பொஸ்போனத்தம்மா - சிறுகதை

By செய்திப்பிரிவு

பொஸ்போனம் பாட்டிக்கு அவுக வீட்டுல வைச்ச பேரு புஸ்பவனம் தமிழ்ல பூக்காடு. ஆனா எந்த நேரத்துல அப்படி அவளுக்குப்பெயர் வைச்சாங்களோ அவ தலையில கல்யாணம் பண்ணி ஒருவருசத்துல தலையில பூவே வைக்க முடியாமப்போச்சு. 

ஏன்னா அவளைக் கட்டிக்கொடுத்ததே ரெண்டாந்தாரமாத்தான். அதுக்கே அவங்க வீட்டுல ஒன்னுமில்ல. தன்னோட மொதல் சம்சாரம் ரெண்டு பிள்ளைகளை விட்டுட்டு 45 வயசுல செத்துப்போனதால பிள்ளைகளை கவனிக்கவும் அவரது தேவைகளுக்கு மாத்தான் இவளோட புருசன் இவளை இரு செலவும் போட்டு சீர்செனத்தி ஒன்னும் வேணாமுன்னு சொல்லி கலியாணம் பண்ணுனான்.

அதுலயும் கண்டிசன் வேற பிள்ளை கிள்ள பெறக்கூடாது பெத்தா சொத்துப்பிரச்சனை வந்துரும்னு சொல்லி கல்யாணம் பண்ணவன்ன கூட்டிட்டுப்போய் குடும்பக்கட்டுப்பாடு ஆப்பரேசன் இவளுக்கு பண்ணிவிட்டான் புருசன். அதுலயும் அவன் உசாரா தனக்குப் பண்ணிக்கல ஏன்னா சுயநலம். சொத்துக்கள் எல்லாம் அவன் எழுதிவைச்சபடி அவனோட பிள்ளைகளுக்குப் போய்ச்சேர இவளுக்கு ஒரு ஓட்டுவீடு மாத்திரம் கொடுத்தாங்க. அதுவும் உசிறு இருக்குறவரைக்கும் அனுபவச்சிக்கிலாம் விக்கவோ கொள்ளவோ அனுமதியில்ல. 

இவளுக்கு அப்புறம் அது அவரோட பிள்ளைகளுக்கே போய்சேந்துரும்.

இப்ப முட்டுச்சந்தில நிக்கிற நெலமைக்கு  பொஸ்போனம் வந்துட்டா. தனி ஆளு வருமானமில்ல. தனக்குத்தானே எல்லாம் செஞ்சிக்கனும். என்ன பண்ணுறதுன்னு தெரியல கண்ணக்கட்டிக் காத்துல விட்டமாதிரி ஆயிருச்சு அவளுக்கு. அப்ப அவளுக்குள்ள ஒரு வெறி வாழந்துகாட்டனும் நாம்ன்னு வந்துச்சு ஏன்னா எல்லாரும் கைவிட்ட நிலை பெத்தவனும் சரியில்ல. வாக்கப்பட்டு வந்த எடமும் சரியில்ல. யாரும் தொணைக்கில்ல என்ன பண்ணலாம்னு யோசனை பண்ணுனா.
அப்ப அந்த ஊரில எல்லா ஊரையும் போலவே கங்காணி கொத்துக்கூலிக்கு ஆள் கூப்புட்டு இருந்தாக. 

களை எடுக்க கருதருக்க நடவு நடன்னு கூப்புட்டுப்போவாக. அவங்க குடுக்குற கூலில கமிசன் கொத்துக்குக் குடுக்கனும். சின்ன வயசுல பாத்த வேலைதான் அதுனால தைரியமாப் போனா. அவங்களும் கூப்புட்டுப் போனாக. காலைல ஏழுமணிக்கி எந்திரிச்சிப் போகனும்  வேலையப்பொறுத்துத் தான் கூலி. 

செல எடங்கள்ல சாப்பாடும் கெடைக்கும். மொதல்ல கொஞ்சம் கஸ்டமா இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமா வேலை பழகிப்போச்சு. அது அவளோட வாழ்க்கைய ஓட்ட போதுமானதா இருந்துச்சு.

அதுனால களையெடுக்க கதிரருக்க தினக்கூலியாப் போய்ட்டு இருந்தா.ஆனா இதப்பாத்துட்டு அவளோட புருசன் பிள்ளைக கடுப்பாயிட்டாங்க.  அதுக்கும் வைச்சாங்க ஆப்பு. அவரோட பொஞ்சாதி கூலிவேலைக்கிப்போனா அவருக்குள்ள அவமானம் அதுனால அவளை ஆரும் அந்த வேலைகளுக்குக் கூப்புடக் கூடாதுன்னு மெரட்டி வைச்சிருந்தாங்க அந்தப் பொழப்பும் போச்சு.
ஊர்பெரிய மனுசங்க அதிகாரம் படைச்சவங்க சொன்னா அத மீறி எதுவும் செய்ய முடியாது. அவள யாரும் கொத்துக்கூலிக்குக் கூப்புடல. பரமபதம் விளையாட்டுல பாம்பு கடிச்சமாதிரி வாழ்க்கை வந்து திரும்ப பொறப்பட்ட எடத்துல நின்னுச்சு. என்னா பண்ணுறதுன்னு தெரியல. செத்துப்போயிடலாம்னு தோணிச்சி.  

கெணத்துல குதிச்சி சாகமுடியாது ரெண்டு காரணம் ஒன்னு நீச்சல் நல்லாத்தெரியும். ரெண்டு கெணறு பலருக்குப் பயன் படுறது  அது வீணாப்போகும். அதுனால வேற வழி யோசிச்சா

அவங்க கொடுத்தவீட்டுல நாண்டுக்கிட்டுச் சாவலாம்னு யோசனை பண்ணி உத்தரத்துல சேலைய தொங்கப்போட்டு கழுத்துலசுருக்கு மாட்டிக் கிட்டு  சாமிகிட்ட வேண்டினா. 

என்னய நல்ல படியாக் கொண்டுபோய் சேத்துரு என்னால முடியல நிம்மதியா வாழ விடமாட்டீன்
றானுக சாகவாவது அனூகூலம் செய் சாமின்னு வேண்டிக்கிட்டு தொங்குனா. ஆனா இவளோட நேரம் இத்துப்போன உத்திரக்கட்டை இவளோட பாரம் தாங்காம முறிஞ்சி விழுந்தது

அப்ப ஒக்காந்து யோசனை பண்ணுனா. இம்புட்டு முயற்ச்சி பண்ணியும் சாமி நம்மளச் சாகவிடலயே. அதுக்கு ஏதாவது காரணம் இருக்கும். என்னமாவது செஞ்சி நம்மள வாழவிடாமப் பண்ணுனவங்க முன்னாடி வாழ்ந்து காட்டனும்ன்ற வெறி அவளுக்கு வந்துச்சு.

அப்ப நமக்கு என்ன பலம்னு ஒக்காந்து யோசனை பண்ணுனா. சின்னவயசில இருந்தே அவளுக்கு நல்லாப்பாடவரும் அதுனால அவளைகளையெடுக்கும் போதும் கதிரருக்கும்போதும் கூப்புட்டுப் போவாங்க இவ பாடுனா கேட்டுக்கிட்டே இருக்கலாம் அதுல சினிமா பாட்டு ஒப்பாறி தாலாட்டு எல்லாம் வரும். 

இப்ப கொத்துக்கூலி வேலைக்கிப் போக முடியாதது னால  ஒப்பாறி பாடலாம்னு தோணிச்சி. 

அவ எழவுவீடுகள்ல ஒப்பாறி வைக்கப் போனா. அங்க நல்லாக் காசு குடுப்பாங்க . அதுல செத்தவங்களோட அரும பெரும எல்லாம் சொல்லிப்பாடுவா. ஆனா ஒரு ஊரில தெனமா எழவு விழும் அதுனால பக்கத்து ஊர்களுக்கும் போக ஆரம்பிச்சா.
அடுத்த கட்டமா கோயில்கள்ல மொளைப்பாறி உற்சவம் நடக்கும்போது அங்கபோய் கும்மிப்பாட்டு பாட ஆரம்பிச்சா.
அங்க பாடுவா நடுவில நின்னு அப்ப பொண்களெல்லாம் சுத்தி கும்மி அடிச்சி சேந்து பாடுவாங்க

” எங்க ஊரு அம்மன் இவ ஏழு ஊரு காப்பா
ஏழு ஊரு காக்கும்போது எங்க ஊரத்தான் பாப்பா 
அவ எங்க ஊரத்தான் பாப்பா
தானான தானான தானான தான, தன தானான தான”

நு அவ பாட எல்லாரும்,, கும்மி அடிச்சபடி தானானயைத் திரும்பச்சொல்லுவாங்க.

ராத்திரி ஏழுமணிக்கு ஆரம்பிச்சு 10-- 11 ந்னு போகும் ஊரே கூடி தானானான கொட்டும்
 பங்குனி ஆடி சித்திரை மாதங்கள்ல அதுக்கு நல்ல கிராக்கி வந்துச்சு அங்க நல்லாக்காசு குடுப்பாங்க. அதுக்குத்தடை போட அவங்களால முடியல ஏன்னா ஊரில இருக்குறவங்களே அவளுக்குச் சப்போர்ட் பண்ண ஆரம்பிச்சாக. அவளோட பாட்டு அக்கம் பக்கம் இருந்த ஊருகள்ல பிரபலம் ஆச்சு. 

அப்ப பல்கலைகழகங்கள்ல படிக்கிற பசங்க கொஞ்சப்பேரு இவ பாட்டைப் பத்திக் கேள்விப்பட்டு இவகிட்ட வந்தாங்க.இவளைப் பாடச்சொல்லி இவ பாடுற பாட்ட ரெக்கார்டு பண்ணி அதுல டாக்டர் பட்டத்துக்கு ஆராய்ச்சி பண்ணி பட்டம் எல்லாம் வாங்குனாக. அது புஸ்த்தகமா வெளிவந்துச்சு. கொஞ்சநாள்ல அந்த வரிகளை பிரபல பாடகரை வைச்சி கேசட் போட்டு வித்தாங்க. 

அப்ப இவகிட்ட சனங்க வந்து சொன்னாங்க ”ஒம்பாட்டை வேற யாரோ  ரேடியா செட்டுல பாடுற மாதிரி இருக்கு வந்து கேட்டுப்பாருன்னு ”சொன்னாங்க

இவளும் போய் கேட்டா. ” ஆமா என் பாட்டுத்தேன் ரெக்கர்டு போடுறாகபோல. அவுக பாடுறதும் நல்லாத்தேன் இருக்கு”
ந்னு சொன்னா. அப்ப அவங்க சொன்னாங்க ஒன் பாட்ட அவங்க பாட ஒனக்கு காசு குடுத்தாங்களான்னு கேட்டாங்க அவங்க இவளுக்கு எதுவும் குடுக்கல

ஆனா அது பத்தி இவ கவலைப்படல.”

 எனக்கு வர வேண்டியது தானா வரும் என்னய நாண்டுக்கிட்டுசாக முயற்சி பண்ணுனப்ப காப்பாத்துன சாமி வழி காட்டும் ’நு சொன்னா
அதுக்கப்புறமும் தொடர்ந்து பாட்டுப் பாடப் போனா அப்ப சாவு வீட்டுக்கும் போனா சாமிக்குப்பாடவும் போனா. அதுல ஓரளவு வயிறு ரொம்புச்சு.

அப்புடிப்போகும் போதுதான் அவளுக்கும் நல்ல நேரம் பொறந்துச்சு. மொளப்பாறிக்கு கும்மிப் பாடிக்கிட்டு இருக்குறப்ப திருவிழாவுக்கு பாட்டுக்கச்சேரி நடத்த வந்தவங்க இவ பாட்டக் கேட்டுச் சொக்கிப்போய் அவளைக்கூப்புட்டு சினிமாப் பாட்டுப்பாடத்தெரியுமானு கேட்டு இவ பாடுறதைக்கேட்டு மேடையில மொதல்ல வாய்ப்புக்குடுத்தாங்க.

அவ பாடுனதக்கேட்டு ரசிகர்கள் கிராமியப்பாட்டு பாடச்சொல்ல அதுல அவ பாடுன பாட்டு அதுவும் இசைக்கருவிகளோட கேட்டவங்களை சொக்க வைச்சிருச்சு. அதுல சந்தோசமான அந்த அந்த குரூப்பு அவகிட்ட நிரந்தரமா பாட ஒப்பந்தம் பண்ணிக்கிட்டாங்க. நெறையாக் கச்சேரி நல்ல வருமானம்னு வாழ்க்கை மாறிப்போச்சு.
ஊரு ஊரா அவங்களோட பாடப்போனா. 

அப்ப திரும்பவும் வந்து இவளைத்தொந்தரவு பண்ணுனாங்க இவளோட புருசன் வீட்டு ஆளுக. கண்டவங்களோட சுத்துறீயே மானம் என்ன ஆகுறதுன்னு திட்டுனாங்க. ஆனா அந்த குரூப்பு பசங்க சொன்னாங்க

” இவங்க என் அம்மா மாதிரி அம்மா பிள்ளைககூட போறதுல என்ன தப்பிருக்கு. அவங்களுக்கு நல்ல குரல் வளமிருக்கு அதைக்கேட்டு எல்லாரும் சந்தோசப்படுறாங்க. உண்மையச்சொன்னா இவங்களாலதான் எங்க குரூப்பு பேமஸ் ஆகிக்கிட்டு இருக்கு. அவங்கதான் எங்க பலம்னு சொன்னாங்க 
அதுக்கு மேல எதுவும் பேசமுடியாம அவங்க போய்ட்டாங்க. 

ஆனா அப்பையும் எளவு வீட்டுல வந்து கையோட கூப்புட்டுப்[போயிருவாக
அப்ப குரூப்புல சொல்வாங்க “ ஏம்மா அதுக்குப்போற உனக்கு வேண்டிய பணத்தை நாங்க தாறோம் அதை விட்டுறலாமே” நு
அதுக்கு அவ சொல்லுவா

“ அது ஒரு பெரிய சேவை எப்படி உசிறோட இருக்குறவஙகளைப் பாடி சந்தோசப்படுத்துறமோ அதே மாதிரி செத்தவங்க ஆன்மாவையும் பாடிச்சந்தோசப்படுத்தினா 

அவங்க நம்மள ஆசீர்வாதம் பண்ணுவாங்க. அது ஒரு புண்ணிய காரியம். காசு பணம் இன்னிக்கி வரும் போகும். ஆனா அந்த ஆசி எல்லாருக்கும் கெடைக்காது எனக்குக்கெடைக்கும்” நு சொல்லுவாங்க

அவ சொன்னமாதிரியே அவளுக்கு நல்ல ஒரு வாய்ப்பு வந்துச்ச்சு. அந்த ஊருக்குப் பக்கத்துல ஒரு சேனலோட ஆடிசன் நடந்துச்சு. அங்க அந்த குரூப்புக்காரங்க கூப்புட்டுப்போய் பங்கெடுக்கச்சொன்னாங்க. 

இவளும் அங்கபோனா. 

அங்க சின்னச் சின்னபசங்கள் எல்லாம் வந்திருந்தாங்க. அவங்க இவளைப்பாத்து கிண்டலும் பண்ணுனாங்க. “ வயசான காலத்துல  சுடுகாட்டுக்குப்போற வயசுல சூட்டிங் வந்துருக்குது கெளவி” நு கிண்டல் பண்ணுனாங்க. அப்ப அவளுக்கு அதே உறுதி வந்துச்சு. இங்க நாம ஜெயிச்சுக்கட்டனும்ற வெறி. அது அவ வாழக்கையப் பொறட்டிப்பொட்டுருச்சு. அவளோட குரல் வளத்தைப்பாத்து டி,வி போட்டிகள்ல சேத்துக்கிட்டாங்க. 

அப்ப கிராமியப்பாடல்கள் ல இவளோட சொந்தப்பாட்டப் பாட அதை ஏற்கனவே பிரபலப்பாடகர் பாடினதுக்கும் இவ பாடினதுக்கும் எங்கயோ இருந்துச்சு. இவளோட குரல் உச்சரிப்புல தான் அது மண்வாசத்தோட மனசக் கெறங்க வைக்கிறதா இருந்துச்சு. எல்லாரையும் எழுந்து கைதட்ட வைச்சிச்சி. 

அதுக்கப்புறம் கச்சேரிகள்ல அந்தப்பாடல்களைப் பாடச்சொல்லி விரும்பிக்கேட்டாங்க. அது பலபேர் உசிற உருக்குச்சு. அதுக்கப்புறம் இவளோட குரல்ல பாடவைச்சி அந்தப்பாடல்கள் வெளிவந்து சக்கப்போடு போட்டுச்சு. அதுல ஜீவன் இருந்துச்சு. 
அவபேர் பட்டி தொட்டியெல்லாம் பரவுச்சு. அப்பையும் அவள சாவு வீட்டுக்குக் கூப்புட்டா தட்டாமப்போயிருவா. அதுக்கு அவ சொல்லுவா அதுதான் பாக்கியம் ஒரு உசிறு போனப்புன்னாடி அந்த ஆத்மா அமைதியடையனும்னா ஒப்பாறி பாடனும் . அதுலதான் அது அமைதிஅடையும்னு சொல்லுவா.

ஒரு நா அவங்க ஊரில இருந்து ஒரு எளவுக்கு வந்து கார்ல கூப்புட்டுப்போனாங்க. இன்னாருன்னு கேக்காமலே போனா. ஏன்னா எப்பையும் அதெல்லாம் அவ பாக்குறதில்ல. ஆர் கூப்புட்டாலும் போய்டுவா.

ஆனா அவங்க கூப்புட்டுப்போன எடம் அவளோட புருசன் வீடு. அங்க யார் செத்ததுன்னு கேட்டா அவளோட மூத்தாரோட மகன். அவந்தான் இவளுக்குச்சொத்துபத்து குடுக்காம வெரட்டிவிட்டது. எல்லாரும் என்னா நெனச்சாங்கன்னா இவ அவனுக்குன்னா வரமாட்டான்னு. ஆனா அவ அவனைப்பாத்ததும் நெஞ்சு வெடிச்ச மாதிரி அழுதா. கண்ணீரும் கம்பலையுமா ஒப்பாறி வைச்சா
. அந்த ஒப்பாறில அவ

”நான் வயசுக்கு வந்து வந்து வாக்கப்படாமக் கெடந்தேனே கெடந்தேனே
மவராசன் வந்து எனக்குத்தாலிப்பிச்ச போட்டானே போட்டானேஎனக்குன்னு பிள்ளைக இல்லன்னு போனப்ப ஒன்னத்தானடா பிள்ளையா நெனச்சிருந்தேன்

எனக்குகொள்ளிவைக்க நீ இருக்கன்னு நெனச்சிருந்தேனே நெனச்சிருந்தேனே
இப்ப ஒனக்கு ஒப்பாறி வைக்க வைச்சிட்டீயேடா நான்பெத்த மகனே ராசான்னு “

அப்ப அந்த வீட்டுக்காரவங்க இவகிட்ட செஞ்சதப்புக்கு மன்னிப்புக் கேட்டாங்க. அப்ப இவ சொன்னா “ என் பிள்ளையே போய்ட்டான் யாரு யார மன்னிக்கிறது உண்மையச்சொன்னா என்னோட இத்தன வெற்றிக்கும் காரணம் அவன் தான். அவன் என்னை தொறத்துனதுனாலதான் எனக்கு ஜெயிக்கனும் ற வெறி வந்துச்சு அவன் நல்லா வைச்சிருந்தான்னா இந்த குரல் ஒலகத்துக்குக் கேக்காமலே போயிருக்கும் எல்லாம் அவன் செயல்”னா

ஓங்கிக்கொரலெடுத்து ஒப்பாறி வைச்சி அழுகும்போது சுத்தி இருந்தவங்க எல்லாருமே கண்ணீர் அடக்கமுடியாம அழுதாங்க
அவளை யாராலும் தேத்த முடியல... அவ வைச்ச ஒப்பாறி பதினெட்டுப்பட்டிலயும் கேட்டவங்களெல்லாத்தையும் கண்ணீர் விடவைச்சிருச்சு. 

  அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE