அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவு!

By News Room

தமிழகத்தில் உள்ள பரப்பலாறு, பொருந்தலாறு, ஆழியார் ஆகிய அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம், பரப்பலாறு அணையில் இருந்து 6 குளங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட கோரியுள்ள வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டத்திலுள்ள 6 குளங்களான, முத்து பூபால சத்திரம், பெருமாள்குளம், சடையகுளம், செங்குளம், இராமசமுத்திரம் மற்றும் ஜவ்வாதுபட்டி பெரியகுளம் ஆகியவற்றின் மொத்தம் 1222.85 ஏக்கர் நிலங்கள் பாசனம் பெறும் பொருட்டு, 18/05/2021 முதல் 17 நாட்களுக்கு, பரப்பலாறு அணையில் இருந்து மொத்தம் 102.00 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.


திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், பாலாறு பொருந்தலாறு அணையின் தாடாகுளம் வேளாண் பெருமக்களின் கோரிக்கையினை ஏற்று, பாலாறு பொருந்தலாறு அணையில் இருந்து தாடாகுளம் இரண்டாம் போக பாசனத்திற்கு முழு பாசன பரப்பான 844 ஏக்கருக்கும் பாசன் வசதி அளிக்கும் பொருட்டு, 18/05/2021 முதல் 120 நாட்களுக்கு, நாள் ஒன்றுக்கு 20 கனஅடி வீதம் 207.36 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டம், ஆனைமலை வட்டம், எலவக்கரை குளத்து பாசன விவசாயிகளின் கோரிக்கையினை ஏற்று ஆழியார் அணையில் இருந்து எலவக்கரை குளத்தின் கீழ பாசனம் பெறும் ஆயக்கட்டு நிலங்களுக்கு 18/05/2021 முதல் 11 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 61 கனஅடி வீதம் மொத்தம் 57.00 மில்லியன் கனஅடி தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.
மேலும்