காலையில ரொம்பநேரமெல்லாம் அடுப்படில நிக்க முடியாது நாடகம் நேத்து பாக்காதது இன்னிக்கிக்காலையில போடுவானுக பாக்கனும் இட்லி நா தாறேன், இல்ல பொங்கல் போட்டு சாம்பார் வைச்சிற்றேன். நின்னு தோசை யெல்லாம் சுடமுடியாது ஒங்களுக்கு பழைய சோறு தொண்டக்குழிக்குள்ள எறங்காது அம்புட்டுதேன் அம்மலால முடியும், உங்களுக்கு வடிச்சிப்போட்டே வயசாயிப்போச்சு முடியலடா சாமின்னு அலுத்துக்கிட்டா ராசம்மா
வாசல்ல ஒக்காந்திருந்த பேச்சிகெழவி அம்புட்டும் மேலு களவாணிப்பக்கிக புருசனுக்கும் புள்ளைகளுக்கும் ஆக்கிப்போடுறத விட வேற என்ன சோலி நாடகம் பாக்குறாகலாம் நாடகம், அந்தக்காலத்துல இன்னேரம் எல்லாரும் வயக்காட்டில நிப்போம். இந்த இட்லி தோசையெல்லாம் கெடையாது ஏன் நெல்லுச்சொறு கூட கெடையாது கம்பு இல்ல சோளம் வேகவைச்சி உருண்டயா உருட்டி அத மோரில இல்லபுளிச்ச தண்ணில போட்டு வைச்சிருப்பாக.
களை எல்லாம் குறுக்கொடிய எடுத்து முடிச்சிப்புட்டு ஆளுக்கொரு உருண்ட சோளமோ கம்போ கடிச்சிக்க அங்கயே வரப்புல கெடக்குற பச்சமொளகா இல்ல சுட்ட மொளகா வத்தல் கத்திரி வத்தல் மிதுக்க வத்தல் அம்புட்டுத்தேன் வயிறு கும்முன்னு ஆயிடும். ஒடம்பு இரும்பாட்டம் இருக்கும்
இப்ப என்னடான்னா 40 - 45 ல நெஞ்சப்புடிச்சிக் கிட்டு போய் சேந்துருதுக. எல்லாம் கலிகாலம் நு அலுத்துக்கிச்சு.
வாசல்ல இருக்குற லவ் பேர்டுக்கு பேரன் கணேஸ் தினைஅரிசி வாங்கிட்டு வந்துருந்தான் . அது என்னாடா கணேசுன்னு கேட்டுச்சு பேச்சிக் கெழவி
அதுக்கு அவன் சொன்னான் இது செரல்ஸ் பாட்டி இது குருவிகளுக்கு போடுறஃபீட்ஸ். நாமெல்லாம் சாப்புடக்கூடாது நாம சாப்புடுற இட்லி தோசையெல்லாம் அது சாப்புடாது அதுக்கு தனி ஃபுட்ஸ். பாக்குறீங்களான்னு கேட்டுக் கையில கொஞ்சம் குடுத்தான்
அதைப்பாத்துட்டு பேச்சிக்கெழவி சொல்லிச்சி அட கிறுக்குப்பயலே இது தினைடா. முருகனுக்கு புடிச்சதுடா தேனும் தினைமாவும் குடுத்துத்தாண்டா முருகனை மயக்குனா அந்த வள்ளி. நாம கூட தினையரிசில சோறாக்கி கொழிக்கொழம்பு வைச்சி சாப்புட்டா அப்புடி இருக்கும். அது நாம சாப்புடுறதுதாண்டானு சொல்லிச்சி
அவன் ரியலி பாட்டி. இதெல்லாம் எங்க அம்மா எனக்குக்குடுத்ததே இல்ல. எப்ப பாத்தாலும் இட்லி தோசை எப்பவாவுது இடியாப்பம் புட்டு அவசரத்துக்கு நூடுல்ஸ் இதுதான் குடுக்குது பாட்டி. நீங்க வேற என்ன எல்லாம் சாப்புட்டு இருக்கீங்க சொல்லுங்கன்னான்
அதுக்குப் பாட்டி சொல்லிச்சி, அந்தக்காலத்துல இப்ப சிறுதானியம்னு சொல்லுற கம்பு கேப்ப சோளம் தினை வரகு எல்லாம் சமைச்சி சாப்புட்டு இருக்கோம்.
கேப்பபுட்டு கேப்ப ரொட்டி கம்மங்கூழ், கேப்ப களி , கேப்ப இடியாப்பம் , சோளசோறு, சோள க்கூழ், தினை உருண்டை வரகு கஞ்சி எல்லாம் சாப்புட்டு இருக்குறோம் இப்ப என்னடான்னா சக்கரை வியாதி வந்தவுகளை அதை மருந்து மாதிரி சாப்புடச்சொல்றாக. அப்ப சாப்பாடா சாப்புட்டதை இப்ப மருந்தா சாப்புடுறாக
அது மட்டுமில்லப்பூ, தேங்காத்தொவையல் எள்ளுத்தொவையல் ., வேர்க்கடலைத் தொவையல் உப்பு புளிமொளகா, கொள்ளுத் தொவையல், பருப்பு தொவையல் , பிரண்டைத்தொவையல்னு வேப்பம்பூ ரசம், முள்ளுமுருங்க அடை., உளுந்தங்களி, வெந்தயக்களி, பார்லி கஞ்சி பலவகை இருக்குனு நீட்டி மொளக்குச்சு
பாட்டி இதெல்லாம் நான் கேள்விப்பட்டதே இல்லயே எங்கபோச்சு இதெல்லாம்னு கவலையா கேட்டான் பேரன் கணேசு
எல்லாத்தையும் நாம மறந்தாச்சு, நெல்லுச்சோறு திண்ணுறவந்தான் ஒசந்தவன் கேப்ப கம்பு சோளம் திங்குறவன் தாழ்ந்தவன்னு ஒரு நெனப்ப உருவாக்கிப் புட்டானுக நாட்டுல. கேப்ப கம்பு சோளம் எல்லாம் சாப்புட்டுப்புட்டு தெம்பா 102 வயசுலயும் நான் இருக்குறேன்
நெல்லுச்சோத்த மருந்தசிச்சி சத்தில்லாமத் திண்ணுபுட்டு பிரசரு சுகரு மூட்டுவலி நெஞ்சு வலின்னு காச ஆசுப்ப்த்திரில கொண்டுபோய் கொட்டுதுக சனக்காடு. என்னத்தச்சொல்லனு கவலைப்பட்டுச்சு பேச்சியம்மா
அதுசரி பாட்டி தாத்தாவும் இதெல்லாம் சாப்புட்டவர்தான அவர் ஏன் இப்ப இல்ல எப்ப செத்துப்போனாரு ஏன் செத்துப்போனாரு எனக்கு நெனவுதெரியாமலே சொல்லு பாட்டினு கேட்டான் பேரன்
பாட்டி மொகம் சூம்பிப்போச்சு. ஒரு பெருமூச்சை இழுத்து விட்டு ஆரம்பிச்சிச்சி.ராசா வாட்டம் ஆறடி ஒசரத்துக்கு வானத்துக்கும் பூமிக்குமா வளந்து கெடந்தாரு ஒங்க தாத்தா அய்யாச்சாமி. ரெண்டு பேரு சேந்து கட்டிப்புடிச்சாத்தேன் முழுசுமா அணைக்க முடியும். முருக்கு மீசை கருப்பு சாமி மாதிரி களை, ராசாவாட்டம் இருப்பாரு மருத தேராட்டம் வீதியில வந்தவரு மலைபோல சாஞ்சிட்டாராய்யா நு வயலுலன்னு சொல்லும் போது பாட்டி கண்ணு கலங்கிடுச்சு.
பேரனுக்கும் ஒரு மாதிரி ஆயிப்போச்சு. ஏன் பாட்டி என்னாச்சுஅவருக்குன்னு கேட்டான்
அதுக்கு பாட்டி சொல்லிச்சி அதை எப்புடிச்சொல்வேன் என் வாயால. வயலுக்கு மருந்தடிக்க போனவரு வயலிலயே கெடந்தாரு நொறைதள்ளி. என்னாச்சுன்னு தெரியல ஏதாச்சுன்னு தெரியல கொஞ்சப்பேரு என்னமோ கடிச்சிடுச்சுன்னு சொன்னாக கொஞ்சப்பெர் அந்த மருந்தை குடிச்சிப்புட்டாருன்னு சொன்னாக இன்னும் கொஞ்சப்பேரு அடிச்சி கொன்னு வாயில வெசத்தை ஊத்திப்புட்டாகன்னு சொன்னாக மொத்தத்துல போயிட்டாரு எஞ்சாமினு கண்ணீர் வழிய சொல்லிச்சி
ஏன் அவரை அதுமாதிரி செய்யனும். என்ன காரணம் யாருக்கு அவர்மேல கோவம் கொஞ்சம் விளக்கமா சொல்லுபாட்டின்னு கேட்டான்
திரும்ப ஒரு பெருமூச்சு விட்டுட்டு பாட்டி சொல்லிச்சி. அவர் செத்ததுக்கு ஆறுமாசம் முன்புதான் ஒரு சம்பவம் நடந்துச்சு. இவரு காவக்காரரு. ஆளு மாத்தி ஆளு வயக்காட்டுக்குக் காவலுக்குப்போவாக. ஊரு பூராம் நெல்லு வெளைஞ்சி கெடந்துச்சு. எல்லாம் நெறைபாக்கியமா சரிஞ்சி கெடந்துச்சு.
இப்பத்தான் களவாணிக ஆட்டம் அதிகமா இருக்கும். அதுனால காவலும் பலமா இருக்கும் . தாத்தாவோட காவல்னா களவாணிக கண்ணுல ரத்தம் வரும். அவர் கையில சிக்குனா அடிக்கிற அடில ஆறுமாசம் நடக்கமுடியாது. ஓட்டத்துல அவர மிஞ்ச ஆளிந்த ஜில்லாவில கெடையாது வேட்டை நாயவிட வேகமா ஓடுவாரு கூடயே அவர் வளக்குற ராசபாளையம் கோம்பை வேட்ட நாயும் போகும். அது ஆடுசதையில கவ்வுனா அரக்கிலோ தேறும்.
அதுனால களவாணிகளுக்குச் சிம்ம சொப்பனம் அவரு. அன்னிக்கிப்பாத்து ராக்காவலுக்கு போற வீரய்யா ஒடம்பு சரியில்ல. அதுனால அவர் இவரைப் பாத்துக்க சொன்னாரு. ஆனா ஊருக்குதெரிஞ்சா பிரச்சனையாயிரும்ன்றதால ஊர் எல்லை வர அவர்போய்ட்டு திரும்பிற மாதிரியும் காவலை இவரு பாக்குறமாதிரியும் பேசி வைச்சிக்கிட்டாக.
களவாணிக எப்பையும் துப்புப்பாத்துத்தான் தொழிலுக்குப்போவானுக. கருதக் கசக்கி சாக்குல போடுறதுதான்னாலும் அன்னிக்கி காவல் வேல யாரோடதுன்னு விசாரிச் சிட்டுத்தான் போவானுக, அன்னிக்கிங்க ஆளு மாறுனது அவனுகளுக்குத் தெரியல அவனுக கணக்குப்படி வீரய்யாதான் போகனும் அவருக்கு ஒரு காலு சரியா வராது இழுத்து இழுத்து நடப்பாரு வேகமா ஓடமுடியாதுஅதைக் கணக்குப்பண்ணி அன்னிக்கி கருது கசக்கப் போனானுக.
ஆனா அன்னிக்கி அவனுகளுக்கு நேரம் சரியில்ல. காவலுக்கு இருந்தது அய்யாச்சாமி வயக்காட்டுக்குள்ள கருது கசக்குற சத்தம் அசங்க மசங்கலா கேட்டதும் அவர் தன்னோட நாய ஏவிவிட்டாரு வயலுக்குள்ள. கோம்ப நாய் மூச்சு விட்டு ஓடியார சத்தம் கேட்டதுமே வந்தவனுகளுக்குப் புரிஞ்சி போச்சி அய்யாச்சாமிதான் இருக்காருன்னு போன நாய் வசம்மா ஒருத்தன கால்ல கவ்விடுச்சு அவன் அத்தன வலியிலயும் சத்தம் வெளிய வராமா நாய் கூட போராடுரான் கையில இருந்த சூரிக்கத்தியால நாய குத்து குத்துன்னு குத்தி சாச்சுப்புட்டான்.
வந்தவனுக எத்தன பேருன்னு தெரியல ஆனா மத்தவனுக எல்லாம் ஓடிப்போக கடிவாங்குனவன் மாத்திரம் வெளிய போகாம வயல்லயே பதுங்கிட்டான். குத்து வாங்குன நாயி ஈனமா சத்தம்போட்டுச்சு. அந்த எடத்தத் தேடி ஓடுனாரு அய்யாச்சாமி.
அங்க கருமுண்டமாட்டம் கையில சூரிக்கத்தியோட அவன் நிக்கிறான். கால்ல ரத்தம் ஒழுகுது. பக்கத்துல நாய் கெடக்குது
அவன அப்புடியே ஒரே அமுக்கா அமுக்கி பொறங்கையக்கட்டி கொண்டாந்துட்டாரு அய்யாச்சாமி. அன்னிக்கிக்காலையில வரைக்கும் அவனக்கட்டி வைச்சிருந்தாக ஆனா அவன் காலையில பொணமாயிட்டான். ராத்திரியே அவன் எதையோ குடிச்சி இல்ல குடிக்கவைச்சி அவனோட ஆளுக கொண்டு புட்டாங்க. சிக்குனா எல்லாரும் புடி படுவோம்னு அவனைக் காவு குடுத்துட்டாங்க.
இது நடந்தவன்ன ஊருக்குள்ள ஒரே பேச்சு அய்யாச்சாமி சாக்குறதையா இருக்குனும் ஏன்னா எப்புடியும் இதுக்கு பழி வாங்குவானுக களவானிகன்னு. ஆனா அய்யாச்சாமி அது பத்திக்கொஞ்சமும் கவலைப்படல. கையில கெடைக்கட்டும் அவனுக. சிக்குனானுக செத்தானுகன்னு சொல்லிட்டு அவர் பாட்டுக்கு திரிஞ்சாரு
பொதுவா சம்பவம் எதுவும் ஒடனே நடக்காது கொஞ்சம் ஆரப்போட்டுத்தான் செய்வானுக. ஆறுமாசம் ஆச்சு அது நடந்து. அடுத்து ஒழவு வேலைக நடக்க ஆரம்பிச்சது. இப்ப காவலுக்கு வேலையில்ல ஏன்னா கருதுமில்ல. எல்லாம் நாத்துதான். அப்ப அய்யாச்சாமி ஒரப்பொடி போடுறது மருந்தடிக்கிறது வரப்பு வெட்டுறது மாதிரி வேலைக்கிப்போறது வழக்கம்
அன்னிக்கும் அப்புடித்தான் வீட்டுல என்கிட்ட கம்மங்கூழக் கிண்டி கருவாட்டுகொழம்பு வைக்கச்சொல்லிட்டு வயலுக்கு மருந்தடிக்கிற மிசினோட போனாரு.
எப்பையும் காலையில ஆறுமணிக்குபோனா 10 மணிக்கு வந்துருவாரு. அன்னிக்கி 10 ஆச்சு 11 ஆச்சு வரல.
அதுக்குள்ள தன்னோட வயலுக்கு தண்ணி பாச்சப்போன தங்கச்சாமி வயல்ல அய்யாச்சாமி விழுந்துகெடந்ததைப் பாத்திருக்காரு. ஒடனே பக்கத்துல போய் பாத்தா அவர் வாயில நொறை தள்ளிருந்துருக்கு. ஆளுகளைக் கூப்புட்டு போய் தூக்குனா தூக்க முடியல ஆறேழு பேர் போய் தூக்கியாந்து என்ன என்னத்தையோ கறைச்சி வாயில ஊத்துனாக.
ஆனா வைத்தியர் பாத்துட்டு சோலி முடிஞ்சி ருச்சுன்னு சொல்லிட்டாரு.நானும் அலறி அடிச்சிப்போய் பாக்குறேன் என் ராசா சாஞ்சி கெடக்காருய்யா ஆலமரம் மாதிரி. அந்த ஆலமரத்தை சாய்ச்சு புட்டானுகளே சொன்னமாதிரி, என் ராசாவபாக்கமுடியலய்யா இருந்த கோலம் அப்புடி நெனப்பில்லாம இருந்து நான் பாத்ததே இல்லய்யா.... எஞ்சாமி போயிட்டாருய்யா... ஊருக்குக்காவல் காத்த எல்லைச்சாமிய்யா என் ராசா. ஊரு காக்காம விட்டுருச்சே....
அவர நேர சண்டபோட்டு ஒன்னும் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சிக்கிட்டு சதிபண்ணி சாய்ச்சுபுட்டானுகளேன்னு சொல்லும் போது பாட்டி அடக்கமாட்டாம கண்ணீர் சிந்துச்சு. அப்ப சொல்லிச்சி பேராண்டி அவரச்சாச்ச மாதிரிதான் அம்ம எல்லாரையும் சாச்சிப்புட்டானுகய்யா கண்டதை திங்கச்சொல்லின்னு இனிமே போனது வராதய்யா. இருக்குறதயாவது பாப்போம் முழிச்சின்னு சொல்லிச்சி.
அதுக்கு நான் என்ன செய்யனும்னு கேட்டான் பேரன் கணேஸ். சாப்பாட்டுல கவனம் வை ராசா. நு சொல்லிட்டு கீழ நிக்கிற கோழிகளுக்கு கம்பும் கேப்பையும் போட்டுட்டு அதுக கொத்திதிங்கிறத பாத்துக்கிட்டு இருந்துச்சு கண்ணுல நீர் வழிய
அ.முத்துவிஜயன்