புத்தகம்: கோபல்லபுரத்து மக்கள்
ஆசிரியர்: கி.ராஜநாராயணன்
மாதொரு பாகனை வாசித்தால் அடுத்த இரண்டு புத்தகங்களை வாசிக்க வேண்டும் எனத் தோன்றுவது போல், கோபல்ல கிராமம் வாசித்ததை தொடர்ந்து இந்த நாவலையும் வாசித்தேன். சாகித்திய அகாதெமி விருது பெற்ற இந்நாவல் இரண்டு பாகங்களாக எண்ணற்ற பல தகவல்களை நமக்கு அளிக்கிறது.
கோபல்ல கிராமம் நாவலில் புலம் பெயர்ந்த மக்கள் பற்றியும், காட்டை சீர்படுத்தி வாழ உகந்த இடமாக உருவாக்கியதை பற்றியும் அறிந்தோம். இந்நாவலில் உறவுகள் பற்றியும், நம் நாடு விடுதலை பெறுவதற்கு முன்னிருந்த நிலை பற்றியும் அறியலாம்.
அச்சிந்திலு, கிட்டப்பன் இரு வீட்டாரும் உறவினர்கள். ஒருவரையொருவர் திருமணம் செய்து கொள்ளும் முறை இருந்தும் சிறு மனக்கசப்பால் குடும்பம் பிரிகிறது. இருவரும் வெவ்வேறு நபர்களை திருமணம் செய்து கொள்கின்றனர். அச்சிந்திலு கணவன் எதிர்பாராமல் இறந்துவிட, தனி மரமாகிறாள். கிட்டப்பன் தன் மனைவியுடன் ஏற்பட்ட சண்டையால், அவள் கோபித்து கொண்டு அம்மா வீட்டிற்கு சென்று விடுகிறாள்.
இவனும் தனித்திருக்க, ஒரு கட்டத்தில் இருவரும் ஒருவருக்கொருவர் நேசித்து சேர்ந்து வாழ்கின்றனர். இருவரும் இணைவதோடு முதல் பாகம் முடிவடைகிறது. ஊர் திருவிழா, கிட்டப்பனின் வீர செயல்கள், கோவில் மாடு, காளை காரி பற்றிய விவரணை, வழிப்பறி கொள்ளையர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி பற்றிய பல தகவல்களை அறியலாம்.
இரண்டாம் பாகம் முழுவதும் தகவல் பெட்டகம் என்றே சொல்லலாம். ஆங்கிலேயர்களின் வருகையால் ஏற்படும் மாற்றங்களை சொல்லி, கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் விழிப்படைந்து அவர்களை எதிர்க்கும் மன நிலைக்கு வருவதை கதையினூடாக சொல்லி செல்கிறார். தேயிலை அறிமுகத்தில் ஆரம்பித்து சீமை எண்ணெய் என மண்ணெண்ணெய் உபயோகிக்க ஆரம்பித்தது, தீப்பெட்டி, பேட்டரி விளக்கு என்றழைக்கும் டார்ச் லைட் உபயோகம், சுவர் கடிகாரம், இங்க் பேனா அறிமுகம், இரயில் வண்டியின் வருகை என பல்வேறு நவீன உபகரணங்கள் பற்றியும், அதை மக்கள் எப்படி எதிர் கொண்டனர் என்பது பற்றியும் வாசிக்கையில் இன்று நமக்கு சாதாரணமாக தெரிபவை, அக்காலத்தில் மக்கள் கொண்டாடுபவையாக இருந்துள்ளது என்பதை அறிய முடிகிறது.
மக்களின் மனநிலை மட்டும் மாறாமல் சாதி வேற்றுமை பார்த்துக் கொண்டிருந்ததை, ஒடுக்கப்பட்ட இனத்தை சேர்ந்த தாசில்தாருக்கு ஊருக்குள் வாழ அனுமதி மறுத்ததில் அன்றைய சமூகத்தை காட்டி கதை நகர்கிறது. சுதந்திரம் வேண்டி சிறைக்கு சென்ற பகத்சிங், கொடி காத்த குமரன் மரணம், சுபாஷ் சந்திரபோஸ் எதிர்ப்பு, கள்ளுக்கடை மறியலை ஒட்டி கிராமத்து இளைஞர்களும் அதை செயல்படுத்துவது, நாளிதழ்கள் மற்றும் வானொலி மூலம் செய்திகளை தெரிந்துக் கொண்டு அதைப் பற்றி விவாதிப்பதென கதையை ஒட்டி கொண்டு செல்வது அருமை.
வழிப்போக்கனாக ஊருக்கு வந்து சேர்ந்த மணி என்ற நபர் மூலம் இரண்டாம் உலகப் போர் பற்றியும், அதில் ஈடுபடுத்தப்பட்ட இந்திய வீரர்கள் பற்றியும், அந்தமான் சிறைச்சாலை, கப்பல் மாலுமிகளின் போராட்டம் பற்றியும் விவரித்து, பின் இந்தியா சுதந்திரம் அடைந்த போது மக்கள் கொண்டாடிய விதத்தையும் விளக்கியுள்ளார். இறுதியில் காந்தியடிகளிடம் சுதந்திரம் பற்றி நிருபர்கள் வினவுவதோடு கதை முடிகிறது. இந்த புத்தகத்தை வரலாற்று ஆவணம் என்றே கூறலாம். ஒருமுறையேனும் அனைவரும் வாசிக்க வேண்டிய புத்தகம் இது..