பிரபஞ்சத்துட்ட கேளு கேட்டது கிடைக்கும்

By சரவணன்

தினம் ஒரு தடவை கண்ணாடி முன்ன நின்னு நான் பெரிய ஆளா ஆயிடுவேன்னு சொல்லு ... 
பிரபஞ்சத்துட்ட கேளு கேட்டது கிடைக்கும் ... 

வெற்றி பெற்றுருவேனு நம்பு கண்டிப்பா நீ வெற்றி பெற்றிருவ..... 

ஆழ்மனம் தான் எல்லாம். அங்க ஒரு விஷயத்தை பதிய வைச்சுட்டனா கண்டிப்பா நடந்தே தீரும் ...
இதெல்லாம் பாலோ பண்ணா போதாதா நாம வெற்றியடைய  அப்படின்னு கேட்டா? ஆமா போதாது. என்ன சொல்றீங்க? நிறைய சுய முன்னேற்ற நூல்கள்ல இதைத்தானே சொல்லி இருக்கு. அப்ப இதெல்லாம் உண்மை இல்லையானு கேட்டா, உண்மை இருக்கு ஆனா அது முழுசா இல்ல.

கடவுள் ஒருத்தனுக்கு காட்சி கொடுத்தாராம். உனக்கு என்ன வேணுமோ கேளு அப்படினு சொன்னாராம். அவனும் எனக்கு லாட்டரில ஒரு கோடி பரிசு விழனும்னு கேட்டானாம். கடவுள் வரத்தை கொடுத்துட்டு மறைஞ்சிட்டாராம். அவனும் ஒன்னு ரெண்டு மூணு அப்படின்னு பத்து வருஷம் வெயிட் பண்ணி கடைசியா கடவுள் மேல ரொம்ப கோபமா ஆயிட்டானாம். கோபத்தோட கடவுள திட்டவும்  கடவுள் அவன் முன்னாடி தோன்றினாராம். நான்தான் உனக்கு வரம் கொடுத்துட்டேனே நீ ஏன் லாட்டரி சீட்டு வாங்கலன்னு கேட்டாராம்.. 

பிரபஞ்சம், நம்பிக்கை, ஆழ்மனம், கடவுள்னு நம்மள சுத்தி எல்லாமே நமக்கு உதவி பண்ண தயாரா இருந்தாலும்  நம்மளோட முயற்சி இல்லாம வெற்றியடைவது சாத்தியமே கிடையாது.

அதுவும் இரு முறை முயன்றால் மட்டுமே வெற்றி அடைய முடியுமாம்.
எனக்கு திறமை இருக்கு நான் வெற்றி அடைஞ்சிருவனானு கேட்டா இல்ல.

திறமை மட்டும் போதாது நம்மளோட திறனையும் வளத்துக்கணும். திறன வளர்த்துக்கிட்டு மறுபடியும் முயற்சி செய்யணும். அப்ப கண்டிப்பா வெற்றி கிடைக்கும்.

திறமை × முயற்சி = திறன் 
திறன் × முயற்சி = வெற்றி

எடுத்துக்காட்டா  ஒருத்தருக்கு நல்லா எழுத வருது. அது ஒரு திறமை. அதுக்காக கண்டதையும் எழுதினா யார் படிப்பாங்க?

இந்த இடத்துல தான் திறனை வளர்த்துக்கணும். ஒரு ஆயிரம் புத்தகமாவது படிக்கணும்.என்னது ஆயிரம் புத்தகம் படிக்கணுமா?  குறைந்தது பத்தாயிரம் மணி நேரமாவது முழு கவனத்தோட ஒரு குறிப்பிட்ட செயல்ல நாம செலவழிக்கும் போது தான் நாம திறமையானவங்களா மாறுதோம்னு ஒரு சர்வே சொல்லுது. அதுபடி பார்த்தா   ஒரு எழுத்தாளரா மாறனும்னு நினைக்கிறவங்களுக்கு மேல சொன்னது சரிதான்.

திறமையானவங்களா மாறியாச்சு சாதனையாளர்களாக மாற என்ன செய்யணும்?  ஒரு இசையமைப்பாளர் எவ்வளவு பெரிய இசையமைப்பாளராக இருந்தாலும் கூட, காலை 7:00 மணிக்கு தனது ஸ்டூடியோல இசையமைக்க 80 வயசுலையும்  சலிப்பில்லாம வர்ர மாதிரி அசாதாரணமான விஷயத்த சாதாரணமா செஞ்சிட்டே இருக்கணும்.
எப்போதும் நோக்கத்தோடு கூடிய உழைப்பு மட்டுமே அசாத்திய வெற்றியை கொடுக்கும். நோக்கமும் ஆரம்பத்தில் தெளிவாக இருக்காது. ஒரு பாதையில் முன்னேற முன்னேற தான் நமது வாழ்க்கையின் நோக்கம் இதுதான் என நமக்கு தெரியவரும்.

அது மட்டும் இல்லாம வெவ்வேறு காலத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப தன்னை தகவமைத்துக் கொள்ளும் மனப்பான்மை உடையவர்களே தொடர்ந்து வெற்றி பெறுகிறார்கள். எனக்கு இது வராது, எனக்கு இவ்வளவு தான் முடியும், இனிமேல் என்னால மாற முடியாது அப்படின்னு சொல்றவங்க வெற்றியாளர்களாக இருக்கலாமே தவிர சாதனையாளர்களா என்னைக்குமே மாற முடியாது. 

மனிதனாக பிறந்த ஒவ்வொருவருக்கும் வெற்றி பெற்றவராகவும், சாதனையாளராகவும் ஆகக்கூடிய ஆற்றல் இருக்கிறது. அதை அடைய தடையாக இருப்பவற்றையும், அடையும் வழிகளையும் அவற்றின் பின்னால் இருக்கும் உண்மைகளையும் உளவியல் ரீதியாக அறிய வைப்பதே இந்த மனசுக்குள் ஒரு ஜிம்!

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE