திரும்ப ஊருக்குப்போறோமுன்னு நெனைக்கிறப்பவே கண்ணன் நெஞ்சுக்குள்ள என்னமோ பண்ணுச்சு . ஊரை விட்டு வேலை தேடிவந்து பலவருசம் ஆச்சு.. நண்பர்கள்ல தொடர்புல இருக்குறது ரெண்டு மூணு பேருதான் .
எப்புடி இருப்பாங்க வந்து 40 வருசம் ஆச்சு அவனுக்கு. ஊரைவிட்டு வந்ததும் கலியாணம் ஆனதும் நண்பர்கள் தொடர்பு கொறயிறதத் தவிர்க்கமுடியாது. ஏன்னா அது வேற உலகம் இது வேற உலகம் இந்த உலகத்துல கடமைகள்தான் முக்கியம்... கழுதைமாதிரி உழைச்சி நாய் மாதிரி கத்தி கடந்தாச்சு
இப்ப மிஞ்சி இருக்குறது தேய்ஞ்சுபோன சர்க்கரை பிரஸ்சர் இருக்குற வயசான உடம்பு பிரிந்துபோன பிள்ளைகள் . தன்னைப் போலவே வயசான நரை மிகுந்த மனைவி.திரும்பிப்பாக்கும்போது கால ஓட்டத்துல எதையெல்லாம் மிஸ் பண்ணுனோம்ன்னு நெனச்சா அதுல முக்கியமானது நண்பர்கள் வட்டம்தான்
அது என்னமோ இளமைக்கால நண்பர்கள் மாதிரி பின்னாடி அமையிறதில்ல . அதைத்தேடித்தான் இந்தப்பயணம். சொந்த ஊர்நோக்கி... அம்புட்டுத்தூரம் என்னால வரமுடியாதுன்னு கைவிரிச்ச மனைவிக்கு நன்றின்னு சொல்லிட்டுப் பயணப்பட்டான் கண்ணன்
ஊருல இருக்குற பழைய நண்பர்கள் சுப்பு பாலுவு க்கு போன் பண்ணி சொல்லியாச்சு” வேற எந்த வேலையும் இருக்கக்கூடாது 3 நாள் என்கூடத்தான் இருக்கனும் ஓட்டல்ல ரூம் புக் பண்னிட்டேன்... நீங்க ரெண்டுபேரும் அங்க வந்துருங்க என்கூடவே... நாம பழைய மாதிரி மூணுபேரும் மூணு நாள் இருக்கலாம்... எல்லாக்கவலையும் மறந்து” ந்னு சொல்லியாச்சு....
எல்லா வயசுப்பயலகலப்போலதான் மூணுபேரும் செய்யாத சேட்டையில்ல .. சினிமா, சரக்கு ,சைட்டு, ஊர் சுத்துறது எல்லாம் நடந்துச்சு. இப்ப மாதிரி கையில காசு இல்ல ஆனா மனசுல எந்தகவலையுமில்ல.... எல்லார் காசும் ஒண்ணுதான்....
ஒரேசைக்கிள்ள மூணுபேரு டிரிபில்ஸ் விளாங்குடி டூரிங் டாக்கீஸுக்கு இரண்டாவது ஆட்டம்... பில்லா ரஜினி படம்.. பாக்கப்போய் உள்ள சிகிரெட் பிடிச்சி ( அங்க போலீஸ் வ்ந்தா சிவப்பு லைட் எரியுமாம் அது தெரியாம) மாட்டிக்கிட்டு தப்பிச்சோம் பொழைச் சோம்ன்னு வந்தது.....
ஒருத்தன் காதலிக்கிற பொண்ண அவன் பாலோபண்ண சைக்கிள் கடன் வாங்கிக்கொடுக்கிறது...அவங்கவீட்டோட அவ படத்துக்குப் போனா நாங்களும் போய் பின்னாடி சீட்டுல ஒக்காந்து பாக்குறமாதிரி அளப்பறை பண்ணுறது இப்புடி சொல்லிக்கிட்டே போகலாம்.
பேச்சுன்னா அப்படி பேச்சு நேரம்போறது தெரியாம ஒரே எடத்துல நின்னுகிட்டுப் பேசிட்டே இருக்குறது. கால் வலியாவது ஒண்ணாவது பின்னாடிதான் தெரிஞ்சது அங்கநின்னது சுப்பு சைட் அடிக்கிற பொண்ணு வீட்டுக்குப் பக்கதுல அங்க நின்னு அவன் பாக்குறதுக் குத்தான் எங்கள நிக்கவைச்சான்னு.
கண்ணசந்து முழிக்கையில ஊர் வந்தாச்சு. டிரெயின் விட்டு எறங்கி பாத்தா பாலு மாத்திரம் நின்னுக்கிட்டு இருந்தான் ”சுப்பு வரலயா”ன்னு கண்ணன் கேட்டான்.
” அவன் நேர ரூமுக்கு வந்துடுறானாம்... வா நாம போகலாம்”ன்னு கையப்புடிச்சிக்கிட்டான் பாலு....
”வழக்கமா ஜங்சன் வெளிய ஏலக்கா டீ குடிக்கலாமா”ன்னு கண்ணன் கேட்டான் ”ஓ தாராளமா” ந்னு டீவாங்கிக்குடிக்கையில பாலு கேட்டான் ”ரிட்டயர்டு ஆகிட்ட இல்ல” ந்னு
“ஆமா”ன்னான் கண்ணன்....
”எம்புட்டு செட்டில்மெண்ட்டு”ன்னு கேட்டான் அதுக்கு
“ அதை விடு இப்ப அதுவா முக்கியம்”ன்னான் கண்ணன்..
“ரூமுல போய் பேசுவோம்”.ன்னு சொல்லிட்டு ஆட்டோ பிடிச்சான் கண்ணன்....
ரூமுக்குபோய்ட்டு குளிச்சிட்டு வாறேன் சொல்லிட்டு பாத்ரூமுக்குப்போய்ட்டு குளிச்சிட்டு வெளியே வந்த கண்ணன் பாலு இவனோட செல்போன நோண்டிக்கிட்டு இருந்தான்....
கண்ணனுக்குக்கோவம் வந்தது...
“அதுல என்னாத்தப்பாக்குற”ன்னு கேட்டான் ..
“சும்மா ஒண்ணுமில்ல”ன்னான்..பாலு அதுக்குள்ள பெல் அடிக்க சுப்பு வந்து சேந்தான்
“மாப்ள”ன்னு கட்டிப்புடிச்சிக்கிட்டான் கண்ணன.
“சரி வாங்க டிபன் சாப்புட்டுட்டு அப்புடியே வாங்க வேண்டியதை வாங்கிட்டு வந்துருவோம்”ன்னான் கண்ணன்
”நான் வாங்கிட்டு வந்துட்டேன் மாப்ள அதுதான் லேட்டு”ன்னு பேக்கை காமிச்சிசான்.சுப்பு
”சரி டிபன் சாப்புட்டு வந்துருவோம் வெறும் வயித்துல வேணாம்ன்”னான் கண்ணன் . போயிட்டு டிபன் சாப்புட்டு வந்து ரவிண்டை ஆரம்பிச்சாங்க மூணுபேரும்
கொஞ்சநேரத்துல கண்ணன் கொட்ட ஆரம்பிச்சான்.
“என்ன வாழ்க்கை எதுக்காக வாழ்ந்தோமின்னு தெரியல”.ந்னான்
”ஆமா அது அப்புடித்தான் நாம நம்ம பிள்ளைகளுக்குகாக வாழ்ந்தோம் ஆனா அவங்க அதுபத்தி ஒண்ணும் பெருசா எடுத்துக்கல... அது ஒங்க கடமைன்றானுக ”
”அப்பன் ஆத்தாவுக்கும் ஒழைச்சோம் மகன் மகளுக்குகாக வும் ஒழைச்சோம் ஆனா இப்ப நமக்குன்னு யாரு இருக்குறாங்கன் னு பாத்தா ஒருத்தருமில்ல”ந்னு கண்ணீர்விட்டான் கண்ணன்...
”ஒலகம் அப்படித்தான்... நாம எதிர்பார்த்தா த்தான் ஏமாந்து போயிடுவோம்”ன்னான் பாலு.
எல்லோருக்கும் வேலைக்காரன் ஆயிட்டோம் ஆதுக்காகவாடா இம்புட்டுகஸ்டப்பட்டோம் நு அழுதான் சுப்பு
அப்ப கண்ணன் சொன்னான்” ஒருவேளை நான் காதலிச்ச அனுவைக் கல்யாணம் பண்ணிருந்தா வாழக்கை நல்லா இருந்திருக்குமோ என்னவோ’
அதுக்கு சுப்பு சொன்னான்
.”டேய் நேத்து அவளை நான் பாத்தேன் ஊருக்கு வந்துருக்கா அவ புருசன் இப்ப இல்லபோய்ச்சேந்துட்டான் . அவளோட அம்மா அப்பாவும் இல்ல. அவ அண்ணன் வீட்டுக்குத்தான் வந்துருக்கா போல”ன்னான்
கண்ணன் சொன்னான்” எனக்கு அவளைப்பாக்கணும் போல இருக்கு டா”ன்னு கண்ணீர்விட்டான்...
பாலு சொன்னான்” ஆமா அவளை உயிருக்கு உயிராக்காதலிச்ச. ஆனா என்ன அவ கல்யாணம் நடந்தது கூட ஒனக்குத்தெரியாது ஊருல இருந்த.. எல்லாம் முடிஞ்சிப்போச்சு இப்ப என்ன பண்ணமுடியும்”ன்னான்
”எனக்கு ஒரு தடவை அவளைப் பாக்கணும் ன்னான் கண்ணன் மீண்டும்....
“சரி நாளைக்கிப்பாக்கலாம் மத்தியாணம் என்ன புரோக்கிராம்”ன்னான்
”சினிமாவுக்குப்போவோம்”னான் கண்ணன்
அது மாதிரியே வெளியே போய்ட்டு நல்ல மணக்க மணக்க கோனார் கடையில சாப்புட்டுட்டு படத்துக்குப்போய்ட்டு ரூம் திரும்பினார்கள்...
”நீங்க ரெண்டுபேரும் இங்கதான நைட் இருப்பீங்க”ன்னு கேட்டான் கண்ணன்....
அப்ப பாலு சொன்னான்
“ இல்லப்பா நைட் வீட்டுக்கு வரலைன்னா சம்சாரம் திட்டும்” ந்னான் சுப்புவும் சொன்னான் ”நம்மகதையும் அதேதான்... நாளைக்கி என் வீட்டுக்கு வா அப்புடியே அனுவையும் பாத்திரலாம்”ன்னான்
ராத்திரி பூராம் தூக்கம் வரலை கண்ணனுக்கு அனுவைப் பாக்கபோறோமுன்னு.எத்தனை லெட்டர்கள் எத்தனை சந்திப்புகள் ஆனா என்ன எல்லாம் தியாகராஜபாகவதர் காலத்து சந்திப்பு போலத்தான் நாதா நாதின்னு ரெண்டு மீட்டர் இடைவெளிதான்.... விரல் கூடப்பட்டதில்லை....ஆனாலு சந்திப்பை விட்டதுமில்லை....
காலையில் எழுந்து குளித்து நரைக்கு எல்லாம் டை அடித்து கண்ணாடியில் பார்த்து திருப்தி 70 பிரசண்ட் டோட சுப்பு வீட்டுக்குக்கிளம்பினான்
சுப்பு வீட்டுல அவன் சம்சாரம் வாங்கண்ணான்னு வரவேற்று காபி டிபன் குடுத்து ”அண்ணி வரலயா”ன்னு விசாரித்தாள்.
வாங்கிட்டுப் போயிருந்த பழங்களை குடுத்துட்டு சுப்புவைப்பாத்தான் அவன் புரிஞ்சுகிட்டு ”மத்யாணம் சாப்பாட்டுக்கு வாறோம் ரெடிபண்ணி வை”ன்னு சொல்லிட்டு” வா போகலாம்”னு கூட்டிட்டுப்போனான்
”எங்க அனுவைப்பாக்குறது”ன்னு ஆவலாக்கேட்டான் கண்ணன்... ”ரெண்டுபேரும் வயசுப்பிள்ளைகளா கண்கானாத எடத்துல சந்திக்க வா அவ வீட்டுக்குப்போவோம் அவ வாசல்லதான் இருப்பான்”னு கூட்டிட்டுப்போனான்
கண்ணனுக்கு மனசு படபடத்தது... அவ வீட்டை நெருங்கும்போது திண்ணையில ஒக்காந்துருக்கது அவதானா... அடையாளம் தெரியல
பக்கத்துல போனவன்ன அவ எந்திரிச்சி நின்னா அவ மூஞ்சியெல்லாம் மகிழ்ச்சி..” சுப்பண்ணன் சொல்லிச்சி நீங்க வந்துருக்குறதா”... ந்னு சிரிச்சா....
அவளோட மொகத்துல கண்ணன் பழைய அனுவைத்தேடுனான் கண்ணுலயும் மூக்குலயும்தான் மிச்சமிருந்துச்சு.... கழுத்து காலியாக்கெடந்துச்சு....
”வீட்டுக்குள்ள வாங்க காப்பிசாப்புட்டுப் போகலாம்”ன்னு கூப்புட்டா. உள்ளாற போனவன்ன ரெண்டு பிள்ளைக வெளையாடிக்கிட்டு இருந்துச்சுக அவ அண்ணன் பேரம்பேத்திக போல
அவ காப்பிபோட்டுக்கிட்டே கேட்டா ”சர்க்கரை எப்புடி?”ன்னு கண்ணன் சொன்னான் ”கம்மிதான்”
. காப்பியக்குடுத்துட்டு அவன் மொகத்தையே பாத்துட்டு இருந்தா...
அவளே பேச்சை ஆரம்பிச்சா.”எனக்கு வேற வழியில்ல நீங்களும் ஊருக்குப்போய்ட்டு தொடர்பில் இல்ல. எங்க அம்மாவும் அப்பாவும் வற்புறுத்துனாங்க.... வேற வழியில்ல அதான் இப்புடி ஆகிப்போச்சு உங்களுக்குத் தெரியப்படுத்தலாமுன்னா ..அதுல ஒண்ணும் பிரயோசனம் இருக்கப்போறமாதிரி அப்பதெரியல, என்ன எல்லாம் அது அது வழியில போயிடுச்சுன்னு” கண்ண த் தொடச்சிக்கிட்டா....
இவன் கேட்டான் ”எப்பையாவது என்னை மிஸ்பண்ணிட்டோம் ந்னு உனக்குத் தோணிச்சா”ன்னு கேட்டான்.
அப்ப அனு சொன்னா ”கல்யாணம்பண்ணின புதுசுல தோணும்... அப்புறம் பழகிப்போச்சு நமக்குக்குடுத்துவைச்சது அம்புட்டுத்தேன்ன்னு வாழக்கைய ஓட்டவேண்டியதாயிடுச்சு. என்னைப்போல பல பொம்பளைங்க அப்புடித்தான் சமரசம் பண்ணிக்கிட்டு வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க.”
”நீங்க எப்புடி ”ந்னு கேட்டா அனு...
கண்ணன் சொன்னான்.
“நானுமதேதான்,”ந்னு கண்ணத்தொடச்சிக்கிட்டான்.
“இருந்து சாப்புட்டுட்டுப்போங்க”ன்னா அனு
”வேணாம் சுப்பு வீட்டுல சொல்லிருக்கோம் வாறோம்”ன்னு சொல்லிட்டு வேகமா வெளியே வந்தான் கண்ணன்....
மத்தியாணம் சுப்பு வீட்டுல சாப்புட்டு கிளம்பினான் கண்ணன்.
சுப்பு சொன்னான் ”நான் சாயங்காலம் வாறேன் நீ போ ரூமில் ரெஸ்ட் எடு”ன்னான்....
ரூமுக்கு வந்த கண்ணனுக்கு என்னன்னு தெரியாம அழுகையா வந்துச்சு. அவன் எதிரபார்த்தது நடக்காததாலான்னு தெரியல அனு ரொம்ப ஃபீல் பண்ணுவான்னு நெனைச்சி ஏமாந்துட்டமோன்னு யோசிச்சான் அவனுக்கு அவனறியாமலே கண்ணீர்வந்தது நான் ஒரு கோழைன்னு அவனே சொல்லிக்கிட்டான்.கண்ணீர்விட்டபடியே தூங்கிப்போனான்
முழிச்சிப்பாத்தபோது இருட்டிருந்துச்சு... சுப்புவும் வரல பாலுவும் வரல....
அப்பத்தான் அவனுக்கு ஒறைச்சிச்சி.... அது பழைய வட்டம் அதில் இருந்து வெளியே வந்தாச்சு...இனிமே ஒருபோதும் அது திரும்பக்கெடைக்காது...போனது போனதுதான்.
நட்பும் அப்படித்தான் பழைய சுப்புவும் பாலுவும் ஏன் நானும் கூட கெடைக்கமாட்டாங்க.... அவங்க எல்லாம் இப்ப இல்ல.... இவங்க எல்லாம் வேறன்னு ன்னு நெனைக்கும் போது சோகத்துல நெஞ்சி அடைச்சிச்சி,.துக்கம் தொண்டைய அடைக்க கண்ணீர்வழிய வெறிச்சோடிக்கிடந்த தெருவைப்பாத்துக்கிட்டு இருந்தான் கண்ணன்.
வெளிய ஒருபைத்தியக்காரன் சத்தமாசொல்லிக்கிட்டு இருந்தான்
”கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்த போன சங்கின் ஓசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிந்த்தகாயும் மீண்டும்போய் மரம்புகான்னு சிரிச்சிக்கிட்டே
அவனைப்பாத்தா இவனுக்குக் கொஞ்சம் பொறாமையா இருந்துச்சு அவனுக்கு ஒருகவலையும் இல்ல கடமையும் இல்ல குடுத்துவைச்சவன் னு.
அ.முத்துவிஜயன்