என்னத்தையோ பறிகுடுத்த மாதிரி
ஒக்காந்திருந்தா புவனா
அவ இப்போதான் பத்தாவதுபடிக்கிறா
பள்ளிக்கொடம் போகாம லீவப்போட்டு
வீட்டுல ஒக்காந்திருந்தா"ஏன்டி?"ன்னு
கேட்டதுக்கு "ஒன்னுமில்ல"ன்னு மழுப்புனா
அவளோட அம்மா பத்துவீட்டுல
பாத்திரம் கழுவி வயத்தகழுவுறவ,
பெருசா ஒன்னும் வேலைகிடையாது
அவளோட அப்பா கோவாலு கூலிவேலை
செய்யிறவரு வாய்க்கும் கைக்கும்
போதாத குடும்பம்தான் எப்புடியோ
பொழப்பு ஓடிட்டு இருந்துச்சு
அவகிட்ட ஏதோ மாத்தம்தெரிஞ்சிச்சி
"என்னாடி?"ன்னு கேட்டா ஒன்னும் சொல்லமாட்டீங்குறா
சரி சாயங்காலம் பாத்துக்கலாம்னு
வீட்டுவேலைக்கிகிளம்புனா அம்மா.
அவ எப்போவும் மொத வீடா டாக்குட்டரம்மா
வீட்டுக்குத்தான் போவா அப்புறம்தான் மத்தவீடுக
அன்னுக்கிம் அப்புடித்தான் போனா
இவஒருமாதிரி இருக்குறதப்பாத்துட்டு
டாக்குட்டரம்மா கேட்டாக "ஏன்?"னு
இவ மகளோட வெவரத்தைச்சொன்னா
"சரிசாயங்காலமா கிளினிக்குகூட்டிவா
பேசுவோம்"னாங்க "சரி"ன்னு பகல்ல
எல்லாவீட்டுவேலையையும் முடிச்சிப்புட்டு
புவனாவக்கூப்புட்டா டாக்குட்டரம்மாவப்பாக்க
அவ "எனக்கொன்னுமில்ல"ன்னா
அப்பறம் ரெண்டுவெரசு வெரசவும் கூடவந்தா
கிளினிக்கில எல்லாரும் போனவன்ன
உள்ளகூப்புட்டாக "நீ வெளிய இரும்மா
புவனாவ நான் செக்பண்ணனு"ம்ன்னாங்க
அம்மா வெளிய காத்துருந்தா
அப்புறமா புவனா அழுதுதொடச்சமூஞ்சியோட
வெளியவந்தா அவளை டாக்குட்டரம்மா
கூப்புட்டாக டாக்குட்டரம்மா கேட்டாக
"உம்மக வெளிய ஒக்காந்து எவ்வளவு நாளாச்சி? "ன்னு
"கவனிக்கல"ம்மான்னா அம்மாகாரி
"சொல்றத அமைதியாக்கேக்கனும்சத்தம்போடப்புடாது
உம்மக கர்ப்பமா இருக்கா ஏதோ தப்புநடந்திருக்கு
அவ மழுப்புறா நீ நாளைக்கிக்காலையில
கூட்டியாந்து அட்மிட் பண்ணிடு
என்னோட தொழிலுக்கு விரோதமா
ஆனா அந்தப்புள்ள எதிர்காலத்துக்காகசெய்யனும்
கலைச்சிடலாம் நல்லவேளவயசுக்கோளால"ன்னாங்க
அம்மாவும் வாயப்பொத்தி அழுதுகிட்டுசரின்னா
மைக்காநாளு அதுமாதிரியே கூட்டியாந்து கலைச்சாச்சி
ரெண்டுநாளு அங்குனக்குள்ளயே ரெஸ்டெடுத்துட்டு
வீட்டுக்கு கூட்டியாந்தா அம்மாகாரி
அவபுருசன்கிட்ட விசயத்தசொல்லாமசமாளிச்சா
"தெரிஞ்சா கொண்ணேபோட்டுவாரு"ன்னு
இப்போ மககிட்டகேட்டா "எப்புடியாச்சு?"ன்னு
அதுக்கு அவசொன்னா "போனமாசம்
கூடப்படிக்கிறபுள்ள பெர்த்துடேக்கிவீட்டுக்கு வரச்சொன்னா
அங்க நெறயாப்பேருவந்துருந்தாக
எனக்கு கூல்டிரிங்க்ஸ் குடுத்தாரு ஒருத்தரு
ஏதோ தலசுத்துறமாதிரி இருந்துச்சு மயங்கிட்டேன்
அப்புறம் என்னா நடந்துச்சுன்னு தெரியல
முழிச்சிப்பாத்தா பிரண்டு அழுகுறா "மன்னிச்சிடு"ன்னு
நான் காறித்துப்பிட்டு வந்துட்டேன்
"அம்மா நான் தப்பேதும் பண்ணல"ன்னு அழுதா
அம்மாவும் "எனக்குநம்பிக்கையிருக்கு நீ ஏமக
தப்புப்பண்ண மாட்ட இதை ஒரு
கெட்டகனவாமறந்துடு"ன்னு சொல்லிட்டுகட்டிப்புடிச்சி அழுதா
அம்மாவோட கண்ணீருல தெரிஞ்சது "அம்மான்னா யாரு"ன்னு
கவிச்சிகரம் அ.முத்துவிஜயன்