நூல் : ஒரு புளிய மரத்தின் கதை
ஆசிரியர் : சுந்தர ராமசாமி
வெளியீடு : காலச்சுவடு
பக்கங்கள் : 264
வகை : நாவல்
இந்த நாவலின் வசீகரமாக முதலில் படுவது நாவலின் பெயரான புளியமரம். அது கிராமங்கள், சாலைகளின் மருங்கு என நீக்கமற நிறைந்திருக்கிறது. அதன் நிழலில் இளைப்பாறாத பால்யம் எவருக்குமில்லை. கனிந்திருக்கும் அதன் பழத்தை மனம் எண்ணினாலே எச்சிலூறும். அதன் கிளைகளில் ஊஞ்சல் ஆடாதவர்கள் அபாக்கியவான்கள். இத்தகு நெருக்கங்களை எல்லோருக்குள்ளும் கொண்டிருப்பதால் அம்மரம் வசீகர யட்சியின் திகைப்பூட்டும் எழிலை மனதில் கிளர்த்துகிறது. காதலியின் பெயரை அனுபவித்து உச்சரிக்கும் மாதிரியான பெயர்தான் புளியமரம். அது அதற்கென ரகசிய வசீகரத்தை பெயரிலேயே கொண்டிருக்கிறது.
அந்த அளவில் சுந்தர ராமசாமி நாவலை ஆழ்ந்து வாசிக்கும் எவருக்குள்ளும் அப்பெயராலேயே மந்திரப் பொடியை தூவி விடுகிறார். அதன் பின் நடப்பதெல்லாம் அவரின் கட்டுப்பாட்டிற்குள்தான். குளித்துக் கரையேறும் சௌந்தர்யவதிகளின் நீர் சொட்டும் கூந்தலையும், அவயங்களோடு ஒட்டிக் கொண்டிருக்கும் ஆடைகளின் ஏகாந்தத்தைப் பருகும் விழிகளாக மாறிப் போகிறோம்.
ஒரு நாவல் எப்படி வளர்கிறது? அல்லது எப்படி வளர்த்தலாம்? என்பதற்கான விடை இது. தான் ஆசைப்பட்டவள், புளியமரத்தில் தூக்கிட்டு கொள்கிறாள். அதனால் கோபம் கொள்பவன் அம்மரத்தின் கிளை ஒன்றை வெட்டி விடுகிறான். முழு மரத்தையும் வெட்ட வருபவன் தாமோதர ஆசானின் சமயோசிதத்தால் கிளையை மட்டும் வெட்டி விடுகிறான். தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனது என்பது மாதிரியான தேய்வழக்கு இது. ஆனால் தான் ஒரு தேர்ந்த நாவலாசிரியன் என்பதை வாசகனுக்கு காண்பிக்க ‘சுரா’ எப்படி எழுதி இருக்கிறார் என்று வாசியுங்கள்.
“ஒரு கிளையை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது புளியமரம். மிகவும் நல்ல விஷயம் அது.
எதையேனும் ஒன்றை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டு விடுவது என்பது எப்போதுமே புத்திசாலித்தனமான காரியம்தானே?
பைத்தியம் என்பதும் ஒருவன் தன் அறிவை இழந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டதன் விளைவுதானே?
இழப்பதற்கு பல்லிக்கு வாலும், பெண்ணுக்கு கற்பும், மனிதனுக்குக் கொள்கையும், கடவுளுக்கு முகமூடியும் உண்டு.
இழந்தும் பெற்றும்தான் வாழ முடியும் போலிருக்கிறது.
நெருக்கடியில், சோதனை காலத்தில், தன்னில் சிறிது இழந்து, மற்றொன்றில் சிறிது பெற்று, பெற்றதையும் தன்னில் சீரணம் செய்து கொண்டு அழிந்து போகாமல் நிலைத்து விடும் காரியம், மதங்களுடைய காரியமாகவும் நாகரிகங்களுடைய காரியமாகவும் பாஷைகளுடைய காரியமாகவும் இருந்து வந்திருக்கிறது அல்லவா?
அதுதான் இயற்கையின் நியதி போலும்!
ஒரு கிளையை இழந்து நின்றது புளியமரம். அந்தக் கிளையின் நிழலும் கிளையுடன் மறைந்தது. வெட்டுப்பட்ட இடத்தில் ஏற்பட்ட புண்ணும் நாளாவட்டத்தில் ஆறித் தழும்பாகிவிட்டது.
அதன் பின்னும் காலப்போக்கில் எத்தனையோ கைகளை விரித்தது புளியமரம்.
கிளைகள் விரிந்து, நிழல் படர்ந்து, நிழலுக்கு ஒதுங்கும் கூட்டமும் பெருகிவிட்டது.
எவ்வளவோ பேருக்கு அருமையான நிழலைத் தந்தபடி அலட்சியமாக நின்றது புளியமரம்.
இருந்தாலும் அன்று வெட்டுப்பட்ட இடம் வெட்டுப்பட்ட இடமாகத்தான் இருந்தது. அந்தக் கிளையில் ஒரு தளிரோ, ஒரு இலையோ, ஒரு பூவோ, பிஞ்சோ, காயோ தோன்றவில்லை. ”
ஒரு நாவல் அதற்கான மொழியை தேடிக் கொள்வதென்பது நாவலின் ஸ்திரத்தன்மையை அதிகரிக்கும். அவ்வகையில் இந்நாவலின் கதை சொல்லிக்கு வழுக்குப் பாறையில் சறுக்கிவிழும் நீராய் வார்த்தைகள் லாவகமாய் வந்து விழுகின்றன.
” அழிவைத் தேடிக் கொண்டு போகிறவன் எதைத்தான் வியாஜ்யமாக (சாக்காக) வைத்துக் கொள்ள மாட்டான். (பக்.58)
சொந்த விஷயம் பேசுவது என்றால் வெல்லம்தான் எல்லோருக்கும்.( பக்.61)
திராவக வானவில்லாக ரஸ்தாவில் படர்ந்திருக்கும் பெட்ரோல் சிந்தலை, ‘ஆஹா, என்ன சொகமான மணம்!’ என்று நின்று மோப்பம் பிடித்துவிட்டு மேலே செல்கிறவர் அவர். ‘பூ மணக்கும்’ சந்தனம் மணக்கும்னு சொன்னதையே சொல்லிக்கிட்டு இருக்கானுவளே. செம்புழுதி சுக்காக் காஞ்சு கெடக்கேலே நாலு தூத்தல் போட்டு நின்னுட்டா, ஆஹா, வாசனை எப்படி அடிக்கும்!. (பக்.80)
சரிந்து விடும் மரங்கள் காலியாக்கும் இடத்தை லபக்லபக்கென்று சூரிய ஒளி பிடித்துக்கொண்டு முழுப்பிரகாசத்துடன் ஜொலிக்கிறது. (பக்.87)
உண்மைக்கு அருகில் வரும் காட்சிகள் வாசகனை அந் நாவலின் கதையோட்டத்தில் அள்ளி வைத்துக்கொண்டு பயணம் செய்யும். சொல்லப்போனால் அவன் கதையின் மௌனமான பங்கேற்பாளனாகி விடுகிறான். அவ்வகையில் கதை மாந்தர்கள் பற்றிய இவ்விவரிப்புகள் வாசகனை நாவலோடு வெகு நெருக்கம் கொள்ள வைக்கின்றன.
துணிகளுக்கு இஸ்திரி போடும் சோசப்பை பற்றிய விவரிப்பு இது,
நீள மேசையில் துணிமணிகளுக்குப் பெட்டி போட்டுக்கொண்டிருந்தான் சோசப்பு. அழகான கறுப்பு முகம். அழகான வெண் பற்கள். நீல உதடு. நலுங்கல் இல்லாத சட்டை. சட்டையில் தூசு துரும்பு பதிந்துவிட்டாலும் பொறுக்காது சோசப்புக்கு. முகத்தைத் திருப்பித் திருப்பித் தோள்பட்டையில் படியும் தூசியைத் தட்டிவிட்டுக்கொள்வதில் பாதிப்பொழுது கழிந்துவிடும். (பக்.62)
தன் கல்யாணத்துக்கு மதுரையில் ஒரு ஸிந்தி கடையில் ஜவுளி எடுக்கச் சென்றார் கோபால அய்யர். இதன் காரணமாக ஒரு நாலைந்து மணிநேரம் அந்த கடையிலிருக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது அவருக்கு. உள்ளே நுழைந்ததுமே மெத்தை போட்ட பெரிய சோபாவில் அமர்ந்திருந்த தவுலத்ராமின் தோற்றம் அவரை வெகுவாகக் கவர்ந்துவிட்டது. மேலே மின்விசிறி சுழல தவுலத்ராம் ஒரு பெரிய சுருட்டைப் பல்லால் கடித்துப் பிடித்துக்கொண்டிருந்தார். கழுத்தில் போட்டிருந்த மெல்லிய தங்கச் செயின், பித்தான் போடாத வாயில் ஜிப்பாவின் வெளியே தொங்கிக் கொண்டிருந்தது. கண்கள் இரண்டிலும் செவ்வரி படர்ந்து கிடந்தது. அந்தச் சிவப்புக்கு என்ன அர்த்தம் என்பது கோபால அய்யருக்குத் தெரியும். இருந்தும் ஏதோ எண்ணெய் ஸ்நானம் செய்துவிட்டு வந்து உட்கார்ந்துகொண்டிருப்பது மாதிரி ஒரு நிதானம். நிதானமான பேச்சு; நிதானமான செய்கை.
கண்கள் இரண்டும் சுழன்று சுழன்று பத்து இடம் பார்த்தன. கை பணம் வாங்கிப்போடுகையில் மனசு பில் தொகையைக் கூட்டிக்கொண்டிருந்தது. போனில் பேசுகிறபோது தொண்டை சிரித்தது; முகம் சுளித்து ஏவலுக்குச் சமிக்ஞை காட்டியது; கடைப்பையனைக் கண்கள் முறைத்தன; நடுவில் வாடிக்கைக்கு ஒரு புன்முறுவல்; பாப்பாவுக்கு ஒரு கண் சிமிட்டல். ஒரு குழந்தை அழ, அவர் ஒரு சிறு பையனைப் பார்த்து முகஞ்சுளிக்க, அவன் வெளியே சென்று ஒரு பொட்டலம் பிஸ்கோத்துுடன் திரும்பி வருகிறான். நாள் பூராவும் அங்கேயே உட்கார்ந்து அவரையே கவனித்துக்கொண்டிருப்போமா என்று தோன்றியது கோபால அய்யருக்கு. திடீரென்று பம்பாயிலிருந்து போன் வந்தது. தவுலத்ராம் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். அவர் பேசிய தோரணை அவர் மனசைச் சொக்க வைத்துவிட்டது. ‘மன்னன், மன்னன்’ என்று மனசுக்குள் சொல்லிக்கொண்டார். (பக்.153)
நாவலில் ஓரிடத்தில் கால்பந்து போட்டியைக் காண வரும் மகாராஜா போட்டியை பார்த்துக் கொண்டிருக்கும்போது கண்ணீர் விட்டு அழுகிறார். ராஜாவின் உதவியாளர் என்னவோ ஏதோவென்று பதறியபடி வினவ, ஒரே பந்திற்காக இத்தனை பேர் ஓட வேண்டுமா? நம் நாட்டில் அவ்வளவு வறுமையா? என விசனப்படுவதாக கூறி ஆள்பவர்களின் அலங்கோலத்தைப் பகடி செய்கிறார். அதேசமயம் மக்கள் திரளைப் பார்த்து கையசைத்த ராஜா தன்னை நோக்கித்தான் கையை அசைத்தார் என மக்கள் சண்டை போட்டுக் கொள்வார்கள் என்பதன் மூலம் மக்களின் அறியாமையையும் காண்பித்து விடுகிறார். இக்காட்சிகள் இன்றளவும் மாறவே இல்லை என்பதன் மூலம் சுந்தர ராமசாமி தான் ஒரு தீர்க்கதரிசி என்பதை நிரூபித்து விடுகிறார்.
போலவே ஊழலும் அதிகாரமும் ஒன்றோடுடொன்று பின்னிப் பிணைந்தவை என்பதை
‘ நடைமுறை ஏறத்தாழ இருந்தாலும் தாளு ஒழுங்கா இருக்கணுமில்ல’ என்று முனிசிபாலிட்டி தலைவரும் அவரின் காரியதரிசியும் பேசிக் கொள்வதன் மூலமும் மேற்சொன்ன அவரைப் பற்றிய கருத்துக்கு வலு சேர்த்து விடுகிறார்.
நாவல் வெகு நேர்த்தியாக திட்டமிடப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது என்பதை இரண்டு நிகழ்வுகளினால் அறிந்து கொள்ளலாம். முதலாவது, நாவலின் தொடக்கத்தில் வரும் காற்றாடி மரத்தோப்பின் அழிவு. அதில் புளியங்குளத்தைச் சுற்றியுள்ள காற்றாடி மரங்களை வெட்டிவிட்டு அவ்விடத்தில் பூங்கா அமைக்க முனிசிபாலிட்டி முடிவு செய்கிறது. அம்முடிவு காற்றாடி மரத்தோப்பில் தன் காலங்களை ஆனந்தமாக அனுபவித்த தாமோதர ஆசானின் இறப்பிற்கு பின் வருகிறது. அப்போது கதை சொல்லி
“…..ஆசான் மட்டும் உயிரோடுமிருந்தால், காலம் பூண்டுள்ள கோலங்களை உணராமல், தார்பாய்ச்சிக் கட்டிக்கொண்டு அன்றும் வந்து சேர்ந்திருந்தால் ஆச்சரியப்படுவதற்குமில்லை. ஆனால் இன்றோ ஒரு சாதாரண இளைஞன் எழுப்பும் சாதாரணக் கேள்வியின் முன் ஆசானின் பெத்தம் பெரிய தந்திரங்களும், ஒரு முழம் சவடால்தனமும் கலகலத்துப் போய்விடாதா? ‘தாமோதர ஆசானே, உமக்கு காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்படுவதில் விருப்பமில்லையென்றால், அடுத்த தேர்தலில் நின்று வெற்றி பெற்றுப் பூங்காவை அழித்துப் பழையபடி தோப்பாக மாற்றச் சகல உரிமைகளும் சுதந்திரமும் உமக்கு அளிக்கப்பட்டிருக்கிறது …’ என்று ஆரம்பித்து அந்த இளைஞன் பேசிக்கொண்டு போகிறபொழுது, என்ன பதில் சொல்ல முடியும் தாமோதர ஆசானால்?’ என்று கதைசொல்லி, அங்கலாய்க்கிறார்.
இரண்டாவது, நாவலின் இறுதியில் முனிசிபாலிட்டி தேர்தலில் காதரை வீழ்த்த களமிறக்கப்படும் மிட்டாய் தாத்தா.
முதலாவது நிகழ்வில் நினைவுகளாக இருப்பவர், இரண்டாவது நிகழ்வில் நிஜமாக காட்சியளிக்கிறார். ஆனால் முதலாவது நிகழ்வில் இளம் தலைமுறையின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாது மௌனமாக்கப்படுவதாக கூறப்படும் ஆசான், இரண்டாவது நிகழ்வில் வென்றாலும் பண பலத்தின் முன் துவண்டுவிடும் முதியோராக மாறிப் போகிறார். இரண்டு நிகழ்வுகளையும் ஒன்றிணைப்பது புளியமரம். அவ்வகையில் நாவல் தன் கச்சிதத் தன்மையை அடைகிறது.
சமீபத்தில் எழுத்தாளர் ஜி. கார்ல் மார்க்ஸ் தன் முகநூலில் மீள்வாசிப்பு அல்லது மறு வாசிப்பு பற்றிய தனது கருத்தை பதிவிட்டு இருந்தார்.
ஒரு புத்தகத்தை திரும்பப் படிப்பதை சில நண்பர்கள் மீள் வாசிப்பு, மறு வாசிப்பு என்று எழுதுகிறார்கள். மீள் வாசிப்பு என்பது புதிய கட்டமைப்பைக் கோருவது. ஒரு நூலைப் பற்றிய புரிதலில் புதிய உடைப்பை ஏற்படுத்துவது. மறு வாசிப்பு என்பதும் அத்தகையதுதான். முந்தைய சொல்லாடலுக்குப் புதிய விளக்கங்கள் பெற்று அதைப் புதிய நோக்கில் முன்வைப்பது மறுவாசிப்பு.
வெறுமனே வாசிப்பின்பத்திற்காக ஒரு நூலை நாம் திரும்ப வாசிக்கிறோம் என்றால் அது மீள் வாசிப்போ மறு வாசிப்போ அல்ல. திரும்பப் படிப்பது மட்டுமே!
அவர் சொன்னது போலவே நாவலில் நான் நிறைய உள்ளார்ந்த விஷயங்களை அறிந்து கொண்டேன். இந்நாவலை சென்ற வருடமே வாசித்திருந்தாலும் இவ்வருடம் மீள்வாசிப்பு செய்யும் பொழுது ஒரு நாவல் எவ்வாறு வளர்கிறது? வளர்த்தெடுக்கப்படுகிறது? அந்நாவலின் சுவாரசியத்திற்காக எவை எவை புகுத்தப்படுகின்றன? என்பவை எல்லாம் என் கண் முன்னே மொக்குகள் மலர்ந்து மதுரங்களைச் சொரிவது போன்றான காட்சியமைப்பை உருவாக்கித் தந்தன.
காற்றாடி மரத்தோப்பு அழிக்கப்பட்டு பூங்காவாக மாற்றப்படும் நான்காவது அத்தியாயத்தில் முதியவர்களின் ஒவ்வொரு அசைவையும் கவனித்து எழுதியிருக்கிறார். அந்த அத்தியாயத்தின் சிறப்பம்சமே அதுதான். அவர்களுக்கு பயன்படுத்தி இருக்கும் உவமைகளும் அட்டகாசம். நரைத்த குடை, ஒத்துக் கொள்ளாத சீதோஷ்ண நிலை, யுவதிகளை ஏக்கத்தோடு கவனித்தல், பொடி போடுதல் என தொடங்கும் அந்த அத்தியாயம் அடுத்த பத்தியில் அவர்களின் நிதர்சனத்தைப் பேசி நாம் அடையப் போகும் வயோதிகத்தின் உண்மை முகத்தை காட்டி விடுகிறது. அதிலும் இவ் வரிகளை வாசிக்கும் பொழுது மனதை கல்லாக்கிக் கொண்டே வாசிக்க வேண்டும். அதில் நகைச்சுவை மெல்லியதாக இழையோடினாலும் அது நாம் அடையப்போகும் உண்மை என்பதால் அதனை எதிர்கொள்வது மிகுந்த கனமாகி விடுகிறது.
“… மகத்தான தோல்விகளை மறைக்க, அற்ப வெற்றிகளைப் பறைசாற்றிக்கொள்ளும் பலஹீனம் பரஸ்பரம் அம்பலமாகி, வெட்ட வெளிச்சமாகிவிடுகிறபொழுது ஒருவர் முகத்தை மற்றொருவர் பார்த்துக்கொள்வதே வெட்கமாயிருக்கிறது அவர்களுக்கு. இருந்தாலும் அவர்கள் சிரித்துக்கொள்கிறார்கள். உரக்கச் சிரித்தால் இருமல் குறுக்கிட்டுவிட்டால், இருமல் குறுக்கிட்டு விடாமல் எவ்வளவு என் தூரம் உரக்கச் சிரிக்க முடியுமோ அவ்வளவு தூரம் உரக்கச் சிரிக்கிறார்கள். நீரிழிவு அல்லது ரத்த அழுத்தம் ஆகிய இரண்டு நோய்களில் குறைந்தபட்சம் ஒன்றிற்காவது ஆளாக்கப்பட்டவர்களுக்கு அலங்காரக் குளத்தண்டை பெஞ்சுகளில் இருக்கை அளிக்கப் படமாட்டாது என்று தங்களுக்குடைய பழைய ஹாஸ்யத்தை அடிக்கடி சொல்லி எல்லோரும் சேர்ந்து சிரித்துக்கொள்கிறார்கள். கடவுளின் பயங்கர ஏமாற்றத்திற்குக் குறைந்தபட்சம் அவரிடமிருந்து திடீர் மரணம் எனும் அதிர்ஷ்டப் பரிசு ஒன்றேனும் லபிக்குமெனில் இழக்கப்பட்ட துரோகமனைத்தையும் மறந்து கருணாமூர்த்தியென அவனைப் போற்றச் சித்தமாகியிருப்பது அவர்கள் பேச்சில் வெளிப்படுகிறது. சகாக்களில் எவருக்கேனும் திடீர் மரணத்துக்குச் சீட்டு விழுகிற பொழுது, ‘கடவுளே எனக்கும்’ என்று அவர்கள் மனம் நெகிழ்ந்து பிரார்த்தனை செய்கிறார்கள்.( பக்.92)
ஒரு புளிய மரத்தைக் கொண்டு அதை சுற்றிலும் வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்களின் ஏற்ற இறக்கங்களை, அவர்களின் மன இயல்புகளை இயல்பாகப் பேசுகிறது நாவல். நாவலின் மாபெரும் பலம் மற்றும் செவ்வியல் தன்மைக்கு அப்படிப் பேசும் மனிதர்களின் நிஜ வாழ்க்கைகள் துணை புரிகின்றன. அதை அப்படியே வாசகனுக்குக் கடத்துவதில் சுராவின் எழுத்துகள் பெரிதும் துணை நிற்கின்றன. நாவல், கதை சொல்லியின் வழியாகவே நீள்கிறது. ஆகையால்
அவருக்கு தெரிந்த அல்லது தெரியாத விஷயங்கள் என நம்மை நம்ப வைப்பதில் பெரிய வேறுபாடுகளை கொண்டிருக்கிறது. தாமோதர ஆசான் அடிக்கடி ஊரைவிட்டு வெளியே சென்று விடுகிறார். கதை சொல்லிக்கும் கதைக்களத்திற்கும் அவரின் அச்செய்கை தேவையில்லை. அதனால் நாவலில் அவற்றிற்கு இடமில்லை. ஆனால் அப்துல் காதரின் கடையும் அவன் வளர்ச்சியும் கதைக்கு தேவைப்படுகிறது. அதனால் அவனின் அத்தனை போக்குகளும் நாவலில் இடம்பெறுகின்றன. அதிலும் அவனைத் தெரிய வைப்பதற்காக வரும் கோபால அய்யர் பகுதிகள் மனித நிஜங்களின் உண்மையான பக்கங்கள். மேலும் காதருக்கும் தாமுவிற்குமான விரோதத்திற்கான காரணம் காலங்காலமாக நாம் கேள்விப்படும் தொழில் போட்டியும், பொறாமையும்தான். அது நாவலில் விவரிக்கப்பட்டுள்ள பாங்கு சுரா எனும் மொழி ஆளுநரின் சூட்சுமத்திற்கான அடையாளம். அதனாலேயே இந்நாவல் காலத்தினை வெற்றி கொள்கிறது.
மேலும் அதிகாரம் தன் பலத்தை பிரயோகிக்கும் போது அடிபடுவதென்னவோ அப்பாவிகளே. இந்நாவலிலும் அத்தகைய நிகழ்வுகள் இடம்பெறுகின்றன. நாற்றமடிக்கும் குளத்தை நிரப்ப ‘பறையன் குன்று’ காணாமல் ஆக்கப்படுகிறது. போலவே தனிமனித காழ்ப்புகளுக்கு எதிர்த்து கேள்வி கேட்க முடியாத புளிய மரம் மாண்டு போகிறது.
நாவலின் மொழி சுவாரஸ்யமெனில் அதனூடே வெளிப்படும் பகடி அதற்கு கூடுதல் சிறப்பாகிறது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் அது, அதிமதுர இலையை மென்றபின் அருந்தும் நீரின் சுவையாய் இனிப்பைக் கூட்டுகிறது. நாவலை மிகப் பிடிப்பாக வாசிக்க இவை பிணைப்பை ஏற்படுத்துகின்றன.
நாவலில் எனக்கு முரணாகப்பட்ட ஒரே விஷயம் வழக்கமாக வட்டார வழக்குகளை பேசிக்கொள்ளும் தாமுவும் முனிசிபில் தலைவர் எம். சி. ஜோசப்பும் புளியமரம் வெட்டுப்படுவது பற்றிய உரையாடலில் வட்டார வழக்கைக் கைவிட்டு சுத்தத் தமிழில் பேசுவதே. உணர்ச்சிப் பெருக்கான உரையாடலில் பெரும்பாலும் வட்டார வழக்கே கையோங்கும். ஆனால் இங்கு அது மாற்றி அமைக்கப்பட்டு இருப்பதன் நோக்கம் புரியவில்லை.( பக்.241)
மொத்தத்தில் மனிதன் ஒரு பயந்தாங்கொள்ளி, பம்மாத்துக்காரன், கோழை, தன்னைவிட வலிமைக்குன்றியோரிடமே தன் பலங்களை பிரயோகிப்பவன். சந்தர்ப்பவாதி. யோசிக்க, சிரிக்க மற்றும் சூழ்ச்சிகளை எண்ணும் மிருகம். கீழ்மைகளால் ஆக்கப்பட்டு மேன்மையாக வாழும்படியான போலி பகட்டுக்காரன் என்பதை வாழ்வாங்கு வாழ்ந்து எதிர்த்து சண்டையிடாத முடியாத இயலாமையால், இல்லாமையால் மாண்ட புளிய மரம் உணர்த்தும் செய்தி.