ஏழு பேர் விடுதலை- குடியரசுத்தலைவருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

By சரவணன்

 

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட ஏழு பேர் விடுதலைத் தொடர்பாக இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வரின் கடிதத்தை தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் நேரில் வழங்கினார்.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் தண்டிக்கப்பட்டு 30 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், முருகன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், பி.ரவிச்சந்திரன், எஸ்.நளினி ஆகிய ஏழு பேரையும் விடுதலைச் செய்ய வேண்டும் என்று தமிழக அமைச்சரவை 09/09/2018 அன்று தீர்மானம் நிறைவேற்றி தமிழக ஆளுநருக்கு அனுப்பியுள்ளதையும், அந்த அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது முடிவு எடுக்கும் அதிகாரம் குடியரசுத்தலைவருக்குதான் இருக்கிறது எனக்கூறி, தமிழக ஆளுநர் குடியரசுத்தலைவருக்கு தமிழக அரசின் அமைச்சரவைத் தீர்மானத்தை அனுப்பி வைத்திருப்பதையும் சுட்டிக்காட்டி 19/05/2021 அன்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதிய தமிழக முதல்வர் மு.க,ஸ்டாலின், 'மேற்கண்ட ஏழு பேரும் 30 வருடத்திற்கும் மேலாக சிறையில் வாடுகிறார்கள். உச்சநீதிமன்றமே கொரோனா தொற்றின் பரவலைத் தடுக்க சிறைச்சாலைகளில் உள்ள கூட்ட நெருக்கடியை நீக்கும் பொருட்டு கைதிகளை விடுதலைச் செய்ய அறிவுறுத்தியுள்ளது எனத் தெரிவித்து, ஏழு பேரையும் விடுதலைச் செய்ய  09/09/2018 அன்று தமிழக அமைச்சரவை நிறைவேற்றி அனுப்பியுள்ள தீர்மானத்தை உடனடியாக ஏற்றுக் கொண்டு ஆணை பிறப்பிக்க வேண்டும்' என்று வலியுறுத்தியுள்ளார்.

குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு தமிழக முதல்வர் எழுதிய கடிதத்தை தி.மு.க.வின் மக்களவைக் குழு தலைவர் டி.ஆர்.பாலு குடியரசுத்தலைவர் அலுவலகத்தில் இன்று (20/05/2021) நேரில் அளித்துள்ளார்." இவ்வாறு அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE