ஊரடங்கு நீட்டிப்பு - முதலமைச்சர் நாளை ஆலோசனை

By Senthil

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த  மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கொரோனா 3-வது அலை சமூக பரவலாக மாறியதால் வேகமாக பரவத்தொடங்கியது.ஆகவே, கடைகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இரவு 10 மணிவரை மட்டுமே அனைத்து கடைகளும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளன.

கடந்த 7-ந்தேதி முதல் இரவு நேர ஊரடங்கை முதலமைச்சர்  அறிவித்தார். பொங்கல் பண்டிகை காலம் என்பதால் பொதுமக்கள் அதிகம் கூடக்கூடிய நிலை ஏற்பட்டதால் அதனை தடுப்பதற்காக ஞாயிற்றுக்கிழமைகளில் முழுநேர ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டது. சனிக்கிழமை இரவு 10 மணியில் இருந்து திங்கட்கிழமை அதிகாலை 5 மணிவரை பொது போக்குவரத்து தடை செய்யப்பட்டது.  அனைத்து கடைகளும் மூடப்பட்டன. வழிபாட்டு தலங்களுக்கு வெள்ளி, சனி ஞாயிறு ஆகிய 3 நாட்கள் பொதுமக்கள் செல்ல அனுமதி இல்லை. பால், மருந்து உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு மட்டும் அனுமதிக்கப்பட்டன.

தமிழக அரசு கொண்டுவந்த இந்த கட்டுப்பாடுகள் வரும் 31-ந்தேதி வரை அமலில் இருக்கும். ஆனாலும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு குறித்து ஒவ்வொரு வாரமும் முதலமைச்சர் தனியாக அறிவித்து வருகிறார். பொதுமக்கள் நலன் கருதி அரசு எடுத்த இந்த நடவடிக்கையால் தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக தொற்று பரவல் கட்டுக்குள் உள்ளது. சென்னையில் தொற்று குறையத்தொடங்கி உள்ளது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிய இன்னும் 4 நாட்களே இருப்பதால் அடுத்தகட்ட ஆலோசனை மேற்கொள்ளப்பட உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு இதற்கான ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை நிபுணர்கள் பங்கேற்கிறார்கள். இந்தக் கூட்டத்தில் பல்வேறு முடிவுகள் குறித்து விவாதிக்கிறார்கள்.

.
மேலும்