விரைவில் ஆணவக் கொலைக்கு எதிராக புதிய சட்டம்: அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல்

By செய்திப்பிரிவு

நெல்லையில் கொலை செய்யப்பட்ட ஐடி ஊழியர் கவினின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்த சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு, ஆணவக் கொலைகளைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில், மாற்று சாதியைச் சேர்ந்த பெண்ணை காதலித்ததாக கூறி தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்த ஐடி ஊழியர் கவின் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த வழக்கில், பெண்ணின் சகோதரர் சுர்ஜித், தந்தை சரவணன் மற்றும் உறவினர் ஜெயபால் ஆகியோர் கைது செய்யப்பட்டு, சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது. பின்னர், இந்த வழக்கில் பெண்ணின் தாயாரான காவல் உதவி ஆய்வாளர் கிருஷ்ணகுமாரியின் பெயரும் சேர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

கவினின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, அவரது சொந்த ஊரான ஆறுமுகமங்கலத்தில் நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் வன்னியரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு, கவினின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

நிகழ்ச்சியில் கவினின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த அமைச்சர், ஆணவக் கொலை சம்பவம் மிகவும் வேதனையளிப்பதாக கூறினார். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாமல் இருக்க கடுமையான சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வன்னியரசு, ஆணவக் கொலைக்கு எதிரான தனிச்சட்டம் கொண்டு வருவது தொடர்பான பணிகள் நடைபெற்று வருவதாக கூறினார். நீதிபதி தலைமையில் இதற்கான ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், அரசு அதிகாரிகளிடம் கருத்துகள் மற்றும் விளக்கங்கள் பெறப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு முதலமைச்சரிடம் சமர்ப்பிக்கப்படும் என்றும், அதன் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.

கவினின் குடும்பத்தினரும், சமூக அமைப்புகளும், ஆணவக் கொலைகளைத் தடுக்க கடுமையான சட்டம் தேவை என தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், அரசின் இந்த நடவடிக்கை குறித்து எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement
VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE