பொன்னுசாமி ரோட்டுல யார் வாரதுன்னு பாத்துக்கிட்டு இருந்தார். சரியாத்தெரியல மங்கலா கலங்கலா இருந்துச்சு. கண்ணு. கண்ணுல வேற தண்ணி வழிஞ்சிச்சி. வர வர பார்வை சரியாத் தெரியிறதில்ல.
வாங்கிப்போட்ட கண்ணாடி ஒடஞ்சிபோச்சி பேத்தி தட்டிவிட்டதுல . ஒரு குருட்டு நெதானத்துல வண்டி ஓடிக்கிட்டு இருக்குது. வயசு வேற 78 ஆயிப்போச்சு. கைகாலுக்கு அடிக்கடி சொகமில்லாமப்போகுது. பெரியாஸ்பத்திரில தான் போய் பாக்கனும். டாக்டர் வயசானா அப்புடித்தான் இருக்குமுய்யான்றாரு.
இப்ப போட்டிருக்குற ஒருபக்கம் ஒடஞ்ச கண்ணாடி அஞ்சாறு வருசத்துக்கு முன்னாடி கண்சிகிச்சை கேம்ப்ன்னு அரவிந்த் ஆஸ்பத்திரில போட்டப்ப செக் பண்ணி ஆப்பரேசன் பண்ணிட்டு அவுகளே குடுத்தது
இப்ப ஒடைஞ்சி போனதுனால மாத்தனும். ராமசாமி டவுனுக்கு போனப்ப அவன்கிட்ட குடுத்து விட்டு சரிபண்ண எம்புட்டாகுமுன்னு கேட்டு வரச்சொன்னேன். 200 ரூ ஆகுமுன்னு சொன்னாகலாம்...
மயன்கிட்ட நேரம்பாத்துக்கேட்டு வாங்கனும். வீட்டுக்குள்ள கேட்டா பிரச்சனை யாயிடும். அன்னிக்கி கேட்டப்ப அவன் பொஞ்சாதி இப்ப என்ன அவசரம் பெருசுக்கு. கலெக்டர் உத்தியோகத்துக்கு கண்ணாடி இல்லாம போகமுடியாதோ ந்னு எரிச்சலோட சொன்னது மனச கொடஞ்சிருச்சி. நாப்பொழப்பு தான் பொழைக்க வேண்டியதா இருக்குது. மானத்த எல்லாம் பாத்தா போய்ச்சேரவேண்டியதுதான் அதைதொலைச்சிட்டு காதைப் பொத்திக் கிட்டு த்தான் பொழப்பு ஓடுது. மருமக பேசுற பேச்சை என் பொஞ்சாதி கேட்டா ஒரு நிமிசம் பொறுக்கமாட்டா. நல்ல வேளை மானத்தோட போய் சேந்துட்டா.
இன்னிக்கி மகன்கிட்ட கேட்டுற வேண்டியதுதான் னு தீர்மானம், பண்ணி வீட்டுக்கு வெளிய போய் நின்னுக்கிட்டாரு பொன்னுசாமி. அவன் வேலைக்கிகெளம்ப பைக்க எடுக்கும்போது புடிச்சிற வேண்டியதுதான்னு. அதுமாதிரியே நின்னுக்கிட்டு இருக்கப்ப அவன் வெளிய வந்தான் அவன் கிட்ட கண்ணாடிய காமிச்சாரு இவரு. இதமாத்தனும்.டவுனுக்குப்போய்ன்னு சொன்னாரு.
அவன் கேட்டான் எம்புட்டாகுமாம்ன்னு 200 ரூ ஆகுமாம். போக்குவரத்தோட 250 குடுப்பா ந்னு கேட்டாரு. அப்ப அவன் சொன்னான் இந்தமாசம் செலவு அதிகம். சம்பளம் வாங்கிட்டு பாக்கலாம் இப்ப என்ன அவசரம். சும்மாதான இருக்கீங்கன்னான். கண்ணு தெரியலப்பா முந்தாநாளு தடுக்கி விழுந்துட்டேன்னாரு . அதுக்கு அவன் வெளியபோகாதீங்கவீட்டுக்குள்ள இருங்கன்னு சொல்லிட்டுப்போயிட்டான்.
இப்பயெல்லாம் வெள்ளனாவே பசிக்க ஆரம்பிச்சிடுது. காலையில ஒரு டீ மருமக குடுக்குறதுக்குள்ள போதும் போதுமுன்னு ஆயிடுது. பசி வயத்த கிள்ளுது ஒரு டீய வெள்ளனாக்குடிச்சாத்தான் வெளிக்கி போகுது. பசியும் தாங்குது அப்ப விட்டா கட்டிக்கிது வயிறு வலிக்குது. அதுக்குத்தான் வெள்ளனா ஒரு டீ கடையில குடிக்கிறது ராமசாமி கடை டீ நல்லாருக்கும். இதுக்காகவே மககிட்ட காசு வாங்கி வைச்சிருந்தாரு இவரு.
ஒருவழியா மூக்கால அழுதுக்கிட்டே 250 ரூவாயக்குத்தான் மகன். அதுவும் வீட்டுக்குள்ளயே மருமக என்னமோ சொல்லிச்சு. இவரு காதுல வாங்கலை என்னத்தச் சொல்லிறப்போகுது. தண்டச்செலவு ந்னு சொன்னமாதிரிதான் கேட்டுச்சு. சொல்லிட்டுப்போகனும். காசு குடுக்குறவுக என்னத்தையாவது சொல்லத்தான் செய்வாக .....
ஒரு வழியா கண்ணாடிய எடுத்துக்கிட்டு டவுனுக்கு கெளம்பிட்டாரு. பஸ் வர லேட்டாகுமுன்னு சேர் ஆட்டோவில போயிட்டார் கூட பத்துரூவா. சமாளிக்கலாம்ன்னு .நெனச்சிக்கிட்டு கண்ணாடிகடைக்கிப்போனாரு.
அவரு கண்ணாடிகடையில இத குடுத்து ஒக்குட்டுத்தரசொன்னாரு. எம்புட்டாகுமுன்னு கேட்டாரு. அவன் சொன்னான் 250 ரூ ஆகுமுன்னு. இவரு கேட்டாரு ராமசாமி வந்து கேட்டப்ப 200 தான் அசொன்னீகளாமே. அதுக்குள்ள வெலை ஏத்திப்புட்டா எப்புடின்னு ?ன்னு கேட்டாரு இருக்குறது 230 ரூ தான்ற பதட்டத்தோட.
அப்ப அவன் சொன்னான் அது போனமாசம். இப்ப வெலை ஏறிடுச்சு.ஜி.எஸ் டி வரிவேற இருக்கு மொத்தம் 270 ஆகுமிப்பன்னான். இவரு எண்ணிப்பாத்தாரு 230 தான் இருந்துச்சி பைக்குள்ள இருக்குற ஒரு ரூ ரெண்டு ரூ எல்லாம் சேத்தாலும் 242 த்தாண்டல . பசி வேற கண்ணக்கட்டுச்சு. கடைக்காரன் கிட்ட கேட்டாரு அய்யா என்கிட்ட இம்புட்டுத்தான் இருக்கு கண்ணாடிய சரிபண்ணிக் குடுங்களேன்னாரு,. வெரசாவேணுமா பையத்தந்தா போது மான்னான். மொத காச முடிவுபண்னுங்க ந்னு கையில இருந்ததைக்குடுத்தாரு.
அவன் வாங்கி எண்ணிப்பாத்துட்டு 242 தான் இருக்கு அது இல்லாம 100 ரூ நோட்டுல எண்ணக் கரையும் லேசா கிழிஞ்சும் இருக்கு. குடுத்தா ஆரும் வாங்க மாட்டாங்க. நீங்க கண்ணாடிய குடுத்துட்டு போய்ட்டு பைய வாங்க. நாளப்பின்ன.காசக்கொண்டாங்க நான் ஒக்குட்டு வைச்சிருக்கேன்னான்.
பொன்னுச்சாமிக்கு திக்குன்னுச்சு. இந்தகாச வாங்கவே ஒருமாசமாச்சு.இன்னும் காசுகேட்டா அடிக்காம விடமாட்டான். மருமக திட்டித்துப்புடுவா. ஒருமாசமாகுமோ ரெண்டுமாசமாகுமோ.... இது இருக்குறதால ஓரளவு கண்ணு தெரியுது. இது இல்லாம நடந்தா விழுகவேணியதுதான்னு நெனச்சிக்கிட்டு கண்ணாடியயும் காசையும் குடுங்க நான் போய்ட்டு வாறேன்னு வாங்கிட்டு வெளிய வந்தார்.
உச்சி வெயிலு மண்டய பொழக்க பஸ் ஏற நடந்து வந்தாரு. கண்ணு ரொம்ப மங்கலாதெரிஞ்சது. அப்ப யாரோ எதுக்கோ தோண்டி வைச்ச பள்ளத்த சரியா மூடலபோல தடுமாறி விழுந்தார். கால் முட்டில சரியான அடி உசுறுபோறமாதிரி வலிச்சது. கைலதடவிப்பாத்தாரு பிசுபிசுன்னு ஒட்டுச்சு. ரத்தம் போல அதோட எந்திரிச்சி நொண்டி நொண்டி நடந்தாரு. கொஞ்சதூரம்போயி பஸ் ஏறிட்டு டிக்கெட் எடுக்கையில பையத்தொட்டுப்பாத்தாரு பையில இருந்து காசு கொஞ்சம் விழுந்த எடத்துல விழுந்துருச்சு போல. காசு கொறஞ்சது....
இப்ப த்திரும்பப்போய் மகன்கிட்ட காசுகேட்டா
மயன் வையுவான் மருமக கொன்னேபுடுவா
அழுகையாவருது.........
என்னவெக்கங்கெட்ட பொழப்பு இது
இன்னேரம் அவ இருந்திருந்தா
காதுல கழுத்துல கிடக்குறத
அடகுவைச்சாவது வாங்கிப்போடுய்யான்னு
குடுத்துருப்பா..அவபோனதுக்கப்புறம்
என் பாடு நாய்பொழப்பாப்போச்சு....
இந்த வெக்கங்கெட்டபொழப்ப நெனச்சா செத்துறலாம்போல இருந்தது அப்ப பொஞ்சாதிய நெனச்சாரு . மகராசி போய் சேந்துட்டா நிம்மதியா எனக்கு வேலை வரலயேன்னு தேம்பி மனசுக்குள்ள அழுக ஆரம்பிச்சிட்டாரு........ ஆனா கண்ணுல ஒரு சொட்டு தண்ணி வரல .....அதுவும் வத்திப்போச்சு அழுது அழுது.....
அ.முத்துவிஜயன்