சில பாதைகள் சில பயணங்கள் - புத்தக விமர்சனம்!

By செய்திப்பிரிவு

பட்டிமன்றம் புகழ் பாரதி பாஸ்கர் அவர்களை பற்றி பெரும்பான்மையான மக்கள் அறிந்திருப்பர். மேலும் யூடியூப் சேனலில் பல எழுத்தாளர்களின் புகழ்பெற்ற கதைகளை அவருக்கே உரித்தான பாணியில் வாசித்தும் வருகிறார். குறிப்பாக எழுத்தாளர் சூடாமணி அவர்களின் கதைகளை வாசிக்கும்போது அவரது குரலில் கூடுதல் நெகிழ்விருக்கும். அவரது எழுத்தில் நான் வாசிக்கும் முதல் புத்தகமிது. அவரது ‘சில பாதைகள் சில பயணங்கள்’ புத்தகம் பற்றி காண்போம்.

பெண்கள் பற்றிய உத்வேகம் ஊட்டும் தன்னம்பிக்கைத் தொடர் என கூறலாம். மங்கையர் மலர் பொறுப்பாசிரியர் அனுராதா சேகர் அவர்கள் ஒரு தொடர் எழுத கேட்டுக் கொண்டதாகவும் அதற்கு இசைந்து இவர் எழுதியதாக இப்புத்தகத்தின் பின்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மொத்தம் 20 கட்டுரைகள் அடங்கிய தொகுப்பிது. ஒவ்வொரு கட்டுரையும் யாரோ ஒரு பெண்ணின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை குறிப்பிட்டு அதிலிருந்து ஒரு படிப்பினையை, ஒரு கருத்தை எடுத்து முன்வைக்கிறார்.

நிர்பயா டில்லி சம்பவத்தை குறிப்பிடாமல் இருக்க முடியுமா. அந்த பெண்ணின் அஸ்தி கங்கையில் கரைக்கப்பட்ட தினத்தில் தான் இக்கட்டுரையை எழுத ஆரம்பித்துள்ளார். அவளது கொடுரமான மரணத்திற்கு இந்த சமூகம் என்ன பதில் சொல்ல போகிறது.

கேரளாவின் தாத்திரிக்குட்டி என்ற விதவை பெண்ணின் வாக்குமூலம் தான் நம்பூதிரிகளின் ஸ்மார்த்த சபை என்ற அமைப்பே ஆட்டம் கண்டு, தனது கோட்பாடுகளை தளர்த்தி, பின் நிரந்தரமாக கைவிட்டுள்ளது.

இங்கிலிஷ் விங்லிஷ் படத்தில் கதாநாயகி தனது குடும்பத்து நபர்களாலேயே அவமானப்படுத்தப் படும் விதத்தை சுட்டிக்காட்டி, அதிலிருந்து மீள எப்படி தன்னை தயார்படுத்திக் கொள்கிறாள் என்று சினிமாவையும் உதாரணமாக காட்டுகிறார். கூடவே சாவித்திரி என்ற பெண்ணின் மன தைரியத்தையும் குறிப்பிடாமலில்லை. ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் சாவித்திரியை குண்டம்மா என்றும் வண்டி உடைந்து விடும் என்றும் பலர் கலாய்த்த போதும் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் வண்டி ஓட்ட கற்றுக் கொள்வதில் முனைப்புடன் இருந்ததை படிக்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

சின்னதாய் ஏதேனும் கேலி செய்தால் கூட மனம் கூம்பி போகும் பலருக்கு.
ஆதரவற்ற முதியோர்களுக்காக விஷ்ராந்தி என்ற அமைப்பை தொடங்கிய சாவித்திரி வைத்தி அம்மாள், தன்னை நிராகரித்த சொந்தங்கள் தன்னிடம் உதவி கேட்டு வரும்போது மனதில் பழைய சம்பவங்கள் எதையும் எண்ணாமல் கைகொடுக்கும் லஷ்மி அத்தை, மதுரையை ஆண்ட ராணி மங்கம்மாள், கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினரான பார்வதி கிருஷ்ணன், குடிப்பழக்கத்திலிருந்து மீள விரும்புபவர்களுக்கான மறுவாழ்வு மையத்தை ஏற்படுத்திய சாந்தி ரங்கநாதன் போன்ற பல பெண்களை பற்றி இக்கட்டுரைகள் மூலம் அறிய முடிகிறது.

நாயகி என்ற அமைப்பின் சமீபத்திய நிகழ்வொன்றில் எழுத்தாளர் சிவசங்கரி அம்மாவின் இலக்கிய பயணம் பற்றிய உரையை செந்தில் ஜெகன்நாதன் பேசும்போது அதில் குடிப்பழக்கத்தால் வரும் தீமைகளை சிவசங்கரி அவர்கள் தன் கதைகள் மூலம் எழுதுவதோடு மட்டுமல்லாமல் களத்தில் நேரடியாக இறங்கி பல ஆக்கப்பூர்வமான செயல்களில் ஈடுபட்டுள்ளார் என்பதை தெரிந்து கொள்ள முடிந்தது. அவரைப் பற்றி பாரதி பாஸ்கர் எதுவும் குறிப்பிடாமல் விட்டது வருத்தமாக இருந்தது.

ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு இழப்பீடு வாங்கி தர சுப்ரீம் கோர்ட்டுக்கு அலைந்து மூன்று இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவை பெறுவது சாதாரணமா? அதை நிகழ்த்தி காட்டிய பெண்களைப் பற்றி அறிந்து கொள்ள இந்த புத்தகத்தை வாசியுங்கள். இந்த ஆசிட் வீச்சால் பாதிப்படைந்த சில பெண்களின் கதைகளை பற்றி வாசிக்கும் போது பதைபதைக்க செய்கிறது.
மேலும் விளையாட்டில் சாதித்த பெண்கள் குறித்த கட்டுரையில் பில்லி ஜீன் கிங் பற்றிய பதிவு சுவாரசியமாக இருந்தது. இவரைப் பற்றி யூடியூப் சேனலில் வெளிவந்த Battle of the Sexes Tennis match ஐ பாத்தால் புரியும்.
இலக்கியத்தில் பெண்கள் பங்காற்றியதை இரண்டு மூன்று இடங்களில் வெவ்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ளார். எழுத்தாளர் சூடாமணி அவர்கள் சந்தித்த போராட்டங்களையும் அதிலிருந்து மீள இலக்கியம் எப்படி கைகொடுத்தது என்றும் எழுதியுள்ளார். சங்க காலத்தில் வாழ்ந்த 41 பெண் கவிஞர்கள் பற்றியும் அதன்பிறகு வந்த காரைக்கால் அம்மையார், ஆண்டாள் மற்றும் ஔவையார் போன்றவர்களின் திறமையையும் குறிப்பிட்டுள்ளார்.

தேவதாசி முறையை ஒழித்த டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, முதன்முதலில் சமையல் குறிப்புகள் அடங்கிய சமைத்துப் பார் என்ற புத்தகம் எழுதிய மீனாட்சி அம்மாள், வீணை தனம்மாள், ஆட்டிஸம் போன்ற சிறப்பு குழந்தைகளுக்கான ஆரம்ப பள்ளியை நிறுவிய பூனம் நடராஜன் மற்றும் ஆண் மருத்துவர்களை பிரசவம் பார்க்க அனுமதிக்காமல் உயிர் நீத்த பெண்களின் பிரசவ வலியை உணர்ந்து தன் வாழ்க்கையை மருத்துவத்திற்காக அர்பணித்த ஐடா ஸ்கடர் போன்றவர்களின் கதைகளை வாசிக்கும்போது எப்படியெல்லாம் ஆத்மார்த்தமாக சேவை செய்துள்ளார்கள் என்பது புலனாகிறது.

சாதித்த பெண்களை பற்றியும் பாதிப்படைந்த பெண்கள் பற்றியும் மட்டும் எழுதாமல் இடையிடையே இவரது வாழ்க்கையில் நடந்த சில சம்பவங்களையும் இவருக்கே உரித்தான பகடிகளோடு எழுதியது ரசிக்கும்படியாக உள்ளது. இவரது மகள்களுடன் இரயிலில் பயணம் செய்தபோது சந்தித்த ஒரு நண்பரை பற்றி எழுதியது வியக்கவும் வைத்தது. சிவப்பு விளக்கு பகுதியில் உள்ள ஆதரவற்ற பெண்களின் குழந்தைகளை, குறிப்பாக பெண் குழந்தைகள் அதே தொழிலுக்கு போவதை தடுக்கும் வகையில் அவர்களுக்கு கல்வி அளிக்கும் சேவையை செய்து வரும் தன்னார்வலரான அந்த நண்பரை சந்தித்த அனுபவத்தை உணர்ச்சிபூர்வமாக எழுதியிருந்தார்.

மேலும் திருமணத்திற்கு பிறகு குடும்பத்திற்காக தன் வேலையை விட்டு சுயத்தை இழந்து அவர்களின் நலன் ஒன்றையே நினைக்கும் பெண்களை சாடுகிறார். ஆமாம், அந்த வயதில் தெரிவதில்லை. நாற்பதுகளுக்கு மேல் பிள்ளைகள் தங்கள் கனவை நோக்கி ஓட ஆரம்பித்த பிறகே தனிமை தெரிய ஆரம்பிக்கிறது. அப்போது டிவி, புத்தகங்கள் போன்றவை கைகொடுத்தாலும் நமக்கென்ற ஒரு அடையாளத்தை இழந்து விட்டோமே என எண்ணத் தோன்றுகிறது. இப்போதைய தலைமுறை பெண்கள் அந்நிலைக்கு செல்ல மாட்டார்கள் என்பது அவர்களது இடைவிடாத தேடல்கள் மூலம் தெரிகிறது.

அனைவரும் ஒருமுறை வாசிக்க வேண்டிய புத்தகம்..

புத்தகம்: சில பாதைகள் சில பயணங்கள்
ஆசிரியர்: பாரதி பாஸ்கர்
பக்கங்கள்: 144

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE