பூவரசம் பூ - சிறுகதை

By சரவணன்

அதற்க்குப்பிறகு இப்போதுதான் உன்னைக்காண்கிறேன். மாறிவிட்டாய் நீ நானும்தான். மாறிவிட்டேன்.

ஆமாம் இப்போதுநினைத்துப்பார்க்கையில் நெஞ்சமெல்லாம் நெகிழ்கின்றது. வேனில்காலத்து மரங்கள் போல் இலைகள் கொட்டி மொட்டையாகநிற்கும் என் உருவம் முதிர்ந்த பனைபோல் சுருங்கி கிளைகள் காய்ந்து உதிரும் வேலையில் உன்னைப்பார்க்கிறேன். நீ அப்படியில்லை இப்போதும் ஆலமரம் போல் விழுதுகள் தாங்க பரந்துவிரிந்து பரவியிருக்கிறாய். உன் வேர்கள் பழுதடைந்திருந்தாலும் விழுதுகளால் வீழாதிருக்கிறாய் 

அந்தநாள் நினைவுக்கு வருகிறது அப்போது நாம் பள்ளியில் ஒன்றாக ஒரே வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். அப்போது இருந்தது நட்பா காதலா என்னவென்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒரு ஈர்ப்பு உன்மேல் . அது உன் உடையணியும் நேர்த்தியினாலா இல்லை எப்போதும் மாறாது முகத்தில்குடிகொண்டிருக்கும் புன்னகையாலா இல்லை தோற்றத்தில் என் அம்மாவின் சாயல் தெரிந்ததாலா எனத்தெரியவில்லை. 

தினம் உன்னைக்காணாமல் என் பொழுதுகள் விடிந்ததில்லை. நீ இல்லாத வகுப்புகளில் வெளிச்சம் கண்டதில்லை எப்போதும் உனக்குப்பின் வரிசையில் நான் அமர்ந்திருந்தது உன்னை கண்டுகொண்டே இருக்கத்தான். இது நீ உணராத விசயம் அல்ல . என்றாலும் அதைத்தாண்டி வேறு எந்த நிகழவும் இருந்ததில்லை

எப்படியாவது உன் மனத்தில் இடம் பிடிக்கக்காத்திருந்தேன். அதற்கான வாய்ப்பும் தானாக வந்தது. 
அன்று பாட்டணி டீச்சர் மறுநாள் வரும்போது ஆளுக்கு ஒரு பூவரசம் பூ 

கொண்டுவரச்சொல்லியிருந்தார்கள்.இல்லையென்றால் தண்டனை உண்டு அது கையை நீட்டச்சொல்லி கைசிவக்கும் வரை அடிவிழும் என்பது எழுதப்படாத உண்மை

ஆனால் சொல்லி வைத்தால் போல் அன்று பள்ளிவரும்போது நானும் மறந்து பூ கொண்டுவரவில்லை. எல்லோர்கைகளிலும் பூவைக்கண்டபின் தான் நினைவுக்கு வந்தது. மறந்தது

என்னைப்போலவே நீயும் விழித்துக் கொண்டிருந்ததைக்கண்டதும் ஒருபுறம் மகிழ்ச்சி மறுபுறம் தயக்கம். நானாக முன்வந்து கேட்டேன் பூவரசம்பூ கொண்டுவரவில்லையா என்று . நீ ஆமாம் மறந்துவிட்டேன். டீச்சர் தண்டனை நினைத்தால் பயமாக இருக்கிறது என்று சொல்லும்போதே உன் கண்கள் கலங்கிவிட்டன. அப்போது நான் சொன்னேன் இன்னும் கால் மணிநேரம் இருக்கிறது வரும் வழியில் ஒரு மரம் இருக்கிறது. வா பறித்து வரலாம் என அழைத்தேன் . நீயும் உடன் வந்தாய். ஆனால் பூக்கள் உயரத்தில் இருந்தன

நான் மரத்தின் மீது ஏறி பூக்களைப்பறிக்க முயன்றபோதுதான் அது நடந்தது. கிளை முறிந்து கீழேவிழுந்தேன் ஒரு பூவுடன். சரியான அடி எழுந்துநடக்க முடியவில்லை. காலில் ரத்தம் வழிந்தது .நான் ஒன்றுமில்லை சரியாகிவிடும். இந்தப்பூவை எடுத்துக்கொண்டு நீ வகுப்புக்குச்செல். என்னால் வரமுடியாது என்று உன்னிடம் கொடுத்தேன் தயக்கத்துடன் வாங்கினாய் நான் நொண்டிக்கொண்டே வீடு திரும்பினேன்

இரண்டுநாட்கள் கழித்து பள்ளிக்கு வந்தபோதுதான் தெரிந்தது. நீ பூவை டீச்சரிடம் கொடுக்கவில்லை அதற்காகக்கைசிவக்க அடிவாங்கியதும் தெரியவந்தது. மதிய உணவு இடவேளையில் ஏன் கொடுக்கவில்லை எனக்கேட்டபோது நீ சொன்னபதில் என்னை வானத்தில் பறக்கவைத்தது
பூவை டீச்சரிடம் கொடுத்தால் அது சிதைக்கப்படும், அதனால் உன் நினைவாக அது என்னிடம் இருக்கட்டும் என புத்தகத்தில் சேமித்துவைத்திருக்கிறேன் என்றாய். என் காயங்களைப்பார்த்து கண்கலங்கினாய். அன்றிலிருந்துதான் என்னைக்கண்டால் சிரிக்க ஆரம்பித்தாய் என்னைகண்டு நீ சிரிக்கும் அந்த சிரிப்புக் காகக் காத்திருக்கத் தொடங்கினேன் . அது என்னை பள்ளிவாழ்க்கை முடியும் வரை உயிர்ப்போடு வைத்திருந்தது. 

அதன்பின் உன்னைகாண இயலவில்லை. வீடும் தெரியவில்லை. வீட்டைத்தேடி கண்டுபிடித்தபோது வீட்டில் நீ இல்லை. 

பூத்தமலர் வாடியது, என்றாலும் உள்ளத்தில் இருந்தது ஈரமாக, இன்று உன்னைக்கண்டதும் உள்ளத்தில் ஏதோ ஒரு பரவசம் என்னை ஆட்கொள்கிறது. உன்னைச்சுற்றி ஒரு கூட்டம் மகன் மகள் பேரன்பேத்திகள் என. நான் தனியாக

ஆனால் ஒரு நொடியில் அடையாளம் கண்டுகொண்டாய். அந்தப்பழைய சிரிப்பை உன் முகத்தில் கண்டேன். என்னுள் மகிழ்ச்சி பிரவாகமெடுத்தது

எப்படி இருக்கீங்க என்று கேட்டாய் அப்போது உன் கண்கள் ஓரம் நீர் துளிர்த்ததைக்கண்டேன். நான் இருக்கிறேன் என்று சொல்லி உன் நினைவுடன் என்று மனதுக்குள் சொல்லி விழுங்கினேன். அப்போது நீ கண்கலங்கினாய். உடனே உன் மகள் என்னம்மா என்றாள் நீ சொன்னாய் கண்ணில் தூசிவிழுந்துவிட்டது தூசி பத்திரமாக இருக்கிறது இன்றும் பழைய புத்தகத்தில் எனச்சொன்னது எனக்கான வார்த்தை. அது மகளுக்குப்புரியவில்லை 

என்னமா புத்தகம் என்று ஏதோ சொன்னாய் என்று கேட்டாள். நீ ஒன்றுமில்லை...என கண்களைத்துடைத்தபோது என் கண்கள் கலங்கியிருந்தன.

கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE