கட்டளை - சிறுகதை

By செய்திப்பிரிவு

ரொம்பநாளைக்கி அப்புறம் அவன் அந்த ஊருக்குப்போனான்இப்ப இருக்குறது தஞ்சாவூர்னாலும் திருப்பத்தூர் பக்கம் தான் அவன் பொறந்து வளந்த ஊரு. புதுக்கோட்டைக்கி வந்தவன்ன மனசு பரபரத்துச்சு அடுத்து திருமயம் தாண்டி சொந்த ஊருக்குள்ள நொழையும் போது அந்தக்கட்டடம் பாத்தவன்ன நெஞ்சு ஒறைஞ்சு போச்சு.

எப்பேர்பட்ட எடம் அது. எத்தனைநாள் காத்துக்கெடந்திருக்கோம். எத்தனநாள் பசியாறி நெகிழ்ந்திருக்கோம்னு நெனச்சப்ப மனசு பாரமாயிடுச்சு. அது 60-65 வருசத்துக்கு முன்னாடி மனசு போயிடுச்சு

அவனோட அப்பா ஒரு தொடக்கப்பள்ளி வாத்தியார். அம்மா வீடுகள்ல வேலை செஞ்சி கொண்டாருற காசு அப்பாவோட அப்போதய சொற்ப சம்பளம் எல்லாம் சேத்தாலும் அவனுக்கும் அவனோட அக்காவுக்கும் தங்கச்சி தம்பிக்கும் ஒருவேளை சாப்பாடே கேள்விக்குறிதான்

அவனோட அம்மா நகரத்தார் வீடுகள்ல வீட்டு வேலைக்கிப்போவாங்க. கொஞ்சம் கைவைத்தியமும் தெரியும். அப்பையெல்லாம் புள்ளை பெத்துக்க பெருசா ஆஸ்பத்திரிக கெடையாது எதுன்னாலும் மதுரைக்கித்தான் போகனும் அங்க இருந்து 60-65 கி.மீ தூரம் .அதுனால பிள்ளை பெக்குறது எல்லாம் வீடுகள்லதான். அந்தப்பிரசவம் பாக்குறதுல இவனோட அம்மா பேரு வாங்குனவங்க.
அந்த ஊரில யார்வீட்டுல பிள்ளை பெத்தாலும் இவங்கதான் போயாகனும். அதுகூட மத்த நாளுகள்ல வீட்டு வேலைகள் செய்வாங்க. அங்க அவுக வீடுகள்ல கைசுத்தம் நாக்குசுத்தம்தான் மெயின். அது கொஞ்சம் பிசகினாலும் அம்புட்டுத்தேன் கைல காசக்குடுத்து அத்தோட போய்ட்டு வான்னு சொல்லிருவாக.

ஆனா வீட்டுல ஒரு உறுப்பினரா வைச்சிப் பாப்பாக. வீட்டுல பலகாரம் நல்லதுபொல்லது எது செஞ்சாலும் மொதல்ல வீட்டுல வேலை செய்யிறவுகளுக்குக் குடுத்துட்டுத்தான் அவுகளே சாப்புடுவாக. அதே மாதிரி நல்ல நாள் பெரிய நாளுக்கெல்லாம் நல்லா பிள்ளைகளுக்கும் துணிமணி எடுத்து பலகாரம் கொடுத்து காசும் குடுத்து அனுப்புவாங்க. எல்லாத்துக்கும் கணக்கு பாப்பாங்க. ஆனா தான தருமத்துக்கு கணக்குப்பாக்குறதில்ல. பல கோயில்களுக்கு நன்கொடை அள்ளிக்குடுக்குறதுல அவங்கள மிஞ்ச முடியாது.

அப்படித்தான் ஒரு நா இவனோட அம்மா அவங்ககிட்ட வீட்டு நெலமையச்சொல்ல அவங்க குடுத்த யோசனைதான் கட்டளை. அந்த ஊருல ஒரு சத்திரம் இருந்துச்சு. அங்க தான தருமங்கள் செய்யிறது வழக்கம். எப்பையும் பானக்கரம் , நீர் மோர் தானம் அங்க நடக்கும் அதோட சேத்து கட்டளை அன்னதானமும் உண்டு.

அந்த அன்னதானத்துக்குன்னு சில விதிகள் இருந்துச்சு. அது என்னன்னா 1) தினம் 20 பேருக்குத்தான் வழங்கப்படும்2) மொதநாளே அங்க இருக்குற லெட்ஜர்ல பேர் எழுதி வைச்சிறனும் 3) ஒரே நபர் தொடர்ந்து சாப்பிட முடியாது ஒரு நாள் விட்டு ஒரு நாள்தான் வரவேண்டும்4) வயசு ஆண் பெண் ஜாதி மத வித்தியாசம் கெடையாது.

கட்டளைன்னா நீங்க படம் பாத்திருப்பீங்களே அரசகட்டளைனு அது மாதிரி ஒரு ஆணை. அத யாரு எதுக்கு எப்பப்போட்டாகன்னு தெரியாது ஆனா எது எக்கேடு கெட்டாலும் அது கறாராக கடைப்பிடிக்கப்படும் , பெருசா அதுல மாத்தம் இருக்காது. சாப்பாடு சோறு சாம்பார் ஒரு கூட்டு ஒரு பொறியல்னு அருமையா இருக்கும்

இவனோட வீட்டுல இவனும் ரெண்டு பொண்ணுகளும் ஒரு தம்பியும் அவங்களுக் குள்ளயே பிரிச்சிக்கிட்டாங்க. மொதநாள் இவனும் தங்கச்சியும்னா மறுநா தம்பியும் அக்காவும். இதைப்பிளான் பண்ணி இவன் சாப்பிடப்போகையில அக்கா தம்பி பேரை மறுநாள் சாப்பிட எழுதி வைச்சிட்டு வந்து ருவான். தம்பி சாப்புடப்போகையில இவன் பேரையும் தங்கச்சி பேரையும் எழுதி வைசிட்டு வந்துருவான் இது ஒழுங்காப் போய்கிட்டு இருந்துச்சு

இதுக்குப் பிளாண் பண்ணி தினம் ரெண்டு பேருக்குத்தான் சாப்பாடு ரெடியாகும் அம்மா அப்பாவோட. இதுல பலநாள் அம்மா சாப்பிடாது ஏதவது விரதம் இன்னிக்கி சாப்புடமாட்டேன்னு சொல்லிரும் அன்னிக்கி எல்லாம் வேல பாக்குற வீடுகள்ல குடிக்கிற காப்பி செலநேரம் பலகாரம்தான் ஆகாரம். இது இப்படிப்பொய்கிட்டுஇருந்தப்ப அவனுக்கு அவனோட நண்பர்கள் ஆரோக்கியசாமி ஜலாலுதின் இன்னும் கருப்பையா மாதிரி நண்பர்கள் எல்லாம் இருந்தாங்க. அவனுகளும் இப்புடித்தான் மாத்தி மாத்தி வந்து சாப்புடுவானுக

ஒரு நாள் இவனுக்கும் இவனோட அக்காவுக்கும் சண்டை வீட்டுல அம்மாவும் இல்ல அப்பாவும் இல்ல. சணடைன்னா அப்புடி ஒரு சண்ட. அக்கா நல்ல பலசாலி இவன போட்டு சாத்திப்புட்டா. இவனால ஒன்னும் செய்ய முடியல. ரொம்பக்கோவமாயிட்டு
அக்காவ எப்புடியாவது பழிவாங்கனும்னு கோவம் வந்துருச்சு ஒரு வெறின்னே சொல்லலாம். ஏன்னா இத அம்மா அப்பாகிட்ட சொன்னா ஒன்னும் நடக்கப்போறதில்ல. அக்கா அப்புடியே பிளேட்ட மாத்திரும். அதுக்குத் திட்டம் போட்டு ஒரு வேலை செஞ்சிட்டான்.

அதுக்கு மறுநாள் அக்காவும் தம்பியும் கட்டளைக்கு சாப்புடப்போனாங்க. அங்க லெட்ஜர்ல அக்கா பேர் இல்ல. வழக்கப்படி இவன் மொதநாள் பேர் எழுதியிருக்கனும். ஆனா இவன் வேணுமின்னு எழுதல அக்காவப் பழிவாங்க. அதுனால அக்காவ கட்டளைல உள்ள விடல ஒன் பேர் இல்ல நாளைக்கி வாம்மான்னு சொல்லிட்டு தம்பிய உள்ளாற விட்டுட்டாங்க.

இவன் அந்த வேடிக்கையப்பாக்க போய் மறைவில நின்னுக்கிட்டு இருந்தான். அக்கா பசி பொறுக்காம மயங்கிக்கிட்டு இருந்துச்சு. கொஞ்சநேரத்துல பக்கத்துல இருந்த வேப்பமர நெழல்ல போய் நின்னு அழுக ஆரம்பிச்சிடுச்சு. அவமானம் பசி ரெண்டும் சேந்து அக்காவ ஒரு வழி பண்ணிடுச்சு. கிட்டத்தட்ட மயங்கி கீழஒக்காந்துருச்சு. அப்ப இவனுக்கே பாவமாயிடுச்சு. ஆனா என்ன பண்ண வீடுலயும் எதுவும் இருக்காது. ஏன்னா வீட்டுல இன்னிக்கி அவனுக்கும் தங்கச்சிக்கும் தான் சமைச்சி சாப்பிட்டாச்சு. அதுவே போதல

இப்ப இவனாலயும் ஒன்னும் செய்யமுடியாது. அப்பத்தான் அவன் வந்தான். ஜலாலுதின் இவனோட பிரண்டு வந்து பாத்துட்டு என்னாச்சுன்னு கேட்டான். பிரண்டாச்சே மறைக்க முடியுமா. வெவரத்தைச் சொன்னான் அதுக்கு அவன் . கொஞ்சம் இருனு சொல்லிட்டு சத்திரத்துக்குள்ள போய் பேசிட்டு வந்து சொன்னான் அக்காவ அனுப்புடா எல்லாம் நான் சொல்லிட்டேன்னான். அவனே அக்காவக் கூப்புட்டுபோய் உள்ளாற சொல்லி சாப்புட வைச்சான்.

அப்ப இவன் கேட்டான் எப்புடிட விட்டாங்க விடுறது கஸ்டமாச்சேனு கேட்டான்.அதுக்கு அதவிடுடா வாடா செ.ரா. தோப்புக்குப் போய்ட்டு வருவோம்னு கூப்புட்டுப்போய் அங்க மாங்கா அடிச்சி சாப்புட்டுட்டு திரும்பி வரவும் அக்கா சாப்புட்டு வரவும் சரியா இருந்துச்சு. அப்ப எம்புட்டு கேட்டும் வெவரம் சொல்லல அவன்

மறுநாள்தான் இவன் தெரிஞ்சிகிட்டான் அவன் பெயரை அவன் மொதால் எழுதி வைச்சி ருந்ததும் அக்காவோட நெலமையப்பாத்து அவனுக்குப்பதிலா அக்காவ பேசி சாப்புட வைச்சதும். இப்ப ஜலாலுதின நெனச்சிப் பாத்தான். என்ன மனுசன் அவன் அவங்க வீட்டுலயும் இதை விட நெலம மோசம் மொதநாளே சாப்புட்டு இருக்கமாட்டான். பசி வந்தா பத்தும் பறந்துபோகும்னு சொல்வங்க ஆனா ஜலாலுதின் பசியே பசியப்பாத்து பறந்து போனது அன்னிக்கித்தான்

அந்த நெனப்பு வர கண்ணு கலங்கிடுச்சு. ஏன்னா அந்த அக்காவும் இப்ப இல்ல. சாப்புடுற வயசில சாப்பாடு இல்ல. சாப்பாடு இருக்குறப்ப சாப்பிட ஆள் இல்ல. அதை நெனச்சதும் இன்னும் கண்ணீர் ஊத்த ஆரம்பிச்சிடுச்சு.

இந்த ஒலகத்துல பசிக்கும் போது சோறு இல்லாம வயிறு கெட்டுப்பொய் எல்லா வசதியும் வந்தவன்ன சாப்புட முடியல நோய்கள்னால... எல்லாம் உன் திருவிளையாடல் ஆண்டவான்னு சொல்லிக் கண்ணத்துல போட்டுக்கிட்டப்ப பிள்ளையார் பட்டி கோயில் வந்துருச்சு.....

அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE