எங்களுக்கு எதுத்தவீட்டுல ஒரு குடும்பம் ரொம்ப நெருக்கமான குடும்பமும் கூட ,அவங்க வீட்டுபிள்ளைக எல்லாம் எங்க வீட்டுல தான் கெடக்கும். அவங்க மக சத்யா என்மகமாதிரி என்பிள்ளைக அந்தப்பிள்ளை எல்லாம் அக்காதம்பி தங்கச்சின்னு வெளையாண்டுட்டு கெடப்பாக...
அந்தபொண்ணுசத்யா இஞ்னீயரிங் சேந்துச்சு நல்ல மார்க்வேற அப்ப MBBS கூடகெடச்சிருக்கும் ஆனா அது ஒத்துவராதுன்னு பி இ சேந்துச்சு MIT கல்லூரில சேந்துச்சு.. அந்தப் பொண்ணுகூட ஒன்னா தங்கிப்படிச்ச சில பொண்ணுக ரொம்ப க்ளோசா இருந்தாங்க
சனி ஞாயிறு ஆனா இங்க அவங்க மூணு பேரும் வீடுக்கு வந்திருவாக..அவங்க அம்மா அவங்களுக்கு மீன் கொழம்பு கருவாட்டுக் கொழம்பு ந்னு சமைப்பாங்க ஆனா கோழிக் கொழம்பு மாத்திரம் எங்கவீட்டு லருந்து போகும். ..ஏன்னா அது அவங்களுக்கு ரொம்பப்பிடிக்கும்...அந்த பிள்ளகளும் எங்ககூட அங்கிள் ஆண்டின்னு பழகுவாங்க
அதுல ஒருபொண்ணு மதுரையில இருந்து வந்ததா சொல்லிச்சி... மதுரைன்னவன்ன எனக்கு கொஞ்சம் பாசம் அதிகமாயிடுச்சு மதுரையில எங்கன்னு கேட்டப்ப K. புதூர்னு சொல்லிச்சி. அப்பா பேர்னு கேட்டவன்ன அது சொல்லிச்சி அருமைநாதன்னு .கேட்டவன்ன தூக்கிவாறிப்போட்டுச்சு... போட்டோ உன்கிட்ட இருக்காமான்னு கேட்டேன்... செல்லுல காமிச்சவன்ன அடாடா அவன் என்கூடப் படிச்சவனாச்சே..... நல்லாத்தெரியுமே..நாங்க எல்லாம் ஃபிரண்டுகள் மா ...ன்னு சொன்னேன்
அப்படியா அங்கிள் ,ரொம்பசந்தோசம் நு சொல்லிச்சி. எனக்கு காலேஜ் நாட்கள் நெனவுக்கு வந்திருச்சு நான் காலேஜ் படிக்கையில
அருமைநாதன், ஞானப்பிரகாசம் ,நானு மூணுபேரும்தான் நண்பர்கள் .
கல்லூரி மதுரையில இருந்து 31 கி.மீ தூரம் இருக்குற கருமாத்தூர்ல இருக்குற அருளானந்தர் கல்லூரி ...மொதல்ல அருமைநாதன் ஆஸ்ட்டல் லதான் தங்கிப்படிச்சான்... அப்புறம் ஒரு நா சொன்னான் எங்க அப்பா சிங்கப்பூர்ல இருக்குறாரு... பணம் அனுப்பல ஆஸ்ட்டல் ஃபீஸ் கட்டுபடியாகல... அதுனால உங்க வீட்டுல தங்கிக்கட்டுமான்னு கேட்டான்...
நான் யோசிச்சேன் ஏன்னா எங்கவீடு அவ்வளவா வசதியான வீடு இல்ல .அப்ப அப்ப கஞ்சிக்கு சண்ட நடக்குற வீடு, தலகாணிக்கிம் சாப்பாடுக்கும் பெருஞ்சண்ட நடக்குற வீடு . பெரும்பாலும் கூட்டமாஇருக்கும் என் கூடப்பொறந்தவங்களே அப்ப 5 பேரு.
நீ வசதியா இருக்குறவன் சரிப்படாதுன்னு சொன்னேன்...
அவன் சொன்னான் ,எனக்கும் அதுதான் பிடிக்கும் எனக்கு கூடப் பொறந்தவங்க யாரும் இல்ல நான் ஒருத்தன் தான் அண்ணன் தம்பி அக்காதங்கை நு ஆசை . அதேமாதிரி கஞ்சி பழையசோறு எனக்கு ரொம்பப்பிடிக்கும் நுசொன்னான்
( அது உண்மைதான் ஏன்னா நான் தினம் கஞ்சியப்பிழிஞ்சி வைச்சி பச்சமொளகா ஊறுகாவைச்சிக்கொண்டுபோவேன் அவன் விரும்பிசாப்புடுவான் எனக்கு சாப்பாடு கேண்டின்ல வாங்கிக்குடுத்துருவான்)
எப்படியோ என்னச் சரிக்கட்டி வீட்டுக்கு வந்துட்டான் தினம் எங்கவீட்டுவாசல்ல விக்கிற பணியாரத்துக்கு அடிமையாகிட்டான் வாங்கிட்டு வந்து என் தம்பி தங்கச்சிக் கெல்லாம் குடுத்து நெருக்கமாயிட்டான்.
பலநேரங்கல்ல புரோட்டா அவங்களுக்கு வாங்கிகொடுத்துட்டு அவன் பழையசோத்த விரும்பி தின்பான்... அதுக்கு முட்டை வாங்கி அம்மாகிட்டகுடுத்து மொளகாப்பொடி போட்டு வறுத்து வைச்சிக்கிட்டு சாப்புடுவான் . எங்க வீட்டு சாப்பாடுரொம்ப பிடிச்சிப்போச்சு...தம்பி தங்கைகள் கூட கேரம் விளையாடுவான் . போர்டு காயின் எல்லாம் அவந்தான் வாங்கிட்டு வந்தான்
அம்மாவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்தான் அதுனால அம்மாவும் கேட்டது எல்லாம் சமைச்சிக் குடுத்தாங்க...
அவனும் என்கிட்ட அடிக்கடி மாப்ள இதுதாண்டா சொர்கம் னு சொல்வான்.. அப்புறம் ஞாயித்துக் கெழமை கள்ல வீட்டுக்குப் போயிடுவான்
வரும்போது சோகமா வருவான் ஏன்னு கேட்டா என் வீடு நரகம்ன்னுசொல்வான்...எப்படியோ வீட்டுல ஒருத்தன் ஆகிட்டான் அப்ப சொல்வான் நான் சிங்கப்பூருக்கு வேலைக்கிபோய் மாசம் மாசம் உனக்கு பணம் அனுப்புவேன்னு சொல்வான் எனக்கு நம்பிக்கை யில்லன்னாலும் சொல்றதை கேட்டுக்குவேன்
தினம் பஸ்லதான் காலேஜ்க்கு போவோம். ஞானப் பிரகாசத்தோட சேந்து காளவாசல்ல பஸ் ஏறி கருமாத்தூர் போவோம்.. அது நாகமலைப் புதுக்கோட்டை பல்கலைக்கழகம் செக்கா ணூரணி தாண்டி அங்க போகும் ...பஸ்ல ஒரு நாள் விட்டு ஒருநாள்தான் டிக்கெட் எடுப்பான் எங்களையும் எடுக்கவிடமாட்டான்...
எனக்கு பயமா இருக்கும். செக்கிங் வந்துட்டா மாட்டிக்கிடுவோம் டான்னு சொன்னா அதெல்லாம்நீ கவலைப்படாத நான் பாத்துக் கிறேன்...னு . டெய்லி டிக்கெட் இல்லாம போவோம் மாட்டிக்கிட்டா ஃபைன் கட்டுவோம் அது லாபமாத்தான் இருக்கும்னுசொல்வான்
அப்புடித்தான் ஒரு நா நாங்க மூணுபேரும் போனோம் டிக்கெட் எடுக்கல... பஸ்ல ஒரே கூட்டம்.. செக்காணூரனில செக்கிங் ஏறிட்டாங்க..
பஸ் முன்வாசல்ல எனக்கு படப்பாயிடுச்சு... ஆனா அவன் கவலையே படல இன்னும் பத்து நிமிசத்துல காலேஜ் வந்துடும் அதுக்குள்ள மாட்டிட்டான்னுஎன்ன பண்ணுறதுன்னு கவலைபட ஆரம்பிச்சேன்
அவன் சொன்னான் மெல்ல நகர்ந்து பஸ் பின்னாடி வழிக்குப் போவோம்னு சொன்னான். நங்களும் அதுமாதிரி போனோம் எனக்கு படபடப்பா இருந்துச்சு. ஆனா அவன் கூலா இருந்தான்,என்ன பண்ணப் போறேன்னு கேட்டேன் அவன் சிரிச்சான் காலேஜ் நெருங்கிடுச்சு...
அவன் சொன்னான், அவங்க கேட்டா டிக்கெட் என்கிட்ட இருக்குன்னு சொல்லிட்டுமுதல்ல நீங்க எறங்கி காலேஜ்க்கு ஓடிடு ங்க பின்னாடி நான் பாத்துக்கி றேன்னான்
அதேமாதிரி பஸ் நின்னவன்ன நானும்ஞானப்பிரகாசமும் மொதல்ல எறங்கினோம் செக்கர் கிட்ட டிக்கெட் அவன் கிட்ட இருக்குன்னு சொன்னோம் ஞானப் பிரகாசம் ஓடிட்டான். ஆனா என்ன அவர் கைபிடிச்சி நிறுத்திட்டாரு..எனக்குப்பின்னாடி இவன் எறங்குனான்
அவன் கிட்ட அவர் டிக்கெட் கேக்க எனக்கு வேர்த்துச்சு ஆனா அவன் கூலா தன்னோட தோல்பையில கையவிட்டு 100 டிக்கெட் இருக்கும் அத எடுத்து செக்கர் கையில குடுத்தான் இதுக்குள்ள இருக்குன்னு சொல்லிட்டு என் கைபிடிச்சி வேகமா நடந்தான்... அதுக்குள்ள டிரைவர் ஹாரன் அடிக்க செக்கர் தலையில அடிச்சிக்கிட்டு உருப்படவே மாட்டானுக சனியன்கள்னு சொன்னார்...
போன அருமைநாதன் திரும்பி வந்து யோவ் யாருய்யா சனியன் எங்களையா சொன்னன்னு அவர்கூட சண்டைக்குப் போயிட்டான்... அப்புறம் பஸ்ல ஒருத்தர் சமாதானப் படுத்துனார் தம்பி மனசுல வைச்சிக்காதீங்கன்னு இவன...
ஒருவழியா அந்தவருசம் காலேஜ் முடிஞ்சது வெகேசன் வந்துச்சு அவனுக்குப்போக மனசே இல்ல நான் சொன்னேன் சரி போய்ட்டு வா அடுத்தவருசம் பாப்போம்னு ,.... அதுக்கு அவன் சொன்னான் எனக்குத்தாங்க முடியல இந்த நாலுமாசம் தான் நான் சந்தோசமா இருந்த மாசம் என் வீடு நரகம்... அப்பாவுக்கும் அம்மாவுக்கும் சண்ட ஒருத்தர் கூட ஒருத்தர் பேசமாட்டாங்க... பணம் மட்டும் அனுப்புவாரு
எனக்கு இங்க ரொம்பப்பிடிச்சிருக்கு இந்த பிள்ளைங்க பழையச்சோறு பணியாரம் இந்த நெருக்கம் அண்ணன் தம்பி சண்ட சமாதானம் அம்மா அப்பா கோவம் அடிக்கிறது அணைச்சி ஆறுதல் சொல்றது கஸ்டமோ நஸ்டமோ எல்லாத்தையும் பகிர்ந்துக்கிறது என்ன என்னவோ பண்ணிடுச்சு.... நான் இத மிஸ் பண்ணுறேண்டா ந்னு கண்ணு கலங்கிச் சொன்னான்....
நான் அதுக்கப்புறம் காலேஜ் போகலை வேலைக்கி வந்துட்டேன்....
இத நான் அவனோட மகள்கிட்ட சொன்னேன் அப்ப அந்தப்பொண்ணு கண்ணுல இருந்தும் கண்ணீர்வந்துச்சு.... ஏம்மான்னு கேட்டேன் அந்தபொண்ணு கண்ணுல பொலபொலன்னு தண்ணீர் வழிஞ்சது. நான் ஆடிப்போயிட்டேன் சரிம்மா அப்பா போன் நம்பர்குடு நான் பேசுறேன்னு
சொன்னவன்ன அந்தப் பொண்ணு ரொம்ப அழுக ஆரம்பிச்சிடுச்சு அப்ப அந்தப்பொண்ணு சொல்லிச்சி இல்ல அங்கிள் நீங்கபேசமுடியாது... அவர் போனவருசம் கர்த்தரோட கலந்துட்டார்ன்னு சொன்னவன்ன எனக்கும் கலங்கிடுச்சு என் கண்ணில இருந்தும் கண்ணீர் ஊத்த ஆரம்பிச்சிடுச்சு... அருமைநாதன நெனச்சி.....
அ.முத்துவிஜயன்