பாஜக அலுவலகம் மீது குண்டு வீச்சு - என்ஐஏ விசாரணை கோரும் அண்ணாமலை

By Senthil

சென்னை தியாகராய நகரில் பாரதீய ஜனதா கட்சியின் மாநிலத் தலைமையகமான கமலாலயம் அமைந்திருக்கிறது. இங்கு நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டை வீசிச் சென்றுள்ளனர்.  இருப்பினும், அந்த அலுவலகத்தின் முன் கதவு சாத்தப்பட்டிருந்ததால் யாருக்கும் எவ்வித சேதமும் ஏற்படவில்லை. இதையடுத்து அந்தப் பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். துணை ஆணையர் தலைமையில் விசாரணை நடந்தது.

இதற்கிடையே, நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அக்கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை, மாநிலம் முழுவதும் பா.ஜ.க. அலுவலகங்கள், தேர்தல் பணிமனைகள் மீது தாக்குதல் நடப்பதாக குற்றம்சாட்டியுள்ளார். மேலும், முதலமைச்சர் கவனம் கொடுத்து இதை நிறுத்தவில்லையென்றால் என்ன ஆகுமென்று எனக்குத் தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.

"யார் சொல்லி இதைச் செய்தார்கள் என்று தெரியவேண்டும். இதையெல்லாம் தனிமனிதர் செய்யவாய்ப்பில்லை. இது மிகப் பெரிய சதி. ஆகவேதான் இதனை என்.ஐ.ஏ. விசாரிக்கவேண்டும் எனக் கோருகிறோம்.

யார் இதைச் செய்ததாக கைதுசெய்யப்பட்டாரோ அவருக்கும் கல்விக்கும் பல்லாயிரக்கணக்கான மைல் இடைவெளி இருக்கிறது. இதைச் செய்தவருக்கு 'நீட்' என்ற வார்த்தை தெரியுமா என்பது தெரியவில்லை. அதன் விரிவாக்கம், அர்த்தம் தெரியுமா என்பது தெரியவில்லை.

டாஸ்மாக் வேண்டாமென்று குண்டு வீசியதாக சொல்லப்பட்ட, நபர் இப்போது குடித்துவிட்டுவந்து குண்டு வீசியதாகச் சொல்கிறார்கள்.

இதைச் செய்யச் சொன்னவர் இங்கே வந்திருக்க வேண்டுமென்ற அவசியம் கிடையாது. ஆகவேதான் இதன் பின்னணியில் இருப்பவர்களைக் கண்டுபிடிக்க இந்த விவகாரத்தை என்.ஐ.ஏ. விசாரிக்க வேண்டும் என அண்ணாமலை தெரிவித்தார்.

.
மேலும்