புத்தக பெயர்: ஆலயம் எவருடையது
எழுத்தாளர் : ஜெயமோகன்
சமீபத்தில் ஜெமோ அவர்களின் தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் நூல் வாசித்ததில் இருந்து என்னுடைய பல ஆண்டு மெய் தேடல் ஆன ஆன்மீகம் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வத்துடன் இருந்த நான். இந்த தலைப்பு ஆலயம் எவருடையது பார்க்கும் போது சாதாரணமாக தெரிந்தாலும் அதனுள் பல அர்த்தங்கள் இருக்கும் என்ற நம்பிக்கை உடன் தான் வாங்கி வாசிக்க ஆரம்பித்தேன். ஆலயத்தை பற்றிய புரிதலை நிறையவே என்னுள் கொண்டு வந்தது என்று தான் சொல்ல வேண்டும். அது வாசிக்கும் எல்லாருக்கும் கிடைக்குமா என்றால் தெரியல, ஆனால் தேடுபவருக்கு நிச்சயம் அவர் தேடுவதன் விடை கிடைக்கும்.
வழிபாட்டிடங்கள் பலவகையானவை. ஒன்று மரபான வழிபாட்டிடங்கள். இரண்டு மரபிலிருந்து கிளைத்தெழும் வழிபாட்டிடங்கள். மரபிலிருந்து கிளைத்தெழும் வழிபாட்டிடங்கள் ஏராளமாக உண்டு. கோவையில் ஜக்கி வாசுதேவ் உருவாக்கியிருக்கும் லிங்கபைரவி கோயில் ஓர் உதாரணம். முன்பு வள்ளலாரும், நாராயணகுருவும் உருவாக்கிய ஆலயங்கள் உதாரணம். அத்தகைய கோயில்கள் அதை உருவாக்குபவரின் தத்துவதரிசனம், தவ வல்லமை ஆகியவற்றால்தான் முக்கியத்துவம் பெறுகின்றன.
மரபான கோயில்கள் பலவகை. ஆகமமுறைப்படி அமையும் கோயில்கள் உண்டு. தாந்த்ரீக முறைப்படி அமையும் கோயில்கள் உண்டு. கேரளக்கோயில்கள் தாந்த்ரீக முறைப்படி அமைந்தவை. தமிழக கோயில்கள் ஆகமமுறைப்படி அமைந்தவை.ஆகமமுறைப்படி அமையும் கோயில் என்றால் எந்த ஆகமம் என்பது முக்கியமானது. அந்த ஆகமப்படி எந்தப்பிழையும் இல்லாமல், எந்த மீறலும் இல்லாமல்தான் கோயில் கட்டப்படவேண்டும். ஆகமங்களில் ஆழ்ந்த பயிற்சியும், நம்பிக்கையும் உள்ள சிற்பியால் மட்டுமே கோயில் வடிவமைக்கப்படவேண்டும்.
ஒரு கோயில் கட்டுவதில் இவ்வளவு நுட்பமான விஷயங்கள் இருக்கா என்பது வாசிக்கும் போது ஒரு வியப்பையே தருகிறது.
ஓர் ஆலயம் எப்படி உருவாகிறது? அது முதலில் ஞானமாகவே உணரப்படுகிறது. பின்னர் தத்துவமாக விளக்கப்படுகிறது. பின்னர் வழிபாட்டுமுறைகளாக, [அனுஷ்டானங்களாக] வகுக்கப்படுகிறது. இம்மூன்றுநிலைகளிலும் அது கருத்து வடிவில் இருக்கிறது. ஒர் உயிர் கருத்துவடிவமாக இருப்பதுபோல.
சிற்பி ஆலயத்தை கட்டி முடித்ததுமே அதிலிருந்து விலகிவிடவேண்டியவர். அந்த ஆலயம் பருவடிவில் இருந்து மீண்டும் கருத்துவடிவாக ஆக்கப்படுகிறது. அதன்பின்னரே அது ஆலயம், வழிபடப்படுகையில் அது கட்டிடம் அல்ல. ஒரு கருத்துநிலையின் ஒரு மெய்யறிவின் கண்ணால் பார்க்கக்கூடிய வடிவம் அது. அந்த ஆலயத்தை கட்டிக்கொண்டிருக்கையில் சிற்பி மூலச்சிலைமேல் ஏறி அமர்ந்து செதுக்கலாம்.
கொடிமரத்தின் மேல் அமர்ந்து வெற்றிலைபோட்டுக் கொள்ளலாம். ஆனால் அது கருவடிவாக மீண்டும் மாற்றப்பட்டுவிட்டபின் அவருக்கு அதில் உரிமை இல் லை. அது வெவ்வேறு அனுஷ்டானங்களுக்கு கட்டுப்பட்டது. வழிபாட்டு முறைகளுக்கு உரியது. அந்தந்த அனுஷ்டானங்களையும் வழிபாடுகளையும் எவரும் மீறமுடியாது. ஆலயம் கண்ணால் கண்டு, கருத்தால் உணர்ந்து, நுண்ணுணர்வால் உள்வாங்கிக் கொள்ளவேண்டிய ஒரு தரிசனம்.
இந்து ஆலயங்கள் வெறும் வழிபாட்டு இடங்கள் மட்டுமல்ல. அவை வரலாற்றுச் சின்னங்கள், பண்பாட்டு மையங்கள். அவை வரலாற்றுச் சின்னங்கள் என்றால், பண்பாட்டு மையங்கள் என்றால் இந்திய மக்கள் அனைவருக்கும் அதில் உரிமை உள்ளது. பொறுப்பும் உள்ளது. அதற்கப்பால் மானுடகுலத்திற்கே அதில் உரிமையும் பொறுப்பும் உள்ளது.
வாசிக்க வாசிக்க புத்தகம் விரிந்து கொண்டே செல்கிறது. நமக்கு நிறைய கேள்விகள் மனத்தில் இருக்கும் சந்தேகங்களுக்கு விடையாக உள்ளது. திறந்த மனதுடன் இந்நூலை வாசித்தால் நிறைய அறிந்து கொள்ள விடயங்கள் உண்டு.