அமெரிக்காவின் டென்னசி மாநிலத்தில் இருந்து அதிர்ச்சியளிக்கும் சம்பவம் ஒன்று வெளியாகியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்ட 50 வயதான கிறிஸ்டா பைக் என்ற பெண் கைதிக்கு இரண்டு முறை மரணத்தை ஏற்படுத்தும் மருந்து செலுத்தப்பட்டும், அவர் உயிரிழக்காமல் அதிசயமாக உயிர் தப்பியுள்ளார்.
கடந்த 200 ஆண்டுகளில் டென்னசி மாநிலத்தில் மரண தண்டனை நிறைவேற்றப்படவிருந்த முதல் பெண் கிறிஸ்டா பைக் ஆவார்.
1995ஆம் ஆண்டு தனது சக மாணவியான 19 வயது கொலீன் ஸ்லெம்மரை கொடூரமாக கொலை செய்த வழக்கில் கிறிஸ்டா பைக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் குற்றம் நடந்தபோது கிறிஸ்டாவுக்கு 18 அல்லது 19 வயது மட்டுமே இருந்ததாக கூறப்படுகிறது.
விசாரணையின்போது, கிறிஸ்டா தாயின் கர்ப்பகாலத்தில் அதிகப்படியான மது அருந்தியதால் ஏற்பட்ட உடல்நலப் பாதிப்புகளும், பின்னர் அவர் எதிர்கொண்ட பாலியல் வன்கொடுமைகளும் அவரது மனநிலை மற்றும் நடத்தையை பாதித்திருக்கலாம் என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டனர்.
மரண தண்டனையை நிறைவேற்றும் நடவடிக்கையும் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டது. கிறிஸ்டாவின் நரம்புகளைக் கண்டறிவதில் சிரமம் இருப்பதால், மருந்து செலுத்துவதற்குப் பதிலாக துப்பாக்கிச் சூடு மூலம் தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று அவரது வழக்கறிஞர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் பல்வேறு நீதிமன்றங்கள் அந்தக் கோரிக்கையை நிராகரித்தன.
தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பு, மேல்முறையீட்டு நீதிமன்றம் மரண தண்டனை நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தியது. ஆனால் அமெரிக்க உச்சநீதிமன்றம் உடனடியாக தலையிட்டு, அன்றைய தினமே மரண தண்டனையை நிறைவேற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து மாலை சுமார் 7 மணியளவில் கிறிஸ்டா மரண தண்டனை நிறைவேற்றும் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். இரவு 7:45 மணிக்கு பென்டோபார்பிட்டல் (Pentobarbital) என்ற மரணத்தை ஏற்படுத்தும் மருந்தின் முதல் டோஸ் செலுத்தப்பட்டது. பின்னர் 8:26 மணிக்கு இரண்டாவது டோஸும் செலுத்தப்பட்டது.
ஆனால் இரவு 8:53 மணியளவில், கிறிஸ்டா உயிருடன் இருப்பதுடன் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருப்பதை அதிகாரிகள் கவனித்தனர்.
மருந்து எதிர்பார்த்தபடி செயல்படாமல் அவர் உயிருடன் இருப்பது தெரியவந்ததும், உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் அங்கு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த எதிர்பாராத சம்பவத்தைத் தொடர்ந்து, கிறிஸ்டா பைக்கின் மரண தண்டனையை நீதிமன்றம் தற்போது ஒரு ஆண்டுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.