ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி - முதலமைச்சர் விளக்கம்

By Senthil

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்க ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதற்கு காங்கிரஸ், விசிக, திராவிடர் கழகம், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன.

எனினும் ஆளுநர் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள மயிலாடுதுறை சென்றிருந்தார். அப்போது அவருக்கு எதிராக மேற்கண்ட கட்சியினர் கோஷங்களை எழுப்பினர். அத்துடன் கருப்புக் கொடி ஏந்தியும் தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்தனர். 

இந்த நிலையில் ஆளுநரின் கான்வாய் வாகனம் மீது கல்வீச்சு, தண்ணீர் பாட்டில் வீச்சு உள்ளிட்ட சம்பவங்கள் நடந்ததாகவும் ஆளுநருக்கே பாதுகாப்பு இல்லாவிட்டால் பொதுமக்களின் நிலை என்ன என்றும் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருந்தன.

இந்த சம்பவத்தை கண்டித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி தனித்தனியே அறிக்கை வெளியிட்டுள்ளனர். மேலும் ஆளுநருக்கு பாதுகாப்பின்மை குறித்து தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர் கூறுகையில் மயிலாடுதுறையில் ஆளுநரின் கான்வாய் மீது கற்கள், கருப்புக் கொடிகள் வீசியதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. இது தொடர்பாக ஓபிஎஸ்ஸும் எடப்பாடி பழனிச்சாமியும் தனித்தனியே அறிக்கை விடுத்துள்ளார்கள்.

இந்த விவகாரத்தில் அரசு சொல்லும் விளக்கத்தை கேட்காமலேயே அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துவிட்டார்கள். தமிழக காவல்துறையினர் அளித்த பாதுகாப்பின்படி ஆளுநர் எந்த தடங்கலும் இன்றி பத்திரமாக சென்று வந்தார. ஆளுநர் பாதுகாப்பு விவகாரத்தில் திமுக அரசு எந்த சமரசமும் செய்துக் கொள்ளாது. ஆளுநர் மீது ஒரு தூசு கூட விழாமல் காவல் துறை தன் கடமையை செய்திருக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை டிவியை பார்த்துதான் தெரிந்து கொண்டேன் என சொன்ன முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர் சட்டம் ஒழுங்கு பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என்றார்

கற்கள் மற்றும் கொடிகள் வீசப்பட்டது என்பது அபாண்டமான பொய். ஆளுநரின் பாதுகாப்பில் அரசு எந்த சமரசமும் செய்துகொள்ளாது; இதில் அரசியல் செய்யலாம் என்று எதிர்க்கட்சிகள் நினைத்தால் அது நடக்காது.

ஆளுநர் மீது தூசு கூட விழாதவாறு பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.
சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

ஆளுநர் விவகாரத்தில் விடியா அரசு என்ன பதில் சொல்லப் போகிறது? என்று கேட்ட எடப்பாடி பழனிசாமி, எனது பதிலைக் கேட்காமலேயே வெளியில் சென்றுள்ளார்.

நமக்கு இதுதான் வாய்ப்பு என இதை அரசியலுக்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அரசியல் கட்சிகளின் இயல்பு தான்.

வழக்கம் போல் சேர்ந்தே அறிக்கை விடும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆளுநர் விவகாரத்தில் தனித்தனியாக அறிக்கை விட்டுள்ளனர் என அவர் தெரிவித்தார்.

.
மேலும்