முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு ரூபாய் 69 கோடி நன்கொடை'- தமிழக அரசு

By News Room

தமிழக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நேற்று (17/05/2021) வரை ரூபாய் 69 கோடி நன்கொடை வந்துள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் இணைந்து சூழும் இந்த நேரத்தில் மக்களைக் காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களைத் தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்றும், ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் கொண்ட தமிழக மக்கள் அனைவரும் தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கின்ற வகையில் நிதி வழங்க வேண்டுமென்றும் முதல்வர் 11/05/2021 அன்று வேண்டுகோள் விடுத்தார்.


இவ்வாறு வழங்கப்படும் நன்கொடைகள் அனைத்தும் முழுமையாக கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும், பெறப்பட்ட நன்கொடைகள் மற்றும் மேற்கொள்ளப்பட்ட செலவினங்கள் குறித்த விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படும் எனவும் முதல்வர் உறுதியளித்தார். முதல்வரின் வேண்டுகோளை ஏற்று, தமிழகத்திலிருந்து மட்டுமல்லாமல், உலகெங்கிலும் வாழும் தமிழ் மக்கள் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடைகள் வழங்கி வருகின்றனர்.

நேற்று (17/05/2021) வரை இணைய வழி மூலமாக 29.44 கோடி ரூபாயும், நேரடியாக 39.56 கோடி ரூபாயும் என, மொத்தமாக 69 கோடி ரூபாய் நிவாரண நிதியாகப் பெறப்பட்டுள்ளது. இவ்வாறு முதல்வரின் வேண்டுகோளையேற்று, கொரோனா மருத்துவ சிகிச்சை மற்றும் நிவாரணப் பணிகளுக்கு மனமுவந்து நன்கொடை அளித்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் தமிழக அரசின் சார்பாக மனமார்ந்த நன்றியை முதல்வர் தெரிவித்துள்ளார்.


முதல்வர் பொது நிவாரண நிதிக்கு அளிக்கப்படும் நன்கொடைகள், கொரோனா நிவாரணப் பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் என உறுதியளித்தவாறு, இதுவரை பெறப்பட்டுள்ள 69 கோடி ரூபாயிலிருந்து, ரெம்டெசிவிர் மற்றும் உயிர் காக்கும் மருந்துகளை அரசு மருத்துவமனைகளுக்கு வழங்குவதற்காக 25 கோடி ரூபாயும், மற்ற மாநிலங்களிலிருந்து திரவ ஆக்சிஜனை இரயில் போக்குவரத்து மூலமாகக் கொண்டு வருவதற்கு தேவையான கண்டெய்னர்களை வாங்குவதற்காக 25 கோடி ரூபாயும் என முதற்கட்டமாக மொத்தம் 50 கோடி ரூபாய் தொகையை செலவிட முதல்வர் ஆணையிட்டுள்ளார்." இவ்வாறு தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

.
மேலும்