மேலும் ஒரு வழக்கில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது

By Senthil

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.

இதையடுத்து ஜாமின் கோரி ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஜெயக்குமார் தரப்பில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் மேலும் ஒரு வழக்கை பதிவு செய்துள்ளனர். 8 கிரவுண்டில் 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை மிரட்டி அபகரித்துக் கொண்டதாக மகேஷ் என்பவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே திமுக பிரமுகரை தாக்கிய வழக்கில் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு, அவரது ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், தொழிற்சாலை அபகரிப்பு வழக்கில் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

.
மேலும்