புட்டுட்டு டீயகுடிச்சதும் கொஞ்சம் தெளிச்சி வந்துச்சு.
இந்தா 4 தேங்கா இருக்கு 100 ரூ வா குடு.இந்தா முருங்கக்கீர ஒரு கட்டு 20 ரூவான்னு சொல்லிச்சி. அப்ப கொஞ்சம் கொறைச்சிக்க கூடாதான்னு கேட்டவன்ன அதுக்குக்கோவம் வந்துருச்சு. இது யாவாரம் கட்டுனாத்தேன் குடுக்கமுடியும்னு பட்டுன்னு சொன்னதுல அவளுக்குக்கொஞ்சம் மனசு வருத்தம் சரி வேணாம் தேங்காயும் கீரையும்னு சொன்ன வன்ன சரி உனக்குக் கணக்கில்ல நீ குடுக்குறதக்குடுன்னு சொல்லிக்குடுத்துச்சு அப்புடிச்சொன்னா அது சொன்னதைக் குடுத்துரும்னு நம்பிக்க அதுக்கு .அதேமாதிரி பாட்டி சொன்னதை குடுத்துச்சு அந்தம்மா
இது தினம் நடக்குறதுதான். ஒரு நா பாட்டி வந்து கதவத்தட்டயில இந்தம்மா கதவை தொறக்கல. ஆளு இல்ல போலன்னு சொல்லிட்டு கெளம்பும் போது அந்தம்மா கதவைதொறந்துச்சு. இப்ப அந்தம்மா சோர்வா இருந்துச்சு. நிக்க முடியல.
ஏத்தா ஒடம்புக்கு என்ன செய்யிதுன்னு பாட்டி கேட்டுச்சு. அப்ப அந்தம்மா சொல்லிச்சி எல்லாப்பொம்பளைக்கும் வார பிரச்ச னை தான் ரொம்பப்போகுது. படுத்தி எடுக்குது ஒரே அசதியா வருது 45 வயசுல வார பிரச்சனதான் ஆஸ்பத்திரில கேட்டப்ப கர்பப்பை எடுக்கனும் சொல்றாக. ஆனா ஒடம்புல சுகர் அதிகமா இருக்கு. ரத்தசோகை இருக்காம் . அதான் கொளப்பமா இருக்குது முடியல. அதோட வீட்டையும் பாக்க வேண்டியதா இருக்குன்னு கண்கலங்கச்சொல்லிச்சி.
அப்புடியா ஒரு வாரத்துக்கு நான் குடுக்குறத சாப்புடு அப்புறம் பாருன்னு சொல்லிட்டு சுண்டக்காயும் அத்திக்காயும் ஒருநா விட்டு ஒருநா நடுவில முருங்கக்கீர இத வேகவைச்சி தண்ணிய மஞ்சசீரகம் போட்டுக்குடி. அப்புறம் உங்க வீட்டுக்காரர் கிட்ட சொல்லி ஆட்டு மண்ணீரல் வாங்கியாந்து சுட்டு இல்லாட்டி குக்கர்ல வேகவைச்சி சாப்புடு. கெடைக்க லன்னா சொல்லு நான் வாங்கியாந்து தாறேன்னு சொல்லி தெனம் கொண்டாந்து குடுத்துச்சு இதுக்குகாசு கரெக்டா வாங்கிடும்
ஆனா வராம இருக்காது பாட்டி
மண்ணீரல் கெடைக்கிறதுல பிரச்சன இருந்துச்சி. அப்ப அத்திக்கா வேகவைச்சி சாப்புடுன்னு கொண்டாந்து குடுத்துச்சு. ஒரு கூரு 20ரூவா. சுண்டக்கா ஒரு ஒலக்கு 20ரூ காசு கேட்டு வாங்கிக்கிச்சு. கொஞ்சம் கொஞ்சமா அந்தம்மா ஒடம்பு தேற ஆரம்பிச்சிச்சி
10 நாள் கழிச்சி டெஸ்ட் பண்ணிப்பாத்ததுல ஹீமோ குளோபின் 12ம் சர்க்கரை 200க்கு கீழயும் வந்துருந்துச்சு. டாக்டர் கேட்டார் எப்புடி இது நடந்துச்சுன்னு கேக்க பாட்டி குடுத்த வெவரத்தை அந்தம்மா சொல்லிச்சி.
ஒடனே டாக்டர் சொன்னாரு அந்தப்பாட்டிக்கு நீங்க கோயில்தான் கட்டனும். ஏன்னா ரத்தம் ஏத்தித்தான் ஆப்பரேசன் பண்ணுற லெவல்ல நீங்க இருந்தீங்க. இப்ப ஓரளவு நல்லாவே தேறீட்டீங்க. இனி நம்பிக்கையுடன் ஆப்பரேசனுக்கு நாள் குறிக்கலாம் குட்லக்னு சொன்னார்
ஆனாஅந்தப்பாட்டி அதுக்கபுறம் வரல ஆளை பாக்கவும் முடியல. ஆருகிட்ட விசாரிக் கிறதுன் னும் தெரியல என்னமோ அந்தப் பாட்டிய பாக்கனும் போல அவளுக்கு இருந்துச்சு. பாத்து ஒருவார்த்தை நன்றி சொல்லனும்னு தோணிச்சி. அப்ப அவளோட வீட்டுக்காரர் கேட்டாரு.எல்லாத்தையும்அதுகாசுவாங்கிட்டுத் தான குடுத்துச்சு. அப்புறம் என்ன அதுக்கு ஒரு வியாபாரம். அவ்வளவுதான் அதுல என்ன செண்டிமெண்ட் ஒனக்குன்னு சொன்னார்
அதுக்கு அந்தம்மா சொல்லிச்சி. அந்த கஸ்டம் ஒங்களுக்குப்புரியாது. ஏன்னா நீங்க ஆம்பளை ஒவ்வொரு ராத்திரியும் அந்த நசநசப்போட வலியும் சேந்து பொரட்டி எடுக்கும் போது எங்கயாவது ஒசருத்துல இருந்து
குதிச்சிடலாமான்னு தோணும். வலி ஒருபக்கம் வாடை ஒருபக்கம் ஈரம் பட்டு புண்ணாகி எரிச்சல் ஒருபக்கம் எப்படா சனியன் தொலையும்னு அழுகும்போது ஒரு வாய் காப்பி குடுக்கக்கூட மாட்டீங்க நீங்க. அதோட வீட்டு வேலையும் பாக்கனும். கர்ப்பைய எடுத்துரலாமுன்னு நெனச்சா ரத்த சோகையும் சர்க்கரையும் ஆட்டம் காமிக்குது. என்னாதான் காசு வாங்கினாலும் தினம் வந்து அந்தப்பாட்டி இப்ப பரவாயில்லயாம்மான்னு கேக்குற ஒரு வார்த்தை பாதி வலிகொறச்சிடும்னு சொன்னப்ப அவர் சாரிம்மா. உன் கஸ்டம் புரியுது அதான் ஆப்பரேசனுக்கு ஏற்பாடு பண்ணிட்டேன்ல நாளைக்கி அட்மிட் ஆகிட லாம்னு சொல்லி தலையக் கோதி விட்டாரு
மறுநாள் காலையில ஆஸ்பத்திரி போகும் போது அம்மன் கோயில்ல அந்தப் பாட்டி கூட்டிபெருக்கிட்டு
இருந்துச்சு அது பாத்துட்டு அம்மா நல்லாருக்கீங்களான்னு விசாரிச்சிச்சி. அப்ப விவரம் சொன்னா. நீங்க குடுத்த அத்திக்கா சுண்டக்கா முருங்கக்கீர நல்லா வேலை செஞ்ச்சிருக்கு ரொம்ப நன்றின்னு சொன்ன வன்ன இரு இந்தா வாறேன்னு கோயிலுக்குள்ள போய் குங்குமம் கொண்டாந்து நெத்தில வைச்சு விட்டுச்சு. ஆத்தா எல்லாத்தையும் பாத்துக்குவா கவலைப்படாமப்போய்ட்டு வான்னு சொன்னப்ப அவளுக்குத் தன்ன அறியாம கண்ணு கலங்கிடுச்சு.
செத்துப்போன அம்மாவே நேருல வந்து சொன்னமாதிரி உருக்கிடுச்சு. அம்மா போய்ட்டு வாறேன்னு நா தழுதழுக்கச் சொன்னப்ப பாட்டி சொல்லிச்சி கவலப்படாதே ஆத்தா துணையிருப்பா. இருன்னு சொல்லி மஞ்சக்கயிறக்கட்டி விட்டுச்சு. இனி கவலைய விடு . நல்லாயிருவன்னு சொல்லி அனுப்பிச்சி
அதுமாதிரிநேரத்துலதான் ஒரு பொண்ணு அம்மாவ ரொம்ப நெனச்சிக்குவா. ஆனா பெரும்பாலானவங்களுக்கு அப்ப அம்மா இருக்குறதில்ல. அத வெளிய சொல்லமுடியாம தனிமையில கண்ணு கலங்குவாக. பாக்குற பொம்பளைகள் மொகத்துல அம்மாவத்தேடி களைச்சுப்போவாக. அந்த அம்மாவ பாட்டி மொகத்துல அவ பாத்தா.... அதுனால வந்த கண்ணீர அடக்கமுடியல...ஒருவழியா அவ கண்ணத் தொடச்சிக்கிட்டு நம்பிக்கை யோட கெளம்புனா. அவகூட இருந்த அந்தம்மா வீட்டுக்காரரும் ஆதரவா கையப்புடிச்சி கவலைப்படாதே... எல்லாம் நல்ல படியா முடியும்ன்னு சொல்லி கண்ண தொடச்சிக்கிட்டாரு
தூரத்துல அந்தப்பாட்டி கைய ஆட்டிக்கிட்டு இருந்துச்சு அதக்கண்ணீர் மறைக்க பாத்துக்கிட்டே போனாங்க அந்தம்மா...
அ.ஆறுதல் விஜயன்