அந்த டீச்சர் மதுரயில இருந்து வாடிபட்டில இருக்குற பள்ளிக்கொடத்துக்கு இந்த வருசம்தான் வந்திருந்தாக . மாநிறம். ஒல்லியுமில்லாத குண்டுமில்லாத நடுத்தர உடல்வாகு. ரெண்டுமகளுக வேற அவுங்களையும் அதே பள்ளிக் கொடத்துலதான் சேத்துருந்தாக
அருமையா டிராயிங் வரைவாங்க. பேருதான் கொளப்பத்தைதந்துச்சு. ரெஜிஸ் விக்ட்டோரியா ராணின்னு. அங்க ஏற்கனவே வேலை செஞ்சிக்கிட்டுருந்த வாத்தியார் ஜோசப் கேட்டாரு அப்ப நீங்க எந்த சர்ச்ன்னு. அதுக்கு ரெஜிஸ் சொன்னாங்க எல்லா சர்ச்சும் நம்ம சர்ச்சுதான்ன்னு. இல்லைங்க டீச்சர் ஏதாவது ஒரு சபையில இருப்பீங்கள்ல அங்கதான உங்களுக்கு ஞானஸ்னானம் பண்ணிப்பேருவைச்சிருப்பாங்கன்னு சூசகமா நீங்க எந்த வகை கிருஸ்டியன்ன்னு கேட்டாரு. அவருடைய ஊகம் இவங்க கன்வெர்ட்டேடு கிறிஸ்டியன்றது.
அதுக்கு அவங்க சொன்னாங்க அதுமாதிரியெல்லாம் பேருவைக்கல இது எங்க அப்பா வைச்ச பேருன்னு சொன்னாங்க. ஆனா நான் சர்ச்சுக்கும் போவேன்னுகூடவே சொன்னாங்க. கொளப்பமா இருந்துச்சு அவருக்கும் மத்தவங்களுக்கும். அப்ப சரஸ்வதி டீச்சர் கேட்டாங்க. ஒருவேளை அப்பா கிறிஸ்டியன் அம்மா இந்து அதுமாதிரி கலப்புத்திருமணமான்னு கேட்டாங்க. அதுக்கு அவுங்க சொன்னாங்க இல்ல எங்க அப்பா அம்மா ரெண்டுபேரும் இந்துதான் அப்பா முத்துசாமி அம்மா காந்திமதி ந்னு
அப்புறம் கோவிலுக்கெல்லாம் உங்கவீட்டுல போவீங்களான்னு கேட்டாங்க ஓ தாராளமாப்போவோம் அய்யனார் கருப்புசாமி முத்தையா சாமி அழகர் மீனாட்ச்சி எல்லாத்தையும் கும்புடுவோமேன்னு சொன்னவன்ன ஜோசப் வருத்தமாயிட்டாரு. சரஸ்வதி டீச்சர் கொஞ்சசந்தோசப்பட்டாலும் அப்புறம் என்னாத்துக்கு இந்த ரெஜிஸ் விக்டோரியா கருமம் எல்லாம்ன்னு சவுண்டக் கொறைச்சி முணங்குனாங்க . அப்ப ரெஜிஸ் டீச்சர் சிரிச்சிட்டாங்க. பேருல என்ன இருக்கு. இந்தபேரை இவங்கதான் வைக்கணும்ன்னு சட்டம் இருக்குதான்னு கேட்டாங்க. சரஸ்வதி டீச்சர் இல்ல நம்ம மரபுன்னு ஒண்ணு இருக்குல. நம்ம சாமிபேரு இல்ல தமிழ்ப்பேரு இதுமாதிரிதான் பொதுவாக வைப்பாப்பாக
அப்ப ரெஜிஸ் சொன்னாங்க அதுக்கு ஒரு காரணம் இருக்கு. சொல்றேன்னு ஆரம்பிச்சாங்க.
எங்க அப்பா முத்துசாமி நல்ல ஓவியர் டிராயிங்மாஸ்ட்டர். ஆனா முறைப்படி பட்டம் வாங்குனவர் இல்ல. ஆனா அழகா வரைவாரு. அப்பஎல்லாம் ரொம்ப வறுமை ஏன்னா அப்பாவோட அப்பா பொறுப்பில்லாதவரு. அம்மா இல்ல இறந்துட்டாங்க அதுனால தாத்தா வீட்டுலதான் அவரு வளந்தாரு. கவனிக்க ஆளில்ல அவரோடதாத்தாவும் முடிஞ்சவரைக்கும் கவனிச்சி வளத்தாரு ஆனா அம்மா இல்லாத பிள்ள. அப்பா வீட்டுல இல்ல. அம்மா பாசமுன்னா என்னான்னு தெரியாம வளந்த பிள்ள அதுனால அந்த ஏக்கமும் வருத்தமும் அப்பாவுக்குள்ள அவரை படுத்துச்சு. என்ன இருந்தாலும் அம்மா இருக்குறமாதிரி வருமா அதுனால வேலையும் இல்லாம பசியும் பட்டிணியுமா கெடந்துருக்காரு.
அப்பத்தான் ஆரப்பாளையத்துல ஹோலி பேமிலி பள்ளிக்கொடம் தொறந்திருக்காங்க அங்க பெயிண்ட் அடிக்கிற வேலைக்கி ஆள் கேட்டுருக்காங்க. ஒரு ஓவியர் கதவுக்கும் ஜன்னலுக்கும் பெயிண்ட் அடிக்கிற வேலைக்கிப்போறது எவ்வளவு மனக்கஸ்ட்டமுன்னு அவங்களுக்குத்தான் தெரியும். அங்க தினக்கூலிக்கி இவரு வேலைக்கிப்போயிருக்காரு. கதவுல ஜன்னல்ல பெயிண்ட் அடிச்சிட்டு சும்மா இருக்கும்போது அதுல டிசைன் வரைஞ்சிருக்காரு இவரு. அதுரொம்ப நுட்பமான டிசைன். அப்ப அதை அங்க இருந்த நண் ஒரு அம்மா வெளிநாட்டில இருந்து வந்தவங்க பாத்துட்டு அசந்து போயிட்டாங்க. ஏன்னா அதே டிசைன் வாடிகன்ல சர்ச்சில அவங்க பாத்துருக்காங்க. கிட்டத்தட்ட 50 வயசானவங்க. அவங்க இவர் கையப்புடிச்சி முத்தம் கொடுத்துருக்காங்க. மைடியர் சன் ஒனக்குள்ள நிறைய த்திறமை இருக்கு நீ இப்புடி கதவுக்கும் ஜன்னலுக்கும் பெயிண்ட் அடிக்கவேண்டிய ஆள் இல்ல
எதையும் முறைப்படி செய்யனும் வா உனக்கு வழிகாட்டுறேன்ன்னு பசுமலைல இருக்குற ஓவிய ஆசிரியர் பயிற்சி மைய்யத்துல சேத்துவிட்டுருக்காங்க . அவங்க செலவுல. அங்க போயிட்டு வரும்போது ரோட்டோரமா ஒரு கொழந்தை அழுகுரல் கேட்டுருக்கு. அங்க போய் பாத்தா அப்பத்தான் பொறந்த கொழந்தை அது ரத்தமும் மலமும் குளமா இருக்க அதுக்குநடுவில அழுத்துக்கிட்டு இருக்கு.
ஒரே கெட்ட நாத்தம் வேற உடனே கொஞ்சம் கூட யோசிக்காம அந்தக்கொழந்தை அதுவும் பெண் கொழந்தைய எடுத்து பக்கத்துல தண்ணி வாங்கி வாங்கி சுத்தப்படுத்தி மார்போட அணைச்சிக்கிட்டு சொன்னாங்க ஓ ஜீசஸ் இந்தக்குழந்தையை ரட்சியும்ன்னு சொல்லி பள்ளிக்குடத்துக்கு தூக்கிட்டு வந்தாங்க. அதுக்கு அப்பா ஒதவி செஞ்சிருக்காரு. அப்பவே அவங்க தெய்வமா தெரிஞ்சிருக்காங்க அவருக்கு. அவங்களை அப்பவே அம்மான்னு கூப்புடத் தொடங்கிட்டாரு அப்பா. அங்கயிருந்து வீட்டுக்கு இவரு வந்துட்டாரு. அப்ப அவருக்கு ஒரு மகன் பொறந்திருந்தான்
இவரை அவங்க கூப்புட்டு அனுப்பிருந்தாங்க . இவர் தான் வரைன்சிருந்த மேரி-ஜீசஸ் படத்தை எடுத்துட்டுப்போய் அவங்களுக்கு பரிசாக்குடுத்துட்டு தனக்கு மகன் பொறந்திருக்குற விசயத்தை சொன்னாரு
அப்ப அவங்களுக்கு சந்தோசம் தாங்கல. மீண்டும் அவர்கைய்யப்புடிச்சிக்கிட்டாங்க. மை சன் உன்னால ஒரு உதவியாகனும் இந்தக்கொழந்தைக்கு தாய்ப்பால் வேணும் இங்க அது சாத்தியமில்ல. அதுனால நீங்க மனசுவைச்சா அது முடியும். எல்லாக்கொழந்தைகளுக்கும் அம்மா இருப்பா நான் இதோட அம்மாதான் ஆனா அம்மாவாக பசியப்போக்க முடியல ந்னு கண்ணுல கண்ணீர் சிந்த கையப்புடிச்சிட்டு பிச்சைமாதிரி கேட்டுருக்காங்க.அப்பாவும்கொஞ்சம் கூட யோசிக்காம ஒத்துக்கிட்டாரு. அந்தப்பொண்கொழந்தைய வீட்டுக்கு கொண்டாத்து மனைவிக்கிட்ட சொன்னாரு
அம்மாவும் ஒரு தாயா ஏத்துக்கிட்டாங்க
அதுக்கப்புறம் ரெண்டுகொழந்தைக்கும் அம்மா தாயாகிட்டாங்க. அந்த கொழந்தை அம்மா அப்பாகிட்டயும் மதர்கிட்டயும் வளந்துச்சு. அவங்க அந்தக்கொழந்தைக்கி ராணின்னு பெயர் வைச்சிருந்தாங்க
அப்பாவுக்கு நெறையா ஒதவி செஞ்சாங்க அங்க படிச்சி முடிச்சி அரசாங்கபள்ளில ஓவிய ஆசிரியரா வேலையும் கெடைச்சிடுச்சு. இப்ப மதர் வாடிகனுக்கு போகவேண்டியது வந்துச்சு. ஆனா அந்தப்பொண்கொழந்தை இவங்களை அம்மாஅ ப்பான்னு கூப்புட ஆரம்பிச்சிருந்துச்சு. அம்மா அப்பாகிட்ட அவங்க வாடிகன் போற விசயத்தைச்சொன்னாங்க. அப்ப அவங்கதயங்கிதயங்கிக் கேட்டாங்க நான் வாடிகன் போயிட்டு வாற வரைக்கும் ராணி உங்கக்கிட்டயே இருக்கட்டும் சீக்கிரம் நான் வந்துடுறேன் பராமறிப்புக்கு பணம் கூடத்தாறேன்னு சொன்னாங்க . அப்ப அப்பா சொன்னாரு இது எங்க மக மாதிரி
அத பாத்துக்க பணமா... ந்னு சங்கடப்பட்டாங்க. சரி பாத்துக்கங்கன்னு அந்தக்கொழந்தைக்கு முத்தம் குடுத்துட்டு அவங்க கண்ணீரோட போய்ட்டாங்க வாடிகனுக்கு. ஆனா பொண்ணுக்கு அஞ்சு வயசாச்சி. பள்ளிக்கொடத்துல சேக்கணுமேஅதே ஹோலிபேமிலி கான்வெண்ட்டுல சேத்தாரு பேரு அவங்க வைச்ச ராணியோட மதரோட பெயரான ரெஜீஸ் விக்டோரியாவையும்சேத்து ரெஜிஸ் விக்டோரியா ராணின்னு வைச்சி அப்பா அம்மா பேரை அவங்கபேரையே குடுத்தாங்க.
மதர் திரும்பி வர மூணு வருசமாயிடுச்சு. அன்னிக்கி ராணிய கூப்புட்டுப்போக வந்துருக்காங்க. அப்ப ராணி மூணாங்கிளாஸ் படிச்சிட்டு இருந்தா. அவளுக்கு மதர் மொகமே மறந்துபோச்சு அம்மா அப்பா அண்ணன் தான் தெரிஞ்சது
அப்ப அப்பா தனியா மதர்கிட்ட சொல்லிருக்காரு. உங்க கூடவந்தா ராணிக்கி தான் ஒரு அநாதைன்னு தெறிஞ்சிடும். அம்மா அப்பா இல்லாத கஸ்ட்டம் என்னான்னு நான் அனுபவிச்சிருக்கேன். அந்தக்கஸ்ட்டம் அவளுக்கு வேணாம் நாங்களே அம்மா அப்பாவா இருந்துடுறோம். எங்க மகளாவே இருக்கட்டும்ன்னு சொன்னாங்க. மதரும்
அதுக்கான சட்டபூர்வமான வேலைகளைச்செஞ்சிட்டுஅப்பா அம்மா கையப்புடிச்சி நீங்கள் பாக்கியசாலிகள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும்ன்னு கண்கலங்கச்சொன்னாங்க.
அது எனக்கு அப்பா இறக்குற வரை தெரியாது. அவரு இறந்தப்பத்தான் அம்மா சொன்னாங்க.ன்னு சொல்லிமுடிக்கும்போது ரெஜிஸ் விக்டோரியா கண்ணெல்லாம் நெறைஞ்சி அழுதுட்டு இருந்தாங்க. ஜோசப்வாத்தியார் சரஸ்வதிடீச்சர் கண்ணும் கலங்கி டுச்சு சரஸ்வதி டீச்சர் ராமா ராமான்னு அழுகவே ஆரம்பிச்சிட்டாங்க. எங்களை மன்னிச்சிடுங்க ராணிடீச்சர்ன்னு கையப்புடிச்சிக்கிட்டாங்க. ஜோசப்பும் ஓ ஜீசஸ்ன்னு சிலுவை குறியிட்டுக்கிட்டாரு
அப்ப ராணிடீச்சர் சொன்னாங்க அதுனாலதான் நான் சர்ச்சுக்கும் போவேன் அப்பாஅம்மா கூப்புட்டுப்போன கோவிலுக்கும்போவேன் ஏன் மசூதிக்கும் போவேன். எல்லா மதமும் எனக்கு ஒண்ணுதான்னு கண்ணுல நீர்வழியச்சொன்னாங்க. அதுதான் என்னோட அப்பா முத்துசாமி எனக்குச்சொல்லிகுடுத்ததுன்னு.....
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்