இதுவும் ஒரு காதல் - சிறுகதை

By செய்திப்பிரிவு

வயசுப்பயலுகளுக்கு வயசுப் பொம்பளைப் புள்ளைக மேல ஏகப்பட்ட மர்மங்கள் இருக்குறதாக் கற்பனை செஞ்சுக் குவாங்க. அதுக்குக் காரணம் அதுக குசு குசுன்னு சத்தமில்லாம கூடிக்கூடிப் பேசுறதும் இவிங்களைக் கண்டதும் பேச்ச நிறுத்திப்புட்டு சைகைல பேசுறதும் இவனுகள கற்பனை களின் எல்லைக்கே கொண்டு போயிரும்.

அதுக அப்புடின்னா இவிங்கள்ல மூட்டைய அவுத்துவிடுறதுக்குன்னே பயலுக செல பேர் இருப்பானுக. அவனுக அவுத்து விடுற டுமீல் சொல்லி மாளாது. 

ஆரம்பிக்கிறதே 
“ டேய் உனக்கு அவளுகளைப் பத்தித் தெரியாது சரியான அமுங்குனிக வாயத்தொறந்து அம்மகிட்ட சொல்ல மாட்டாளுக. ஆனா பேச்சு பூராம் அம்மளப்பத்தித்தாண்டோய்”

நுதான் பத்தவைப்பானுவ.அவிங்க அடுத்து நம்மல உசுப்பேத்துறதுக்கு சொல்ற வார்த்தை
”டேய் அவ ஒன்னையத்தாண்டா ஒன்னும் தெரியாத மாதிரி பாக்குறா நீ பாக்காதப்ப நீ வேணுமுன்னா ஓரக்கண்ணால பாறேன் அப்பத்தெரியும் நான் சொல்றது” ம்பான்

இப்புடித்தான் அவன உசுப்பி விட்டு ஒரு பொண்ணுகூட கோர்த்துவிட்டுட்டானுவ
அது கொஞ்சம் அழகான பொண்ணு வேறயா அவனுக்கும் ஒரு வேளை அது மாதுரி இருக்குமோன்னு நெனைக்க வைச்சிருச்சு. அதுனால எல்லா வயசுப்பயலுகளும் செய்யிற தப்ப அவன் செஞ்சான் அதான் அந்தப் பொண்ணு பின்னாடி சுத்த ஆரம்பிச்சான்
இப்ப இவனுகளுக்கு ரொம்ப வசதியாப்போச்சு 

”பாத்தியா நான் சொன்னேன்ல இப்பப் பாரு உண்மையாயிருச்சு. அவ ஒனக்குத்தான் கவலைப்படாத நாங்க சேத்துவைக்கிறேன்னு “ சொன்னானுக 

இந்தப்பய புள்ளையும் அத நம்பி அவனுகளுக்கு பஜ்ஜி போண்டா வடை டீக்கெல்லாம் வீட்டுல பைசாவ ஆட்டையப்போட்டு க் கொண்டாந்து குடுத்து மெயிட்டெயின் பண்ணவேண்டியதாயிடுச்சு

எல்லாக் காதல் கதைகளும் போலவே இவனுக அவன உசுப்பேத்தி லவ் லெட்டர் குடுக்க ஏற்பாடு பண்ணுனாக. அதுக்காக ஒரு நாளும் குறிச்சானுக. அன்னிக்கி ஓசில வடை பஜ்ஜி டீ எல்லாம் அவன் காசுல மொக்கிட்டு அன்னிக்கி அந்த சம்பவம் நடந்தே ஆகனும்னு நின்னானுக

அவனும் ஒரு மாதிரி இவனுக ஐடியாப் படி பள்ளிக்கொடம் விட்டு வெளிய வாரப்ப லெட்டாரைக் குடுன்னு தூபம் போட்டானுக
அவனும் திரு திருன்னு முழிச்சிக்கிட்டே அந்தப்பொண்ணு பக்கத்துல போய் வழிஞ்சான் அவ திமிறாப் பாத்து அவன
”என்ன மைனர் வந்து திருவிழாவில ஆடு காணாமப்போனமாதிரி முழிக்கிறாரு என்ன விசயம்னு கேளுங்கடி” நு ஆரம்பிச்சாளுக
இவனுக்குக் கைகால் வெட வெடத்து நாக்கு உலர்ந்து மேல் அண்ணத்துல ஒட்டிப் பேச்சே வரல ரொம்பசெரமப்பட்டு சமாளிக்கிறதா நெனச்சிக்கிட்டு 

“ஒன்னுமில்ல இந்த லெட்டரைப் படிச்சிப்பாரு புடிச்சா ஓகே இல்லாட்டினா கிழிச்சிப் போட்டுரு ஆனா கேவலப்படுத்திராத” 
நு தட்டுத்தடுமாறிச்சொல்லிட்டு லெட்டரை எடுத்து அவகிட்டக்கொடுத்தான். அவ அதை வாங்கி ஸ்ட்ரெயிட்டா ரெண்டா கிழிச்சிட்டு சொன்னா 

”டேய் நீ நானு படிக்கிறது 11 வது ன்னாலும் என்னவிட ஒனக்குஒரு நாள் கம்மி வயசு ஒனக்கு நான் அக்காமாதிரி அக்காகிட்டயே லவ் லெட்டர் குடுப்பியா நீ “ நு கிண்டலா சொன்னா
அப்பச்சொன்னான் பாரு அவன் 

“சரி அக்கா இனிமே உங்களை அக்கான்னு கூப்புடுறேன் இனிமே இது மாதிரி குடுக்க மாட்டேன்னு “ சொல்லிட்டு திரும்பிப்பாக்காம வந்தான்

இவனுககிட்ட வந்து நடந்ததச்சொன்னான். அவனுக விழுந்து விழுந்து சிரிச்சானுக. அவ அப்புடிச்சொன்னா அதுக்காக அக்கான்னு சொல்லுவியா அவளுக அப்புடித்தான் மொதல்ல பேசுவாளுக அப்புறம் பாரு அடி மேல் அடிவைக்க வைக்க செட் ஆயிடுவாளு கன்னு ஏத்திவிட்டானுக

ஆனா அடுத்தநாள் அந்த செட்டுல இருக்குற ஒரு பொண்ணு இவன் கிட்ட தனியா வந்து சொன்னா நீ போனப்புறம் அந்தப்புள்ள ஒன் லெட்டரை எடுத்து ஒட்டிவைச்சி படிச்சிட்டு பத்திரமா வைச்சிருக்குதுன்னு

அவனுக்கு குப்புன்னு வேர்த்திருச்சு. மறுநாள் வகுப்பு தொடங்குறதுக்கு முன்னாடி டீச்சர் கிட்ட அந்தப்புள்ள ஒரு கவர் குடுத்துச்சு குடுத்துட்டு என்னமோ குசு குசுன்னு சொல்லிட்டு இவனைப் பாத்துச்சு. அப்ப டீச்சரும் இவனப்பாத்தாங்க.

இவனுக்கு அல்லு விட்டுப்போச்சு.சரி சரியா நம்மளப் போட்டுக் குடுத்துட்டா. இன்னிக்கி மானம் கப்பலேறப்போகுதுன்னு அடிவயிறு கலங்க அவஸ்த்தையில இருந்தான். வகுப்பு நடக்க நடக்க இவனுக்கு அவஸத்தை அதிகமாச்சு. ஒரு வழியா வகுப்பு முடியிறப்ப டீச்சர் இவனைப்பாத்தாங்க கிட்டத்தட்ட டவுசர்நனையாத கொற பேய் முழி முழிச்சான்.

அப்பத்தான் அவன டீச்சர் அவனை முன்னாடி வருமாறு கூப்புட்டாங்க. இவன் மொகம் வெளிறப்போனான். 
அவங்க சொன்னாங்க. எல்லா மாணவர்கள் கிட்டயும்

” மை டியர் ஸ்டூடண்ட்ஸ் இந்த வயசுல ஒங்க யாருக்கும் தோணாதது இவனுக்குத் தோணிருக்கு. இதை வெக்கப்பட்டுக்கிட்டு இவன் சொல்லாம மறைக்கலாம் ஆனா விசயம் வெளிய வந்துருச்சு. இனிமே நம்மள இவன் ஏமாத்த முடியாதுன்னு ”
சொல்லிட்டு இவனப்பாக்க இவனுக்கு மயக்கமே வார மாதிரி இருந்துச்சு.

இவன் திரு திருன்னு முழிக்க டீச்சர் சொன்னாங்க நான் போன வாரம் சொல்லிருதேன்ல வாழக்கயில ஒரு அர்த்தம் வேணும் நாம நாலுபேருக்குப் பயன் படுறமாதிரி வாழனும் இல்லாதவங்களுக்கு ஒதவனும்னு அத மனசுல வைச்சி இவன் நம்ம 

பள்ளிக்கொடத்துக்குப் பக்கத்துல இருக்குற அனாதை ஆஸ்ரமத்துக்கு 1000 ரூ நன்கொடை குடுத்துருக்கான். ஆனா வெளிய ஆர்கிட்டயும் சொல்லல. ஆனா அவங்க இந்தப்பொண்ணு மூலமா நம்மளுக்கு தெரியப்படுத்த இந்த லெட்டர் குடுத்துருக்காங்க இவனை பாராட்டும் விதமா எல்லாரும் கைதட்டுங்கன்னு” சொன்னவன்ன 

இவனுக்கு ஒலகமே சுத்துற மாதிரி ஆயிருச்சு.
எல்லாரும் கைத்தட்ட இவன் அந்தப்பொண்ணப் பாக்க அவன் ஒன்னும் புரியாம முளிச்சான்.ஆனா அவன் அவளோட மொகத்துல இருந்த ஒரு கள்ளச்சிரிப்ப கவனிச்சிப்புட்டான். பொறவு விசாரிக்கலாம்னு நெனச்சிக்கிட்டு ஒன்னும் தெரியாதவன் போல நின்னான்.எல்லாரும் கைதட்டி முடிச்சாங்க. 

அப்ப டீச்சர் சொன்னாங்க இவனைப்பாத்து எல்லாரும் கத்துக்கனும் அடுத்தவ்ங்களுக்கு எப்புடி ஒதவிகரமா இருக்கனுன்றத நு சொல்லிட்டு அப்புறம் சரி நீ போய் உன் சீட்டுல ஒக்காருன்னு சொன்னாங்க...

அன்னிக்கி பள்ளிக்கொடம் விடுறவரைக்கும் அவனுக்குத் தவிப்பு அடங்கல. இத ஏன் அந்தப்பொண்ணு செஞ்சிச்சின்னு விசாரிக்கனும்னு படபடப்போட இருந்தான். 

ஒருவழியா பள்ளிக்கொட பெல்லும் அடிச்சது. எல்லாரும் வெளிய போக இவன் வேகமா போய் பள்ளிக்கொட வாசல்ல நின்னுக்கிட்டு இருந்தான் அவளை மடக்கி விசாரிக்க

அவளோ வழக்கம்போல தன்னோட பிரண்டுகளோட வெளிய வந்தா
அப்ப அவன் சொன்னான் 
”ஏ நில்லு பிள்ள ஒன்கிட்ட ஒன்னு கேக்கனும் ” நு மறிச்சான்

அவ அதுக்கெல்லாம் அசந்தவளா . ”என்கிட்ட ஒன்கிட்ட சொல்றதுக்கு ஒன்னுமில்ல. நீ போகலாம்னா ”திமிறா
”பதில் சொல்லாம நான் விடமாட்டேன் ஏன் அப்புடிப் பண்ணுன நான் எதுக்கும் காசு குடுக்கல குடுக்குற நெலமையிலயும் நான் இல்ல
 என் பேருல காசு குடுத்தது யாரு அத ஏன் பள்ளிக்கொடத்துல வந்து சொல்லனும் “னு கேட்டான்

”நான் தான் குடுத்தேன் எங்க அப்பா வழக்கமா குடுக்குறதுதான்.அதுல பேர் போடாம வாங்கியாந்து உன் பேரைப்போட்டுக் குடுத்தேன் அம்புட்டுதான்” நா

என் பேரை ஏன் போட்டன்னு கேட்டவன்ன அவ சொன்னா நேத்து லெட்டர் குடுக்கும்போது அது தெரியலயோ தொரக்கினு சிரிச்சிக்கிட்டே போய்ட்டா கூட்டத்தோட

இப்ப நம்ம பயலுக இதுக்கு விளக்கம் கொடுத்தானுக ”டே அந்தப்புள்ள ஒன் மேல ஒரு இது இல்லாமலா பண்ணிருக்கும். நிச்சயமா அவ ஒன்ன விரும்புறா “ நு உசுப்பேத்தி விட்டானுக 

அத உறுதி செய்ய நாளைக்கி ரோசாப்பூ ஒன்ன வாங்கி அவகிட்ட குடு அவ ஏத்துக்கிட்டான்னா உன் காதல் உறுதியாயிடுச்சுடான்னு ஐடியா குடுத்தானுவ

அவனும் அதே மாதிரி மறுநா காலையில கொண்டுபோய் குடுத்தான் அவகிட்ட. அதுக்கு அவ சொன்னா பூ வாங்க நாங்க வக்கில்லாமயா கெடக்கோம் போடா போக்கத்தவனேன்னு இத நான் டீச்சர்கிட்ட கம்ப்ளெயிண்ட் பண்ணப்போறேன்னு சாட்சிக்கு அதைக்குடு டீச்சர்கிட்ட காமிக்கனும் சொல்லிட்டு வாங்கிட்டுப் போயிட்டா

இவனுக்கு ஒன்னும் புரியல. வகுப்புல டீச்சர் வந்தவன்ன அவ டீச்சர்கிட்ட பூவோட போய் நின்னா. இவனுக்கு ரத்த ஓட்டம் தலைக்கி ஏறிடுச்சு. இன்னிக்கி நம்ம அம்புட்டுத்தான்னு தலையத் தொங்கபோட்டுக்கிட்டு ஒக்காந்த்திருந்தான்

அப்ப எல்லாரும் கைத்தட்டுன சத்தம் கேட்டு நிமிந்துபாத்தான். டீச்சர் இப்பவும் இவனைக்கூப்புட்டாங்க இவனுக்கு ஒன்னும் புரியல
அப்ப டீச்சர் சொன்னாங்க. இன்னிக்கி ஆசிரியர் தினம் அதுக்கு எங்களைக் கவுரவிக்க பூ கொடுக்க நீ பயப்படவேண்டியதில்ல அதை ஏன் அந்தப்பொண்ணுகிட்ட கொடுத்து குடுக்கச்சொன்னனு

நீயே குடுக்கலாமே நு சொல்லித்தட்டிக்குடுத்தாங்க
அப்பையும் அவ மொகத்துல அந்தக் கள்ளச்சிரிப்பப் பாத்தான்.

சரி இன்னிக்காவது உறுதிப்படுத்திட வேணும்னு முடிவு பண்ணி சாயங்காலம் நின்னான் வாசல்ல. அவளோட வார பொண்ணுக எல்லாம் போய்ட்டாங்க எல்லாரும் போன பின்னாடி வந்தா. 

அப்ப அவ தலையில ரோசாப்பூ இருந்தது.... அப்ப அவ சொன்னா இது தான் நீ கொடுத்தது  டீச்சருக்குக் கொடுத்தது நான் வாங்கிட்டு வந்ததுன்னா

இதுக்கு அர்த்தம் என்னனு சொல்லிட்டுப்போன்னு நின்னான்
அவ சொன்னா போடா புண்ணாக்கு சொல்லிட்டு சிரிச்சிக்கிட்டே ஓடிட்டா

அதுக்கு அர்த்தம் இன்னிக்கி வரைக்கும் தெரியல சாமி அதுக்கப்புறம் அவளைக் கலியாணம் பண்ணி 30   வருசம் குடும்பமும் நடத்தியாச்சு இன்னும் சில விசயங்களை எதுக்குச் செய்யிறா ஏன் செய்யிறான்னு புரிஞ்சிக்க முடியல சாமிகளா தெரிஞ்சவங்க இருந்தா சொல்லுங்கப்பா


அ.முத்துவிஜயன்

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE