பெரியசாமி - சிறுகதை

By சரவணன்

ஒருவாரமா மழைபேஞ்சு ஊறெல்லாம் நாறி அங்க அங்க வெள்ளம் பெருக்கெடுத்து கம்மாயெல்லாம் ஒடப்பெடுத்து ரெண்டு மூணுநாளா மழைநின்னு இப்பத்தான் பள்ளிக்கொடம் தொறந்துருக்காக  இன்னும் கம்மா வத்தல சுத்தித்தான் பள்ளிக்கொடத்துக்கு வரவேண்டியதா இருக்குது.

 

உலகநாதன் தான் இவனோட தோஸ்த்து. அவன் பக்கத்து கிராமத்துல இருந்து வாரவன். அவ்வளவா படிப்பு வராது. அவுக ஊருல நெலம் நீச்சு வைச்சி வெவசாயம் அவங்க வீட்டுல பண்ணுறதால அடிக்கடி லீவு போட்டுருவான் . ஏண்டா வரலைன்னா இன்னிக்கி உழவு  பறம்படிச்சோம் வெதபோட்டோம் நடவு களையெடுப்புன்னு கதை சொல்லுவான்.

 

 இவுக ஊரு தாண்டித்தான் காலாங்கரைல அவுக ஊரு கம்மாய்க்கி தண்ணி ,போகுது. ரெண்டு ஊருக்கும் அடிக்கடி தண்ணி பகிருறதுல சண்டை வரும் ஏன்னா காலாங்கரை ஒண்ணுதான் 

மேப்பொறத்துல இவுக ஊரு இருக்குறதுனால தண்ணிய இவுக அதிகமா எடுக்குறதா சண்டை வரும். அதுல வெட்டுக்குத்து கூட நடக்கும். ஆனா அவன் பிரண்டா நெனைக்கிறது இவனத்தான் இவன் தயிர்சோறு கொண்டுபோனா அவன் கம்மங்கூழ் கொண்டாருவான் மாத்திக்கிட்டு சாப்புடுவானுக. இவன் புத்தகநோட்டுக்கு அலுமினியம் பெட்டில கொண்டுபோனா அவன் மஞ்சப்பையில எடுத்தாருவான் .

 

ஒருவாரத்துக்கு அப்புறம் பாத்ததுல ஒலகநாதன் எளைச்சிப் போயிருந்தான். என்னாடா ஒடம்புக்கு முடியலையான்னு கேட்டப்ப சொன்னான் ஆமா மழையில நனைஞ்சி காச்சலாயி இப்பத்தான் பரவாயில்லன்னான். ஏண்டா மழையில நனைஞ்சன்னு கேட்டப்ப சொன்னான் அது ஒரு பெரிய கதன்னான் சொல்லுடா ந்னு சொன்ன வன்ன சொல்ல ஆரம்பிச்சான் கவலை யோட கம்மாக்கரையில கொடையப் புடிச்சிக்கிட்டு குத்தவைச்சி ஒக்காந்துரு ந்தாரு உலகநாதனோட அப்பா பெரியசாமி. கூடவே உலக்நாதன் கொடையப்பிடிச்சிக்கிட்டு இருந்தான். கம்மா நெற்மாச கர்பிணிபோல தழும்பிக்கிட்டு இருந்துச்சு. 

 

கிட்டத்த ரொம்பிடுச்சு. கழுங்கில தண்ணி போக ஆரம்பிச்சிடுச்சு. ஒருவாரமா பேஞ்சிக்கிட்டு இருக்குற மழையில மேப்பொறத்துல இருக்குற கம்மாயெல்லாம் நெறைஞ்சிடுச்சு.  காலாங்கரை வைய ஆத்துல இருந்து பிரிஞ்சி கடைசியா வார மூணுகம்மாயில இதுவும் ஒண்ணு. கிட்டத்தட்ட எல்லா கம்மாயும் தழும்புது.

 

மழை நின்னபாடுல்ல. எப்பவேணுமானாலும் கம்மா ஒடையும் . ஒடைஞ்சா பக்கத்துல இருக்குற நகரம் முங்கும். ஏன்னா அங்க இருந்த கம்மா கொளம் எல்லாம் வீடாகிக்கெடக்குது.கம்மாயில ஆழம் பாக்குற கல்லுல தண்ணி 15 அடியத் தொட்டுருச்சு. இன்னும் ரெண்டடிதான் கரை தாங்காது ஒடப்பெடுத்துக்குரும். ஒடப் பெடுத்தா ஊரு நாசமாப்போகும் .பொதுவா ஊருக எல்லாம் பந்தோஸ்த்தாத்தான் நம்ம ஆளுக திட்டமிட்டு இருந்தாக. 

 

ஊருக்கு வடமேற்கால கம்மா வடகிழக்குல வயல் தெக்கால சுடுகாடுன்னு. கம்மா ஒடஞ்சா வயலத்தான் மொதல்ல பாதிக்கும். கழுங்கு தென்பொறத்துல வைச்சி காலாங்கரையில கலக்கும். இதெல்லாம் உலகநாதன் அப்பா அவனுக்குச்சொன்னது 

 

தண்ணி வரத்து அதிகமாயிடுச்சு. கம்மாக்கி வாரகாலாங்கரையில் போய் உத்துப்பாத்தாரு பெரியசாமி. அதுல கம்மா மீனுக துள்ளிக்கிட்டு வருது. அதைப்பாத்ததும் தெரிஞ்சிபோச்சு. மேப்பொறத்து கம்மா கழுங்கில தண்ணி தொறந்துட்டானுக. கம்மாத்தண்ணி கட்டுப்படுத்த முடியலன்னு. நாட்டுக்கருவேல மெதக்குறதைப்பாத்ததும் தெரிஞ்சிடுச்சு 

 

வெவகாரம். அதுனால ஊருபஞ்சாய்த்துல சொல்லி எல்லாரையும் பஞ்சாயத்துப்போடு ஆபீஸுக்கு வரச்சொல்லி தண்டோராபோடச் சொன்னாக.  அவனும் தமுக்கடிச்சி ஊருபூராம் வீட்டுக்கு ஒரு ஆளு வர்ணும் ரொம்ப முக்கியமான விசயம் . அவசரம் ந்னு எல்லாத்தெருவுக்கும் போய் சொல்லி ஊரு கூடிருச்சி. 

,

மழை ஊத்திக்கிட்டு இருக்கு. காலாங்கரை ரொம்பிவழியுது. ரேடியோவுல இன்னும் மழை தொடருமுன்னு சொல்லிக்கிட்டு இருக்குறாங்க. வந்தவுக எல்லார் மூஞ்சிலயும் பீதி அப்பிக்கெடந்துச்சு

 

இப்ப பஞ்சாயத்து தலைவர் பேசுனாரு. ஊரூ பெரிய ஆபத்துல இருக்கு. நம்ம கம்மா நெறம்பிடுச்சு. இப்புடியே போனா கம்மா ஒடையும். ஒடஞ்சா ஒண்ணு வெவசாய நெலங்கள் தண்ணில முங்கும். ரெண்டாவது கம்மாத்தண்ணி முச்சூடும் போயிடும் அடுத்து வெயிலு காலத்துல தண்ணிக்கி சிங்கி அடிக்க வேண்டியது தான ன்னாரு

 

இப்ப பெரியசாமி பேச ஆரம்பிச்சாரு. அவரு வெவரம் தெரிஞ்சவரு அவருசொன்னா சரியாருக்கும்ன்றது எல்லாரோட நம்பிக்கை. அவரு சொன்னாரு .இப்ப கம்மாயயையும் நம்மலையும் காப்பாத்த எல்லாரும் ஒண்ணு சேரணும். வீட்டுக்கு ஒரு ஆளு மம்பட்டி கடப்பாரை தட்டோட வரணும்.  நம்ம கம்மாக் கரைல சோரம்போன எடங்கள்ள மண்ணக் கொட்டி மேவனும். அதேநேர்த்துல எல்லா மடையையும் தொறந்துவிடனும். வாய்க்கல்ல தண்ணி அதிகமாப்போகும் அப்ப வயல்ல தென்பொறமா எல்லாரும் கழிவுக்கு வெட்டிவிடனும்

 

இதசெய்யிறதுக்கு முன்னாடி முக்கியமான சோலி ஒண்ணு இருக்கு அது  ரெண்டுநா வெளிய இருக்குறமாதிரி அம்பது அறுவதுபேரு என் கூட வரணும். நாரு அதுஎதுக்குன்னு பஞ்சாயத்துத் தலைவர் கேட்டப்ப சொன்னாரு. மேப்பொறத்துல ஒரு கம்மா ஒடையப்போகுது. அதைத் தடுக்கணும். அதுக்காகன்னாரு .

 

 அப்ப ஊரு ஆளுக எல்லாம் சலசலத்தாக. அவனுக நாசமாப்போகட்டும் . போன கோடையில தண்ணி பேசி காலாங்கரையில தண்ணி நாம கொண்டாரையில  மறிச்சி தண்ணிபாய்ச்சினப்ப நடந்த சண்டையில் வெட்டுக்குத்து நடந்தது மறந்துபோச்சா. இன்னும் நம்ம ஊரு ஆளுக செயில்ல இருக்காக. ஒருத்தன வெட்டிகொண்ணுபுட்டானுக , அவனுகளை ஏன் நம்மபோய் காப்பாத்தனும். சாவட்டுமுன்னாக. 

அப்ப பெரிசாமி சொன்னாரு. 

 

அடக்கிறுக்குபயலுகளா. அவங்க கம்மாய அடைக்கிறதுல நம்ம சுயநலம் இருக்குடா.  அவங்க கம்மா ஒடப்பெடுத்தா அம்புட்டுத்தண்ணியும் நம்ம கம்மாய்க்கி வரும் நம்ம கம்மாயும் ஒடப்பெடுத்து நாசமாப்போகும் அதோட இல்லாம  இதுஇப்புடியே தொடந்து நாடே அழியும்டா. அதுனால இது அது மாதிரி விரோதம் பாக்குற நேரம் இல்லடான்னாரு. பஞ்சாய்த்துதலைவரு புரிஞ்சிக்கிட்டாரு. அவர் சொல்றதும் சரிதான்.  அதுமாதிரியே செய்வோம்ன்னாரு.  

 

கொஞ்சநேரத்துல எல்லாரும் பொருள்களோட வந்து சேந்தாக கொஞ்சம் வயசாளிகள் எளந்தாரிகன்னு  ஆளுகளை பிரிச்சி நம்ம கம்மாவுக்கு எளந்தாரிகளையும்  வயலுக்கு விடலப்பசங்களையும் அனுப்புனாக. 

பெரியசாமி தலமையில அம்பது பேருக்கு பக்கமா டார்ச்லைட்டு மம்பட்டி கடப்பாரை தட்டோட மேப்பொறத்து ஊருக்குகெளம்புனாக. ஒலகநாதனும் கூடப்போனான். 

 

[போறவழில காலாங்கரையில தண்ணி கரைதொட்டு ஓடுறதப்பாத்துட்டு பெரியசாமி சொன்னாரு வெரசா நடங்கடா. ஆபத்து நெருங்கிடுச்சுன்னு.  பக்கத்து ஊருகம்மாக் கரையில அவுக ஊரு ஆளுக மும்முரமா வேலை செஞ்சிக்கிட்டு இருந்தாக. இவங்க கூட்டமா வாரதைப்பாத்துட்டு அங்க கொஞ்சம் சலசலப்பு ஏற்பட்டுச்சு. கொஞ்சநேரத்துல அவுக ஊரு பஞ்சாயத்துதலைவர்  கத்துனாரு. 

 

முன் பகைய மனசுல வைச்சிக்கிட்டு கம்மாக் கரையில வெளயாடீராதீக. கைய வைச்சா வெட்டுவோம் ந்னு அருவாளைத்தூக்கி காமிச்சாரு. பெரியசாமி நெலமையப் புரிஞ்சிக்கிட்டாரு . நாம தப்பான நோக்கத்துல வந்துருக்குறதா அவங்கள்ள யாரோ கெளப்பி விட்டுருக்குறத. 

 

ஒடனே தலையில கட்டிடுகுற துண்ட அவுத்து கொடிமாதிரி ஆட்டிக்கிட்டே அவங்க கிட்டப் போனாரு. அவங்கள்ள கொஞ்சபேரு சத்தம் போட்டாங்க. அப்ப ஒலகநாதனைக்கூப்புட்டு அவங்க பஞ்சாயத்துதலைவரத்தனியா வரச்சொல்லிச்சொன்னாரு. ஒலகநாதன் மழையில வழுக்கி விழுந்து எந்திரிச்சி ஒரு வழியா அவர்கிட்டப்போய் வெவரம் சொன்னான். அவருக்குஇவனத்தெரியும் ஏன்னா அவர் மகன் தான் இவனோட பிரண்டு. 

 

வெவரத்தைகேட்டுப்புட்டு அவரு அவன் கூட வந்தாரு. ஊர் ஆளுக நாங்களும் பாதுகாப்புக்கு வாறோமுன்னாக வேணாமுன்னு சொல்லிட்டு அவரு வர பெரியசாமியும் தனியாப்போனாரு. ரெண்டுபேரும் ஒருத்தரை ஒருத்தர் கும்புட்டுக்கிட்டாக. 

 

அப்ப பெரியசாமி  சொன்னாரு அய்யா நாங்க ஒங்களுக்குஒதவத்தான் வந்துருக்கோம். ஒங்க கம்மா நல்லாருந்தாத்தான் எங்க கம்மா நல்லாருக்கும்.  இதுல நம்ம ரெண்டு ஊருக்கும் நல்லதுஇருக்கு. அதுனால நாம சேந்து கம்மாயக் காப்பாத்துவோமுன்னு 

 

கையெடுத்துகும்புட்டுக்கிட்டே சொன்னாரு. அவரும் கலங்கிட்டாரு ஒங்களைதப்பா நெனைச்சிப் புட்டோம் மன்னிச்சிருங்கன்னாரு

ரெண்டுபேரும்  மேப்பொறத்து கம்மாக் கரைக்கிபோய் அங்க இருக்குறவுகக்கிட்ட விசயத்தைசொன்னவன்ன அவுகளுக்கும் சந்தோசமயிடுச்சு. அப்ப பெரியசாமி கேட்டாரு மடையெல்லாம் முழுசாத்தொறந்து விடுங்க வயல்ல ஓரமா வெட்டிவிட ஆளுக அனுப்புங்க. நாங்க ஒங்களோட சேந்து ஒங்க கம்மாக்கரைய சரிபண்ணுவோமுன்னு சொன்னாரு. ஒரே ஆரவாரம் 

 

எல்லாரும் உற்சாகமா வெலைசெய்ய ஆரம்பிச் சாக. கம்மாக்கரையில  ஒடைப்பெடுத்த எடத்தை மண்ணுகல்லு செடிகொடி எல்லாம் வெட்டிப் போட்டு அடைச்சாங்க. மடையெல்லாம் தொறந்தவன்ன தண்ணி கம்மாயில ஏறுறது கட்டுக்குள்ள வந்துச்சு  அன்னிக்கி பகலு ராத்திரி பூராம் கம்மாக்கரைக்கி ரோந்துக்கு ஆளு போட்டாக பெரியசாமியும் தூங்காம அவங்களுக்கு ஐடியா குடுத்துக்கிட்டு இருந்தாரு. 

 

மக்யாநாளு மழை கொறைய ஆரம்பிச்சது. அவங்க எல்லாருக்கும் அந்த ஊரு பொம்பளைக சுக்குக்காப்பி செஞ்சி கொண்டாந்து குடுத்தாக சாப்பாடும் செஞ்சி குடுத்தாக. பழைய பகை கொறைய ஆரம்பிச்சது.ஓரளவு எல்லாம் கட்டுப்பாட்டுக்குள்ள வந்தவன்ன  பெரிசாமி  பஞ்சாய்த்து தலைவர்கிட்ட சொன்னாரு. ஒங்க ஊரு பாதுகாப்பாயிடுச்சு. இனி எங்க ஊர் கம்மாய ஈசியா காப்பாத்திடுவோம் நாங்க வாரோமுன்னு சொன்னாரு. ஊரு சனங்க எல்லாம் தெறண்டு வந்து வழி அனுப்புனாக. அந்த மழைத்தூறலிலும் 

 

அப்ப மேப்பொறத்து ஊரு பஞ்சாய்த்துத்தலைவர் கையெடுத்துக்குகும்புட்டாரு கண்கலங்க. பழைய பகைய மனுசுல வைச்சிக்காம வந்து ஒதவிசெஞ்சதுக்கு. அப்ப பெரியசாமி சொன்னாரு 

தண்ணில சண்டையும் தண்ணிலதான் சமாதானமும் இருக்கு, அதுதான் வெவசாயி ஒடம்புல ஓடுற ரத்தம் ஒங்க ஒடம்புலயும் எங்க ஒடம்புலயும் ஒரே ரத்தம்தான் ஓடுது . அதுதான் இந்தத்தண்ணி. வெவசாயிகளை காப்பாத்துறதும் காவு வாங்கிறதும் தண்ணிதான் அதுகிட்ட இருந்து நாம ஒத்துமையா இருந்தா காப்பாத்திக்களாம் 

 

தண்ணி குடுத்தும் தடுத்து,  இதுமாதிரி ஒத்துழைப்பு  ஊர் மாநிலம் அளவுல இருந்தா பிரச்சனையே இல்லன்னாரு.......

கண்ணீரோட அவங்களை வழி அனுப்புனாக ஊருக்கு வந்து ரெண்டுநாளா உலகநாதனுக்குக் காய்ச்சல் . கொஞ்சம் சரியாகி இப்பத்தான் வ்ந்தேன்ன்னு சொன்னான்

 

அப்ப இவன் சொன்னான் நீ சரியாப் படிக்காட்டிக் கூட உண்மையான படிப்பாளிதான் மனுசத் தன்மை உன் ரத்தத்துல இருக்குன்னான் அப்ப உலநாதன் சொன்னான்  நீ பஞ்சாயத்துதலைவர் மகனாச்சே.....உன் உடம்புல ஓடுறதும் அதே ரத்தம் தான்....இந்த மண்ணோட ரத்தம்ன்னான் கண்கலங்கி நின்னான் இவன். கிராமத்து மனுசங்க எம்புட்டு வெள்ளேந்தி மனசோட இருக்காங்கன்னு .

 

 

அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE