பெண் புத்தி பின்புத்தி - சிறுகதை

By சரவணன்

என்னங்க... ஒண்ணு சொன்னா கோப பட மாட்டியளே என்றாள் மனையாள்..

பீடிகையே பலமா இருக்குதே ..ஏதோ பெரிய விசயம் போல என நினைத்து கையில் வைத்திருந்த மொபைலை அணைத்து வைத்து விட்டு என்ன?? என்றேன்.

நீங்க சொல்ல, சொல்ல கேக்காம சீட்டு போட்டேமுல்லா.. அந்த வள்ளியூர்க்காரி அமலி அவ வீட்டை காலி பண்ணிட்டு போயிட்டாளாம்.

நம்மள மாதிரி நிறைய பேருக்கு சீட்டுப்பணம் கொடுக்கணுமாம் என்றாள் மனையாள்.
எத்தன வாட்டி படிச்சு படிச்சு சொன்னேன். அவ வெளியூர்க்காரி.  வாடகை வீட்டுல தான் இருக்கா. ஆளை நம்ப முடியாது. ஏலக்கழிவில் ஏலத்தொகை குறைவா போகுதுன்னு நெனைக்காம மொத சீட்டுலேயே எடுத்துறுன்னு சொன்னேன். அதையும் கேக்கல.

சீட்டு போடதா இருந்தா நம்மூரு வாத்தியாரு நடத்துற சீட்டுல வேணுமுன்னா சேர்ந்துக்கன்னு எத்தனை வாட்டி சொன்னேன். 

சீட்டுபணத்தை பிரிச்சிட்டு அவ போயிட்டா. போனது நம்மோட பணம். என்னைக்கு நாஞ்சொவ்லுறத நீ கேட்டிருக்கா.
பட்ட பிறகு தானே புத்தி வருவு. "பெண் புத்தி பின் புத்தி தானே என மனையாளிடம் பேசினேன்.
இனி என்ன பண்ண.??அமலி போனா போகட்டும். நீ குழம்பை ஊத்து என சொல்லி சோற்றை பிசைந்து சாப்பிட்டு கொண்டிருந்தேன்.

பேச்சு வாக்கில் "பெண் புத்தி பின் புத்தி" என யதேச்சையாக பேச்சு வாக்கில் சொல்லிய பழமொழியை பற்றியே யோசித்து கொண்டு இருந்தேன்.

ஒரு வேளை வழக்கம் போல் பேச்சு வழக்கில் உச்சரிப்பு மாறிய பழமொழியாக இருக்குமோ என்ற யோசனையும் வந்தது.

பெண் என்பவள் எண்ணிப் பார்க்காமல் ஒரு காரியத்தைச் செய்து விடுவாள். 
செய்த பின் ஏற்படும் விளைவுகளை கண்ட பின்னரே அது பற்றி சிந்திப்பாள் என்பது தான் இந்த பழமொழிக்கான அர்த்தமாக இருக்கும் என நினைத்தேன்.

பூமியை பூமாதேவி என  பெண்ணாக, நிலத்தை நில மகள் என பெண்ணாக, கடலினை கடல் அன்னை என பெண்ணாக, மொழியை தாய் மொழி  என பெண்ணாக,  நாட்டை தாய் நாடு என உயர்ந்த பொருட்களை எல்லாம் பெண்ணாக போற்றி வணங்கிய முன்னோர்கள்...

பெண்ணை இழிவுபடுத்தும் வகையில் பெண் புத்தி பின் புத்தி என நிச்சயம் சொல்லியிருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு அர்த்தம் தேடினேன்.

தவறான உச்சரிப்பால் அர்த்தம் மாறிய நிறைய பழமொழிகளை பற்றி இதற்கு முன்பு நிறைய பார்த்திருப்போம்.
சரியாக உச்சரித்தும் தவறாக அர்த்தம் புரிந்து கொள்ளப்பட்ட பமொழி "பெண் புத்தி பின் புத்தி" பழமொழி.
பெண் என்ற சொல் பேண் என்ற சொல்லிலிருந்து ஏகாரம் குறைந்து குறுகிப் போயிருக்கிறது.
பேண் என்றால் பாதுகாப்பவள் என்பது அர்த்தம். அதாவது பேணுதல் என்ற சொல்லிலிருந்து பெண் என்ற வார்த்தை பிறந்தது.

ஒரு குடும்பத்தில் கணவனுக்கு மந்திரியைப் போல இருந்து ஆலோசனைகள் சொல்லி துன்பங்களிலிருந்து காப்பவள் 
பெண்.

எனவே தான், பெண் என்பவள் பின் வரும் நிலையை முன்கூட்டியே எடுத்துச் செல்லும் வலிமை பெற்றவள் இவள் என்ற பொருளை நாம் அனைவரும் புரிந்து கொள்ளும் விதமாக இந்தப் பழமொழி உண்டானது.
அதாவது பெண்புத்தியானது பின்னால் வரும் கஷ்டங்களை ஆண்களுக்கு உணர்த்தும் புத்தியாகும்.

இதை உணர்த்தவே பெண்புத்தி பின்புத்தி என்று கூறி வைத்தனர்.
பெண்ணிடம் சிறிது ஆணின் அம்சம் இருக்க வேண்டும். ஆணிடமும் சிறிது பெண்ணின் அம்சம் இருந்தால் மட்டுமே அவர்கள் முழுமையான லட்சணம் பெற முடியும்.

தன்னில் ஒரு பாதியை பெண்ணான அன்னை பார்வதியிடமிருந்து பெற்று உமாபதியான சிவனார் மூலம் "பெண் புத்தி பின் புத்தி பழமொழிக்கான விளக்கத்தை அறியலாம்.

நெற்றிக்கண் எனும் ஞானக்கண், முதன் முதலில் பார்வதி தேவிக்கு தான் இருந்ததாகப் புராணங்கள் கூறுகின்றன. 
அம்மையப்பனாய் பார்வதி தேவி சிவபெருமானுடன் சேர்ந்த போது அகக்கண், புறக்கண், ஞானக்கண் ஆகிய மூன்றில் ஞானம் எனும் தனது மூன்றாம் கண்ணை பார்வதி தேவி சிவபெருமானுக்கு  கொடுத்து விட்டார்.
பார்வதிதேவி தனக்கு நெற்றி கண்ணை தந்ததை நினைவு கூரும் வகையில் செந்நிறத் திலகத்தை பார்வதி தேவி நெற்றியில் சிவபெருமான் இட்டார்.

தன்னோடு இணந்த பார்வதி தேவியின் நெற்றியில் சிவன் செந்தூர திலகமிட்டு தன்னில் ஒரு பாதியாக ஆக்கியதை நினைவு கூறும் வகையில் இன்றும் திருமணங்களில் மணப்பெண்ணுக்கு நெற்றியில் மணமகன் கையால் திலகம் இடப்படுகின்றது. 

செந்தூர திலகம் பார்வதிதேவியின் நெற்றியில் இடப்படுவதற்கு முன், சிவபெருமான் தன்னை முழுமையாக பார்வதிதேவியின் கையில் கொடுத்துவிட்டார். 

இதை நினைவு கூறும் வகையில் இன்றும் திருமணங்களில் பெண்ணின் கையில் சிவனின் அம்சமாக முக்கண்ணுடைய தேங்காய் கொடுக்கப்பட்டு பார்வதியின் அம்சமாக மணப்பெண்ணை உருவக படுத்தி நெற்றியில் மணமகன் கையால் திலகம் இடப்படுகின்றது. 

ஞானத்தை புத்தி என்றும் கூறுவர். ஞானமாகிய புத்தியை சிவ பெருமானுக்கு  பார்வதிதேவி தன் மூன்றாம் கண்ணாக அன்பின் வெளிப்பாடக கொடுத்து சிவன் இயங்க பின்னால் சக்தியாக அன்னை உமையவள்  தாங்கி நிற்கின்றாள். 

ஞானாக்னி எனும் புத்தியை சிவபெருமானுக்குக் கொடுத்து அவரின் பின்னால் இருந்து புத்தியாக சக்தியாக இருந்து உலகம் இயங்க செயல்படுகின்றார் பார்வதி தேவி.

ஆலயத்தில் நுழைந்ததும் முன் தெரிவது சிவ லிங்கம் என்றாலும் பின் தெரிவது லிங்கத்தை தாங்கி நிற்கும் ஆவுடை நாயகி தானே.

சிவ பார்வதி தம்பதியினர் ஆணாய் பெண்ணாய்  இணைந்து உலகை காக்கும் நிகழ்வே பெண் புத்தி பின்புத்தி என சொல்லப்படுகின்றது.

கல்வியோ, காதலோ, குடும்பமோ எந்த விஷயத்தில் எவ்வித பிரச்சனை வந்தாலும் அதற்கு தான் எடுக்கும் முடிவு எந்த அளவு "பின்" விளைவுகளைத் தரும் என்பதை யோசித்து விட்டு அதற்கு தகுந்த முடிவை பெண் எடுப்பாள்.
பின் நடப்பதை முன் யோசித்து பெண் பக்குவத்தோடு நடப்பதால்.. 

"பெண்ணின் புத்தி எப்போதும் பின் புத்தி" தான்.. 

- சில் வண்டு

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE