வாடிவாசல் புத்தக விமர்சனம்

By செய்திப்பிரிவு

சி சு செல்லப்பா

மாதம் ஒரு மகத்தான நாவல் 1

காதலாலும் வீரத்தாலும் நிறைந்தவை தான் சங்க இலக்கியங்கள்.

ஆண் காதலுக்காக மடலேறவும் தயங்க மாட்டான். வீரத்திற்காக ஏறு தழுவவும் தயங்க மாட்டான்.

"மாடு பிடிமாடு"

"மாடு பிடிமாடு" என்கிற நேரலை வர்ணனைகளில் லயித்து, கொம்பைப் பிடித்து, திமிலைத் தழுவி காளையின் தவ்வலோடு தானும் தவ்வி களத்தில் ஜெயிக்கிற ஆண்மகனைக் கண்டு எத்தனை உவகை கொள்கிறோம் இன்றும்.

அதுதானே மனிதனுக்குள்ளே அடங்கிக் கிடக்கும் சுபாவமான மிருக வெறி வெளிப்படும் தருணம்.
அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நமக்குள் ஏற்றி வாடிவாசல் வழியே களத்துக்குள் நகர்த்தி விடுகிறது கதை.

தொழுவில் நிறைந்த காளைகளும், வாடிவாசலில் காத்து நிற்கும் வீரர்கள், சுற்றிலும் கூடி நிற்கும் ஜனங்கள், அங்கே கேட்கும் பேச்சுக்கள் என அந்த இடத்தை கண்முன்னே நிறுத்துகிறது ஆசிரியரின் எழுத்து.

காளையின் பார்வையிலிருந்து எவரும் யோசிப்பதாகத் தெரியவில்லை. வீரன் சுற்றிப் பிடிக்கும் திமிலோடு திமிறிக்கொண்டு துடிக்கிறது பார்ப்பவர் உள்ளங்களும்.

கிழவனின் நிதானமான நைச்சியமான பேச்சு முதலில் வாசிக்கும்போது, ஜல்லிக்கட்டு நடக்கிற பரபரப்பு இல்லாமல் வீ கே ராமசாமி பேச்சு போல வளவளக்கிறது. பிச்சி யாருடைய மகன் என்று கிழவனுக்கு பொறிதட்டியதுமே வேகமெடுக்கிறது கதை.

சி சு செல்லப்பா என்ன கட்டமைப்பைக் கொண்டுவருகிறார் எழுத்தில் என்றால்...
பில்லைக் காளை, கொராலு, பின் காரிக்காளை மூன்றும் தொழுவை விட்டு வெளியேறும் போதும் கதையின் வேகம் சீராக பாய்ச்சல் அங்கங்கே கூடுகிறது.

ஹரி படம் போல ஆரம்பம் முதல் பரபரப்பாக வைக்காமல் பேசிப்பேசி அந்தக் கிழவன் வழியே நம்மை முழுசாக கதைக்குள் இழுத்துச் செல்கிறார்.

-பிச்சிக்கு அப்பனைக் கொன்ற காரிக்காளையை அடக்கிவிட வேண்டும்
-ஜமீனுக்கு யாரும் அடக்க முடியாத காளையில் உருமால் எனக் கட்டிக் கிடக்கிறது கௌரவம்.
ஒரே சமூகம் சாதியில் பிறந்த இருவருக்கும் இடையில் காசு என்கிற பெரிய சுவர் நிற்கிறது.
ஜமீன் முட்டுக்கொடுக்கிறார்.

பிச்சி முட்டிப்பார்க்கிறான்.
ஜனங்கள் எல்லோரும் காரி அடக்கப் படுவதை ஜமீனை ஜெயிக்கும் அம்சமாகவே எடுத்துக்கொள்கிறார்கள்.

அதனால்தான் கிழவன் வெளியூர்க்காரன் ஜெயிக்க உள்ளூர் செல்லாயியை வேண்டிக் கொள்ளச் சொல்கிறார் .

அவ்வப்போது குறிப்புகள் கொடுக்கிறார்.
அவர் வாய்மொழி உரையாடலைக் கொண்டே களத்தை விவரிக்கும் விதம் சிறப்பு.
முருகு என்ன தந்திரோபாயம் செய்தாலும் வெற்றியை மட்டுமே மண்டைக்குள் நிறுத்திக் கொண்டு களமாடும் பிச்சிக்கு பயமோ ,தயக்கமோ இல்லை.

மருதனை வைத்துக் கொண்டு ஆட்டம் காட்டும் இன்னொரு காளையாகவே களத்தில் நிற்கிறான் பிச்சி.

மனுஷன் இதை விளையாட்டாக நினைத்தாலும் மிருகத்திற்கு அது தெரியாது என்கிற சி சு செல்லப்பாவின் வரி எவ்வளவு உண்மை.

காளை இத்தனை பேர் சுற்றி நின்று மல்லுக் கட்டுவது எதற்கென்றே புரியாமல் அதன் இயல்பான குணத்தைக்கொண்டு முட்டித் தூக்குகிறது.

மனிதன் தான் இயல்பை விட்டு மிருக குணத்தை கையாண்டு அதனை அணைகிறான்.
மூன்று தவ்வலுக்கும் பிடியை விடாமல் நின்று காரிக் காளையை அடக்கிய பிச்சி ஜெயித்தானா ?
அடக்கிவிட்டோம் என்று நினைத்தவன் காலில் பொத்தல் போட்ட அந்தக் காளை ஜெயித்ததா?
தோல்வி பெற்றவனுக்கு மண்ணில் இடமில்லை என்று அதனைக் கொன்ற ஜமீனா..?

ஜமீன் மாட்டை பிச்சி அடக்கியதில் ஜமீனையே அடக்கியதாக ஆர்ப்பரிக்கும். ஊர் ஜனமா ..?
அதிகாரப் போட்டியின் அப்பட்டமான அடையாளமாக ஜமீனின் கௌரவமும் புரியாமல், அணைபவனின் வீரமும் புரியாமல் ஐந்தறிவு ஜீவன் அநியாயமாக உயிரை விடுகிறது.
இதனைக் குறுநாவல் என்றும் சொல்லலாம், சற்றே பெரிய சிறுகதை என்றும் சொல்லலாம்.
இந்தக் கதையோடே, இதை வாசிக்கும் பொழுதே நாம் கூடவே வேறு சில புத்தகத்தையும் சில தகவல்களுக்காக வாசிக்க நேர்ந்தது..

நாமே இப்படி இருக்கிறோம் என்றால் தன் ஆசிரியர் என்ன செய்திருப்பார் ?
திரு சி சு செல்லப்பா இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்பு பல ஜல்லிக்கட்டுகளை நேரில் பார்த்து, குறிப்பு எடுத்து, புகைப்படங்கள் எடுத்து சேகரித்து பின் வாடிவாசல் கதையை எழுதி இருக்கிறார். அட்டைப்படம் கூட அவர் எடுத்த புகைப்படமே.

"எழுத்து" இதழை அவர் எத்தனை சிரமப்பட்டு நடத்தினார்? எத்தனை வைராக்கியத்தோடு அதனை நடத்தினார் என்பதை படிக்க நேர்ந்தது. அமேசானில் கொஞ்ச நாட்களுக்கு முன்பு சில "எழுத்து" இதழ்களை இலவசமாக தரவிறக்கிக் கொள்ள வாய்ப்பு கிடைத்த போது மிகவும் ஆர்வமாக இறக்கி கொண்டேன். எத்தனை பேருடைய முயற்சி இந்தத் தரமான இதழ்களை கொண்டு வருவதில் இருந்தது என்பதை அதன் உள்ளடக்கத்தை பார்க்கும் பொழுது புரிந்து கொள்ள முடிகிறது.
மெல்ல மெல்ல விரிவடையும் களமும், வேகமெடுத்து பின் பதட்டத்தின் உச்சிக்கு கொண்டு செல்லும் அவருடைய கதையமைப்பு எனக்கு மிகவும் பிடித்தது.

அதே நேரம், தஞ்சையா , மதுரையா என்று அறுதியிட்டுச் சொல்லிவிட முடியாத எழுத்துமொழியோடு ஒன்ற மட்டும் கொஞ்சம் நேரம் பிடித்தது.
பிச்சிக்கு அப்பனைக் கொன்ற காளையை அடக்கி விட்ட நிம்மதி
ஜமீன்தாருக்கு கௌரவத்தை காளையைக் கொன்று காப்பாற்றிக் கொண்ட நிம்மதி.
நமக்கு நல்ல படைப்பை வாசித்த நிம்மதி.

ஆனால் காரிக்காளைக்கு ??
சில கேள்விகளுக்கு விடையே இல்லை.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE