சமயநல்லூர் கிட்ட ஆரோ 10 வயசு சின்னப் பையனக் கொண்டு கொடலெல்லாம் வெளிய இழுத்து வெளிய இழுத்துப் போட்டுருக் காக லாமில்ல ஊரே அங்கதான் கூடிக்கெடக்கு பாத்தவுக எல்லாம் பதறிபோறாகலாம் ஆளு யாருன்னு தெரியல பையனையும் அடையாளம் தெரியலயாம்
என்னத்ச்சொல்ல காலம் ரொம்பக்கெட்டுப்போச்சு ஒலகம் எங்க போகுதுன்னு தெரியல"ன்னு ரோட்டுல ஒருத்தி சொல்லிக்கிட்டு இருந்தா இன்னொ ருத்திக் கிட்ட,
"வாயிவரப்பிக இப்புடித்தேன் பண்ணுவாகளா அவய்ங்க நாசமாப்போக செஞ்சவன் கட்டையில போக பாடையில வைக்க"ன்னு திட்டித்தீத்தா கேட்டவ
இதைக்கேட்டதும் இவளுக்குக் பக்குன்னு நெஞ்சப்புடிச்சது , "நம்ம மகனும் காலையில அங்க இருக்குற பள்ளிக்கொடத்துக்குத்தான போனான், இன்னிக்கி லேசா காச்சல் அடிக்கிறமாதிரி இருக்கு லீவு போடுறேன்னு கெஞ்சினான், இவதான் முதுகுல ரெண்டு போடு போட்டு வெரட்டிவிட்டா, அது நாவகம் வந்ததும் பெத்தவயிறு கலங்குச்சு. அது நம்ம மவனா இருக்குமோ"ன்னு பதற ஆரம்பிச்சிச்சி
அதுக்கு மேல அவளால நிக்க முடியல அங்க வீடுபாட்டுக்குதொறந்து கெடக்க ஒடனே அங்க ஓடுனா, மனசெல்லாம் ஒரே பதட்டம். தொவரிமான் முத்தையா சாமிக்கிட்ட வேண்டிக்கிட்டா ஓடும்போது "அது என் மகனா இருக்கக்கூடாது சாமி காப்பாத்திக்குடு ஒனக்கு நான் மொட்டபோடுறேன்" னு வேண்டிக் கிட்டே ஓடுனா
அந்த ரோடுபூராம் சனங்க ஓடிக்கிட்டுத்தான் இருந்துச்சு பைக்கிலயும் நடந்தும் சனங்க அந்தப்பக்கமா போய்க்கிட்டு இருந்தாக இவ அந்தப்பக்கமாப் போன ஒரு பைக்குகாரரக் கெஞ்சி அங்க கொண்டுபோய் விடச்சொன்னா அவரும் பின்னாடி ஏத்திக்கொண்டுபோய் எறக்கி விட்டாரு
மெயின் ரோட்டுக்குப்பக்கதுல வையை ஆத்துக்கும் ரோட்டுக்கும் நடுவில இருந்த
தென்னந்தோப்புலதான் கூட்டம் கூடி நின்னுச்சு, அவளும் ஓடுனா அங்க. அப்ப அங்க இருந்து திரும்பி வந்துக்கிட்டு இருந்த ஒருத்தர் சொன்னாரு ”கொன்னவன் வெறி புடிச்ச வனா இருப்பான் போல பச்சப் புள்ளைய இப்புடியா செய்வான் எளகுன மனசுக்காரவுங்க ஆரும் பாத்தா தாங்கமாட்டாங்க என்ன கொடும”னு சொல்லிக்கிட்டே போனாரு. இவளுக்குப் படபடப்பு அதிகமாயிருச்சு நெஞ்சுல துடிப்பு இவளுக்கே கேட்டுச்சு
இவளும் கூட்டத்துக்கிட்டப் போய் கூட்டத்த வெளக்கி எட்டிப்பாத்தா அங்க இவ காலையில போட்டுவிட்ட பள்ளிக்கொடத்து கலர் டிரஸ் போட்டு கவுந்து கெடந்தான். மூஞ்சி தெரியல சட்ட எல்லாம் ஒரே ரத்தம் பாத்தவுக சொன்ன மாதிரி கொடலு எல்லாம் இழுத்துக் கெடந்துச்சு. இவளுக்கு திக்குன்னு இருந்துச்சு யாரும் பக்கத்துல போகாம சுத்திநின்னு வேடிக்கைபாத்துக்கிட்டு உச் கொட்டிக்கிட்டு இருந்தாக.
இவளுக்கு கைகால் ஓடல ஒடனே அது அவளோட மகன் தான் , ஒடனே ஓடிப்போய் அந்தப்பையனத் தூக்கி மடிமேல போட்டு "நான் பெத்த மகனே" ந்னு அழுதா. "காலையில தானடா போகமாட்டேன் போகமாட்டேனு கெஞ்சுன நான் தான் பாவிமக ஒன்னய அடிச்சி தொறத்துனேன் இப்புடி ஆகும்னு தெரிஞ்சிருந்தா அனுப்பிருக்க மாட்டேன் டா என்னத்தவிக்கவிட்டுப்போயிட்டீயாடா
எவன் டா ஒன்ன இப்புடிச்செஞ்சது அவன் கையில கெடச்சா அறுவாமனையில மீன் அருக்குறமாதிரி வைச்சி அருத்து எறிஞ்சிருவேன் மவனே மவனேன்"னு ஒப்பாறி வைச்சி அழுதுக்கிட்டு இருந்தா,
வேடிக்கபாத்தவுக. ” பாவம் இப்புடியா பண்ணுவாக பச்சப்புள்ளைய. என்னா கருமமோ என்னா சணடையோ அதுக்காக என்ன இருந்தாலும் பச்சப்புள்ளய இப்புடிக் கொடுமையாவா கொல்லுவானுக” நு சொல்லிக்கிட்டு இருந்தாக
இப்பயெல்லாம் இதுமாதிரி நெறய நடக்குது கலிகாலம் ஆயிப்போச்சு. இன்னும் மோசமா நடக்கும் அதையும் பாக்கத்தான் வேணும்” நு கருத்துத் தெரிவிச்சாரு.
"அட போனமாசம் இப்புடித்தேன் மரத்துல ஒரு எளந்தாரியத் தொங்க விட்டுட்டானுக. என்னத்தைச்சொல்ல. "நு ஒருத்தர் பொலம்புனாரு
இவ பெருங்கொரலெடுத்து அழுதுக்கிட்டு இருந்தா, தூரத்துல போலீசோ ஆம்புலன்ஸோ வார சத்தம் கேட்டுச்சு. இவளுக்கு கண்ணு இருட்டிக்கிட்டு வர ஒரு மாதிரியா வந்துக்கிட்டு இருந்துச்சு.
ரெண்டு வருசத்துக்கு முன்னாடி இப்புடித்தான் ரயில்வே தண்டவாளத்துல ஆரோ அடிபட்டுக் கெடக்குறாகன்னு ஊரே ஓடிப்போய் பாத்துச்சு. அப்ப இவ அதைப்போய் என்னத்துக்குப் பாத்துக்கிட்டு கன்றாவியா இருக்கும் செல நேரம் பயந்துபோய் ஒடம்புக்கு முடியாமப் போயிரும்னு போகல.
எப்பையும் சாயங்காலம் 6 மணிக்கி வீட்டுக்கு வார இவ புருசன் அன்னிக்கி வரல. அது வழக்கம்போல எங்கயாவது விழுந்து கெடந்து அப்புறமா வந்து சேரும்னு அதைப்பத்திக் கவலைப்படாம இருந்தா.
ஆனா ராத்திரி 10 ஆச்சு 11 ஆச்சு வரல . என்னா ஆச்சுன்னும் தெரியல. ராத்திரிப்பூராம் காத்திருந்தா விடிய விடிய. அவன் வராமப்போகவும் என்னா பண்ணுறதுன்னு தெரியல. எப்பையும் அவன் கூட வாற அடுத்த தெருவில இருக்குறவரைப் போய் பாத்தா ஏதாவது தகவல் தெரியுமான்னு அவருக்கும் ஒன்னும் தெரியல.
இவளுக்குப் பயம் அதிகமாயிருச்சு. அவனுக்கு என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு. நேத்து ஆகிஸிடெண்ட் ஆன எடத்துக்குப்போய்ப் பாத்தா. தண்டவாளத்துக்குப் பக்கத்துல ரத்தம் காஞ்சி கெடந்துச்சு. அதுக்குப் பக்கத்துல சட்டத்துணி கிழிஞ்சி ஒரு துண்டு கெடந்துச்சு அதை உத்துப்பாத்தா அது அவ புருசன் போட்டிருந்த சட்ட மாதிரி இருந்துச்சு. அவளுக்கு அடிவயிறு கலங்குச்சு, பக்கத்துல இருந்த ரயில்வே ஸ்டேசன்ல போய் அது பத்திக்கேட்டா.
அப்ப அவங்க சொன்னாங்க பாடி பெரியாஸ்பத்திரில மார்ச்சுவரில இருக்கு இன்னும் யாரும் வந்து அடையாளம் காட்டலன்னு , ஒடனே இவ பதறிப்போய் ஆட்டோ பிடிச்சி ஆளுகளோட அங்க போனா. அங்க ஆளைப்பிடிச்ச்சி மார்ச்சுவரில போய் பாத்தா. பாத்தவன்ன அவ உசிறே நடுங்கிடுச்சு ஆமா அது அவ புருசனேதான். ஒடனே போலீஸ் ஸ்டேசன்ல போய் பாக்கச்சொன்னாங்க. அங்க போய் பாத்து வெவரம் சொல்லி விசாரணைக்கிப் பின்னாடி பாடி போஸ்ட் மார்ட்டம் செஞ்சி வீட்டுக்குக்கொண்டு வராம அப்படியே தத்தனேரில காரியம் முடிச்சி வீட்டுக்கு வந்தா. அதுதான் இவளை இங்க கொண்டாந்து விட்டுருக்கு.
அதுக்கப்புறம் கூலிவேலை செஞ்சி பொழைச்சிக்கிட்டு மகன பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி படிக்க வைச்சிட்டு இருந்தா. அதுவும் புடிக்கலையா இந்த சாமிக்குன்னு சாமிகளைத் திட்டிக்கிட்டே அழுதுக்கிட்டு இருந்தா
அதுக்கு நடுவில ஒருத்தி இவளை தட்டிக் கூப்புட்டா, ஏண்டி நல்லா ப்பாரு இது உன் மகனான்னு சொல்ல அப்பத்தான் மூஞ்சிய நல்லா உத்துப்பாத்தா இவ அது இவளோட மகன் இல்ல
மொதல்ல பொணத்தக்கீழ போட்டுட்டு எந்திரிச்சி வா இது வேற யாரோ போலீஸ் வேர வந்துட்டு இருக்குது, அவங்க நீ மடில வைச்சிருந்தப் பாத்துட்டா அப்புறம் கோர்ட் கேசு வக்கீல்னு அலையனும் சீக்கிரம் போட்டுட்டு வான்னு சொல்ல இவ சுய நெனப்பு வந்து நல்லா உத்துப்பாத்து அது அவளோட மகன் இல்லன்னு உறுதிப்படுத்திக் கிட்டு அவனைக் கீழ எறக்கிவைச்சிட்டு எந்திரிச்சி வந்தும் தேம்பித்தேம்பி அழுதுக்கிட்டு இருந்தா
அதுக்குள்ள போலீஸ் வந்து நிக்க ஒரு அம்மாவும் அவங்க வீட்டுக்காரரும் அலறி அடிச்சி ஓடியாந்தாங்க. அங்க வந்த போலீஸ் காரரொருத்தர் சொன்னாரு அது அவங்க மகனாம். அவனை ரெண்டு நாளாக் காணாமாம் . யாரோ கடத்திட்டுபோய் இதுமாதிரி பண்ணீட்டாங்களாம். தகவல் தெரிஞ்சி இப்பத்தான் போலீசோட வாராங்களாம்னு சொன்னாரு.
அப்ப இவகிட்ட இவள எழுப்புனவ சொன்னா "அதான் உன் மகன் இல்லைன்னு தெரிஞ்சி போச்சுல்ல. கண்ணத்தொடச்சிக்கிட்டு வா அடுத்த சோலியப்பாப்போம்"னு சொன்னா
"யாரா இருந்தா என்ன.பெத்தவுக மனசு என்ன பாடுபடும். என்ன என்ன கனவெல்லாம் கண்டிருப்பாக அவனை வைச்சி. அவ அவனை பத்துமாசம் சொமந்தப்ப என்ன என்ன கஸ்ட்டமெல்லாம் இவனுக்குக்காகப் பட்டிருப்பா இத எப்புடித்தாங்கப்போறாளோ கொஞ்சநேரம் மகனா நெனச்ச என்னாலயே இதத் தாங்கிக்க முடியல மனசு தேறல பாவம் அவங்க"ன்னு சொல்லி வழிஞ்சகண்ணீரை சேலை முந்தாணில தொடச்சா.
அப்ப அவ சொன்னா அதுதான் தாய்மை எல்லா புள்ளைங்களையும் தன்னோட பிள்ளை மாதிரி பாக்குறது , அதுக்கு பெருசா யோசிக்கத் தெரியாது. வா போகலாம்னு கூப்புட்டா, இன்னும் இவளால அதைச் ஜீரணிக்க முடியல. தள்ளாடி யபடி நடந்து போனா கூட வந்த அந்தப்பொண்ணு தோள்ல சாஞ்சபடி.
அ.முத்துவிஜயன்