ஹாய் டியர் உன் கைமணமே தனிதான். சப்பாத்தியும் பாலக் பன்னீரும் சூப்பர்.
மதியம் நீ கட்டி கொடுப்பதில் எனக்கு எதுவுமே மிஞ்ச மாட்டேங்குது..
எல்லோரும் எடுத்துக் கொண்டு விடுகிறார்கள்.
இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டே அருண் சொல்ல மனதில் மகிழ்ச்சி பொங்கினாலும்
"அந்த ஷாலினி யார்?
அவளுக்கும் இவருக்கும் என்ன முறையான உறவு? என்று மனதை குடைந்து கொண்டே இருந்தது மீனாவுக்கு.
படுக்கையில் அவளை அணைத்துக் கொண்டே "நமக்கு கொஞ்ச ஒரு குழந்தை எப்போது பிறக்கும்"? என்று ஆசையாக கேட்டான்
"இதில் ஒன்றும் குறைச்சல் இல்லை.. தள்ளி படுங்கள்" என்று அவன் கைகளை விடுவித்துக் கொண்டே திரும்பி படுத்துக் கொண்டாள் மீனா.
"மீனா செல்லத்துக்கு என்ன ஆச்சு இன்னிக்கு" என்று அவளின் முகத்தோடு முகம் உரசினான்.
"சொல்லிக் கொண்டே இருக்கிறேன்.. மறுபடியும் என்ன கொஞ்சல்.. இதையெல்லாம் அவளிடம் வைத்துக் கொள்ளுங்கள்" மீனா கோபத்துடன் கத்தினாள்.
"எவளிடம்"?
அருண் அப்பாவியாக கேட்க
"அதான் அந்த ஷாலினி..
அவளிடம் வைத்துக் கொள்ளுங்கள்.."
"ஹே மீனா..
அவள் என்னுடன் பணிபுரியும் பெண்..
நான் அவளுக்கு அதிகாரி..
கண்டதை நினைத்து குழம்பிக் கொள்ளாதே"
"இருக்கட்டும்..
ஆனால்
உங்களை கூப்பிட ஒரு வரைமுறை கிடையாதா?
"எப்போது கூப்பிட்டாள்..
என்ன சொல்லி கூப்பிட்டாள்"?
"எல்லாம் எனக்குத் தெரியும்...
ஆதாரங்கள் என்னிடம் இருக்கிறது..
டிய ராமே.. டியர் என்று மொட்டையாக கூப்பிடுகிறாள் "
"புரியும்படி சொன்னால் என்னால் பதில் சொல்ல முடியும்" என்றான் அருண் ஆயாசத்துடன்.
"உங்களுடைய whatsapp பார்த்தேன்..
அதில்தான் இந்த கண்றாவி எல்லாம்.
டியர் நீங்கள் எப்போது வருவீர்கள் என்று கேட்கிறாள்..
தினமும் ஃபோன் செய்கிறாள்..
இதையெல்லாம் அலுவலகத்திலேயே வைத்துக் கொள்ளலாமே.. "
"நீ வீணாக சந்தேகப்படுகிறாய்..
எங்களுக்கு ஒரு புராஜக்ட் ஒர்க் இந்த மாத இறுதிக்குள் முடிக்க வேண்டும்..
அது சம்பந்தமாக பேசுகிறாள்..
டியர் சார், டியர் அருண் அல்லது டியர் என்பதெல்லாம் அலுவலகத்தில் புழங்கும் வார்த்தைகள் என்பது வேலைக்குப் போகும் உனக்கு தெரியாததல்ல..
ஒன்றும் அறியாத அந்த பெண்ணின் மீது பழி போடுகிறாய்.." என்றான் அருண் கோபத்துடன்.
"இந்த பசப்பு வார்த்தைகள் எல்லாம் என்னிடம் வேண்டாம்..
அவளிடமிருந்து ஃபோன் வந்ததும் தாவி குதித்துக் கொண்டு எடுத்து சிரிக்க சிரிக்க ஒரு மணி நேரம் பேசுவது எனக்கு தெரியாது என்ற நினைப்பா" மீனா பொங்கினாள்.
"திஸ் ஈஸ் த லிமிட் மீனா..
நீ எல்லை மீறி பேசுகிறாய்..
என்னுடைய போனையும் அலுவலக பையையும் ஆராய்வது எல்லை மீறிய செயல்..
என்னுடைய privacy க்குள்நீ அத்து மீறி நுழைகிறாய்..
உனக்கு அந்த அதிகாரத்தை யார் கொடுத்தது"?
"கணவர் மனைவிக்குள் என்ன ஒளிவு மறைவு.. ஆகவே எடுத்தேன்"
"இருந்தாலும் அவர்களுக்குள் privacy என்று ஒன்று இருக்கிறது.
நான் என்றாவது உன்னுடைய போனையோ அல்லது பையையோ ஆராய்ந்தது உண்டா?
நீ செய்தது மிகவும் கீழ்த்தரமான செயல்" என்றான் அருண் சலிப்புடன்.
"நான் படித்தவள்..
வேலைக்கு செல்பவள்..
சொந்த காலில் நிற்கும் தைரியம் கொண்டவள்..
நான் செய்தது கீழ்த்தரமான ஒன்று என்று சொல்லி விட்டீர்கள்..
இனிமேல் உங்களுடன் வாழ்வது எனக்கு அவமானம்..
நான் போகிறேன்" என்று சொல்லி தன் உடைமைகளை எடுத்துக் கொண்டு கிளம்பினாள்.
"போகாதே என்று நான் கெஞ்சுவேன் என்று எதிர்பார்க்காதே" என்று அருண் முகத்தை திருப்பிக் கொண்டான்.
"ஆமாம்..
நான் இல்லையென்றால் அவளுடன் சேர்ந்து கொட்டமடிக்கலாம் என்கிற உங்கள் எண்ணம் எனக்குத் தெரியாதா"? என்று சொல்லி விட்டு விருட்டென்று கிளம்பி போனாள்.
"நல்ல மாப்பிள்ளை, படித்தவர், உயர்ந்த பதவியில் இருப்பவர் என்று நம்பி பெண்ணை கொடுத்தோம்.
அவர் இப்படி அறுவறுக்கத்தக்க முறையில் நம் பெண்ணிடம் நடந்து கொள்கிறாரே..
நீ கவலைப்படாதே மீனா..
அவர் அவமானம் கொள்ளும் வகையில் இரண்டில் ஒன்று பார்த்து விடுவோம்" என்றாள் மீனாவின் அம்மா மங்களம்.
"நீ சும்மா இரு மங்களம்..
விசாரிக்காமல் வார்த்தைகளை விடாதே..
அவளுக்கு ஓய்வு கொடு..
பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார் மீனாவின் அப்பா ராஜகோபால்.
"ஆமாம் மாப்பிள்ளை நம் பெண்ணை கொடுமைப்படுத்துவார்..
நாம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கணுமா?
ஏன் போனை எடுத்து பார்த்ததில் என்ன தப்பு?
பொண்ணு சொல்றதுல நியாயம் இருக்கு..
அதான் அவருக்கு கோபம் வரது "
"நீ சும்மா இரு என்று சொன்னேன்" மங்களத்தின் வாயை அடைத்தார்.
"அம்மா நீ போய் ரெஸ்ட் எடு" என்று மீனாவை பார்த்து கூறினார்.
இரண்டு நாட்கள் சென்றதும்.."அம்மா மீனா இங்கே வா.. உன்னோட பேசணும்" என்றார் ராஜகோபால்.
"சொல்லுங்க அப்பா.." என்று அருகே அமர்ந்தாள் மீனா.
"நான் யார்?
உனக்கும் எனக்கும் என்ன உறவு"
"இதென்ன பைத்தியக்காரத்தனமான கேள்வி?
நீங்கள் என்னுடைய அப்பா" என்றாள் மீனா.
"யார் சொன்னது"?
"நீங்கள் சொல்லித்தான தெரியும்"
"அப்ப நானும் அம்மாவும் சொல்வதை நம்புகிறாய்..
உனக்கு தெரியாது..
உனக்கு இதில் எந்த சந்தேகமும் இல்லை"
"இதுக்கும் அதுக்கும் எப்படி முடிச்சு போடுகிறார் உங்கள் அப்பா" என்று நொடித்தாள் மங்களம்.
"நான் உன் அப்பா இல்லை... நீ எனக்கு பிறந்தவள் இல்லை என்றால் நம்புவாயா மீனா"?
"அப்பா இப்படி பேசாதீர்கள் என்று அழுகையுடன் கூறினாள் மீனா.
"அப்ப நான் உனக்கு அப்பா என்பதில் எந்த சந்தேகமும் இல்லை"
"ஆமாம் அப்பா"
"நீ என்னை மாதிரி உருவம் கொள்ளவில்லை என்று நான் சந்தேகம் கொண்டு உனக்கு DNA test செய்தால் உன் அம்மாவின் மனம் என்ன பாடுபடும்?
எல்லாம் ஒருவர் மீது ஒருவர் கொண்டுள்ள நம்பிக்கை மீதுதான் நடக்கிறது.
இதில் சந்தேகம் கொண்டால் வாழ்க்கை வீணாகும் மீனா..
அவர் சொல்வதை சந்தேகம் கொள்ளாமல் நம்பு..
நீயும் ஒரு அலுவலகத்தில் வேலை செய்கிறாய்..
சக ஆண் ஊழியர்களிடம் சிரித்து பேசுகிறாய்..
இதில் சந்தேகம் கொண்டு அவர் உன்னை கேள்வி கேட்டால் உன் மனம் எப்படி வேதனை கொள்ளும்?
ஆகவே எதையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்காதே..
அது உன் வாழ்க்கையை அழித்து விடும்.
நான் படித்தவள்..
நல்ல வேலையில் இருக்கிறேன்.
அவர் தயவு தேவையில்லை..
நான் தனியாகவே வாழ்வேன் என்று நீ சொல்லலாம்..
ஆனால்
அதை சொல்வது எளிது..
வாழ்வது கடினம் என்று புரிந்து கொள் மகளே..
குடும்பத்துடன் வாழ்வதே ஒரு பெண்ணுக்கும் ஆணுக்கும் சிறப்பு என்பதை நினைவில் கொள்..
இப்போதெல்லாம் பெண்கள் புரட்சி என்ற பெயரில் தங்கள் வாழ்க்கையை தொலைத்து விட்டு கடனே என்று வாழ்கிறார்கள்..
அம்மா மாதிரி ஆட்கள் அதற்கு தூபம் போட்டு தங்களை அறியாமலேயே தங்களின் பெண்களின் வாழ்க்கையை கெடுக்கிறார்கள்.
நம்பிக்கை கொள் மகளே..
இதையும் மீறி உனக்கு உண்மையிலேயே கொடுமை நடந்தால் தட்டிக் கேட்க நாங்கள் இருக்கிறோம். கவலைப்படாதே" என்ற அப்பாவை நோக்கி
"புரிந்தது அப்பா..
நான் உடனே செல்கிறேன்" என்றாள் மீனா.
"ஒரு நான்கு நாட்கள் இங்கே இருந்து விட்டு போ மீனா" என்றார் அப்பா.
மீனாவால் ஒரு நாளும் பொறுக்க முடியவில்லை.
பாவம் அவர் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ..
நான் இல்லாமல் சாப்பாட்டுக்கு தவித்துக் கொண்டிருப்பார்..
அவசரப்பட்டு பேசி விட்டேனே என்று தன்னையே நொந்து கொண்டாள்.
இரண்டாம் நாள் அதிகாலையில் எழுந்து சப்பாத்தியும் அவருக்கு பிடித்தமான காலிஃபிளவர் மஞ்சூரியனும் செய்து ஹாட் பேக்கில் அடைத்துக் கொண்டு கிளம்ப தயாரானாள்.
"என்னம்மா கிளம்பியாச்சா ..
அவருக்கும் உன்னைப் போல தவிப்பு இருக்கும்.
இதுதான் தாம்பத்தியம் என்றார் சிரித்துக் கொண்டே.
வாசலில் காரின் ஹார்ன் சப்தம் கேட்க மீனா எட்டிப் பார்க்க காரிலிருந்து புன்னகையுடன் இறங்கினான் அருண்.