மாஸ்க் - சிறுகதை

By சரவணன்

பள்ளிக்கொடமெல்லாம் தொறக்கலையா புள்ளைகளுக்குப்பொழுதும் போகலை. இந்தக்கொரானா காலத்துல வெளிய எங்கையும் கூப்புட்டுப்போகமுடியாததால சின்னப்புள்ளைங்க என்னத்தையாவது பேசுதுக. 

அடம்புடிக்குதுதுக. மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்கக்கூப்புட்டுபோறதும் இல்ல. ஒழுங்கா வீட்டுலயே இருங்கன்னு சொல்லிப்புடுறோமா. ஒரெ அடம் எங்கவீட்டுல அவரு வேலைக்கிப்போகவேண்டிய கட்டாயம் 

இந்தகொரானாவுலயும். ஏன்னா அவர் வேலைசெய்யிறது ஆஸ்பத்திரில மருந்து குடுக்குறவேலை போகாம இருக்க முடியுமா. அதுனால மார்க்கெட்டுல போய் காய்கறி நாந்தான் வாங்கனும் ஏன்னா காலையில மாத்திரம்தான மார்க்கெட்டு இதுல ஞாயத்துக்கெழமை வேற மார்க்கெட் கெடையாது. அன்னிக்கித்தான் அவருக்கு லீவு.

இன்னிக்கி மார்க்கெட்போறதுக்குக்கெளம்புனேன் .பை காசு எல்லாம் எடுத்துட்டு மாஸ்க் எல்லாம் போட்டுக்கிட்டு, அப்ப அம்மு அடம்புடிச்சா நானும் வருவேன்னு. நான் மெரட்டுனேன். அப்பா சொல்லிருக்காரு அங்க எல்லாம் அனாவசியமா ஆரும் போகக்கூடாது. நானே வேற வழியில்லாததால போறேன். நீயெல்லாம் வரக்கூடாதுன்னு 

சொன்னேன். உங்களுக்கு பாதிப்பு இருக்காதான்னு கேட்டா. அதுக்குத்தான் மாஸ்க் போட்டுட்டுப்போறேன் வந்தவன்ன கைகழுவுறேன் . அப்புறம் குளிச்சி டிரெஸ் மாத்திடுவேன்னு சொன்னேன் . அப்ப நானும் மாஸ்க் மாட்டிக்கிடுறேன் கை கழுவுறேன் குளிக்கிறேன் டிரஸ் மாத்திக்கிறேன். அம்மா பிளீஸ்மா  வறேன் மா கூட்டிட்டுப்போமான்னா. இவ வந்தாலே அதிகப்பிரசங்கித்தனமா என்னமாவது சொல்லுவான்றதாலே வேணாமுன்னு சொன்னேன் 

அவ விடுறதா இல்ல. அழ ஆரம்பிச்சிட்டா. அவ அழுதா அப்புறம் சளிப்புடிக்கும். அது கொரானாவிட மோசம். படுத்திடும். அதுனால சரி இன்னிக்கி ஒரு நா மட்டும் கூட்டிட்டுப்போறேன். மாஸ்க் போட்டுக்கனும். கைல கிளவுஸ் போட்டுக்கனும் எதையும் அனாவசியமா தொடக்கூடாது.  ரெண்டுமீட்டர் டிஸ்ட்டன்ஸ் மெயிட்டெயின் பண்ணனும்ன்னு அவ்வளவுதானம்மா அதான் வாட்ச்சாப்புல நியூஸ்ல சொல்லுறாங்களே அதெல்லாம் கடைப்பிடிக்கிறேம்மா.....கூட்டிட்டுபோம்மான்னா. வேற வழியில்ல தயாராகவே வந்துட்டா.  மார்க்கெட்டுல போனா கூட்டம் அவ்வளவா இல்ல. 

பாவம் மார்க்கேட்டுல கடைபோட்டுருக்கவங்களுக்கு வியாபாரம் இல்ல போல. மாசக்கடைசி. எதாவது வாங்குங்கம்மான்னு கெஞ்சினாங்க.பாவம். வாங்க ஆளுகளைக்காணோம்.  

ஒரு அம்மா முருங்கைகாய் முருங்கக்கீரை வைச்சிட்டு இருந்துச்சு. அம்மா வாங்கிக்கங்கம்மா. இதுல இரும்புச்சத்து இருக்கு ஒடம்புக்கு நல்லதுன்னு சொல்லி கெஞ்சிச்சி. பாத்தாலே தெரிஞ்சது. அது கிராமத்துல இருந்து பறிச்சிட்டு வந்தது. இதை வித்துத்தான் சாப்பாடுபோல.  நான் ஏற்கனவே கடையில வாங்கிட்டேன் 
அதைச்சொன்னேன். பரவால்லமா நாளைக்கி வைச்சிச்சாப்புடுங்க நல்லாருக்குமுன்னு சொல்லுச்சு. அப்ப அம்மு வாயத்தொறந்தா ஏன்பாட்டி மாஸ்க் போடல போடலைன்னா கொரானா வருமுன்னு தெரியாதான்னு கேட்டுட்டுட்டா. அதுக்கு அந்த அம்மா சொல்லுச்சி கையில காசு இல்ல கண்ணு. இருந்தா 

வாங்கிப்போடமாட்டனான்னு. வீட்டுல துண்டுகூடவா இல்ல. அதை கட்டிக்கலாம். இல்ல சேலையால மூடிக்கலாம்ல ந்னு சொல்லிச்சி. நான் அவளை கொஞ்சம் அடக்குனேன் . சும்மா இருடின்னு. ஆனா அம்மு விடல 
உனக்கு ஏதாவது ஆச்சுன்னா எப்புடி  கடைபோடுவ. எப்புடி சாப்புடுவன்னு கேக்க ஆரம்பிச்சிட்டா. அந்தம்மா என் பேத்தி கேக்குறமாதிரியே கேக்குற. புத்தியோட வளத்துருக்காங்க உங்க அம்மான்னு சொன்னா.  

சரிம்மா குடுன்னு வாங்கிட்டு இருக்குறப்ப ஒருத்தன் மாஸ்க் வித்துக்கிட்டு வந்தான். மாஸ்க் பத்துரூவா ந்னு கூவிக்கிட்டு. 
அம்மு நச்சரிச்சா. அம்மா பத்துரூவா குடும்மா.ன்னு . எதுக்குன்னு கேட்டேன். அந்த மாஸ்க் அழகா இருக்கும்மா. ப்ளீஸ் ந்னா. ஆனா ஊனான்னா ப்ளீஸ் போட்டுருவா.  நானே மாஸ்க் விக்கிற்வனை கூப்புட்டு அவளுக்குப்புடிச்சதை வாங்கிக்குடுத்தேன். 

அவ மாஸ்க்க எடுத்துட்டு நேர அந்த அம்மாக்கிட்டபோய் குடுத்தா இந்தாங்க பாட்டி போட்டுக்கோங்க. அந்தம்மா கண்ணு கலங்கிடுச்சு. யாரும்மா நீ தெய்வம் பேசுறமாதிரி பேசுறன்னு வாங்கி மாட்டிக்கிச்சி அது கண்ணுல இருந்து வழிஞ்ச கண்ணீருல மாஸ்க் நனைஞ்சிச்சு. எவ்வளவுமா நான் காசுதாறேன்னு. காசத்தேடுச்சு. அம்மு சொன்னா பாட்டிக்கு பேத்தி வாங்கிக்குடுக்குறத்துக்கு வெலையில்லன்னு,,,, 

அந்தம்மாவால தாங்க முடியல. ஒடனே முருங்கக்கா கட்டு ஒண்ண எடுத்துக்குடுத்துச்சு. பேத்திக்கிபாட்டியால குடுக்க முடிஞ்சதும்மான்னு தழுதழுத்த கொரல்ல சொல்லிக்கிட்டே.....  அம்மு சிரிச்சிக்கிட்டே சொன்னா... நான் போனவன்ன மாஸ்க்க எடுத்துறக்கூடாதுன்னு

அந்தம்மா சொல்லிச்சி சரிங்க வாத்தியாரம்மா..........ன்னு கண்ணத்தொடச்சிக்கிட்டு நானும் அம்முவக்கூப்புட்டுக்கிட்டு வந்தேன் வீட்டுக்கு. வீட்டுக்கு வந்தவன்ன அம்மு சொன்னா. வீட்டுல அப்பா மாஸ்க் நெறையா வாங்கி வைச்சிருக்காருல்ல. அடுத்த தடவ மார்க்கெட்போகும்போது எக்ஸ்ட்ரா ரெண்டுமூணு எடுத்துட்டுப்போம்மா. இல்லாதவங்களுக்குக்குடுக்கலாம்ன்னு சொன்ன அம்முவ  பாத்து மலைச்சிப்போய் நின்னேன்...சுத்திப்போடனும்ன்னு நெனச்சிக்கிட்டு

கவிச்சிகரம். அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE