பேருந்து ஓட்டுநர் - நடத்துனர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்: போக்குவரத்து துறை உத்தரவு

By Senthil

சென்னை புறநகரில் கொரோனா பரவி வருவதால் மாநகர பேருந்துகளில் பணியின்போது பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணிக்க நடத்துனர்கள் அறிவுறுத்த வேண்டும் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் தங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும். 

சென்னை புறநகரில் கொரோனா பரவி வருவதால் மாநகர பஸ் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:- 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் சார்ந்த திருவள்ளுர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டத்தின் எல்லைப்புற பகுதிகளில் மாநகர போக்குவரத்து கழகம் பேருந்தை இயக்கி வருகிறது. எனினும், கொரோனா தொற்று பரவுதலை அறவே தவிர்த்திடும் பொருட்டு அனைத்து விதமான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசு அறிவித்துள்ள வழிகாட்டுதல் நெறி முறைகளின்படி தவறாது பின்பற்றப்பட வேண்டும் என அனைத்து மாநகர போக்குவரத்து பணியாளர்களுக்கும் ஏற்கனவே சுற்றறிக்கை படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. 

நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்று வேகமாக பரவி வருவதால் அதனை அறவே தவிர்த்திடும் பொருட்டு அனைத்து மாநகர போக்குவரத்து கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் அனைவரும் தமது பணியின்போது கண்டிப்பாக கீழ்குறிப்பிட்ட அறிவுறுத்தல்களை தவறாது கடைபிடித்தல் வேண்டும் என மீண்டும் இச்சுற்றறிக்கை வழி அறிவுறுத்தப்படுகிறது. 

அனைத்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் முகக்கவசம் அணிந்து பணிபுரிய வேண்டும். பணியின்போது பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணிக்க கண்டக்டர்கள் அறிவுறுத்த வேண்டும். ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தங்களது கைகளை அடிக்கடி சோப்பு கொண்டு சுத்தம் செய்து பாதுகாப்பாக பணிபுரிய வேண்டும். 

நடத்துனர்கள் பணியின்போது எச்சில் தொட்டு பயணச்சீட்டு வழங்குதலை அறவே தவிர்த்திட வேண்டும். அனைத்து கிளை மேலாளர்கள், மண்டல மேலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மேற்கூ றப்பட்ட அறிவுறுத்தல்களை ஓட்டுநர் மற்றும் நடத்துனர்கள் தவறாது பின்பற்றுவதை உறுதி செய்தல் வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

.
மேலும்