தனலெட்சுமிக்கு இரண்டு மகன்கள். ஒருவனுக்கு வயது பத்து இன்னொருவனுக்கு வயது 12. அவளின் கணவன் கூலிவேலை செய்பவன் ஆனால் சரியான குடிகாரன். வீட்டில் காசு எங்குவைத்திருந்தாலும் கண்டுபிடித்து எடுத்துச்சென்று குடிக்கப்போய்விடுவான். அவனின் செய்கையால் வீட்டில் செலவுக்குப்பற்றாக்குறை நிலவியது. அதைச்சரிசெய்ய அவள் சின்னதாகக் காய்கறி வியாபாரம்
செய்துவந்தாள் காலையில் காய்கறிச்சந்தையில் மொத்தவிலைக்கு வாங்கி அதை கொஞ்சம் லாபம் வைத்து விற்றுக்கிடைக்கும் பணத்தில் குடும்பத்தைச்சமாளித்து வந்தாள். தினம் காய்கறி விற்றுக்கிடைக்கும் பணத்தில் அடுத்தநாள் சரக்கு வாங்குவதற்கான பணத்தை தனியாக அரிசிபானைக்குள் ரகசியமாக ஒளித்துவைத்துவிடுவாள். பின் செலவுக்குக்குக் கிடைக்கும் பணத்தை சுருக்குப்பையில் வைத்திருப்பாள்.
அன்றும் அப்படித்தான் அதிகாலையில் எழுந்து காய்கறிச்சந்தைக்குக் கிளம்பினாள். வழக்கம்போல காய்கறிகள் எடுத்து காசு கொடுக்கும்போது பார்த்தால் பத்து ரூபாய் மட்டும் குறைவதுபோல் இருந்தது. ஒருவேளை சரியாக இரவில் எண்ணியிருக்க மாட்டோம் என்று சமாதானப்படுத்திக்கொண்டாள்.
மறுநாளும் அதே நீடித்தது. சரியாகப் பத்து ரூபாய் குறைந்தது. யாரோ கைவைக்கின்றார்கள் என்று அவளுக்குப்புரிந்து போயிற்று. ஒருவேளை கணவனாக இருக்குமோ என்று சந்தேகப்பட்டாள். ஆனால் அவன் எடுத்தால் 10ரூமட்டும் எடுக்கமாட்டானே மொத்தமாக எடுத்துச்சென்றுவிடுவானே என்று யோசனை வந்தது. விசாரிக்கவும் பயமாக இருந்தது. விசாரிக்கப்போய் நாம் பணம் ஓளித்துவைப்பது தெரிந்துவிட்டால் கணவன் போட்டு அடிப்பான் என்ற பயமும் இருந்தது.
மகன்களாக இருக்குமோ என்ற எண்ணம் வந்தது. ஆனால் இரண்டுபேரில் யார் என எப்படிகண்டுபிடிப்பது என்று யோசனை செய்தாள். அவளுக்கு ஒரு யோசனை வந்தது. அது கிராமத்தில் கோழி பிடிக்கும் யோசனை. அதைச்செயல் படுத்துவது என்று முடிவுசெய்தாள் . அன்று இரவு இரண்டுபேருக்கும் கேட்கும் வகையில்
நாளை நிறைய காய்கறி வாங்கவேண்டும், அதற்காக சீக்கிரமே எழுந்து போகவேண்டும். ஒருவேளை தூங்கிவிட்டால் எழுப்புங்கள் என்று சொல்லிவிட்டு வழக்கம்போல் அரிசிப்பானைக்குள் பணத்தை ஒளித்துவைத்துவிட்டுப்பின் தான் யோசனை செய்த விசயத்தையும் செய்து வைத்தாள்.இன்று எப்படியும் திருடன் பிடிபடுவான் என்ற நம்பிக்கையில் படுத்தாள். அசதியில் நன்றாகத்தூங்கியும் விட்டாள்
நடுஇரவில் திடீரென பெரியவன் அலறல் சத்தம் கேட்டது அம்மா பாம்பு பாம்பு என அலறிக்கொண்டிருந்தான். கணவனோ நன்றாக உறங்கிக்கொண்டிருந்தான். இவள் எழுந்துபோய்பார்த்தபோது அவன் நடுங்கிக்கொண்டிருந்தான். என்ன என்று கேட்டபோது அம்மா அரிசிப்பானைக்குள் பாம்புமா என்றான் பயத்தோடு. அப்போது அவள் கேட்டாள் அதுசரி நடுஇரவில் அரிசிப்பானைக்குள் உனக்கு என்ன வேலை எனக்கேட்டாள். அவன் திரு திருவென விழித்தான்.
நேரடியாக பானைக்குள் கைவிட்டு அதை வெளியே எடுத்தாள். அது ரப்பரில் செய்யப்பட்ட பாம்பு. அதை கையில் எடுத்துக்கொண்டு கேட்டாள் உண்மைச்சொல்லிவிடு. பணம் எடுக்கத்தானே பானைக்குள் கைவிட்டாய் எனக்கேட்டவுடன் ஒத்துக்கொண்டான். அம்மா என்ன மன்னித்துவிடுங்கள் நான் தான் பணம் தினம் எடுத்தேன். என்று. அவள் எதற்காகத் திருடினாய் என்று கேட்டவுடன் அவன் சொன்னான்.அம்மா உனக்கு நினைவிருக்கிறதா சென்றமுறை உனக்கு உடம்பு சரியில்லாமல் போனபோது எல்லோரும் பட்டினி இருந்ததோம். யாரும் பணம் கொடுத்து உதவவில்லை.நாம் அதுபோல செலவுகளுக்கு பணம் ஒதுக்குவதில்லை.
அதனால் பிரச்சனை வரும்போது பட்டினி கிடக்கிறோம் நீயோ அன்றாடவரவு செலவுகளில் இதுபோன்ற விசங்களைச்சிந்திப்பதில்லை. அதனால் நான் கடந்த மூன்றுமாதமாக தினம் பத்து ரூ எடுத்து தனியாகச்சேமித்து வைத்திருக்கிறேன் அதுஇப்போது 900 ரூ மேலாக என்னிடமிருக்கிறது. ஏதாவது பிரச்சனையில் நாம் சிரமப்படும்போது அது உதவும் என நோட்டுப்புத்தகத்தில் இருந்து எடுத்துக்கொண்டுவந்து கொடுத்தான்
அவளுக்கு கண் கலங்கிவிட்டது. மகனே உன்னைப்போய் திருடன் என்று சொல்லிவிட்டேனே. என்று அவனை அணைத்துக்கொண்டாள். அவனும் அம்மாவின் கைகளைப்பிடித்துக்கொண்டு புன்னகைத்தான்
நன்றி கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்