பொய்முகங்கள் - சிறுகதை

By சரவணன்

"இந்தா ஒன்னோட மகனோட அப்பன் அதான் ஒன் புருசன் காலையில போய் சேந்துட்டாரு. அதான் சாக்குன்னு நீ இங்க கெளம்பி வந்துராத போனவ போனவளாவே இருந்துரு. இங்குணக்குள்ள நாங்க இருக்கோம் எல்லாத்தையும் பாத்து செய்வோம் இது தாக்கலுக்குத் தான் சொல்றோம் அப்புறம் சொல்லலைனு குத்தம் சொல்லப்படாது . புருசன் செத்தா 

பொண்டாட்டிக்கு சொல்ல னும்றது ஒரு மொறை எதுக்குன்னா புருசன் செத்தது கூடத்தெரியாம நீபாட்டுக்கு எப்பையும் போல அலங்காரம் பண்ணிக் கிட்டுத் திரியப்புடாதுல்ல .. என்ன நாசுக்கா நா சொல்றது புரியுதில்ல.. அதான் தாலிய நீபாட்டுக்கு போட்டுக்கிட்டுத் திரியபுடாதுல்ல அது பாவமாயிடுமில்ல அதான் பெரிய மனுசன் சொல்றதை சொல்லிப்புட்டேன் அப்புறம் ஓன் பாடு அவுக பாடுன்னு"

 போன்ல சொன்னார் சொந்தகாரர் ஒருத்தர்
இம்புட்டுக்கும் அவளோட மகன் எதுவும் தாக்கல் சொல்லல. ஒடம்புக்கு என்ன ஆச்சு சரியாப்பாத்தாகளா பாக்கலயா ஒன்னும் தெரியல. போனா என்ன நடக்கும்முன்னு சொல்ல முடியாது. அவமானம் அவளுக்கு ஒன்னும் புதுசில்ல. ஆனாலும் காயப்பட்டுக் காயப்பட்டு கல்லாகிப்போச்சு மனசு... 

அவளோட அம்மா அவகூடத்தானிருந்தாக. அது சொல்லிச்சி
 "என்ன இருந்தாலும் தொட்டுத்தாலி கட்டுன புருசன் வாபோய் மொகத்த யாவது பாத்துட்டு வந்துருவோம் வாடி கெளம்பு போகலாமுன்னு " சொன்னா..

அதுக்கு இவ கேட்டா "ஒனக்கு புத்தி பேதலிச்சுப்போச்சா . சொரனை இல்லயா. புருசன்ற எடத்துல இருந்து அவன் என்னாத்த பண்ணி ருக்கான் ,  போய் கட்டிப்புடிச்சி அழுக.  கட்டுன கடமைக்கி கஞ்சி ஊத்துனானா இல்ல மானத்தக்காக்க சேலை வாங்கிக்குடுத்தானா இல்ல இருக்க வீட்டுல எடம் குடுத்தானா  கட்டுன பொண்டாட்டி தானேன்னு என் கூடப்படுத்து எந்திரிச்சானா முப்பத்தஞ்சு வருசமா  என்னத்த கிழிச்சான்...  தெருவில பசியா இருக்குறவுகளை பாத்தா மொகம் தெரியாதவங்க கூட ஒரு ரூவா குடுப்பாக. இந்த பாழாப்போனவன்  கட்டுன பொண்டாட்டி பட்டினியா கெடப்பாளே ந்னு ஒரு நா ஓசனை பண்ணிருப்பானா அப்புடிப்பண்ணிருந்தா என்னய இந்த நெலமைக்கி விட்டுருப்பானா..

 மனுசனா அவன்"னு கத்துனா
அதுக்கு அவளோட அம்மா சொன்னா 
. "அவன் கேடு கெட்டவனா 

இருக்கட்டுமே. உசிரோட இருந்தவரைக்கும் இருந்தாச்சு ஒரு கோவத்துல. இப்ப செத்துப்[போயிட்டார். ஒரு மனுசன் செத்ததுக்கு அப்புறம் விரோதம் பாக்குறது தர்மமில்ல. அவர் செத்ததோட அவர் பண்ண எல்லாம் போய்டுச்சு. இப்ப அவர் ஒடம்புதான் இருக்கு நீயும் விரும்பியோ விரும்பாமலோ ஒரு புள்ளைய அவனுக்குப்பெத்து இருக்க  அதுக்காவது போகலாமுல்ல"ன்னா

இவளுக்கு கோவம் தலைக்கேறிடுச்சு. 
"என்னா சொல்ற நீ அவன் செத்துட்டா அவன் பண்ணதெல்லாம் இல்லைனு ஆயிடுமா  நான் பட்ட துன்பம் தொயரம் எல்லாம் இல்லைன்னு ஆயிடுமா   மகனப்பெத்தேன்னு சொல்றீயே அந்த மகன் வந்து ஆத்தாள எட்டிப்பத்தானா.  ஒதவிசெஞ்சானா அதுகூட இல்ல ஒரு ஆறுதல் வார்த்தை சொன்னானா... கடைசியா செத்த தாக்கலாவது சொன்னானா என்ன பொறப்பு அவன் அவனைப்  பெத்ததுக்கு ஒரு கல்லப்பெத்துருந்தா படிலயாவது தாங்கிருக்கும்  பொண்டாட்டி பேச்சக்கேக்குற பொசகெட்டபய."....னு திரும்பக்கத்துனா
அவளோட அம்மாவுக்கு பழசெல்லாம் நெனப்புக்கு வந்துச்சு 

எத்தன வருசம் முப்பத்தஞ்சு வருசமாச்சு. வந்து . ஏன் என்னான்னு கேக்கல. ஒரு விசாரிப்பு பேச்சு வார்த்தை கெடையாது அவர் தான் அப்படின்னா. பெத்த மகன் கூட திரும்பிப்பாக்கல. அவனுக்கு கலியாணம் நடந்தப்பக்கூட பெத்தவள அழைக்கல ஏன் கலியாணப் பத்திரிக்கை கூட கண்ணுல காங்கல. பெத்தவ பேரு அதுல போட்டாங்களா இல்லையா தெரியாது...

வந்த மருமக அதுக்கும் மேல. மகன் சொல்றான் இவ அங்க போனா அவ வெளிய போய்ருவாளாம். மிரட்டுறதா சொல்றான் என்னப் பெத்தவ எங்கப்பந்தான் ஏதோ ஒரு காரணத்துனால புடிக்கல ஒதுக்கி வைச்சிட்டான் . விவாகரத்தும் ஆகல இன்னிக்கி வரைக்கும் சட்டப்படி இவதான் பொஞ்சாதி இவதான் அவனுக்கு அம்மா எங்கம்மா பாவம் என்ன செய்யும் சாப்பாட்டுக்கு வழி இல்லாம செரமப் படுதுன்னு . பொண்டாட்டிய சமாதானம் பண்ணி அவளைக் கூட்டிட்டுப் போயிருக்கலாம் இல்ல ஒதவி செஞ்சிருக்கலாம்... துப்பில்ல அவனுக்கு.

அவன் டாக்டர்தான். அதைப்படிக்கிறதுக்கு இவளோட நகை நட்டு இவளோட அண்ணந்தம்பிக பண ஒதவியெல்லாம் தேவைப்பட்டுச்சு.. வேலை முடிஞ்சவன்ன தூக்கிப்போடுற எச்சி எலைமாதிரி தூக்கிப்போட்டாச்சு... என்ன ஒறவு இது...
அவளோட புருசன் இவளுக்கு மகன் பொறந்ததுக்கு அப்புறம் தான் இவளப் புடிக்காதது தெரிஞ்சிதா. இவ கிட்ட விவாகரத்துப்பத்திரத்துல கையெழுத்துக் கேட்டு கட்டாயப்படுத்துனான். இவ முடியாதுன்னு சொன்னவன்ன ஒதுக்கி வைச்சிட்டான் வீட்டுக்குள்ளயே தீவு மாதிரி இவ சமைச்சா சாப்புடுறது இல்ல. பேச்சு வார்த்தை கெடையாது... படுக்குறது கூட இவ அடுப்படிலதான்... என்னா ......க்கு இவன் அவளைக்கல்யாணம் பண்ணுனான்னு புரியல. பொறுத்துப் பொறுத்துப்பாத்து மகனத்தூக்கிட்டு தனியா வந்துட்டா.. 

படிச்ச படிப்பு கைகொடுத்துச்சு. ஒரு தனியார் பள்ளிக்கொடத்துல வேலைக்கிச்சேந்து மகனையும் பாத்துக்கிட்டுப் பொழப்ப ஓட்டுனா . அதுவும் பொறுக்கல. வந்து அஞ்சு வயசு மகனுக்கு இருக்கையில சணடை போட்டுத் தூக்கிட்டுப்போயிட்டார் அவபுருசன்
பட்டும் படாம தொட்டும் தொடாம அவன் வளந்து இப்புடி அவர் என்ன சொல்லி அவன் மனசக்கெடுத்தாரோ பெரியவன் ஆனதுக்கு அப்புறம் படிப்புத்தேவையெல்லாம் முடிஞ்சப்புறம் பேசுறதை நிறுத்திக்கிட்டான் பெத்த மனசு பத்தி எரியாது.. 

இதெல்லாம் பாத்துக்கிட்டு அந்த கடவுள் சும்மாதான் இருக்கார். அவருக்கும் கண்ணு இருக்கா இல்லையான்னு தெரியல. இந்த லெச்சணத்துல கூடப்பொறந்தவனுக அம்மாவக் கொண்டாந்து இவ கிட்ட விட்டுட்டானுக. அதுக்கும் சேத்து ஒழைக் கணும் .பெத்த மயன் கிட்ட பெரியவுகல வைச்சிப்பேசுனப்ப மாசம் ஒரு தொகை அனுப்புறதா ஒத்துக்கிட்டான் மகன்..

அது வேலைக்கிப்போனவரைக்கும் சரியாச்சு இப்ப வயசு 61 வேலையும் போச்சு ஏதோ டியூசன் எடுத்து பொழப்ப அரைவயித்து காவயித்துக்கஞ்சி குடிக்க முடிஞ்சது...
இப்ப திடீருண்ணு கட்டுனவனும் போய் சேந்துட்டான். அழுக கூட வரல இவளுக்கு என்னாத்த இவளுக்குப்பண்ணீட்டான் அழுக வாரதுக்கு. இவ அழுது துடிச்சப்ப எல்லாம் எட்டி ஒதைச்ச காலுக இன்னிக்கி நீட்டிடுச்சு. வெளிய புடிச்சித்தள்ளுன கையி படுத்துருச்சு.. அழுகத் தோணல. அதுக்குப்பதிலா என்னமோ மனசுக்குள்ள இருந்த கோவம் அத்தனையும் போயிட்டமாதிரியும் நெஞ்சுக்குள்ள இருந்த சோகம் வருத்தமெல்லாம் திடீருண்ணு ஓடிட்ட மாதிரியும் தோணிச்சி...

தெருவில போற பூக்காரியக்கூப்புட்டு பத்துமொழம் மல்லிகப்பூவு வாங்கி தலையில வைக்கனும் போல தோணிச்சி.. அங்க இருந்தாலும் அவரைத்தூக்கிட்டுப்போய் தாலி வாங்குற வரைக்கும் தலநெறையா பூவ வைக்கத்தான் போறாக. அத இங்க யே செய்ய தோணுச்சு ஆனா அழுகையோ வருத்தமோ வரல.

முன்பின் தெரியாத யாரோ செத்துட்டாங் கன்னா வார சின்ன வருத்தம் கூட இவளுக்கு வரல. அதுனால பூக்காரம்மாவக்கூப்புட்டு சாமிக்குப்போடன்னு சொல்லி 10மொழம் பூவாங்கி வீட்டுக்குள்ள போய் தலையில வைச்சிக்கிட்டா. அப்புறம் குங்குமச்சிமிழ்ல இருந்த குங்குமத்தை அள்ளி நெத்தில பூசிக்கிட்டா. இப்ப அவளைப்பாத்து அவளுக்கே என்னமோ தோணிச்சி. அவளோட மனசே அவளத்திட்டுச்சு... "கிராதகி"ன்னு...

அதுக்கு அவ அதுகிட்ட சொன்னா "இருந்துட்டுப்போறேன் கிராதகியா ஒனக்கென்ன. இந்த முப்பதஞ்சு வருசம் நீதான என்ன போட்டுப்படுத்துன. இப்ப யார் கேக்கப்போறா என்ன. அப்ப ஏன் பூவைக்க லன்னும்பொட்டுவைக்கலன்னும்கேக்க வேண்டியவன் கேக்கல. இப்ப கேக்க ஆளில்ல.... போடி இவளே"ன்னு மனசாச்சிக் கிட்டப்பேசிக்கிட்டு 

இருந்தவளைப்பாத்து அவளோட அம்மா அழுக ஆரம்பிச்சா 
"என் புள்ள வாழ்க்கை இப்புடி ஆகிப்போச்சே"ன்னு அப்ப இவ கத்துனா "தே கெழவி சும்மா இரு இப்ப என்ன நடந்துபோச்சுன்னு கத்துற... என்ன வீட்ட விட்டு வெரட்டுன அன்னிக்கே அவன் செத்துட்டான்..... எனக்குள்ள. இப்ப அவன் செத்தது ஊர் ஒலகத்துக்குத்தான் அந்த ஊர் ஒலகம் வேண்ணா துக்கம் கொண்டாடட்டும் என்னால முடியாது..போம்மா"ன்னா

அதைபாத்துட்டு அவளோட அம்மா பாவம் எம்புட்டுத்தொயரப்பட்டு இருந்தா இப்புடிப்பேசுவா... எம்புள்ளைக்கி இப்புடி ஆகிபோச்சேன்னு அழுகத்தொடங்குனா.
அப்ப இவ சொன்னா "இங்க வீட்டுக்குள்ள ஆராவது அழுதா கொன்னேபுடுவேன் அழுகுறதுன்னா வெளியே போய் அழு இங்க வேணாம். இது ஒன்னும் எழவு விழுந்த வீடில்ல"ன்னா...

 அதைப்பாத்து வாயடைச்சி நின்னா இவளோட அம்மா கண்ணீருடன்...

அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE