அவங்க புதுசாக்கலியாணம் செஞ்சிகிட்டவங்க. மொதல்ல ஆசை அறுவதுநாள் மோகம் முப்பதுநாள்ன்னு ஒரே காதல்தான். ஹனிமூன் வாழ்க்கைதான் வாழ்ந்தாங்க. ஊர்கண்ணு பட்டுடுமோன்ற அளவுக்கு சந்தோசமா இருந்தாங்க. ஊர் கண்ணு பட்டுச்சோ இல்லையோ ஒருத்தியோட கண்ணு பட்டுச்சு. அது வெளியாள் கூட இல்ல அவனோட சொந்த அக்கா. அவளுக்கு ஒருமகள் கலியாணத்துக்கு ரெடியா இருந்தா.
அவளைத்தான் தம்பிக்கு கட்டிவைக்கனும்றது அவளோட ஆசை. ஆனா அவன் அதுக்கு ஒத்துக்கல. அது சின்னப்புள்ளையில இருந்து நான் தூக்கிவளத்த புள்ள. அதைப்போய் எப்புடிக்கலியாணம் செய்யமுடியும் அதைப்பாத்தாலே எனக்கு அக்கா கொழந்த என் கொழந்த மாதிரிதான் தெரியுது. வேற நல்ல எடத்துல கலியாணம் நானே பண்ணித்தாறேன்னு சொல்லி மறுத்துட்டான்.
ஆனா அக்காகாரிக்கி அதை ஏத்துக்க முடியல. பொறந்த வீட்டுல ஒரு புடிமானம் வேணுமுன்னா அங்க நம்ம மக இருந்தாத்தான் சரியாருக்கும்ன்னு நெனச்சா.ஆனா அது நெறவேறலை. அதுனால அவளுக்கு அவனோட சம்சாரமா வந்த அந்தப்புள்ளைய புடிக்கவே இல்ல.
அப்ப அப்ப வீட்டுக்கு வந்து எதாவது குட்டிக்கலாட்டா பண்ணிக்கிட்டே இருந்தா. இவனுக்கு அக்கா மகளைத்தான் கலியாணம் பண்ண இஸ்ட்டமில்லையே தவிர அக்காமேல ரொம்ப பாசம் அவங்கதான் இவனை எடுத்து வளத்தது
அதுனால பாசமும் நம்பிக்கையும் மரியாதையும் வைச்சிருந்தான். இதத்தான் அக்கா காரி பயன் படுத்திக்கிட்டா, வீட்டுக்கு வாரப்ப எல்லாம் தம்பிக்கிட்ட புகார் பண்ணுவா ஒன் பொண்டாட்டி என்னையெல்லாம் மதிக்கிறதே இல்ல.
கவனிக்கிறதும் இல்லன்னு. அதுனால ரெண்டுபேருக்கும் நடுவில பூசலும் சண்டையும் வர ஆரம்பிச்சது. இத தூபம் போட்டு வளக்குறதே அக்காக்காரிக்கி வேலையாப்போச்சு. அதுனால சண்டை அதிகமாச்சு. இதுக்குநடுவில அவன் புதுசா ஒரு வீடுவாங்கினான். அதுக்கு கிரகப்பிரவேசம் வைச்சான். எல்லாத்தையும் மொறப்படி அழைச்சான். அதுல ஒரு வில்லங்கத்தை அக்காகாரி கொண்டாந்தா.
பத்திரிக்கை வைக்க அவன் அவனோட பொண்டாட்டியக் கூப்புட்டான். அவ அதுக்கு ஒங்க அக்கா சும்மாவே சண்டையிழுக்கும் நான் வந்தா பிரச்சனையாகும் நீங்களே போய் பத்திரிக்கை வைச்சிட்டு வாங்கன்னா. இவன் பத்திரிக்கையோட போனான். அக்கா காரி க்கி நல்ல வாய்ப்பாப்போச்சு.
ஒன் பொண்டாட்டி மகராணி வரலயான்னு கேட்டா. அதுக்கு அவன் அவளுக்கு வயத்தவலி .அதான்ன்னான். அவ புடிச்சிக்கிட்டா. எங்கவீட்டுக்கு வாரதுன்னா வயத்தவலிக்குமே உன் ராணிக்கி. எங்கள மதிக்கிறதே இல்லன்னு பிட்டப்போட்டா. இவன் சமாதானப்படுத்தி குடுத்துட்டு வந்தான்.
விசேசத்துக்கு மொதநாளே அக்காகாரி குடும்பத்தோட வந்துட்டா. இவன் எல்லாருக்கும் பட்டுசேலை எடுத்திருந்தான். அக்காகாரி எல்லாசேலையும் பாத்துட்டு அவனோட பொண்டாட்டிக்கு எடுத்த சேலைதான் வேணும்ன்னு அடம் பிடிச்சா. இவன் சம்சாரத்துக்கு அழுகையே வந்துருச்சு அது ஆசை ஆசையா தேடிப்புடிச்சி அவ வாங்குன சேலை. இவன் சாமாதானம் பண்ணுறப்ப பொண்டாட்டிகிட்ட அத அக்காகிட்ட குடுத்துரு.
உனக்கு இதைவிட காஸ்ட்லியா நல்ல பட்டுப்பொடவை வாங்கித்தாறேன் இப்போதைக்கி அக்காவுக்கு வாங்குனத நீ எடுத்துக்க அந்தப்பொடவைய அக்காகிட்டக் கொடுத்துருன்னான். அவ ஒண்ணுமே பேசலை. அந்தப்பொடவைய எடுத்துட்டு வந்து டேபிள் மேல தூக்கிப்போட்டா
எடுத்துக்கசொல்லுன்னு.
அக்காகாரி இதப்புடிச்சிக்கிட்டா. அவள மரியாதையோட தட்டுல வைச்சித்தரச் சொல்லு தூக்கிப் போட்டாப் பொறுக்கிட்டுப்போறதுக்கு நான் பிச்சக்காரியில்ல. உன்னோட அக்கா உன்னை தூக்கிவளத்தவன்னு பிட்டப்போட்டா. இவன் பொண்டாட்டியசமதானம் பண்ண டிரைபண்ணுனான். அவ முடியாதுன்னுட்டா. நீவேணா ஒங்க அக்காவுக்கு மரியாதையோட குடுத்துக்குகன்னு சொல்லிட்டா. இவன் வேறவழையில்லாம அவனே தட்டுல வைச்சிக்கொண்டாந்து குடுத்தான்
அக்காகாரி உடனே கோவிச்சிக்கிட்டு அழுகையபோட்டுட்டு கெளம்பிட்டா. என்னைய மதிக்காத வீட்டுல எனக்கென்ன வேலைன்னு. இப்ப இவனுக்குக்கோவம் தலைக்கேறுச்சு. நேர பொண்டாட்டிக்கிட்ட போய் ஒன்னாலதான் அக்கா கோவிச்சிட்டுப்போயிருச்சு வா அவங்க வீட்டுல போய் சொல்லி கூப்புட்டுட்டு வரலாம். எனக்கு அவங்க அம்மா மாதிரின்னு கெஞ்சுனான். அவ தீர்மானமாச்சொல்லிட்டா. முடியாதுன்னு
சண்டை ஆரம்பிச்சிடுச்சு. அவ இவனவிட அதிகம் படிச்சவ. இவன் கொஞ்சம் கம்மிதான். நீ அதிகம்படிச்சதால திமிறாப்பேசுற. இதுவே படிக்காத பொண்ணுன்னா இப்புடிப் பண்ணிருக்கமாட்டான்னான். அவசொன்னா நான் ஒண்ணும் ஒண்ண கட்டிக்குவேன்னு ஒத்தக்கால்ல நிக்கல
நீங்கதான் வந்து கெஞ்சுனீங்க அப்பவே சொன்னேன் எங்க அம்மாகிட்ட ஒனக்கு படிப்புகம்மிவேணாமுன்னு கேக்காம கட்டிவைச்சிட்டாங்கன்னா.
இவனுக்கு தன்மானம் சுட்டது. ஆமா நான் படிக்காதவந்தான் நீ இப்பகூட இங்க இருக்கனுமுன்னு அவசியமில்ல வெளியபோ ஒங்க வீட்டுக்குக்குன்னு வெளிய தள்ள முயற்ச்சி பண்ணுனான் அவ மறுக்க ரெண்டுபேரும் கட்டிப்பொறண்டு சண்டபோட்டாங்க. அதுல அவன் அவ முடியப்புடிச்சி இழுக்க அவ வலிபொறுக்காம கையக்கடிச்சிப்புட்டா.
அவன் நாய்மாதிரி கடிக்கிறன்னு எட்டி ஒதைச்சான். அதுல அவ மயங்கிட்டா. இவனுக்கு என்னா பண்ணுறதுன்னு தெரியல. தண்ணிய கிண்ணிய தொளிச்சிப்பாத்தான். அவ முழிக்கல. ஒடனே அவன் அவங்க வீட்டுக்குப் போன்பண்ணினான். அரைமணிநேரத்துல அவங்க அப்பாவும் அம்மாவும் வந்தாங்க. வீட்டுக்குள்ள தரையில அவங்க மக கெடக்குற தப்பாத்துட்டு அதிர்ந்துபோயிட்டாங்க
தண்ணிய மூஞ்சில தெளிச்சி தட்டிக் குடுத்தாங்க மெல்ல கண்ணத் தொறந்தா. அப்ப அவசொன்னா இவன் கூட நான் வாழமாட்டேன் காட்டான் இவன் நடுராத்திரில வீட்டவிட்டு வெளிய அனுப்புறான்ன்னு அழுதா. அவங்களுக்கு அவனோட அக்கா விசயத்த ஏற்கனவே சொல்லிருக்கா. அதுனால புரிஞ்சிக் கிட்டாங்க. மகளை திட்டுனாங்க நீ என்ன பண்ணுனன்னு. அப்ப அவன் அவ கடிச்ச எடத்தக்காமிச்சான். பல்லு பதிஞ்சி ருந்துச்சு. இப்புடி நாய்மாதிரி கடிச்சா எப்புடி வீட்டுக்குள்ள வைச்சிருக்கதுன்னு சொன்னான்
இதுக்கு நடுவில அவனோட அக்காகாரி விசயம் தெரிஞ்சி வந்துட்டா அவ வாரதுக்கும் இவன் கடிபட்ட எடத்தகாமிக்கிறதுக்கும் சரியா இருந்துச்சு.அதப்பாத்துட்டு ஓன்னு அழுதா என் தம்பிய நாய்மாதிரிகடிக்கிறாளேன்னு .. அந்தப்பொண்ணோட அம்மா அப்பாவுக்கு என்னா பண்ணுறதுன்னு தெரியல
அதுக்குள்ள அவங்க வீட்டுக்கு எதுத்த வீட்டுல இருக்குறவரு சத்தம் கேட்டு வந்தாரு. அவருக்கு இந்த கூத்தெல்ல்லாம் தெரியும் கொஞ்சம்.
அப்ப அக்காகாரிக்கு வீட்டுல இருந்து அவ புள்ளைக போன் பண்ணுச்சு எங்கம்மா போயிட்ட ராத்திரில எங்களுக்குப்பயமா இருக்கு ஒடனே வாம்மான்னு சொல்லிச்சிக.
இவ ஒடனே சரி நான் வாறேன்ன்னு ஒடனே கெளம்பிட்டா.
அப்ப அவர் சொன்னாரு. தம்பி ஒங்க அக்கா தன்னோட கொழந்தைகள் கூப்புட்டவுடனே ஒன்னை அம்போன்னு விட்டுட்டு கெளம்பிட்டா பாத்தியா. ஏன்னா அது அவளோட கொழந்தப் பாசம். நீ உனக்காக அம்மா அப்பா சொந்தம் பந்தம் எல்லாதையும் விட்டுட்டு வந்த உன் பொஞ்சாதிய விட்டுக்குடுக்கலாமா.... ஒங்க அக்கா வேணுமுன்னே சண்டை வளக்குது. அதை நீ புரிஞ்சுக்கணும்.
கணவன் மனைவியவும் மனைவி கணவனையும் யாருக்காவும் விட்டுக் கொடுக்கக்கூடாது நீங்க அடிச்சிக்கங்க சண்டை போடுங்க சந்தோசமா இருங்க. அது உங்களுக்குள்ள இருக்கணும். அடுத்தவங்ககிட்ட மனைவிய விட்டுக்கொடுக்கக்கூடாது. அப்பத்தான் குடும்பம் நடக்கும் சிறக்கும். அதைப் புரிஞ்சுகோங்க
ரெண்டுபேரும் அதேமாதிரி கணவன் வீட்டு ஆளுக கொஞ்சம் முன்னப் பின்ன இருந்தா சமாளிக்கிறது லதான் ஒரு பொண்ணோட சாமார்த்தியம் இருக்கு. புருசன் இக்கட்டான நேரங்கல்ல இருக்கும்போது கொஞ்சம் வளஞ்சி சமாளிக்கணும்ன்னு சொன்னாரு
அப்ப அவனுக்குப்புரிய ஆரம்பிச்சது தான் பேசினது நடுராத்திரில வெளியதள்ள முயற்ச்சித்தது தப்புன்னு அதேமாதிரி தான்பேசுனதுல உள்ள தப்பும் அவளுக்குப் புரிஞ்சது...ரெண்டுபேரும்தல குனிஞ்சாங்க. சரி நாம கெளம்புவோம் இனிமே அவங்க பிரச்சனைய தீத்துப்பாங்கன்னு சொல்லிட்டுக் கெளம்புனாரு. ரொம்ப நன்றிங்கன்னு அவளோட அப்பா அம்மா சொன்னாங்க. அவசொன்னா அம்மா அப்பா நீங்களும் கெளம்புங்கன்னு.....
அம்மா அப்பாரெண்டுபேரும் வெளிய கெளம்புனவன்ன அந்த வீட்டுக்குள்ள லைட் அமந்துச்சு......அங்க பேச்சுக்கு இடமில்ல.....
மறுநாள் அக்காகாரி வந்தவன்ன அவகால்ல விழுந்து கும்புட்டா அவன் பொஞ்சாதி. அப்ப அவ சொன்னா நீங்க எனக்கு அம்மா மாதிரி.....என்ன ஒங்க மகளா நெனைச்சி ஆசீர்வாதம் பண்ணுங்கண்ணு.....அக்காகாரி கண்ணுல தண்ணி வந்துருச்சு.... ஏன்னா அவளுக்கும் ஒரு மக இருக்கால்ல.......
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்