‘மது அருந்தினால் ரூ.5,000 அபராதம்...’ - டிடிவி தினகரன் பாராட்டு

By செய்திப்பிரிவு

“நாகப்பட்டினம் மாவட்டத்தில் மதுவுக்கு எதிராக தொடங்கப்பட்டுள்ள மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவ வேண்டும்” என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அருகே விழுந்தமாவடி பஞ்சாயத்தில் திருமணமாகாத இளைஞர்கள் மது அருந்த முற்றிலும் தடை விதிக்கப்பட்டிருப்பதோடு, மீறி மது அருந்தினால் ரூ.5 ஆயிரம் அபராதமும், அது குறித்து தகவல் தெரிவிப்போருக்கு ரூ.2 ஆயிரம் சன்மானமும் வழங்கப்படும் என ஊர் பொதுமக்கள் அனைவரும் ஒன்றிணைந்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பு மிகுந்த வரவேற்புக்குரியது.

நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும் ‘மதுவை ஒழிப்போம் - மக்களைக் காப்போம்’ என்ற முழக்கத்துடன், இளைய தலைமுறையினரின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், குடும்பங்களின் நலனை உறுதி செய்யவும், மக்களின் பொது அமைதியைப் பேணவும் விழுந்தமாவடி பஞ்சாயத்து மக்கள் தாமாக முன்வந்து தொடங்கியுள்ள இந்த மதுவுக்கு எதிரான பிரசாரம் பாராட்டுக்குரியது.

விழுந்தமாவடியில் தொடங்கியுள்ள இந்த மக்கள் இயக்கம் தமிழகம் முழுவதும் பரவி, மதுவுக்கு எதிரான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, இளைய தலைமுறையினரைப் பாதுகாக்கும் வலிமையான சமூக இயக்கமாகவும் உருவெடுக்கட்டும்” என்று டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE